Aran Sei

ஆப்கானிஸ்தானும் தாலிபான்களும் – ஆப்கானில் உண்மையில் நடந்தது என்ன?

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 அன்று காலையில் டயோட்டா கொரோலாவில் பக்ராம் விமானப்படை தளத்திற்கு குண்டுகளுடன் தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவன் வந்தான். அவன் முதல் சோதனைச் சாவடியில் ஆப்கானிஸ்தான் காவல்துறையைக் கடந்து, முதன்மை வாயிலை நோக்கி கால் மைல் தூரம் சென்றான். அமெரிக்கர்கள் காவலில் உள்ள இரண்டாவது சோதனையைச் சாவடியை நெருங்கிய அவன், மண் மேடுகள் மற்றும் பாதசாரிகளும், வாகன போக்குவரத்தும் நிறைந்த அந்த இடத்தில் தனது குண்டை வெடிக்கச் செய்தான். அந்த குண்டு வெடிப்பில் அங்கு வேலை தேடி வந்திருந்த ஆப்கன் தொழிலாளர்களில் 20 பேர் உயிரிழந்தனர். அத்துடன் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் பன்னாட்டு கூட்டு இராணுவ உதவியின் அடிப்படையில் வந்திருந்த ஒரு தென் கொரிய படைவீரரும் கூட உயிரிழந்தனர்.  சிகாகோவைச் சேர்ந்த, 27 வயதான, அமெரிக்க படை அதிகாரி டேனியல் ஜிஜூம்போ, தனது 31 வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடிய லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் அமெரிக்கப் பெண்  ஒப்பந்தக்காரர் ஜெரால்டைன் மார்க்கஸ் மற்றும் வியட்நாம் போருக்குப்பின் அயல்நாட்டு சச்சரவுகளால் உயிரிழக்கும் முதல் தென் கொரியப் படை வீரர் சார்ஜன்ட். யூன் ஜங்க்- ஹோ ஆகியோர் அந்த மூவர்.

பக்ராம் குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய மிக முக்கிய விருந்தினர், இதனை அடக்கி வாசிக்கும் துணை குடியரசுத் தலைவர் டிக் சென்னி ஆவார். சென்னி ஒரு நாள் முன்புதான் இந்த போர்க்களத்திற்கு முன் அறிவிப்பில்லாத வருகையாக வந்திருந்தார். விமானப்படை  மூலம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை வந்தடைந்த அவர் ஆப்கனில் அதிபர் ஹமீத் கர்சாயை சந்திக்க ஒரு சில மணி நேரங்களை மட்டுமே செலவிட திட்டமிட்டிருந்தார். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் காபூலில் இறங்க முடியாமல் இரவை 9,000 வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்த, தலைநகரிலிருந்து 30 மைல் தூரத்திலிருந்த பக்ராமில் கழிக்க வேண்டியதாயிற்று.

குண்டுவெடிப்பு நடந்த ஒரு சில மணி நேரத்தில் தாலிபான்கள் செய்தியாளர்களை அழைத்து குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அது சென்னியை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தனர். அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இதனை ஏளனம் செய்து கிளர்ச்சியாளர்கள் பொய்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டினர். துணை அதிபர் குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு ஒரு மைல் தூரத்தில், தளத்தின் மறுமுனையில் எவ்வித ஆபத்தும் இன்றி இருந்தார் என்கின்றனர்.  இவ்வளவு குறுகிய கால இடைவெளியில், அதிலும், அவருடைய பயணத் திட்டம் கடைசி நிமிடத்தில்தான் மாற்றப்பட்டது என்ற நிலையில், தாலிபான்கள் இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருக்க  முடியாது என்கின்றனர் அவர்கள்.

