Aran Sei

‘கலைப்படைப்பு கவனப்படுத்தும். அரசியல் இயக்கங்கள் சமூக மாற்றங்களை உருவாக்கும்’- நடிகர் சூர்யா

ங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் குறித்து, திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாக, திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று ‘ஜெய்பீம்’ திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள ‘கலைநாயகன்’ சூர்யாவையும் அதனை உயிர்ப்புடன் படைப்பாக்கம் செய்துள்ள இளம் இயக்குநர் த.செ.ஞானவேலு அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில், நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன என்று கூறியுள்ளார்.

“மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் குறிப்பிட்டதைப் போல, மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி” என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்