Aran Sei

2020 ஆம் ஆண்டு சென்னையில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன – காவல்துறை ஆணையர்

சென்னையில் 2020-ம் ஆண்டில் குற்றச் செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் காவல் ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னையில் 2019-ம் ஆண்டில் 173 கொலைகள் நடந்தன. அதை ஒப்பிடும்போது 2020-ம் ஆண்டில் 147 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கிலி பறிப்பு சம்பவங்களும் குறைந்துள்ளன. 2019-ம் ஆண்டில் 310 சங்கிலி பறிப்புகள் நடைபெற்றிருந்தன. ஆனால், கடந்த ஆண்டு 246 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

“போதைப் பொருட்களை ஒழிப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு மிக அதிகளவில், 522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,966 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் 2020-ம் ஆண்டில் சென்னையில் 938 செல்போன் பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளைக் கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக, பறிக்கப்பட்ட, திருடப்பட்ட, தொலைந்துபோன 2,834 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?

“2020-ம் ஆண்டில் கணினிவழிக் குற்றங்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கணினிவழிக் குற்றங்களை விசாரிப்பதற்காக மாவட்ட அளவில் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டிருந்தன. கடந்த 4 மாதங்களில் மட்டும் இந்தக் கணினிவழி குற்றப் பிரிவுகளில் 87 முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் 1,925 சமூகபணிப்பதிவேடுகள் பதிவு செய்யப்பட்டு, கணினிவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடியே 52 லட்சத்து 61,932 திரும்ப அளிக்கப்பட்டுள்ளது” என்று ஆணையர் மகேஷ் குமார் கூறியுள்ளார்.

“மேலும், வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டிருந்த 15 நிறுவனங்கள் கணினிவழி குற்றப்பிரிவால் அடையாளம் காணப்பட்டுள்ளன. காவல் அதிகாரிகளின் முகநூல்கணக்கைப் போன்று ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சென்னை போலீஸார் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்தனர். யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் சென்னைத் தனிப்படை போலீஸார் பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்தி 36 மணி நேரத்துக்குள் துப்பு துலக்கினர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

“பொதுமக்கள் காவல் துறையினரை எளிதாக அணுகுவதற்காகப் பெருநகர சென்னை காவல் பல்வேறு முன்னோடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா பேரிடர் காலத்தின்போது, காணொளி வழி குறை கேட்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 996 புகார்களைப் பெற்று அவற்றில் 849 புகார்களுக்கு காவல் ஆணையரால் தீர்வு காணப்பட்டது. அதுபோலவே, காவல் நிலைய எல்லைகளுக்குள் நடந்தே ரோந்து செல்லும் முறை மற்றும் குறிப்பிட்ட இடங்களில் ரோந்து வாகனங்களில் மனுதாரர்களிடமிருந்து புகார்களை பெறும் முறை ஆகியவற்றை சென்னை காவல் அமல்படுத்தியுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“சென்னை போக்குவரத்து போலீஸாரின் தொடர் முயற்சி காரணமாக 2019-ல் 1,229 ஆக இருந்த விபத்து உயிரிழப்புகளில் 2020-ம் ஆண்டில் 839 எனக் கிட்டத்தட்ட 33 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் சென்னை போலீஸார் சிறப்பாகப் பணி செய்துள்ளனர்” என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தை பெண்களும் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆரிஃபா ஜோஹரி

“சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருக்கும் வகையில் 542 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் உரிய விதிகளை பின்பற்றி முன்மாதிரி நகரமாக்க சென்னை திகழ அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” எனவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்