“தாலிபான்கள் துணை அதிபரைப் பின் தொடர்ந்து வருவதாகக் கூறிக் கொள்வது அபத்தமானது,” என அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் டாம் காலின்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்  உண்மையை மறைத்தார்கள். ஒரு வாய்மொழி நேர்காணலில் பக்ராமின் பாதுகாப்பிற்கு பொறுப்பாளரான, அப்போதைய வான்வழிப் படையின் 82 வது பிரிவின் தளபதி ஷான் டேல்ரிம்பிள்  சென்னியின் இருப்புப் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதை உறுதிப்படுத்தினார். தற்கொலைப்படையைச் சேர்ந்தவர் முன்வாயில் வழியாக வாகனங்கள் வரிசையாக வருவதைப் பார்த்து, அதில் சென்னி இருப்பதாகக் கருதி குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.  அவர் இலக்கிற்கு வெகு தூரத்தில் இல்லை. துணை அதிபர் 30 நிமிடம் கழித்து வேறொரு வாகன வரிசையின் மூலம் காபூலுக்குச் செல்லவிருந்தார் என்கிறார் சென்னியின் நகர்வை  திட்டமிட்ட  இரகசிய சேவைகளின் திட்டத்தில் பணியாற்றிய டேல்ரிம்பிள். “கிளர்ச்சியாளர்கள் இதனை அறிந்திருந்தார்கள். எவ்வளவு இரகசியமாக வைத்திருக்க முயற்சித்தாலும், அதனையும்  மீறி செய்திகள் வெளியாகி விடுகின்றன. அவர்கள்  ஆயுதம் தாங்கிய விளையாட்டு பயன்பாட்டு வாகனம் வாயில் வழியாக வெளியேறுவதைக் கண்டு அது அவர்தான் என முடிவு செய்து விட்டனர்…  பக்ராம் பாதுகாப்பான இடமில்லை என்ற உண்மை பலரது கண்களை திறந்து விட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் நேரடி தொடர்பு உள்ளது,” என்கிறார் அவர்.

2007 ம் ஆண்டின் நிகழ்வு இரண்டு முனைகளில் போர் நீட்டிப்பை குறித்தது. தங்கள் வலுவான இடமான தெற்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வெகு தூரத்தில் உள்ள கடுமையான பாதுகாப்புள்ள பக்ராமில் துணை அதிபரை குறி வைத்ததன் மூலம் தாலிபான்கள் உயர்மட்டத்தில் உள்ளவர்களையும் தாக்கி, பெருமளவு உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும் திறனுடையவர்கள் என வெளிப்படுத்தி உள்ளனர். எந்த அளவு நெருங்கி வந்து கிளர்ச்சியாளர்கள் சென்னியைத் தாக்கினார்கள் என்பதில் பொய் கூறுவதன் மூலம் அமெரிக்க இராணுவம் மக்களிடம், தனிப்பட்ட நிகழ்வுகள் முதல் முழு படம் வரை போரின் பன்முகத் தன்மையைப் பற்றி ஏமாற்றும் பாணியில் ஆழமாக மூழ்கி செய்திகளை வெளியிட்டது.  2001 படையெடுப்பிற்குப் பிறகு, சுய சேவை வெளிப்பாடுகளாகத் தோன்றியவை வேண்டுமென்றே படிப்படியாக சிதைக்கப்பட்டு இறுதியில் இறுக்கமான புனைவுகளாக மாறிவிட்டது.

இந்த செய்தி சைமன் & ஷஸ்டர் நிறுவனத்தால்   ஆகஸ்ட் 31 ம் தேதி அன்று வெளியிடப்படவுள்ள ” தி ஆப்கானிஸ்தான் பேப்பர்ஸ்: எ சீக்ரெட் ஹிஸ்டரி ஆஃப் தி வார்” என்ற வாஷிங்டன் போஸ்ட் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் நடந்த தவறு என்ன என்ற கேள்வியின் வரலாற்றை விளக்கும் இந்த புத்தகம் போரில் நேரடியாக பங்கு பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடனான நேர்காணல்களையும், அதே போல சுதந்திர தகவல் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

ஆப்கானிஸ்தான் பேப்பர்களின் தரவுகளை ஆய்வு செய்யுங்கள்

இதற்கு முன் வெளியிடப்படாத அந்த நேர்காணல்களும் ஆவணங்களும், ஜார்ஜ் W புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய அதிபர்கள் நிர்வாகத்தில் எப்படி இந்த இருபதாண்டுகால உண்மைகளை மறைத்தார்கள் என்பதைக் கூறுகிறது. அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட இந்தப் போரில் அமெரிக்கா மெதுவாகத் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது. இதற்கு மாறாக, அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் தங்கள் தவறுகளை புதைத்து விட்டு,  போரை கையை விட்டு நழுவிச் செல்ல அனுமதித்தனர். இறுதியில் 2001 ஆக்கிரமிப்பிற்குப் பின் முன் எப்போதையும் விட வலுவான நிலையில் தாலிபான்கள் இருக்க, இந்த ஆண்டு அதிபர் பிடேன் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கும் முடிவை அறிவித்துள்ளார். புஷ் நிர்வாகம், நேட்டோ மற்றும் ஆப்கானிய நட்பு நாடுகளுக்கு, சென்னியின் ஆப்கானிய வருகைக்கு முந்தைய மாதங்கள் ஒரு மோசமான நீட்சியாகவே இருந்தது. தற்கொலைப் படைத் தாக்குதல்கள் 2006 ல் ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிகரித்திருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சாலையோர குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை இருமடங்காகி இருந்தது. பாகிஸ்தானின் எல்லைப்புறங்களில் இருந்த  தாலிபான்களின் புகலிடங்கள் பிரச்சனைக்கு மேலும் எரியூட்டின.

