Aran Sei

கர்நாடகாவில் குடிநீரில் கனிமம் கலந்துள்ளதாக புகாரளித்த மக்கள் – மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுக்காததால் 6 பேர் உயிரிழப்பு

பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் தூய்மையற்ற குடிநீர் அருந்தி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஜயநகர் மாவட்டத்தில் உள்ள ஹூவின ஹகடஹளி அருகே மகரப்பி என்ற கிராமம் உள்ளது. இங்கு 2000 மக்கள் வசிக்கின்றனர். ஆகஸ்ட் தொடக்கத்தில் கிராமத்தில் இருந்து பலர் நோய்வாய்ப்படத் தொடங்கியதும், தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிப்பதற்குப் பயன்படுத்தத் தகுதியற்றது என்பது தெரிய வந்துள்ளது.  ஆழ்துளைக் கிணற்று நீரில் கனிமத் துகள்கள் கலந்து மாசடைந்துள்ளதாக கிராமத்தினர் ஏற்கெனவே புகார் அளித்தும் அரசு தரப்பிலிருந்து மக்களுக்குக் குடிநீருக்காக மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. துங்கப்பத்ரா அணையில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படாததால், அந்தக் கிராமத்தினர் மாசடைந்த ஆழ்துளை நீரையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

வன்முறையால் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்திக்க அனுமதி வேண்டும் – யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கடிதம்

அசுத்தமான ஆழ்துளை நீரை குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒரு சிலருக்கு தலை சுற்றலும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட லட்சுமம்மா (60), பசம்மா (67), நீலப்பா (62), கோனேப்பா (67), மகாதேவப்பா (56),கெஞ்சம்மா (52) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

விஜயநகர் மாவட்டத்தின் சுகாதார அலுவலர் ஜனார்த்தன் கூறுகையில், ”கழிவுநீர் குழாய் கசிவு காரணமாக நீர் மாசுபட்டதாக தெரிகிறது. நோயாளிகள் பல்லாரி, ஹோஸ்பெட், ஹூப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். கிராமத்தில் RO நீர் ஆலை பொது நுகர்வுக்காக நிறுவுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

லக்கீம்பூர் வன்முறை: அஜய் குமார் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் – பிரதமருக்கு சிபிஎம் எம்.பி கடிதம்

இதுகுறித்து கூறிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ”அசுத்தமாக நீர் குடித்து 6 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனீஷ் மவுட்கில் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

Source: indian express, the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்