Aran Sei

வேளாண் சட்டங்களை ஏன் ரத்து செய்ய வேண்டும்? – மத்திய அமைச்சருக்கு பொருளாதார வல்லுநர்கள் விளக்கம்

லகெங்கிலும் இருந்து சுமார் 40 பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட கல்வி ஆராய்ச்சிக் குழு, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா தொற்றிற்கு மத்தியில், வேளாண் சட்டங்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டதால், “மத்திய அரசின் நோக்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்முறையின் நேர்மை” குறித்து இந்தக் குழு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் விவசாய பிரச்சினைகள் குறித்து பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த விவசாய குழுக்களுடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அந்த கடிதத்தில் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

‘தனியார் தலையீட்டை எதிர்க்கிறோம்’ – விவசாயிகள் சொல்வது சரியா? – அருண் கார்த்திக்

2020-ம் ஆண்டு, டிசம்பர் 22 தேதியிட்ட அந்த கடிதத்தில், “இந்தியாவுடன் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்ட பொருளாதார வல்லுநர்களாகிய நாங்கள் நாட்டின் வளங்கள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே, விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வழிவகுத்த சமீபத்திய வேளாண் சட்டங்கள் குறித்து எங்களுக்கு தீவிரமான கவலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சிறு குறு விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களை விற்பதற்கான சந்தையும் அதை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளுதலும் தேவைப்படுகிறது. ஆனால், மத்திய அரசு முன்மொழிந்துள்ள வேளாண் சட்டங்கள் அதை உறுதி செய்யுமா என்பது பெரும் குழப்பமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

“கொரோனா தொற்றிற்கு மத்தியில், வேளாண் சட்டங்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டதால், மத்திய அரசின் நோக்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்முறையின் நேர்மை குறித்து சந்தேகம் எழுகிறது. பல பொருளாதார வல்லுநர்கள் வாதிட்டபடி, இந்தச் சட்டங்களில் பெரிய சிக்கல்கள் உள்ளன” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“(அ) ​​ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், சிறு குறு விவசாயிகளுக்கு, ஒப்பந்த பண்ணை முறையில் பலன்கள் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை இந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் தான் அதிகம் உற்பத்தி செய்கிறார்கள். ஆகையால் இந்த சட்டங்கள் அவர்களின் நலனை மோசமாக பாதிக்கும். இதேபோல், மிகவும் சக்திவாய்ந்த தனியார் சந்தை இடைத்தரகர்களின் தன்னிச்சையான ஆளுமையை குறைப்பதற்காக, பண்ணை உற்பத்தி சந்தைப்படுத்தல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது (ஒரு சிறிய பகுதி மட்டுமே, விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் மூலம் விற்கப்படுகிறது)” என்று இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? – சாய்நாத்

“பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, தற்போதைய சட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகளின் ‘இரட்டை முறையை’ ஊக்குவிப்பதன் மூலம், இருக்கும் நிலையை பலவீனப்படுத்த முயல்கின்றன. இது தனியார் ஒப்பந்தக்காரர்கள், சந்தை இடைத்தரகர்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும். அதே நேரத்தில், உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் மூலம் பொருட்கள் விற்பனை ஆகாது. இது சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாதிப்பை அதிகரிக்கும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“கடந்த மூன்று தசாப்தங்களாக தனியார் கார்ப்பரேட் துறையின் ஆதிக்கம் கணிசமாக வளர்ந்துள்ளது. அடுத்தடுத்த இந்திய அரசுகள் இதை கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ விரும்பவில்லை. சில உயர்மட்ட மோசடிகளிலும் ஊழல்களிலும் இது அம்பலமாகியுள்ளது. இதைப் பார்க்கும்போது, ​​இந்தச் சட்டங்களின் மூலம் ஒப்பந்த பண்ணை முறை, வேளாண் வணிகங்கள் மற்றும் கார்ப்பரேட் துறையை விவசாயத்தில் ஊக்குவிப்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் விற்பனை மற்றும் விலை நிர்ணய சக்தியைக் குறைத்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது ஏற்கனவே உயர்ந்திருக்கும் கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒட்டுமொத்த ஏற்றத்தாழ்வுகளையும் மோசமாக்கும்” என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“(ஆ) எந்தவொரு வலுவான ஜனநாயகமும் பல்வேறு சமூகங்களின் தேவைகளை அடிமட்டத்திலிருந்து நிவர்த்தி செய்கிறது. அவ்வப்போது அது குறித்து சோதனை செய்கிறது. பல்வேறு அரசியல் பிரிவுகளிடையே இந்த வேலை பகிரப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் இதை நன்கு அறிந்திருந்தனர், மேலும் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் பல்வேறு உரிமைகள் மற்றும் பொறுப்புகளை வழங்கினர். இந்த பின்னணியில், பல்வேறு மாநிலங்களில் பொதுவான தன்மைகள் இருந்தாலும், உள்ளூர் மக்களின் தேவைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயம் வித்தியாசமாகக் கையாளப்படுகிறது” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

“இந்த சட்டங்கள் விவசாய கொள்கை மற்றும் விதிகளை வகுப்பதில் மாநிலங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளன. மேலும், இந்தியாவில் கடந்த ஐந்து – ஆறு ஆண்டுகளில் சிறுபான்மை மத குழுக்கள் மற்றும் பட்டியல் சாதியினரின் உரிமைகள் பறிபோயுள்ளன. இது(இந்த சட்டங்கள்) மீண்டும் ஒரு சிறுபான்மை சமூகத்தை பாதிக்கும் (சீக்கியர்கள்). ஊடகங்கள் பல விவசாயிகள் இதில் பங்கேற்பது போல் காட்டினாலும் இந்த போராட்டங்களில் சீக்கியர்கள் தான் அதிகம் பங்கேற்றுள்ளனர்” என சமத்துவத்திற்கான இந்திய பொருளாதார வல்லுநர்கள் குழு கூறியுள்ளது.

“பன்முக கலாச்சாரமும் பல பிராந்தியங்களும் கொண்ட இந்திய தேசத்தில், மத்திய அரசின் விவசாயக் கொள்கை பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்து அதற்கேற்ப சட்டங்களை உருவாக்க வேண்டும் (அதாவது ஒரே சட்டத்தின் கீழ் அனைத்து கொள்கை பரிந்துரைகளையும் விதிக்க கூடாது)” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனவே, இந்தச் சட்டங்களை முதலில் ரத்துசெய்து, பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாய குழுக்களுடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். விவசாய பிரச்சினைகளை (உற்பத்தி, சந்தைப்படுத்தல், கடன், விலை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள்) கையாண்ட பல வல்லுநர்கள் உள்ளனர், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன் அவர்களுடன் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்” எனவும் இந்திய பொருளாதார வல்லுநர்கள் குழு மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்