மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் மார்டிண்டோலா காட்டில், மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் நடந்த தாக்குதலில், பெண்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட குறைந்தது 26 சந்தேகத்திற்குரிய போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். .
கிடைக்கப்பெற்ற முதற்கட்ட தகவல்களின்படி, நேற்று(நவம்பர் 13), மகாராஷ்ட்ரா காவல்துறையின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படையான சி-60 படையின் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றபோது இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. காட்டுக்குள் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அவர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மூத்த மாவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த மூன்று காவலர்கள், மருத்துவ சிகிச்சைக்காக நாக்பூருக்கு விமானம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காவலர்களுக்கு மாவோயிஸ்டுகளுக்கும் இடையே இன்னும் தாக்குதல் நடந்து வருவதாக கட்சிரோலி காவல் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, கூடுதல் காவல்துறை படைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கட்சிரோலி காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்துள்ளார்.
கொல்லப்படும் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் இச்சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
26 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இச்சம்பவம் கட்சிரோலி வரலாற்றில் இரண்டாவது பெரிய என்கவுண்டர் ஆகும். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று, இரண்டு வெவ்வேறு மோதல்களில் 40 மாவோயிஸ்டுகளை கட்சிரோலி காவல்துறை சுட்டுக் கொன்றது.
Sourec: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.