Aran Sei

போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பிகள் – தடுத்து நிறுத்திய காவல்துறை

டெல்லி காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக வரலாற்றை திருத்துகிறது; விவசாயிகளிடம் அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – திருச்சி சிவா

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஷிரோமனி அகாலி தளத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்  ஹர்சிம்ரத் கௌர் பாதல் ஒருங்கிணைப்பில் திருமாவளவன், கனிமொழி, சு.வெங்கடேசன், ரவிகுமார், திருச்சி சிவா உட்பட, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சௌகத்தா ராவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே உட்பட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெல்லி காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்றுள்ளனர்.

அப்போது, விவசாயிகளை சந்திக்க விடாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, விவசாய சட்டங்களை திரும்ப றெக் கோரியும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் – 80 வயதான சிறு விவசாயி, முன்னாள் இராணுவ வீரரை கைது செய்த டெல்லி போலீஸ்

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், இணைய தள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களை எதிரிகளைப் போல் அரசு நடத்துகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கம்பிகளையும் கற்களையும் வைத்து தடுப்புகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உடனடியாக இவை அகற்றப்பட வேண்டும். ஜனநாயகரீதியாக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷிரோமனி அகாலி தளத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ராத் கௌதர் பாதல், “இந்த பிரச்சினை (விவசாயிகளின் போராட்டம்) பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப சபாநாயகர் எங்களை  அனுமதிக்கவில்லை. இப்போது அனைத்து கட்சிகளும் இங்கு (போராட்ட களத்தில்) என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பது குறித்த உண்மை விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே வந்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்