Aran Sei

மேலுமொரு செய்தியாளர் கொலை : ஊடகவியலாளர்கள் வாழ தகுதியற்ற நாடா ஆஃப்கானிஸ்தான் ?

ஆஃப்கானை சேர்ந்த பிஸ்மில்லா ஆதில் ஐமக் எனும் செய்தியாளர் மேற்கு ஆஃப்கானில் சுட்டுக் கொல்லப்பட்டார் என பிபிசி இணையதளத்தில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

மனித உரிமைகள் செயற்பாட்டாளராகவும், உள்ளூரில் இருந்த ஒரு ரேடியோ நிலையத்தின் ஆசிரியராகவும் வேலை செய்து கொண்டிருந்த பிஸ்மில்லா ஐமக், பக்கத்து கிராமத்தில் உள்ள தன் குடும்பத்தினரை பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் சிலர் அவருடைய வாகனத்தை குறி பார்த்து சுட்டனர். காரில் இருந்த மற்றவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என உள்ளூர் அதிகாரியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் என்கிறது தி கார்டியன் இணையதளம்.

கடந்த ஓராண்டில் 42 ஊடகவியலாளர்கள் கொலை – சர்வதேசப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு

ஆஃப்கான் கஸ்னி மாகாணத்தின் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த ரஹ்மத்துல்லா நெக்ஸாத், கடந்த வாரம் அவர் வீட்டிற்கு வெளியே துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். நெக்ஸாத், அசோசியேடர் பிரஸ் மற்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனங்களுக்கு வேலை செய்தவர் என்று தி கார்டியன் குறிப்பிடுகிறது.

நவம்பர் மாதம், இரு வேறு குண்டுவெடிப்புகளில் இரண்டு செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டனர். மேலும், டிசம்பர் மாதத்தில்,மலாலா மைவந்த் எனும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இப்படி, குறுகிய கால அளவில் கொலை செய்யப்படும் ஐந்தாவது செய்தியாளர் பிஸ்மில்லா என தி கார்டியன் சுட்டிக் காட்டியுள்ளது.

போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு மரண தண்டனை – ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அரசு

இப்போது வரை எந்த பயங்கரவாத அமைப்பும் கொலைக்கு பொறுப்பேற்கவில்லை என்றாலும், ஒரு செய்தியாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களென தெரிய வந்துள்ளதாக ஆஃப்கானின் புலனாய்வு அமைப்பு கூறியதாக தி கார்டியன் சொல்கிறது.

செய்தியாளர்கள் உயிர் வாழ முடியாத நாடாக ஆஃப்கான் மாறிவிட்டது என ஊடக சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கும் சுயாதீன செய்தியாளர்கள் எனும் அமைப்பு செய்தியாளர்கள் கொலை செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது ( Reporters Without Borders ).

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்