Aran Sei

காற்றில் கரைந்த மொழி : அப்துல் ஜப்பார் என்ற ஊடக அடையாளம் மறைந்தது

இன்று பெருமதிப்புக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது சக தமிழர்கள் எல்லோரும் தம் குடும்பத்தில் ஒரு நெருங்கிய சொந்தத்தை இழந்த சோகத்தில் இருக்கின்றார்கள்.

இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற வேறுபாடுகளை அப்துல் ஜாபர் போன்ற மிகச் சிலரே களைந்து தமிழர் என்ற பொதுமையோடு இயங்குகிறார்கள்.

இன்குலாபின் அறமும் அரசியலும் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

அறுபது ஆண்டுகளைக் கடந்த ஊடகப் பணி, அதைத் தாண்டி மனித நேயராக எம் தமிழ் உறவுகளின் சுதந்தர வேட்கையை தன் உணர்வாகக் கொண்டு இயங்கியவர்.

தன்னுடைய ஊடக வாழ்வின் ஆரம்பம் அவருக்கு ஆசியாவின் மூத்த வானொலி இலங்கை வானொலியில் கிட்டுகின்றது.

நாற்பதுகளிலே தமிழகத்தில் இருந்து வாணிபம் செய்யும் நோக்கில் அப்துல் ஜப்பார் அவர்களின் தந்தையார் இலங்கைக்கு வருகிறார். சிறுவனாக இருந்த அப்துல் ஜப்பார் வீட்டில் ஒற்றைப் பையன் எனவே அவரையும் தன்னுடனேயே அழைத்து வருகிறார் அவர் தந்தை.

க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவு : எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்

கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அப்துல் ஜபாருக்குக் கிட்டுகிறது.

அப்போது வானொலி உலகின் ஆளுமை சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் பார்வை இவர் மேல் விழுகிறது. கூடவே வானொலி மாமா சரவணமுத்து, சானா சண்முகநாதன் போன்ற மூத்த ஆளுமைகளும் அப்துல் ஜப்பார் அவர்களின் ஊடக ஆசான்களாகும் பாக்கியம் அவருக்குக் கிட்டுகிறது.

எதிர்ப்புகள் இந்து மதத்தையும் இந்தியாவையும் வடிவமைத்த வரலாறு – ரொமிலா தாப்பருடன் நேர்காணல்

தொடர்ந்து 14 ஆண்டுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகள், நாடகங்கள் வழியாக திறன் வாய்ந்த ஊடகராக இயங்கும் வேளை சிறீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியா திரும்புகிறார்.

பின்னர் தான் எடுத்த தொழில் முயற்சிகள், இந்திய வானொலியில் பணியாற்ற வேண்டி முயற்சிகளைத் தொடர்கிறார்.

அப்போது அவருக்குக் கிட்டும் கிரிக்கெட் வர்ணணையாளர் வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார்  என்பதை உலகறியும். தமிழில் கிரிக்கெட் வர்ணனை வழங்கிய முன்னோடி ஊடகர் என்ற பெருமையோடு, செழுமையான ஆற்றொழுக்கான ஆங்கிலம் கலக்காத தமிழ்ப் பேச்சு, போட்டி நடக்கும் போது நிகழும் திருப்பங்களை சம நேரத்தில் தனக்கே உரிய பாணியில் உவமான, உவமேயங்கள், ஊரில் புழங்கும் பழமொழிகள் துணையோடு வர்ணனையால் விளாசுவது என்று ஒரு புதிய அடையாளத்தை நிறுவினார். அவர் போட்ட அந்தப் பாதையில் அவரே என்றும் ராஜாவாகத் திகழ்ந்தார்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு வாரந்தோறும் இந்தியக் கண்ணோட்டம் என்ற தொகுப்பை இரு தசாப்தங்களைக் கடந்து புலம்பெயர் வானொலிகளுக்காக ஆரம்பத்தில் இருந்த அதே துடிப்போடு கொடுத்தவர் கடந்த சில வாரங்களுக்கு முன் வரை அந்த ஓட்டத்தை நிறுத்தவில்லை.

இஸ்லாமியப் பெருமக்களின் புனித நோன்பு காலச் சிறப்புப் பகிர்வு, அரசியல் கருத்தாடல், தமிழக மற்றும் இந்தியத் தேர்தல் காலத்தில் நேரடிப் பகிர்வுகள் என்று புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் வானொலிகளுக்கான அவரின் பங்களிப்பாக நீண்ட காலமாக வழங்கி வந்துள்ளார். தன்னுடைய அரசியல் கண்ணோட்டதிலும் முடிக்கும் போது ஒரு முத்தாய்ப்பான கிராமியத்து எள்ளல் சொல்லாடலைக் கொண்டு வந்து நிறுத்துவார்.

“எண்பதுகளில் உங்கள் கிரிக்கெட் தமிழ் வர்ணனைக்குப் பரம ரசிகன், இப்போது இந்தியக் கண்ணோட்டம் நிகழ்ச்சிக்கு! எங்கிருந்து இவ்வளவு விவரம் திரட்டுகிறீர்கள் ஐயா” என்ற ஆச்சரியத்தோடு வரவேற்றவர் வே.பிரபாகரன் அவர்கள்.

போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு மரண தண்டனை – ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அரசு

2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்குச் சென்று அங்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சந்தித்த போது மறக்க முடியாத அந்த பாராட்டு இவருக்குக் கிட்டியது

ஐபிசி உலகத் தமிழ் வானொலி இவருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கெளரவித்தது.

துபாயில் துவக்கு இலக்கிய அமைப்பு “ஊடகச் செல்வர்” என்ற அடைமொழி அளித்துச் சிறப்பித்தது. “அழைத்தார் பிரபாகரன்”, “இறைதூதர் முகமத்” ஆகிய நூல்களை எழுதியவர், இவரின் எண்பதாவது அகவையில் ஊடக நண்பர்களின் நினைவுப் பகிர்வு தாங்கி “காற்றின் மொழி” என்ற நூலும் வெளியிடப்பட்டது.

கடந்த ஓராண்டில் 42 ஊடகவியலாளர்கள் கொலை – சர்வதேசப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு

இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு அப்துல் ஜப்பார் அவர்கள் குறித்த அறிமுகமாக இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டிய அவரின் ஊடகத் துறை அனுபவம் நீண்டது. அது வானொலி நாடகம், நிகழ்ச்சித் தயாரிப்பு, விளையாட்டு, ஆன்மிகம், அரசியல் என்று நீண்டது.

16 ஆண்டுகளாக உலக வானொலிகளில் அப்துல் ஜப்பார் அவர்களது குரலை மட்டும் கேட்டு நேசித்த எனக்கு 2016 ஆம் ஆண்டில் அவரின் சிட்னி வருகையில் நம் வானொலியில் நேர்காணல் செய்ய வாய்ப்புக் கிட்டுகின்றது.

“ஐயா! உங்கள் வானொலி வாழ்வியல் அனுபவங்கள் நீண்டவை அவற்றை ஒரு நூலாக ஆவணப்படுத்த வேண்டும்!” என்று வேண்டுகோள் வைத்தேன்.

“என்னுடைய சகபாடி ஒருவரும் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார், விரைவில் செய்கிறேன் பிரபா” என்று உறுதியளித்தவரின் கனவும் மெய்ப்பட்டிருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்ந்த வரலாறு அப்படி.

அப்துல் ஜப்பார் அவர்கள் என்றும் எம் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருப்பார்.

– கானா பிரபா, நிகழ்ச்சித் தயாரிப்பாளர், ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்