Aran Sei

லாக் அப் மரணங்களில் 70 சதவீதம் விளிம்புநிலை மக்களே – மனித உரிமை அமைப்பு

ந்தியாவில் நடந்த காவல்நிலைய மரணங்களில் 71.58% பின் தங்கிய அல்லது விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மரணங்களாக இருக்கின்றன எனத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைகள் சொல்வதாக டெல்லியை சேர்ந்த டெல்லியைச் சேர்ந்த துன்புறுத்தலுக்கு எதிரான தேசியப் பிரச்சாரக்குழு (NCAT) என்ற அமைப்பு கூறியுள்ளது.

அந்த அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தினத்தைக் குறிக்க வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 1996-97 முதல் 2017-18 ஆகிய ஆண்டுகளின் தேசிய மனித உரிமை ஆணைய வருடாந்திர அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது, அதில் 71.58% காவல்நிலைய மரணங்கள் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மரணங்களாக இருப்பது தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையத்தின் (2018 வரையான) 11 ஆண்டுகளின் வருடாந்திர அறிக்கையில், 95 காவல் நிலைய மரணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 68 மரணங்கள் (71.58%) பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் மரணங்களாக இருக்கின்றன; 3.19% மரணங்கள் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் மரணங்களாக இருக்கின்றன.

சில மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து காவல்நிலைய மரணங்களுக்கு ஆளாவதாக NCAT சொல்கிறது என தி இந்து இணையதளத்தில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. உதாரணமாக, அருணாசலப் பிரதேசத்தில் சக்மா மற்றும் ஹஜோன் இன மக்கள் கிழக்கு பாகிஸ்தான் மரபினர் என்பதால் தீவிர ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

“2014-2015ல் இருந்து 2018-2019 ஆண்டுகளில் 15 காவல்நிலைய மரணங்கள் நடந்திருக்கின்றன. இதில் மூன்று மரணங்கள் சக்மா சமூகத்தைச் சேர்ந்த நபர்களின் மரணங்கள். மொத்த மக்கள்தொகையில் 3% மட்டுமே இருக்கும் சக்மா இனத்தினர் காவல் மரணங்களில் 20% இருக்கின்றனர். சக்மா இன மக்கள் போன்ற பிற விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு நீதித்துறை என்று ஒன்று இல்லவே இல்லை என்பதைதான் இது வெளிப்படுத்துகிறது” என்று NCAT தெரிவித்துள்ளது.

NCAT-ன் ஒருங்கிணைப்பாளர் சுஹாஸ் சக்மா, காவல்துறையினருக்கு மத்தியில் இருக்கும் வர்க்க வேறுபாட்டைக் குறித்து, “ பின்தங்கிய பின்புலத்தோடு இருக்கும் ஒரு நபர் எதையாவது திருடினால் அவரை திருடன் என்று சொல்லி காவல்துறையும், பொதுமக்களும் அடிக்கின்றனர். அதையே ஒரு பணக்காரரோ, பிரபலமோ செய்தால் க்ளெப்டோமேனியா எனும் நோய் இருப்பதாகச் சொல்வார்கள். வர்க்க வேறுபாடு, இந்தியக் குற்றவியல் நீதித்துறை நிர்வாகத்தில் மோசமான தாக்கத்தை உண்டாக்குவதாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்