பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி உட்பட தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், நிதிப் பற்றாக்குறை காரணமாக கேஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக விறகுகளைப் பயன்படுத்தி மதிய உணவைத் தயாரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள 3,700 மதிய உணவு தயாரிக்கும் மையங்களில், கிட்டத்தட்ட 770 மையங்கள் பல ஆண்டுகளாக கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதில்லை. “சராசரியாக, ஒரு மாணவருக்கு, சமையல் எரிபொருளின் செலவிற்காக ஒரு நாளைக்கு, 60 பைசா ஒதுக்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு தமிழ்நாடு அரசு சராசரியாக 700 ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் கேஸ் சிலிண்டரின் உண்மையான விலை 946 ஆக உள்ளது” என மதிய உணவு சமைக்கும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதிய உணவு வழங்கும் ” அட்சய பாத்திரா ” முறைகேடுகள் – அறங்காவலர்கள் பதவி விலகல்
உதாரணமாக, பெரம்பலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்காக 398 மதிய உணவு மையங்களில் உணவு தயாரிக்கப்படுகிறது. 2007-08 இல் பெரம்பலூரில் 341 மையங்களுக்கு எரிவாயு அடுப்பு மற்றும் கேஸ் சிலிண்டர் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், சிறுகன்பூர், வரகுபாடி, ஒதியம், கிருஷ்ணாபுரம், மருவத்தூர் ஒன்றியங்களில் உள்ள பல பள்ளிகளுக்கு எரிவாயு அடுப்பு மட்டுமே வழங்கப்பட்டது, கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படவில்லை.
மருவத்தூர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 60 மாணவர்களுக்குத் தினமும் விறகுகளைப் பயன்படுத்தி 50 வயதுள்ள பணியாளர் ஒருவர் சத்துணவு தயாரித்து வருகிறார். “அந்த பெண் பணியாளர் காலையில் சீக்கிரமாகவே விறகு எடுத்து வந்து மதிய உணவு தயாரிக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார். அதனால் எழும் புகையால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சமைக்கும் பகுதிக்கு அருகில் தண்ணீர் வசதி கூட இல்லை” என்று மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராயப்பன் தெரிவித்துள்ளார்.
”பல மதிய உணவு மையங்களில் கேஸ் சிலிண்டர்கள் இல்லை. இதனால் மதிய உணவு சமைக்கும் பணியாளர்கள் அருகில் உள்ள காடுகளில் இருந்து விறகுகளைத் தலையில் சுமந்து எடுத்தது வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 60 மையங்களில் உள்ள எரிவாயு அடுப்பில் உள்ள பிரச்சனைகளைச் சொந்த செலவில் சரி செய்யுங்கள், பின்னர் அரசு இழப்பீடு வழங்கும் என்று அதிகாரிகளைக் கூறினார், ஆனால் பல மாதங்களாகியும் இதுவரை எந்த இழப்பீடும் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பெரம்பலூர் சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பொன் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
“பெரம்பலூர் மட்டுமின்றி, மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன. எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்திய பின்பும் எங்களுக்கு முறையாக கேஸ் சிலிண்டர்களை வாங்கத் தேவையான பணத்தை விடக் குறைவான பணத்தையே தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. மாணவர்களுக்கு நல்ல உணவுகளை வழங்குவதற்கு, சொந்த காசில் செலவு செய்ய வேண்டியுள்ளது என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுந்திரம்மாள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதைக்கு அச்சுறுத்தல் – கலையரசன் ஏ, எம் விஜயபாஸ்கர்
“கேஸ் சிலிண்டர் வாங்குவதில் உள்ள இந்த விலை வித்தியாசத்தை நாங்கள் அறிந்துள்ளோம். ஆகவே சிலிண்டரின் உண்மையான விலையை வழங்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேஸ் சிலிண்டர் வசதி இல்லாத மையங்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சமூக நலத்துறையின் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தி நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் யிடம் கூறியுள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.