Aran Sei

ஒவ்வாமை உள்ளவர்கள் கோவிஷீல்ட் மருந்தை எடுக்கக்கூடாது: சீரம் இந்தியா நிறுவனம்

இந்தியா முழுவதும், கோவிட் – 19 கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி நடந்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தடுப்பூசியை, தன்னார்வலர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்தத் தன்னார்வலர்களும், எவ்வித உடல்நலன் சார்ந்த சிக்கலும் இல்லாதவர்களாக இருக்கவே அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்தத் தடுப்பூசி, ஒரே டோசேஜாக மக்களுக்கு அளிக்கப்படுவதில்லை. பல டோசேஜ்களாக பிரிக்கப்பட்டு மக்களுக்கு தரப்படும். இப்படி ஒரு மருந்தை டோசேஜ் வாரியாக பிரித்து போடும்போது, முந்தைய முறை போடப்பட்ட தடுப்பூசி ஏதேனும் தீவிர ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தால், அத்தகைய நபர்கள் அடுத்த டோசேஜ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

கோவாக்சின் எடுத்துக்கொண்டவருக்கு “தீவிர” பிரச்சனை – ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

இந்த அறிவிப்போடு சேர்த்து, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கான வேறு சில அறிவுரைகளையும் அந்நிறுவனம் வழங்கிவருகிறது. அவற்றில் முக்கியமானவை,

* கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் தங்களுக்கு ஏதேனும் உடல்சார்ந்த சிக்கல் இருந்தால், அதை தங்களுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

* ஏதேனும் மருந்து / மாத்திரைகள் / உணவு / வேறு தடுப்பூசிகள் போன்றவை எடுத்துக்கொண்ட பிறகு பொதுவாக ஒவ்வாமை சிக்கல் ஏற்படும் நபர்கள், தங்களின் அப்பிரச்னை குறித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னர் மருத்துவப் பணியாளர்களிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

* தடுப்பூசி போட்டுக்கொள்ள போகும்போது காய்ச்சல் இருப்பவர்கள், ரத்தக்கசிவு சார்ந்த குறைபாடு உள்ளவர்கள், ரத்த அடர்த்தி குறைவாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் தங்களின் பிரச்னையை மருத்துவ பணியாளரிடம் தெரிவித்த பின்னரே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

* கர்ப்பமாக இருக்கும் பெண்களும், குழந்தைப்பேறுக்காக உடல் ரீதியாக தயாராகிக் கொண்டிருக்கும் பெண்களும், உடல்நலன் சார்ந்த தங்களின் விவரங்களையும், மருந்துகளையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

* இந்த கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாமல், கொரோனாவுக்காக வேறு ஏதேனும் தடுப்பூசி எடுத்திருப்பவர்கள், அதுகுறித்து தங்கள் மருத்துவ பணியாளரிடம் கூறியிருக்க வேண்டும்.

* கோவிஷீல்ட் தடுப்பூசியிலிருக்கும் மூலக்கூறுகள் :

எல்-ஹிஸ்டினைன்,
எல் – ஹிஸ்டிடைன் ஹைட்ரோக்ளோரைட் மோனோஹைட்ரேட்,
மெக்னீசியம் க்ளோரைட் ஹெக்ஸாஹைட்ரேட்,
பாலிசோப்ரேட் 80
எதனால்
சர்கோஸ்
சோடியம் க்ளோரைட்
டைசோடியம் எடிடேட் டைஹைட்ரேட்,
தண்ணீர் (ஊசிக்காக)

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகள் – காரணம் என்ன?

இந்த மூலக்கூறு கலவை கொண்டிருக்கும் எந்த மருந்தாவது, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருந்தால், அதை அவர்கள் தங்களுடைய மருத்துவப் பணியாளருக்கு தெரிவித்திருக்க வேண்டும்.என்று  அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் கணக்குப்படி, ஜனவரி 18, 2021 மாலை 5 மணி வரையில் 3,81,305 பேர் இந்தியாவில் கோவிட் – 19 கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றிருக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 580 பேருக்குத் தடுப்பூசி காரணமாக சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தி இந்து வில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

தமிழில் : தி.கோகுல்ராஜ்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்