அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் ’சூப்பர் பவுல்’ அமெரிக்க கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின், இந்த ஆண்டு போட்டிகளின்போது, இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான 40 விநாடி அளவிலான விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
”எங்கும் இருக்கும் அநீதி என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் நீதிக்கு அச்சுறுத்தலாகும்”, என மனித உரிமைகள் போராளி மார்டின் லூதர் கிங் ஜூனியரின் மேற்கொளுடன் தொடங்கும் விளம்பரத்தில், கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஃபிரெஸ்னோ நகர மேயர் ஜெர்ரி டையர் தோன்றி “இந்தியாவில் இருக்கும் சகோதர சகோதரிகளே – நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ஃபிரெஸ்னோ கவுண்டி பகுதியில் மட்டும் ஒளிபரப்பான இந்த விளம்பரம் பல்வேறு மக்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட்டு வருகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரபல பாப் இசை கலைஞர் ரிஹான்னா ட்விட்டரில் கருத்து பதிவிட்டதும் இந்த விளம்பரத்தில் இடம்பெறுகிறது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை சட்டபூர்வமாக உத்தரவாதம் அளிக்கக் கோரியும், விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் நவம்பர் மாதத்திலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாகக் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சீர்திருத்தங்கள் தொடர்பாக “சிறிய அளவிலான விவசாயிகள்” அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை, அந்த மூன்றும் சட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை
இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களை, இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியல் பின்னணியுடன் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சில குழுக்கள் இதைத் தங்களது சொந்த நலனிற்காக, நாட்டிற்கு எதிராகச் சர்வதேச ஆதரவை திரட்ட முயற்சிக்கின்றன.
”இது தொடர்பான பிரச்னைகளில் கருத்து தெரிவிக்கும் முன்பு, உண்மைகளை அறிந்து கொள்வதோடு சரியான புரிதல் அவசியம். பரபரப்பான சமூக வலைதள ஹேஷ்டேக்கள் மற்றும் கருத்துளைகளை வைத்துப் பிரபலங்களும் பிறரும் கூறும் கருத்துகள் சரியானதாகவும், பொறுப்பானதாகவும் இல்லை” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்க கால்பந்து லீக்கின் வருடாந்திர சாம்பியன்ஷிப் தொடரான, சூப்பர் பவுலை அமெரிக்கா முழுவதும் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்கின்றனர். 2020-ம் ஆண்டிற்கான சாம்பியன்ஷிப் போட்டியை 10.21 கோடி மக்கள் பார்த்துள்ளனர்.
’சூப்பர் பவுல்’ தொடரின் சிறப்பம்சம் அதன் விளம்பரங்கள். நிறுவனங்கள் இதற்காகப் பிரத்யேகமாக விளம்பரங்களை ஒளிபரப்புகின்றன. சிஎன்என் அறிக்கையின் படி சூப்பர் பவுல் விளம்பரம்கள் ”மலிவானவை அல்ல”, மேலும் இந்த ஆண்டு கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களைத் தாண்டியும், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட விளம்பரங்களுக்காக, நிறுவனங்கள் லட்சங்களில் செலவு செய்தன.
Sources : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.