கொரோனா தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் மகாராஷ்டிராவில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிர் இழந்ததாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அசாம், அருணாச்சல பிரதேசம், டெல்லி, மேகாலயா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கேரளா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளது.
நேற்று (பிப்ரவரி 10), மக்களவையில், கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான ஊரடங்கின் போதும் அதற்கு பின்னரும் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உயிரிழந்த அவர்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த 17 புலம்பெயர் தொழிலாளர்களின் தற்செயலான உயிரிழப்பை தவிர, அசாம், அருணாச்சல பிரதேசம், டெல்லி, மேகாலயா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கேரளா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. மீதமுள்ள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, சுமார் ஒரு கோடி தொழிலாளர்கள் தங்கள் பணிபுரிந்து வந்த மாநிலங்களிலிருந்து தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள். ஆனால், தற்போதைய நிலவரப்படி, அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தாங்கள் பணிபுரிந்த மாநிலங்களுக்கு திரும்பி தங்கள் பணிகளை தொடர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று கேள்வி நேரத்தின்போது சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒழுங்கு செய்யப்பட்ட துறைகளில் 10 கோடி தொழிலாளர்களும் அமைப்புசாரா துறைகளில் 40 கோடி தொழிலாளர்களும் உள்ளனர். அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை ஒழுங்கு செய்யப்பட்ட துறைகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.