Aran Sei

வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கக் கெடு – தகவல்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா?

Image Credits: Bloomberg Quint

ங்கி கணக்குகளுடன் ஆதார் எண்களை  இணைக்காதவர்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குடன், 2021-ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், ‘ஆதார்’ எண் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பின், 73 வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ‘காணொளி உரையாடுதளம்’ வாயிலாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் இன்னும் முடிவடையவில்லை. வங்கிகள் அதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். பல வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படவில்லை. அதனால், ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்குடனும், அடுத்த ஆண்டு, மார்ச், 31க்குள் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“தேவையான வாடிக்கையாளருக்கு, ‘பான்'(PAN) எனப்படும், வருமான வரி கணக்கு எண்ணை இணைப்பதிலும், வங்கிகள் அக்கறையுடன் செயல்பட வேண்டும். பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கக் கூடாது. ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும். யூபிஐ அடிப்படையிலான கட்டணத் தளங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

“அனைத்து வங்கிகளிலும் யூபிஐ என்பது பொதுவான பேச்சுவழக்கு சொல்லாக மாற வேண்டும். ‘ரூபே’ அட்டைகளையும் வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும். மக்களில் யாருக்கு அட்டைகள் தேவைப்பட்டாலும், நீங்கள்  ‘ரூபே’ அட்டையை மட்டுமே வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

“மக்கள் தொகை மிகுந்த நாடான இந்தியா, வங்கிகளின் சிறந்த சேவையின் காரணமாகத் தொற்றுப் பரவலுக்கு இடையிலும் மீண்டெழுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘அரண்செய்யுடன்’ பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “ஆதாரே வேண்டாம் என்பது தான் எங்களின் நிலைபாடு. பன்னாட்டு நிறுவனங்கள் மக்களின் தகவல்களை ஆதாரின் வழியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அதனை நாங்கள் முற்றிலும் மறுத்தோம்” என்று கூறினார்.

“உச்ச நீதிமன்றம் கூட ‘தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பின்’ (Protection of personal details) அடிப்படையில் எச்சரிக்கை விடுத்தது. அதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. அவர்கள் இந்த வழியில் மிக நீட தூரம் பயணித்துவிட்டார்கள். ஆகையால், இது குறித்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆதாரில் கொடுக்கப்பட்ட தகவல்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.

“காங்கிரஸ் இதனை அறிமுகம் செய்தபோது பாஜக எதிர்த்தது. இப்பொழுது, இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதனை அமல்படுத்தி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைக் கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை” என  ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்