Aran Sei

இந்தியாவை மீட்டுருவாக்கும் 50 தலித்துகள்: அவுட்லுக் பட்டியலில் இளையராஜா, பா.இரஞ்சித், பாடகர் அறிவு

ந்தியாவை மீட்டுருவாக்கும் 50 தலித்துகள் என்று அவுட்லுக் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் பாடகரும் பாடலாசிரியருமான அறிவு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டு சிறப்பிதழாக வெளியாகியுள்ள இவ்வார அவுட்லுக் இதழில், ‘நம் தலித், ஒவ்வொரு அடியில் நாயகனாக’ என்ற தலைப்பில் ரூபன் பானர்ஜி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், இந்தியாவை மீட்டுருவாக்கும் 50 தலித்துகள் என்ற பட்டியலில் இசைஞானி இளையராஜா இடம்பெற்றுள்ளார்.

‘பிறப்பால் தான் எல்லாம் அமைகிறது’ என்ற இந்திய வேத மரபின் ஆதார விதியைப் பொய்யாக்கியும், தன் மீது ஏறி நிற்கும் இந்து மத கட்டமைப்பை ஒரு நிரந்தர நடுக்கத்திற்குள்ளாக்கியும், பல பண்பாட்டு வண்ணங்களைக் கொண்ட ஒட்டுமொத்த தென்னிந்திய பண்பாட்டின் பொது உணர்வாகவும் உணர்ச்சியாகவும் வளர்ந்து நிற்கும் கலைஞன் இளையராஜா என்றால் மிகையாகாது .

மேலும், இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் இடம் பெற்றுள்ளார். இவர் திரைத்துறையை தாண்டி, ‘கேஸ்ட்லஸ் கலெக்ட்டீவ்’ என்ற பெயரில் கானா இசை குழுவும், ‘நீலம்’ என்ற பெயரில் பதிப்பகம் மற்றும் மாத இதழும், கூகை நூலகம் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வருகிறார்.

‘கேஸ்ட்லஸ் கலெக்ட்டீவ்’ இசைக்குழுவில் இடம்பெற்ற முக்கிய பாடகரான அறிவும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். தன் வாழ்வியலோடு,  தனது முற்போக்கான கருத்துகளைச் சேர்ந்து ரேப் இசையில் பாடுவது மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும் அதிகாரத்தையும் ஒடுக்கும் சக்திகளையும் கேள்விக்குள்ளாக்கும் குரலாகவும் அறிவு எழுந்து வருகிறார்.

அண்மையில், ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில், பாடகர் தீயும்டன் இவர் பாடிய ‘என்ஜாயி என்சாமி’ பாடலின் இசையும் அதன் உயிர்பிக்கும் வரிகளும் தென் உலகு முழுவதும் சிறகுக் கொட்டி பறந்தது.

இவர்களுடன், இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான ஹிமா தாஸ் இடம் பெற்றுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்சிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.

அறிவின் “எஞ்சாயி எஞ்சாமி” – வேர்களை கண்டுபிடிப்பதற்கும் சமத்துவத்தைக் கொண்டாடுவதற்குமான ஒரு பயணம்

பிரம்மபுத்தரா நதிக்கரை நகரமான திங் நகரில் பிறந்ததினால் மட்டுமல்லாது, தன் பொருளாதார தடைகளையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்து தன் லட்சியத்திற்காக ஓடியதாலுமே, 21 வயதான ஹிமா தாஸ் ‘திங் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படுகிறார்.

எழுத்தாளர் பாமா, பாடகர் கத்தார், சிவகாமி (முன்னாள் ஐ.ஆ.எஸ்), சாதிய ஒடுக்குமுறையால் தற்கொலை செய்துகொண்ட ஹைத்ராபாத் பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா,  எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, பிரபல நடிகர் ஜானி லிவர், மராத்திய இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்