கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது உலைகளையும், அணுக்கழிவு மையத்தையும் அமைக்க வேண்டாம் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்த கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடுள்ள அறிக்கையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6வது அணுஉலைகளை அமைக்கும் பணிகளுக்கான பணியை இன்று ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் இரண்டு உலைகள் நூற்றுக்கும் மேற்பட்ட முறை முடங்கி, தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. இரண்டாவது உலை அண்மைக் காலத்திலேயே பலமுறை பழுதாகி பின்னர் சரிசெய்யப்பட்டிருக்கிறது. தற்போது முதல் உலை வருடாந்திர பராமரிப்புக்கென 70 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி
கூடங்குளம் அணு உலைகளில் இருந்து வரும் கதிரியக்கக் கழிவுகள் முதல்கட்டமாக அணுஉலை கட்டிடத்திலேயே உள்ள சேமிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்படும். பிறகு இதனை சேமிப்பதற்கு என அணு உலைக்கு வெளியே தனி மையம் (ஏஎப்ஆர்) ஏற்படுத்தப்படும். கதிரியக்கக் கழிவுகள் மறுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை இங்கு சேமிக்கப்படும்” என்று கடந்த 18.09.2020 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. ஏ.எப்.ஆர். பெறுவதற்கு பல சிக்கல்கள் இருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை அங்கேயே பாதுகாத்து வைப்பதற்கும், 5 மற்றும் 6வது அணுஉலைகளுக்கு முதல் காங்கிரீட் போடுவதற்கும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.
முதல் இரண்டு உலைகளே முழுமையான பாதுகாப்பு இல்லாமல் திணறிக் கொண்டிருப்பதாகவும், இப்போதிருக்கக்கூடிய அணுஉலைக் கழிவுகளுக்கே காப்பிடம் இல்லாத நிலையில், 3 மற்றும் 4 உலைகளின் வேலைகள் மந்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அவசர அவசரமாக 5 மற்றும் 6வது உலைகளை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
”சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீத்தேன், கூடங்குளம் அணுஉலை ஆகியவற்றின் மூலம் ஒன்றிய அரசு தமிழகத்தை ரசாயன தாக்குதல் நடத்தி வருகிறது என தாங்கள் உரை நிகழ்த்தியதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது உலைகளையும், அணுக்கழிவு மையத்தையும் அமைக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.