Aran Sei

நாற்காலி யாருக்கு? – வலுக்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் மோதல்  

செப் 28-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் அவைத்தலைவர் கே.மதுசூனன் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடும் விவாதம் நடந்ததாகக் கூறுகிறார் பெயர் வெளியிட விரும்பாத அக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்.

அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர், இக்கூட்டத்திலேயே கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என பேசியுள்ளனர். பின்னர் பேசிய கே.பி.முனுசாமி மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர், கொடுத்த வாக்குறுதிப்படி வழிகாட்டுக்குழுவை அமைக்கவேண்டும் எனவும், திட்டமிட்டே தங்களை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமைச்சர் சி.வி.சண்முகம், “உங்கள் சண்டையைக் காண நாங்கள் ஆட்கள்கிடையாது. கட்சிக்காகத்தான் நீங்களே தவிர, உங்களுக்காக கட்சி இல்லை. எனவே நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்” எனக் கூறியுள்ளார்.

அடுத்ததாக பேசிய நத்தம் விசுவநாதன், தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திப்பது சாத்தியமில்லை எனவும் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் எதிர்கட்சிகள் விமர்சிப்பதற்கு நாமே வாய்ப்பளிப்பதை போல் ஆகிவிடும் என்பதால் தற்போது உள்ள சூழல்தொடர்வதே சரியாக இருக்கும் என்றும் பேசியுள்ளார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி, “அதிமுகவுக்கு 4 சதவிகிதம் வாக்கு வங்கி குறைந்துள்ளதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ள நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் வெற்றி பெறுவது கடினம். எனக்கு பதவி மீது ஆசையில்லை. நான் யாரிடமும் சென்று முதலமைச்சர் பதவியைக் கேட்கவில்லை. அம்மாவின் ஆட்சியைக் காப்பாற்றவே என்னை முதலமைச்சராக தேர்வு செய்தார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியை திறம்படவே நடத்தினேன். இந்த கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றியதாக பிரதமரே பாராட்டியுள்ளார்” என்று பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவை அமைத்தால்தான் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியும். அதுவே, கட்சியின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்கும். முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சர்ச்சையை துவக்கியதே உங்கள் தரப்புதான். முதலில் ராஜேந்திர பாலாஜியை வைத்து பேச வைத்தீர்கள். பின்னர் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கச் சொன்னீர்கள். பின்னர் மீண்டும் சேர்க்க சொன்னீர்கள். நீங்கள் சொன்னதை எல்லாம் நான் செய்து வருகிறேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான் திருப்தியாக இல்லை” என்று அதிருப்தியை பதிவுசெய்துள்ளார்.

“கட்சி அணிகள் மீண்டும் இணையும் போது, இந்த நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே எடப்பாடி முதலமைச்சராகவும் அடுத்து வரும் தேர்தலில் என்னைமுதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவேன்  என்றும் சொன்னீர்கள். அதன் அடிப்படையில்தான் கட்சியில் இணைந்தேன். பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து துணை முதலமைச்சர் மற்றும் அதன் இலாக்காக்களைப் பெற்றுக் கொண்டேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதனை மறுக்கும் விதமாக எடப்பாடி கே பழனிச்சாமி, “சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம்) உள்ளிட்ட 11 பேர் வாக்களித்தீர்கள். அப்போது நான்தான் ஆட்சியைக் காப்பாற்றினேன். கொஞ்சம் தவறியிருந்தாலும் இந்நேரம் திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால், இன்று அதிமுகவினர் பல விபரீதங்களை சந்தித்திருக்கக் கூடும்” எனக்கூறியுள்ளார்.

இத்தொடர் விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை மூன்று முறை முதலமைச்சராக்கியது ஜெயலலிதாதான் எனக் கூறியுள்ளார். அதனை மறுத்துப் பேசிய எடப்பாடி “நம் இருவரையும் முதலமைச்சராக்கியது சசிகலாதான்” பதிலளித்துள்ளார்.

அதிகாரப்போட்டி வலுப்பெற்றிருக்கும் இந்நிலையில், வரும் அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “செயற்குழு கூட்டம் ஜனநாயக முறையில் நடந்தது. எல்லோரும் கருத்துச் சுதந்திரத்துடன் அவரவரது கருத்துகளை முன் வைத்தோம். முதல்வர் வேட்பாளர் தேர்வைப் பொறுத்த வரை தலைமையின் உத்தரவே வேதவாக்கு” என்று தெரிவித்தார்.

“அதிமுகவில் கருத்து சுதந்திரம் உள்ளது. செயற்குழுவில் அது வெளிப்பட்டது. சசிகலாவைப் பற்றி பேசுவது தேவையில்லாத விஷயம்” அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்