Aran Sei

விவசாயிகள் போராட்டம் தொடரும் – மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பலன் இல்லை

credits : the indian express

டெல்லியில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், உழவர் அமைப்புகள், பஞ்சாப் விவசாயத் துறை, மத்திய வேளாண்துறை அமைச்சர், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கிடையே நடைபெற்ற 7 மணி நேர சந்திப்புக்குப் பிறகும் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று ‘தி வயர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் முடிவு எட்டப்படாததால், வேளாண்  சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாபில் போராட்டங்கள் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் திட்டமிட்டபடி ‘டெல்லிச் சலோ’ (டெல்லிக்கு போவோம்) பேரணி நடைபெறும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், புதிதாக இயற்றப்பட்ட சட்டங்கள் நன்மையளிக்கும் என்று நம்ப வைக்க மத்திய அரசு முயன்றுள்ளது. ஆனால், விவசாயிகளின் குழு தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் எதிர் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டப்பூர்வ உரிமையாக மாற்ற வேண்டும் என்ற  கோரிக்கையை வைத்தபோது அரசு தரப்பு எங்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்தக் கோரிக்கையை எழுப்பியபோது, ​​அறையில் இரண்டு நிமிடத்திற்கு மௌனம் நிலவியது” என்று டாக்டர் தர்ஷன் பால் சிங் தி வயரிடம் தெரிவித்துள்ளார். கிரந்திகரி கிசான் யூனியனை சேர்ந்த தர்ஷன் பால், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர்.

”சரக்கு ரயில்களை மட்டுமே மீண்டும் தொடங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. கூட்ஸ் மற்றும் பயணிகள் ரயில்களை ஒன்றாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்” என்று அவர் கூறியுள்ளார்.

“நவம்பர் 18-ம் தேதி, விவசாய குழுக்கள் சந்தித்து பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பாக ஒரு கூட்டு முடிவை எடுக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தீபாவளிக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சரக்குச் சேவைகளை ஆரம்பித்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் இப்போது சந்தித்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம்” என்றும் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை அமைத்து, பின்னர் அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கை வெளியிடப்படும் வரை, விவசாய அமைப்புகள் போராட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், மத்திய அரசின் வேண்டுகோளை விவசாய சங்கங்கள் ஏற்கவில்லை.

“அவர்களுடைய இந்த முன்மொழிவு ஒரு வகையில் நல்ல வளர்ச்சி தான். குறைந்தபட்சம் அவர்கள் எங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க தயாராக உள்ளனர். ஆனால் பஞ்சாபில் போராட்டங்கள் தொடரும்” என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.

“நாங்கள் எங்கள் கோரிக்கைகளின் விதைகளை பயிர்செய்துள்ளோம், இப்போது அது எவ்வாறு வளர்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், அது பலனளிக்குமா இல்லையா என்பதை [பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேளாண் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சந்திப்பின்  போது விவசாயிகளின் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன என்றும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க இந்திய அரசு எப்போதும் உறுதியுடன் இருப்பதாகவும், விவசாயிகளின் நலனுக்கான உரையாடலை செய்வதற்கு எப்போதும் தயாராக இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேஎஸ்எஸ்சி), “பஞ்சாபின் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவெடுக்கப்படாததால் ‘டெல்லிச் சலோ’ பேரணி கண்டிப்பாக நடைபெறும்” என்று கூறியுள்ளது.

விவசாய சங்க தலைவர்கள் மத்திய அரசிடம் ஐந்து முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளனர். விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். “இது விவசாயத் துறையில் கார்பரேட்டின் பிடியை வலுப்படுத்தும்” என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

காய்ந்த நிலங்களை எரித்ததற்காக விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் அபராதங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்