Aran Sei

இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா வாக்கெடுப்பு: இந்தியா ஆதரவளிக்க ஸ்டாலின் கோரிக்கை

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் தீர்மானத்தை முன் மொழிந்துள்ளன. நாளை விசாரணைக்கு வரப்போகும் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்று வந்த செய்தியையடுத்து திமுக, மதிமுக தலைவர்கள் இந்தியாவின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “போர்க்குற்றங்களுக்கு எதிரான #UNHRC வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசு அனுமதி மறுப்பு

மேலும், “இலங்கைத் தமிழர்களுக்கு அநீதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திடவே கூடாது; சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடந்திட இந்தியப் பிரதமரின் முன்னெடுப்பு தேவை” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015 இல் சிங்கள அரசு நடத்திய படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மனித உரிமைச் செயல்பாட்டார்களையும் இணைத்துக் கொண்டு இலங்கை அரசு புலனாய்வு நடத்த வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதை குறிப்பிட்டு பேசிய அவர், “குற்றவாளியிடமே நீதியை வழங்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேட்பது ஒருபோதும் நடைமுறைக்கு வராது என்றும், சிங்கள பேரினவாத அரசின் கொலைக் குற்றத்தை மூடி மறைக்கவும், நீர்த்துப் போகச் செய்யவுமே இது வழிவகுக்கும் என்று நாம் எதிர்த்தோம்” என்றும் அறிக்கை கூறியுள்ளது.

’எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு தொடரும்’: உச்சநீதிமன்றத்தின் கேள்வி அடிப்படையில் தவறானது – வழக்குரைஞர் ராஜசேகரன்

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 2021, பிப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமை தலைமை ஆணையர் அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.  அதில், “இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்குப் பொது அரசாக செயல்படவில்லை. ஓர் இனச் சார்பாகச் செயல்படுகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தீர்மானத்தைச் செயல்படுத்தவே இல்லை. இனியும் செயல்படுத்தப்போவது இல்லை. இலங்கையில் நீதித்துறையின் தற்சார்பு சீரழிக்கப்பட்டுவிட்டது. பத்திரிகை, ஊடகங்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. அங்கு மனித உரிமை அமைப்புகள் நடுநிலையுடன் செயல்பட முடியாது. எனேவ மனித குலத்துக்கு எதிரான இலங்கை அரசின் குற்றங்கள், படுகொலைகள், காணாமல் போனவர்கள் என்று கூறப்பட்டவர்கள் அனைவருக்குமான பொறுப்புக்கூறல் போன்றவற்றை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது” என்று கூறியுள்ளது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

மேலும், “இலங்கை அரசின் மேற்படி குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இதற்கான முன்னெடுப்பை ஐ.நா. பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தலைமை ஆணையர் கேட்டுக் கொண்டிருந்ததை அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து மார்ச் 22 ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் விவாதத்திற்கு வரப்போகிறது. இத்தீர்மானத்தை பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் முன் மொழிந்துள்ளன.

நந்திகிராமில் மம்தா தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணையை தொடங்கியது மேற்கு வங்க சிபிசிஐடி

இத்தீர்மானம் முழுமையானதாகவோ, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கான வகையிலோ இல்லை. எனினும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பு ஆகும்.

இந்த தீர்மானத்தைக  ஆதரிக்கப் போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.  “47 உறுப்பு நாடுகள் இடம்பெற்றிருக்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஈழத் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த சிங்கள பேரினவாத இனக்கொலை அரசின் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்காது; இலங்கை அரசைத்தான் ஆதரிக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளதையடுத்து, இந்திய அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் நாளை (22.3.2021) முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்