அனைத்துச் சாதியினரையும் பாலினப் பாகுபாடின்றி அர்ச்சராக்கவும், தமிழில் அர்ச்சனையை முன்னிலைப்படுத்தவும் நேற்று (ஜூன் 20) இணையவழியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து சதியினரும் பாலினரும் கோயில் அர்ச்சகராக வேண்டுமென தமுஎகத சார்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மதுகூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். எழுத்தாளர் சிகரம் செந்திநதன், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா.ரெங்கநாதன், இந்துசமைய அறநிலையத்துறையில் இணை ஆணையராக இருந்து பணி ஓய்வு பெற்ற எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோர் கருத்துரைத்தனர். நிகழ்ச்சியை தமுஎகச -வின் மாநிலப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைத்தார்.
இக்கூட்டத்தில் பேசிய ஆகம அறிஞர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “தீட்சை பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்று ஆகமம் கூறுகிறது. அரசு உருவாக்கிய அர்ச்சகர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள், தீட்சை பெற்றிருக்கிறார்கள். சிவாகமத்தில் குறிப்பிட்ட சாதியினர்தான் பூசை பண்ண வேண்டும் என்று இல்லவே இல்லை. ஆகமத்தின் 48 ஆம் அத்தியாயத்தில் சாமிநாதத்தில் அர்ச்சகருக்குக் கோத்திரமே இல்லை என்று கூறுகிறது.” என்று தெரிவித்தார்.
மேலும், ”புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்துச் சாதியினரையும், பயிற்சி முடிக்கிற பெண்களையும் 100 நாட்களில் பணியமர்த்துவதாக செய்துள்ள அறிவிப்பை இந்தக் கருத்தரங்கின் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. அரசின் அறிவிப்பு வெளியானதும் பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கையின் நியாயத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. இதேபோல தமிழில் குடமுழுக்கு செய்வதற்கும், தமிழில் அர்ச்சனை செய்வதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.” என்று தீர்மாணத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.