சென்னி பக்ராமிற்கு வருவதற்கு முன் அவர் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஸரஃபை சந்தித்து அந்த புகலிடங்களைத்  தாக்கி அழிக்க வலியுறுத்தினார். ஆனால் வலிமையான பாக். அதிபர் எந்த உதவியும் செய்யாமல், பாக். அரசு “முடிந்த அளவு செய்து விட்டதாக” தெரிவித்தார். இவர்களின் பகிரங்க அறிக்கைகள் இருந்த போதும்,  தங்கள் உண்மையான திட்டப்படி பக்ராமிற்கும் காபூலிற்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் சென்னி தாக்கப்படலாம் என்று இராணுவத்தினர் மிகவும் கவலைப்பட்டனர். எனவே அரிதாகப் பயன்படுத்தப்படும் வாயில் வழியாக பக்ராமை விட்டு வெளியேறுவதே அவர்கள் திட்டமாக இருந்தது. சென்னியுடன் பயணக்குழுவினர் வழக்கமாக மூத்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் இலகுரக வாகனங்களில் செல்வார்கள். துணை அதிபர், இளம் இராணுவ படைப்பிரிவுகள் தலைவரான டேல்ரிம்பிளுடன் ஒரு இயந்திரத் துப்பாக்கி தாங்கிய இராணுவ வாகனத்தில் செல்வார்.  “துப்பாக்கி தாங்கிய வாகனத்தில்  ஒருநாளும் அவர் பயணிக்க மாட்டார்,” என்று நினைவு கூர்கிறார் டேல்ரிம்பிள்.

தற்கொலைப்படைத்  தாக்குதலுக்குப் பின் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சென்னி சாலை வழியாகச் செல்வது மிகவும் ஆபத்தானது என இராணுவ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதனால் காலநிலை மாறுவதற்காகக் காத்திருந்து காபூலுக்கு பறந்து சென்று கர்சாயை சந்திக்கவிருந்தார். இறுதியாக அவர் ஒரு சி-17 ரக விமானத்தில் ஏறி மேலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்றார். அதே நேரத்தில் அமெரிக்க இராணுவம் தாலிபான்களின் எதிர்கிளர்ச்சியால் அவதியில் இருந்தனர். ஆப்கானிஸ்தானைப் போல ஆறு மடங்கு அதிகமான – 1,50,000 படைவீரர்களைக் கொண்டு நடந்த ஈராக்கில்  நடந்த, இதைவிடப் பெரிய தாக்குதலில் அமெரிக்கத் துருப்புக்கள் முறியடிக்கப்பட்டன. ஈராக்கில் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டு, புஷ் நிர்வாகம் ஆப்கான் போரையும் இழந்துக் கொண்டிருக்கும் உணர்வை தவிர்க்க விரும்பியது.

இதன் விளைவாக, புத்தாண்டு துவங்கிய போது, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதிகள் பொதுமக்களிடம் புதிய வகையான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அவை மிகவும் தேவையற்றவை மற்றும் ஆதாரமற்றவையாக இருந்தன. அவர்களின் அறிக்கைகள் தவறான தகவல் பரப்புரையாகவே இருந்தது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கும் தளபதி மேஜர் ஜெனரல் ராபர்ட் டர்பின் ஜனவரி 9, 2007 அன்று செய்தியாளர்களிடம், “நாங்கள் தாக்குப் பிடித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவில் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்,” என்று கூறினார். மலைப் பகுதியின் 10வது பிரிவு படையின் தலைவர் மேஜர் ஜெனரல் பெஞ்சமின் ஃப்ரீக்லே, சில வாரங்கள் கழித்து இதைவிட சூடான ஒரு அறிவிப்பைக் கொடுத்தார். ஜனவரி 27 ல் ” நாம் வெற்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முந்தைய ஆண்டைவிட குண்டுவெடிப்புகள் அதிகரித்து வந்த போதிலும் அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகள் ” முன்னேறி வருகின்றன” ஒவ்வொரு திருப்பத்திலும் இந்த நாட்டை எதிர்க்கும் பயங்கரவாதிகளையும், தாலிபான்களையும் தோற்கடித்து விட்டோம்,” என்று கூறினார். கிளர்ச்சியாளர்களைப் பொறுத்தவரை ” அவர்களுடைய நோக்கங்கள் எதையும் அவர்கள் அடையவில்லை. அவர்கள் காலத்தை இழந்தும் கொண்டிருக்கிறார்கள். அதிகரித்து வரும் தாலிபான்களின் தற்கொலைப் படைத் தாக்குதல்களை அவர்களுடைய “விரக்தியின்” வெளிப்பாடு என்று ஒதுங்கிக் தள்ளி விட்டார். மூன்று நாட்கள் கழித்து, மூன்று நட்சத்திர விருது பெற்ற இராணுவத் தளபதி கார்ல் எய்க்கன்பரி,

