Aran Sei

ஆன்லைனில் பணத்தையும் உயிரையும் எடுக்கும் சூதாட்டம் – சியாம் சுந்தர்

ன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது பற்றிய செய்திகள் தற்போது தமிழகத்தில் அடிக்கடி வெளியாகின்றன.

தமிழக இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்

இந்த ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் முத்துக்குமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த மதுரை நீதிமன்றம் தமிழக அரசு இந்த மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆந்திரா ஆன்லைன் ரம்மியை செப்டம்பர் மாதம் தடை செய்தது. தெலுங்கானாவில் 2017-லேயே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் கடந்த செப்டம்பர் மாதம் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார்.

கேபிஎம்ஜி அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டிய அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ 2,200 கோடி புரள்வதாகவும், அது ஆண்டுக்கு 30% வளர்வதாகவும், 2023 வாக்கில் அது ரூ 12,000 கோடியை தொட்டு விடும் என்று எச்சரித்திருந்தார்.

நமது நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களிலும் மன்றங்களிலும் சூதாடுவது குற்றம் ஆகும்.

ஆனால், கோவா, மிசோரம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் அந்த மாநில அரசுகள் சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி அளித்துள்ளன. அதனால் பெரும்பாலான ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தமது அலுவலகத்தை இந்த மாநிலங்களில் அமைத்து சூதாட்ட விளையாட்டுக்களை ஆன்லைனில் நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் நடத்தப்படுவதால் அவை கோவா, மிசோராம் மாநிலங்களுக்கு வெளியில் இருப்பவர்களும் விளையாடும் வகையில் அமைந்துள்ளன.

இப்பொழுது, ரம்மி விளையாடுவது தொடர்பான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகளை சூதாட்ட நிறுவனங்கள் அனுப்புகின்றன. அதில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தும் விதத்தில் 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் ‘உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று சூழ்ச்சி வலையை இந்த நிறுவனங்கள் விரிக்கின்றன.

மேலும், இணையதளங்களிலும், யூடியூப் வீடியோக்களிலும் ஆன்லைன் ரம்மி பற்றிய விளம்பரங்கள் எந்தத் தடையுமின்றி வெளியிடப்படுகின்றன.

இலவசமாகக் கிடைத்த பணத்தைக் கொண்டு விளையாடலாம் என்றும், ஆன்லைன் மூலம் சம்பாதித்து விடலாம் என்றும் பலர் வலைத்தளத்தில் தம்மை பதிவு செய்து கொண்டு விளையாட ஆரம்பிக்கின்றனர். இந்த விளையாட்டில் ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து வெற்றி பெற முடியாமல் பணத்தை இழக்கின்றனர்.

இது போன்ற இணைய தளத்தில் நம்முடன் சகமனிதர்கள் விளையாடுகிறார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் மனிதர்களும் கணினிகளும் சேர்ந்த குழுக்களே சூதாட்ட விளையாட்டில் இணைக்கப்படுகின்றன.

சீட்டாட்டம் என்பது probability என்கிற நிகழ்தகவினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு காசினை சுண்டி விட்டால் தலை விழுவதற்கு 50% வாய்ப்பு உள்ளது. பூ விழுவதற்கும் 50 சதவீத வாய்ப்பு உள்ளது. அதுபோல சீட்டாட்டத்தில் மொத்தம் 52 சீட்டுகள் உள்ளன. குறிப்பிட்ட சீட்டு வருவதற்கு 1/52 வாய்ப்பு உள்ளது.

சீட்டுக்கள் கிடைக்கும் நிகழ்தகவின் அடிப்படையில் ரம்மியில் பணம் கட்டி சூதாடப்படுகிறது. ஆன்லைன் ரம்மியிலும், சூதாட்ட விடுதிகளிலும் சூதாடுபவர்களுக்கு எதிராகவே கணினிகள் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும் உதாரணமாக, காசு சுண்டிவிடும் பொழுது தலை விழும் என்று பணத்தை நாம் கட்டும்போது கணினி பூ விழுவது போன்ற ப்ரோக்ராம் செய்திருக்கும். ஆதலால் நாம் எவ்வளவுதான் முயன்றாலும், எத்தனை முறை முயன்றாலும் தலை விழாது.

சீட்டாட்டத்தில் அடுத்தவரின் சீட்டினை பார்த்து விளையாடும்போது அப்படிப் பார்த்து விளையாடுபவர் எளிதில் வெற்றி பெற முடியும். ஆனால் ஆன்லைன் ரம்மியில், அதை இயக்கும் கணினி புரோகிராம் அடுத்தவரின் சீட்டை பார்ப்பது மட்டுமின்றி, அவருக்கு என்ன சீட்டை வரச்செய்வது என்பதையும் தீர்மானிக்கும் வல்லமை பெற்றுள்ளது.

அந்த மென்பொருள் நிரலின் அடிப்படையில்தான் ஒருவர் வெற்றி பெறுவதும் தோற்பதும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கணினி நிரலை எழுதி பராமரிப்பது ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள்.

எனவே, யாரை எப்போது ஜெயிக்க வைக்க வேண்டும், எப்போது தோற்க வைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆரம்பத்தில், ஒரு சில வெற்றிகளை பார்க்கும் ஒருவர் மீண்டும் மீண்டும் வலையில் சிக்கி பணத்தை இழக்க ஆரம்பிப்பார். விட்ட பணத்தை பிடிப்பேன் என்ற போதை பெரும் சோதனையில் அவரை மாட்டி விடும்.

பத்தாயிரம் ரூபாயை தோற்றவுடன் அதை பிடிப்பதற்கு மீண்டும் பத்தாயிரம் பணம் கட்டுவார். மீண்டும் தோற்று, கடன் 20 ஆயிரமாக உயர்ந்து விடும். அதைப் பிடிப்பதற்காக மற்றொரு முறை விளையாடி 40 ஆயிரத்தை தோற்று விடுவார். இப்படி பெரும் பணத்தை இழந்து, கடன் வாங்கி, நொடித்துப் போய் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகிறார்கள்.

நம்முடன் விளையாடுபவர்கள் மனிதர்கள் அல்ல என்ற உண்மையை உணர்ந்து கொண்டாலே இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட மாட்டோம். இணைய வசதி என்பது கூர்மையான கத்தி போன்றது. கத்தியை கத்திரிக்காய் வெட்டுவதற்கும் பயன்படுத்தலாம். கழுத்தை வெட்டுவதற்கும் பயன்படுத்தலாம். இதனை உணர்ந்து இதனை போன்ற விளையாட்டுகளில் இருந்து விலகி இருப்பதே நம்மை தற்காத்துக் கொள்ளும் ஒரே வழியாகும்.

உங்கள் அக்கவுன்டில் 2000 ரூபாய் இலவசமாக கிரெடிட் ஆகி உள்ளது என்ற விளம்பரத்தைப் பார்த்தால் உடனடியாக அதனை டெலிட் செய்வது நம்மை பெரும் துயரில் இருந்து காப்பாற்றும்.

அரசு இதில் உள்ள ஆபத்தினை உணர்ந்து உடனடியாக ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும். இது போல லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி பலர் உயிரை மாய்த்த பொழுது அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் லாட்டரி சீட்டை தடை செய்தார். அதைப் போல ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்வது தமிழக அரசின் பொறுப்பு.

(கட்டுரையாளர் சியாம் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்