கேரளா மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவையில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவிற்கு இடமில்லை என்று மலையாள தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகிய நிலையில், எங்களுக்கு மீண்டும் ஷைலஜா டீச்சர் வேண்டும் என்று திரைக்கலைஞர் பார்வதி தெரிவித்துள்ளார்.
அண்மையில், நடைபெற்று முடிந்த 140 தொகுதிகளுக்கான கேரள சட்டபேரவை தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி 99 தொகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், கேரளா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியவருமான ஷைலஜா டீச்சர், தான் போட்டியிட்ட மட்டனூர் தொகுதியில் 45 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றார்.
இந்நிலையில், பினராயி விஜயன் தலைமையில் அமையவுள்ள 21 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையில், கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஷைலஜாவிற்கு இடமில்லை என்று பல மலையாள தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, இன்று (மே 18), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள திரைக்கலைஞர் பார்வதி, “ஷைலஜா டீச்சரை மீண்டும் அமைச்சரவைக்கு கொண்டு வாருங்கள். நம் காலத்தின் தலைசிறந்த தலைவர். உண்மையில் அரிதான தலைவர். சுகாதார பேரிடர்களின்போது, ஷைலஜா டீச்சர் நம் மாநிலத்தைத் திறம்பட வழி நடத்தியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
@CMOKerala We deserve better than this! #bringourteacherback One of the most able leaders of our times! A rarity, really! @shailajateacher led the state through the most difficult of medical emergencies.
— Parvathy Thiruvothu (@parvatweets) May 18, 2021
“இந்த கொரோனா இரண்டாம் அலையின் நெருக்கடி சூழலில், அவரைக் கேரள சிபிஎம் தனது கட்சி பணிக்குத் தள்ளுகிறதா? இது உண்மையானால், இதை நியாயப்படுத்தவே முடியாது. மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஓரங்கட்டல் அக்கட்சியை கேள்விக்குள்ளாக்குகிறது.” என்று பார்வதி தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு திறன்மிக்க அரசாங்கத்திற்கு வேறு என்ன முக்கியமாக இருக்கும்? மீண்டும் எங்கள் டீச்சரை அமைச்சரவையில் இணையுங்கள்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் நாளை மறுநாள் (மே 20) பதவியேற்கவுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.