Aran Sei

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை யூடியூப், தூர்தர்ஷனில் வெளியிட வேண்டும் – மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கிய ஆம் ஆத்மி எம்பி

Credit: The Wire

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை யூடியூப் மற்றும் தூர்தர்ஷனில் வெளியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

முன்னதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை யூடியூப்பில் பதிவேற்றிக் கொள்ளுங்கள் என அக்கட்சியின் தலைவரும் டெல்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

மதவெறியை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அரசியல் லாபத்திற்காக விளம்பரப்படுத்தும் பாஜக – சந்திரசேகர் ராவ் விமர்சனம்

அரவிந்த கெஜ்ரிவாலின் பேச்சுக்கு, மக்களை பிளவுபடுத்தும் திரைப்படத்தைப் பரப்புவது சரியான செயலா? என இஸ்லாமிய தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

டெல்லி சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசியிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரி விலக்கு கேட்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், அதை யூடியூபில் பதிவேற்றி அனைவருக்கும் இலவசமாக காட்டுங்கள்” என தெரிவித்திருந்தார்.

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை மோடியும் பாஜகவும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றனர் எனக் குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், காஷ்மீர் பண்டிட்கள் பெயரைச் சொல்லிச் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், நீங்கள் (பாஜக) திரைப்படத்திற்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என கூறியிருந்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேறிய 25 ஆண்டுகளில், 13 ஆண்டுகள் நாட்டைப் பாஜக ஆண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சியில் உள்ளது. காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டதா? ஒருவருக்கும் இல்லை. இதை வைத்துப் பாஜக அரசியல் மட்டுமே செய்தது?” என தெரிவித்திருந்தார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

”தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 200 கோடியைச் சம்பாதித்துள்ளது. எங்களிடம் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. படத்தை அனைவரும் பார்க்கும்படி யூடியூபில் வெளியிடுங்கள் மற்றும் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் காஷ்மீர் பண்டிட்கள் மறுவாழ்விற்கு பயன்படுத்துங்கள். மேலும், காஷ்மீர் பண்டிட்கள் அவர்களின் சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்கு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்” என அவர் கூறியிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்திற்கு டெல்லி மாநில பாஜக தலைவர் அதேஷ் குப்தா, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமான்ந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், கெஜ்ரிவாலின் இந்த கருத்து இந்து விரோத மனநிலையின் வெளிப்பாடு என மணிப்பூர் முதலமைச்சர் என். பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

Source : The Wire

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்