Aran Sei

செப்.17 வேளாண் திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட நாள் – கறுப்பு தினம் அனுசரிக்க ஆம் ஆத்மி முடிவு

ன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் இயற்றப்பட்டு, இன்று (செப்டம்பர் 17) ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தவும் ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (செப்டம்பர் 16), ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தார் சிங் சந்த்வான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் அதிருப்திக்கொண்டுள்ளனர். இந்தச் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு, செப்டம்பர் 17 அன்று, மூன்று விவசாய சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. எனவே, செப்டம்பர் 17 ஆம் தேதியைக் கருப்பு நாளாக அனுசரிப்போம்.” என்று கூறியுள்ளார்.

கொட்டிய மழை நீரால் மூழ்கிய போராட்டக் களங்கள் – விடாது போராடும் விவசாயிகள்

பஞ்சாப்பின் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஷிரோமணி அகாலிதளம் கட்சியும் (எஸ்ஏடி) செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளது.

மேலும், விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தளமான குருத்வாரா ராகப்கஞ்ச் தொடங்கி நாடாளுமன்றம் வரை பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு, டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதை தடுப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் நிச்சயம் பேரணி நடக்கும் என்றும் ஷிரோமணி அகாலிதளம் கட்சி அறிவித்துள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்