Aran Sei

‘கொரோனா தீவிரமடைந்துள்ள சூழலில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பொறுத்தமற்றது இல்லையா?’ – கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட்

கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்தியாவில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது பொறுத்தமற்ற செயல் இல்லையா என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அதற்கு ஏற்றார் போல, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், இதுகுறித்து, ஆடம் கில்கிறிஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகள். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இச்சூழலில் அங்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது பொருத்தமற்ற செயல் இல்லையா அல்லது ஒவ்வொரு இரவும் மக்களைத் திசைத்திருப்புவதற்காகவே இவை நடத்தப்படுகிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும், உங்களுக்காக (இந்தியர்களுக்காக) நான் பிரார்த்திக்கிறேன் என்று ஆடம் கில்கிறிஸ்ட்  கூறியுள்ளார்.

சிறந்த தொடக்க ஆட்டக்காரராகவும், விக்கெட் கீப்பராகவும் ஆடம் கில்கிறிஸ்ட் புகழ் பெற்றவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவராக இருக்கிறார். முன்னர், ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்