‘எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு பிணை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே ஒரு வேண்டுகோள்’ என்று பீமாகோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஸ்டான் ஸ்வாமி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம், மும்பை உயர்நீதிமன்றத்தில் 84 வயதான பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி தாக்கல் செய்த ஜாமீன் மீதான விசாரணையின் போது இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் – ஸ்டான் ஸ்வாமி உயர்நீதிமன்றத்தில் மனு
காணொளிக் காட்சி வழியாக நடந்த ஜாமீன் மீதான விசாரணையின்போது தனது உடல்நிலை குறித்து தெரிவித்த ஸ்டான் ஸ்வாமி,”நான் எட்டு மாதங்களுக்கு முன்பு தலோஜா சிறையில் அடைக்கப்பட்டேன். அதிலிருந்து எனது உடல் நலம் மெல்ல குன்றி வருகிறது. என்னால் தற்போது எழுத முடியவில்லை, நடக்கவும் இயலவில்லை. மற்றவர்கள் எனக்கு ஊட்டாமல் என்னால் சாப்பிடவும் முடியவில்லை” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தனது ஜாமீன் மனுகுறித்து நீதிபதிகள் எஸ்.ஜே.கதாவலா மற்றும் எஸ்.பி. தவாதே முன்பு தெரிவித்த அவர், “எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும். நேற்றைய தினம் கூட நான் சிகிச்சைக்காக ஜே.ஜே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு என்னைப் போல் எண்ணற்ற மக்கள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். எனவே, எனக்கு என்னிலையை எடுத்துக் கூற அவகாசம் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறை நிர்வாகம் சில மருந்துகளை எனக்கு அளித்தது. ஆனால் அந்த மருந்தைவிட என் பிரச்சனை கொடுமையாக உள்ளது.எனவே தான் நான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறியுள்ளது.
இந்நிலையில், உங்களது உடல்நலனைக் கருத்தில் கொண்டு சில நாட்கள் ஜே.ஜே மருத்துவமனை அனுமதிக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டபோது, “நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை விட இவ்வாறு இருந்து சிறையில் சாவதே மேல், அது என் உடல்நிலையை முன்னேற்றமடைய செய்யாது. நீதிமன்றம் எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே ஒரு வேண்டுகோள்” என்றும் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, ஜே.ஜே மருத்துவமனை மருத்துவமனையின் பரிந்துரைகளை சிறை நிர்வாகம் பின்பற்றவேண்டுமெனவும், இந்த மனுவைக் கூடுதலாக வரும் ஜூலை 7 அன்று விசாரிக்கப்படும் என்று மும்பை உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.