Aran Sei

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்கள்: மார்ச் 10 வரை சிறை

நாகப்பட்டினம் கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒன்பது தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நேற்று முன்தினம் (பிப்பிரவரி 22) காலை, நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அன்று மாலை அவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அச்சமயம் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சின்னதுரை, சிவபாரதி, சௌந்தர்ராஜன், பிரகாஷ், செல்வம், செல்வநாதன், ரெத்தினசாமி, அய்யப்பன், முருகேசன் ஆகிய ஒன்பது மீனவர்களை படகுடன் கைது செய்துள்ளது.

‘மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்கும் மீன்பிடி மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்’ – சீமான் வலியுறுத்தல்

அதைத்தொடர்ந்து,  யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு, கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள மீனவர்களை 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இச்சம்பவத்தைப் போல காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

இக்கைது நடவடிக்கைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ், “இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினர் கடந்த 3 வாரங்களில் மட்டும் 72 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர். பெரும்பாலான கைது நடவடிக்கைகள் இந்திய கடல் எல்லையில் நடந்துள்ளன. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன்தான் கைது, படகு பறிமுதல் நடக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை அரசுடன் பேசி இந்திய வெளியுறவு அமைச்சகம் மீட்கிறது. ஆனால், படகுகளை மீட்க முடியவில்லை. அதனால் நூற்றுக்கணக்கான மீனவர்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலைக்கு முடிவு கட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

மேலும், “கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 51 தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக மீட்கப்பட வேண்டும். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரு தரப்பு மீனவர்கள் இடையே பேச்சுகளை தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்