நேட்டோ படைகளுக்கு ஐரோப்பிய மக்களிடம் ஆதரவு கோருவதற்காக பெர்லினுக்கு வந்தார். அப்போது அவர், 2007ல், “அனைத்து நட்பு நாடுகளும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன,” என்றும், தாலிபான்கள் பீதியடைந்துள்ளனர் என்றும் கூறினார். எங்கள் மதிப்பீட்டின் படி அவர்கள் நேரம் அவர்களுக்கு எதிராக வேலே செய்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்,” என்று எய்க்கன்பரி மேலும் கூறினார்.

ஆனால் எதிர் கிளர்ச்சியாளர்கள் வலிமைப் பெற்று வருகிறார்கள் என்று கடந்த ஓராண்டாக புலனாய்வுத் துறை கூறி வருவது, இந்த இராணுவத் தளபதிகளின் ஆனந்த சேர்ந்திசைப் பாடலை பொய்யாக்கி விட்டது. 2006, பிப்ரவரியில் ஆப்கானிஸ்தானின் அமெரிக்கத் தூதர் ரொனால்டு நியூமன் ஒரு வகைப்படுத்தப்பட்ட தூதரக செய்தியில்  தன்னம்பிக்கையுள்ள ஒரு  தாலிபான் தலைவர்,” உங்களிடம் கடிகாரங்கள் இருக்கலாம். ஆனால் எங்களிடம்தான் நேரம் இருக்கிறது,” என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். தனிப்பட்ட ரீதியில், ஈராக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போர்தந்திரங்களான  தற்கொலைப் படைத் தாக்குதல்கள், சாலையோர குண்டுவெடிப்புகள் ஆகியவை வெள்ளமென பெருகி வருவது, 1968 ல், வட வியட்நாமில் அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதலின் போது அது குறைத்து மதிப்பிட்ட மக்கள் ஆதரவுடன் எதிர்த்தாக்குதல் நடத்திய இரத்தம் தோய்ந்த “டெட் (அல்லது புத்தாண்டு) எதிர்தாக்குதல்களைப் போல “காந்தகார் டெட் எதிர்தாக்குதல்” நடந்து விடுமோ என அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுவதாக புஷ்ஷின் அரசு அதிகாரி பொது நேர்காணல்களில் கூறினர். 2005 ம் ஆண்டு இறுதி மற்றும் 2006 ம் ஆண்டு துவக்கத்தில் இறுதியாக நாங்கள் விழித்துக் கொண்டு எதிர் கிளர்ச்சியாளர்களால் நாம் தோற்கடிக்கப்படலாம் என்ற உண்மையை உணர்ந்தோம்,” என்கிறார் ஒரு அதிகாரி. ” 2005 ம் ஆண்டு முடிவில் அனைத்தும் நமக்கு எதிராகத் திரும்பி விட்டன,” என்கிறார் அவர்.

நியூமன் 2005 ல் அமெரிக்காவின் உயர் தூதரக அதிகாரியாக  காபூல் வந்திறங்கினார். ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமெரிக்க தூதரின் மகனான அவர் 1967 ல் புதுமணத் தம்பதியராக வந்து, நாடு அமைதியாக இருந்த காலத்தில், கோடை பருவத்தில் நாடு முழுவதும் சுற்றுலா சென்று, குதிரை மற்றும் கவரிமா மீது சவாரி என நாட்களை கழித்தவர். 38 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் வந்த போது ஆப்கானிஸ்தானில் 25 ஆண்டுகளாக ஓயாத போர் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. நேரடியாக தனது வாஷிங்டன் உயர் அதிகாரிகளிடம் வன்முறை மேலும் அதிகரிப்பது நிச்சயம் எனக் கூறினார். ” 2005 ம் ஆண்டு இறுதியில், நானும் தளபதி எய்க்கன்பரியும் சேர்ந்து அனுப்பிய செய்தியில் அடுத்த ஆண்டு, 2006 ல் நாங்கள் மிகப்பெரிய அளவு  அதிகரித்த எதிர்கிளர்ச்சியை சந்திக்க இருக்கிறோம். மேலும் அது மிக மோசமானதாக அதிக இரத்தம் சிந்துவதாக இருக்கும்,” என நியூமன் தூதரக வாய்வழி நேர்காணலில் கூறினார்.

