Aran Sei

அர்னாப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி – மும்பை உயர்நீதி மன்றம்

அர்னாப் ஜாமீன் மறுப்பு credits : times of india

மும்பை உயர்நீதி மன்றம் ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. இவர் மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை விசாரித்த மாவட்ட நீதிபதிகள் நவம்பர் 18 ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2018, மே 5-ம் தேதி 53 வயதான கட்டடக் கலைஞர் அன்வே நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டனர். அவருடைய மரணத்திற்குக் காரணம் அர்னாப் கோஸ்வாமி என்று தன்னுடைய தற்கொலை குறிப்பில் பதிவு செய்திருந்தார் நாயக். ”அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவர் தனக்கு தர வேண்டிய 5 கோடியே 40 லட்சம் ரூபாயைத் தர மறுத்ததே இந்த முடிவிற்கு தன்னை தள்ளியதாக” குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு நாயக்கினுடைய மனைவி அக்ஷிதா அளித்த புகாரின் பேரில் அர்னாப் மீது அலிபாக் காவல்துறை  எஃப்ஐஆர் பதிவு செய்யதது.

அந்தப் புகாரில் ”ரிபப்ளிக் டிவி அலுவலகத்தை வடிவமைத்துக் கொடுத்த அன்வே நாயக்கிடம், அவர் செய்த வேலைக்கான பணத்தை அர்னாப் தர மறுத்ததாகவும்  அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நாயக் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு அலிபாக் காவல்துறையால் பதியப்பட்ட இந்த வழக்கு 2019-ம் ஆண்டு ராய்காத் காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் வழக்கை மறு விசாரணை செய்யும்படி  மகாராஷ்ட்ரா அரசின் குற்றவியல் புலாய்வுத் துறை (சிஐடி)க்கு மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி, காலை அர்னாப் கோஸ்வாமியை, அவர் வீட்டில் வைத்து மகாராஷ்ட்ரா காவல்துறையினர்  கைது செய்தனர்.

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுப் பிறகு அலிபாக் சிறை – தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில்  அர்னாப் (அலிபாக் நகராட்சியால் நடத்தப்படும் பள்ளி) தங்க வைக்கப்பட்டார். அலிபாக் சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததை அடுத்து, தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.

தலோஜா சிறைக்குக் கொண்டு வந்தபோது பத்திரிகையாளர்களைப் பார்த்த அர்னாப் கோஸ்வாமி, “என் வழக்கறிஞர்களுடன் பேச என்னை அனுமதிக்கவில்லை. என் உயிருக்கு ஆபத்து உள்ளது. தயவுசெய்து எனக்கு உதவ வேண்டும் என்று  நீதிமன்றங்களிடம் சொல்லுங்கள். ” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதி மன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி  தாக்கல்  செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அடங்கிய அமர்வு அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அர்னாப் இடைக்கால ஜாமீனைப் பெற அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தை நாடலாம் என்றும், அத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டால், அதில் செஷன்ஸ் நீதிமன்றம் நான்கு நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் இருக்கும் அர்னாப் கோஸ்வாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்