Aran Sei

ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் சட்டம் – மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி அமலுக்கு வந்தது

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் “தேசிய தலைநகர் எல்லைப் பகுதி திருத்தச் சட்டம்  2021” அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மார்ச் 15 ஆம் தேதி,  மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் தேசிய தலைநகர் எல்லைப் பகுதி திருத்த மசோதா 2021-ஐ, மக்களவையில் தாக்கல் செய்தது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு, கடந்த மார்ச் 28 ஆம் தேதி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர், இந்தச் சட்டம் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்தே, இதைக் கடுமையாக எதிர்த்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ”டெல்லி மக்களால் நிராகரிக்கப்பட்ட, ஒரு புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பாஜக குறைக்க முயல்கிறது. இந்த மசோதா அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு முரணாக உள்ளது. பாஜகவின் அரசியலமைப்புக்கு எதிரான ஜனநாயக விரோத போக்கை கடுமையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

“எக்காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது” – தொடங்கியது மக்கள் போராட்டம்

மேலும், ” டெல்லியைப் பொறுத்தவரை அரசு என்பது துணை நிலை ஆளுநர் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அப்படி என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ன செய்யும்?” என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய தலைநகர் எல்லைப் பகுதி திருத்தச் சட்டம்  2021, வருகின்ற ஏப்ரல் 27-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம், கடந்த ஜூலை 4 ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு, டெல்லி அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், டெல்லியின் துணை நிலை ஆளுநர் தலையிடக் கூடாது எனவும், அவர் அமைச்சரவையின் வழிகாட்டுதலின் படியே நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

நீதிபதிகளுக்கு நட்சத்திர விடுதியில் கொரோனா சிகிச்சை – கண்டித்த நீதிமன்றம்; உத்தரவைத் திரும்பப் பெற்ற டெல்லி அரசு

இந்நிலையில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள இந்தச் சட்டத்தின் மூலம், டெல்லி அரசு நிர்வாக ரீதியாக எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், துணை நிலை ஆளுநரின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

இந்தச் சட்டம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்குவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் சட்டமன்றத்தின் அதிகாரங்களை நீர்த்து போக செய்வதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சட்டம், துணை நிலை ஆளுநரிடையேயும் மக்களால் தேர்ந்தெடுகக்ப்பட்ட ஆம் ஆத்மி அரசாங்கத்துக்கு இடையேயையும் மோதலை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக தி இந்து கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்