முதலில் தாலிபான்கள் போர்தந்திர அடிப்படையில் ஒரு அபாயத்தைத் தோற்றுவிக்க முடியும் என்பதை வாஷிங்டன் நம்புவது கடினமாக இருந்தது. களத்தில் இருந்த சில படைத் தலைவர்களும் தாலிபான்கள் பற்றி குறைத்து மதிப்பிட்டனர். அது குறிப்பிட்ட சில கிராமப்புற பகுதிகளை மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.  காபூலில் உள்ள அரசுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் அது ஏற்படுத்த முடியாது என்று நினைத்தனர். ” தாலிபானின் திறன் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டு விட்டதாக நாங்கள் எண்ணிணோம்,” என்று, 2004 விருந்து 2005 வரை துணைக் கமாண்டரான அப்போதைய பிரிகேடியர் ஜெனரல் பெர்னார்டு சாம்பாக்ஸ் ஒரு இராணுவ வாய்வழி நேர்காணலில் கூறினார். 2005 ம் ஆண்டு ஹெல்மான்டு மாகாணத்தில் பணியாற்றிய சிறப்புப் படைத் தலைவர் பால் டூலன், அமெரிக்க அதிகாரிகள் இந்தப் போரை அமைதியை நிலைநாட்ட மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கை என தவறாக கண்ணுற்றனர் என்று கூறினார். சண்டை தீவிரமாவதையும், தாலிபன்களின்

தாக்குதல் திறனை பெரிய அளவு அதிகரித்துள்ளதையும் காணும் எவருக்கும் அவர் விளக்கமளிக்கத் தயாராக இருந்தார். ” இதை நாம் சரி செய்யாவிட்டால், இவர்களை  இப்படியே அனுமதித்து விட்டால், நாம் நீண்ட காலத்திற்கு இங்கேயே சுற்றித்திரிய வேண்டி வரும்,” என்று டூலன் கூறினார். ஆனால் புஷ் நிர்வாகம் உள்ளிருந்து வந்த எச்சரிக்கைகளை அடக்கி வைத்ததுடன், போருக்கு மெருகூட்டுவதில் கவனம் செலுத்தியது.,” என்றார்.

பாதுகாப்பு செயலாளர் டொனால்டு எச்.  ரம்ஸ்ஃபீல்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் தனது படைகளில் தோராயமாக 10%ஐ பென்டகன் திரும்பப் பெறுவதால் எல்லாம் நல்லபடி நடக்கும்,” என அவர் தெரிவித்தார். ” இது நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் நேரடி விளைவு,” என்றும் அவர் அறிவித்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரம்ஸ்ஃபீல்டு அலைவலகத்திற்கும் வாஷிங்டனில் உள்ள பிற அதிகாரிகளுக்கும் காபூலில் உள்ள தூதரிடமிருந்து மற்றொரு வகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கை வந்தது. குழப்பமான 2006 பிப்ரவரி 21 ல் வந்த ஒரு செய்தியின் மூலம், காபூலிலும் பிற முக்கிய நகரங்களிலும் அதிகரித்துவரும் தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் சாலையோர குண்டுவெடிப்புகள் ஆகியவற்றால் ” அடுத்த பல மாதங்களுக்கு வன்முறை அதிகரிக்கும்,” என நியூமன் அனுமானித்தார். இதற்கு பாகிஸ்தானில் உள்ள தாலிபான் புகலிடங்களைக் குற்றம் சாட்டிய அவர், இது கவனிக்கப்படவில்லை என்றால், நான்கு ஆண்டுகளுக்கு முன் தங்கள் தலையீட்டினால் ஏற்பட்ட போர்தந்திர அச்சுறுத்தலை சந்தித்தது போன்ற மீண்டும் ஒரு அச்சுறுத்தல் மேலெழும் – வேறு வார்த்தைகளில் கூறினால், மீண்டும் ஒரு செப்டம்பர் 11 நிகழ்வு நடக்கும் என்று கூறினார்.

