Aran Sei

நடிகை பார்வதி திரைப்பட சர்ச்சை – தணிக்கை குழு அதிகாரியை நீக்க கோரிக்கை

 ‘வர்த்தமானம்’ திரைப்படம் தேசவிரோதமானது என்று கூறிய தணிக்கை குழு அதிகாரி சந்தீப் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கேரள திரைப்பட இயக்குநரும், கேரள மாநில திரைப்பட பள்ளியின் தலைவருமான கமல் கோரியுள்ளார் என தி வயர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தணிக்கை குழுவின் உறுப்பினராக இருந்துகொண்டு  ஒரு திரைப்படம் குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிப்பது விதி மீறல் என்பதால் சந்தீப்பை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கமல் கூறினார் என்கிறது தி வயர். 

ஓடிடி (OTT) தளங்கள் மீது தார்மீக கண்காணிப்பு : இந்திய தணிக்கை சகாப்தத்தின் சமீபத்திய நிகழ்வு

‘வர்த்தமானம்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்ட உடனேயே, கேரளாவில் உள்ள தணிக்கை குழுவின் உறுப்பினரான சந்தீப் குமார், படத்தின் கரு தேச விரோதமாக இருப்பதனாலும் அதை தான் எதிர்ப்பதாக ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். சந்தீப், பாஜகவின் தலைவர் என தி வயர் தெரிவிக்கிறது.

‘வர்த்தமானம்’ திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர் பார்வதி திருவோத்து நடித்துள்ளார். படத்தின் இயக்குநர் சித்தார்த்தா சிவா மற்றும் திரைக்கதை ஆசிரியர் சௌகத்தும் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பார்வதி நடித்த படத்தில் ‘தேசவிரோத கருத்துகள்’ – திரையிட மறுத்த தணிக்கை வாரியம்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், ஆய்வாளராக இருக்கும் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணொருவர், மொஹமது அப்துர் ரஹிமான் எனும் கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர்/ சுதந்திர போராட்ட வீரரை குறித்து ஆய்வு செய்வது தான் ‘வர்த்தமானம்’ திரைப்படத்தின் களம். இத்திரைப்படம் ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் உள்ள மாணவர் போராட்டங்களையும், காஷ்மீர் பிரச்சினையையும் குறித்து பேசுகிறதென செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கேரள மாநில திரைப்பட பள்ளியின் தலைவர் கமல், சந்தீப் விதிமீறல் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாஜக டெல்லியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தணிக்கை குழுவும், தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் திரைப்படங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அதிகரித்துள்ளது என்றும் மூத்த திரைப்பட இயக்குநரான கமல் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய கமல், “ சங்க் பரிவாரின் கையில் தணிக்கை வாரியம் ஒரு அரசியல் கருவியாகிவிட்டது. அதைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் தணிக்கை குழுவில் இடம் பெறக் கூடாது. திரைப்பட துறையை சேர்ந்தவர்களாக இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அறமும், நல்ல கொள்கைகளும் உடையவர்கள் தணிக்கை குழுவின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்” என்று கூறினார் என்று  தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்