Aran Sei

மக்கள் விரோத காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தைக் கைவிடவேண்டும் – அரசியல் தலைவர்கள் கண்டனம்

330 ஏக்கர் பரப்பளவில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும், இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

துறைமுக விரிவாக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. திட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதற்கு அதிக காலம் கொடுக்காததாலும், கொரோனா காலமாக இருப்பதாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது ஆபத்தில் முடிந்துவிடும், அதனால் இந்த மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கூட்டத்தை நடத்தினால், சுற்றுச்சுசூழல் பாதுகாப்பு ஆர்வலர்களுடன், நானும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவதும் பெரும் ஆபத்தில் முடிந்து விடும். எனவே இக்கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றோம். இதனையும் மீறி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நானும் எம் கட்சி உறுப்பினர்களும் பெரும் அளவில் இக்கூட்டத்தில் பங்கு கொள்வோம்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அதானி குழுமத்தின் கொள்ளை லாப வெறிக்கு உதவுவதற்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, இயற்கை வளத்தைக் காவு கொடுத்து சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக மாற்றவுள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனே கைவிட வேண்டும் என்று கோருகிறோம்” என்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் : சிபிஎம் புதிய அறிவிப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்:மோசடியான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்  இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் என்பதே நாசக்கார திட்டமாக இருக்கும் நிலையில், கருத்துக்கேட்பு கூட்டம் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும். எனவே மோசடியான இந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

மேலும், “இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசியல் கட்சிகளையும், அரசியல் இயக்கங்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார் .

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்