தனது முடிவில் நியூமன், நிலைமைகளை மேலாண்மை செய்யாவிட்டால்  தாலிபான்களுக்கு பொதுமக்கள் ஆதரவுப் பெருகும் என அச்சம் தெரிவித்தார். அமெரிக்க பொதுமக்கள் வியப்படையாமலும், அனைத்தையும் மறுசெய்கையாக பார்க்கும் வகையிலும் தயார் செய்ய முயற்சிப்பது அவசியம் என நான் எண்ணுகிறேன்,” என அவர் வாய்வழி நேர்காணலில் தெரிவித்தார். ஆனால் மக்கள் இத்தகைய நேரடியான எந்த பேச்சையும் கேட்கவில்லை. தூதரின் இந்த செய்திக்குப் பின் உடனே ஆப்கானிஸ்தான் சென்று வந்த புஷ், பெருகி வரும் வன்முறைகள் அல்லது தாலிபான்களின் எதிர்கிளர்ச்சி பற்றி எதுவும் பேசவில்லை. அதற்குப் பதிலாக, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, ஊடக சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான பள்ளிகள் பற்றி வெற்று புகழுரை ஆற்றினார்.

மார்ச்சு ஒன்றாம் தேதி நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில்,” உங்கள் நாடு அடைந்து வரும் முன்னேற்றங்களைக் கண்டு  நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம்,” என புஷ், கர்சாயிடம் தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு பக்ராமில்  செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த ஃப்ரீக்லே தாலிபானும், அல்- கொய்தாவும் வலிமைப் பெற்றுவிட்டதாகக் கூறுவதை மறுத்தார். காலநிலை வெப்பமடைந்து வருவதாலும், தனது படைகள் தாக்குதலில் இருப்பதாலும் வன்முறைகள் அதிகரித்து விட்டதாக  மலைப்பகுதியின் 10 வது படைப்பிரிவின் தலைவர்  கூறினார். ” நாங்கள் சண்டையை எதிரியிடம் எடுத்துச் சென்றுள்ளோம். சமீப வாரங்களிலும், மாதங்களிலும் வன்முறை அதிகரித்து வருவதை நீங்கள் பார்த்தால் அது பெரும்பாலும் ஆப்கன் தேசியப் படை, ஆப்கன் தேசிய காவலர் படை மற்றும் கூட்டு நாட்டுப் படைகள் தாக்குதலில் இறங்கி இருப்பதால் ஏற்பட்டதாகவே இருக்கலாம்,” என்றும்,” ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது உண்மையில் நீங்கள் அதைப் பார்க்கலாம் என்று நான் கூறுவேன்,” என்றும் அவர் கூறினார்.

மே மாதம் பென்டகனிலிருந்து ஊடகங்களுக்கு வெளியான செய்தி ஒன்றில் இராணுவப் பயிற்சிப் பிரிவுத் தலைவர் டர்பின்,  ஆப்கன் பாதுகாப்புப் படைகளின் ஒரு மெருகேற்றிய படத்தைக் காட்டினார்.  அவர்கள் தங்கள் எதிரிகளை இடைமறிப்பதிலும், அழிப்பதிலும் திறமையாக செயல்படுவதுடன், ஆப்கன் படைகள் ஆட்சேர்ப்பில் “குறிப்பிடத்தக்க” முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும்  கூறினார். அவர் செய்தியாளர்களை ஆப்கானிஸ்தானுக்கு வந்து பார்க்க அழைப்பு விடுத்தார். அவ்வாறு செய்தால் ஆப்கன் பாதுகாப்புப் படைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அவர்களே நேரில் பார்க்கலாம் என்றும், ” என்னைப் போலவே நீங்களும் அவர்கள் செய்திருக்கும் முன்னேற்றத்தை கண்டு ஈர்க்கப்படுவீர்கள்,” என்று கூறி தனது உரையை முடித்தார் டர்பின்.

சில நாட்களுக்குப் பிறகு யாரோ ஒருவர் நேரில் காண வந்தார். பாரசீக வளைகுடாப் போரின் கதாநாயகன் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி பாரி மெக்காஃப்ரே. அவர் ஓய்வு பெற்று பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அமெரிக்க இராணுவம் அவரை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் சென்று ஒரு தனிப்பட்ட மதிப்பீட்டை செய்யக் கோரியது. இந்த நடவடிக்கை பொதுவில் வெளியிடப்படவில்லை. அவர் ஒரு வாரத்தில் 50 இராணுவ உயர் அதிகாரிகளை நேர்காணல் செய்தார். தனது ஒன்பது பக்க அறிக்கையில், அவர் இராணுவ தலைவர்களை பாராட்டி இருந்தார். பல வெற்றிகளை குறிப்பிட்டுக் காட்டி இருந்தார். ஆனால் அவர் தனது முடிவிற்கு தேன் தடவவில்லை. தாலிபான்கள் விரைவில், எளிதில் வீழ்த்தப்படக் கூடியவர்கள் அல்ல என்றும், போர் “மோசமானதாக” உள்ளது என்றும், தாலிபான்களை நன்கு பயிற்சிப் பெற்றவர்களாக இருப்பதாகவும் அவர் முடிவு செய்தார். “அவர்கள் அதிக மூர்க்கத்தனமாகவும், செயல்தந்திரங்களைத் திறமையாக பயன்படுத்துபவர்களாகவும்” உள்ளனர். அத்துடன் அவர்கள் “மிகச் சிறந்த ஆயுதங்களுடன்” இருப்பதாகவும், காலத்தின் அழுத்தத்தை உணரத் தேவையற்றவர்களாக,  பீதியடையச் செய்ய இயலாத தூரத்தில் இருப்பதாகவும், கிளர்ச்சியாளர்கள் விரைவில் நம்மை “முடிவிற்காகக் காத்திருக்கச் செய்யும்” போர்தந்திரத்தை  மேற்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதற்கு முரணாக, ஆப்கன் படைகள்,”தாலிபான்கள் வைத்திருப்பதை விட வருந்தத்தக்க அளவு குறைவான ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறி இருந்தார். அவர் ஆப்கன் காவல்துறை லாயக்கற்றது என பொரிந்து தள்ளியிருந்தார். “அவர்கள் பேரழிவு தரும் நிலையில் இருக்கிறார்கள். மோசமான அளவு ஆயுதங்களையும், ஊழல் மிக்கவர்களாகவும், திறமையற்றவர்களாகவும், போதுமான  தலைமையும், பயிற்சியும் இல்லாதவர்களாகவும், போதைப் பொருள் பயன்பாட்டில் சிக்கியவர்களாகவும் இருபபதாகவும்,” கூறி உள்ளார். நல்ல நிலையில் இருந்தாலே கூட, அமெரிக்க உதவியின்றி ஆப்கன் பாதுகாப்புப் படைகள் சுயமாக செயல்பட மேலும் 14 ஆண்டுகள் அதாவது 2020 வரை ஆகும் என அவர் அனுமானித்தார். இந்த அறிக்கை ரம்ஸ்ஃபீல்டு உட்பட பல இணை தலைமை அதிகாரிகளுக்கு அடுத்தடுத்துச் சென்றது.

“அடுத்த 24 மாதங்களில் நாம் மிக முக்கியமான, விரும்பத்தகாத ஆச்சரியங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்,” என எச்சரித்த மெக்காஃப்ரே ,” ஆப்கானிஸ்தான் தேசியத் தலைமை கூட்டாக அச்சத்தில் உள்ளனர். வரும் ஆண்டுகளில் ஆப்கனை விட்டு வெளியேறுவோம். நேட்டோவிடம் பை இருக்கையில் ஒட்டு மொத்தமாக அனைத்தும் குழப்பத்தில் நிலைகுலையும்,” என்றும் எச்சரித்தார். மெக்காஃப்ரேவின் முடிவுகள் போதுமான அளவு கவலைக்குரியதாக எடுக்கப்படவில்லை எனில், ரம்ஸ்ஃபீல்டு மேலும் ஒரு கடுமையான உண்மை நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும்.

2006, ஆகஸ்ட் 17 அன்று பாதுகாப்பு செயலாளரின் நம்பிக்கைக்குரிய சிவில் ஆலோசகரான மரின் ஸ்ட்ரெமிக்கி, “இக்கட்டான நெருக்கடியில் ஆப்கானிஸ்தான்”  என்ற தலைப்பிலான  40 பக்க அறிக்கையை வழங்கினார். மெக்காஃப்ரிக்குப் பின் போர்க்களத்திற்கு தனியாக  உண்மை நிவரங்களை கண்டறிய அவர் சென்றார்.  மெக்காஃப்ரே அடைந்த பல முடிவுகளையே இவரும்  அடைந்தார். ஆனால் அவர் காபூலில் உள்ள வாஷிங்டன் கூட்டாளிகளின் நம்பகத்தன்மை மற்றும் பயனுடையவை குறித்து ஐயம் கொண்டிருந்தார். ஆப்கன் அரசு எளிதில் வளையக் கூடியதாகவும், தடையற்ற தாகவும் இருந்ததாகவும், தாலிபான்கள் சுரண்டுவதற்கு ஏதுவாக நாட்டின் பல பகுதிகளில் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தி வைத்திருந்ததாகவும் கூறினார். ” எதிரி வலிமையானவனாக இருக்கிறான் என்பதல்ல. ஆப்கன் அரசு பலவீனமாக இருக்கிறது” என அறிக்கையில் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு புதிய உள்நாட்டு அவநம்பிக்கை அலையை உணர்ந்தது. தூதர் நியூமன் ஆகஸ்ட் 29 அன்று கடுமையான ஒரு செய்தியை வாஷிங்டனுக்கு அனுப்பினார். ” நாம் ஆப்கானிஸ்தானில் வெற்றி பெறவில்லை” என அது தெரிவித்தது. தூதரின் எச்சரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு செப்.11 நிகழ்வின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாளில் ஏபிசி நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் மக்களுக்காக ஒரு மாறுபட்ட கருத்தைக் கூறினார். ” நாம் வெற்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்” ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி பெற வில்லை என  நானும் கூறுகிறேன்,” என்று கூறினார். அமெரிக்கா தோற்று விடுமா என்று கேட்ட போது,  ஆப்கனில் தோற்பது என்ற வாய்ப்புக்கே இடமில்லை,” என்று எய்க்கன்பரி பதிலளித்தார். ஒருவேளை தளபதிகள் போர்களத்தில் வீரர்களின் பேச்சைக் கேட்டிருந்தால் இத்தகைய குழப்பத்திலிருந்து தப்பித்திருக்கலாம். நியூயார்க் லேக் ப்ளேசிட்டைச் சேர்ந்த 26 வயதான, சார்ஜன்ட் ஜான் பிக்ஃபோர்ட், 2006 ம் ஆண்டின் பெரும் பகுதியை கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் செலவிட்டவர். அவர் பிற 10 வது மலைப்பிரிவு படைவீரர்களுடன் டில்மான் முனையில் நிறுத்தப்பட்டிருந்தார். இந்த இடம், செப்.11 நிகழ்விற்குப் பின் இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தேசிய கால்பந்தாட்ட வீரர் பேட் டில்மானின் நினைவாக அந்தப் பெயரைப் பெற்றது. ஆனால் அவர் நண்பனின் தவறான துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டார். பிக்ஃபோர்ட், இந்த சண்டை மூன்றாண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்கானிஸ்தானில் தான் இறக்கப்பட்டபோது இருந்ததை விட ” பத்து மடங்கு மோசமானது” என்றார். அவரது படைப்பிரிவு வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடும். எதிர் 200 போராளிகளைக் கொண்டு அமெரிக்கக் கண்காணிப்பு முகாமை தகர்க்க முயற்சி செய்வான்,” என்கிறார்.

” நாம் தாலிபான்களை வீழ்த்திவிட்டோம் என எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் எப்போதும் பாகிஸ்தானில்தான் இருப்பார்கள் அங்கிருந்து மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டமிடுவர். தற்போது முன்னெப்போதையும் விட வலிமையானவர்களாகி விட்டார்கள். அவர் இராணுவ வாய்வழி நேர்காணல் ஒன்றில்,” அவர்கள் எப்போது தாக்குதல் கொடுத்தாலும் பதுங்கி இருந்தாலும் அது மிகக் கச்சிதமாக திட்டமிடப்பட்டிருக்கும். அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது,” என்று கூறுகிறார். ஆகஸ்ட் 2006 ல் பிக்ஃபோர்ட் ஆயுதம் தாங்கிய ஹம்வீ வாகனத்தில் ஒரு ரோந்து படைக்கு தலைமை தாங்கிச் சென்றுக் கொண்டிருந்தார். கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருந்து ராக்கெட் மூலம் கையெறி குண்டுகளால் தாக்கினார்கள். குண்டு சிதறல் அவரது வலது தொடை, கெண்டைக்கால் தசை, கணுக்கால் மற்றும் பாலத்தைக் கிழித்து எறிந்து சென்றது. அவரது குழு தாக்குதலை தடுத்தது. ஆனால் ஒரு போர் வீரனாக அவரது நாட்கள் முடிந்து விட்டன.

பிக்ஃபோர்ட் மூன்று மாதங்கள் வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அவர் குணமடைந்து வந்த போது கிளர்ச்சியாளர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை அவரது முகம் பிரதிபலித்தது. ” அவர்கள் திறமையானவர்கள். எதிரிகள் என்றாலும் அவர்கள் மிக உயரிய மரியாதைக்குரியவர்கள். அவர்களை ஒரு போதும், ஒரு போதும், ஒரு போதும்  குறைத்து மதிப்பிடக் கூடாது.”

 

www. Washington post.com  இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

எழுதியவர்கள்: சைமன் மற்றும் ஷஸ்தர்(Schuster)

 

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்