Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான 140 மனுக்கள் – உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன

2019 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 140-க்கும் மேலான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

மத அடிப்படையில் குடியுரிமை அளிக்கப்படும் எனும் 2019 திருத்தச் சட்டம், அதன் இயல்பிலேயே ஒரு தனி நபரின் மதத்தினால் அவரை பாகுபாட்டிற்கு ஆளாக்குவதாக இருக்கிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இந்தியா முழுக்க மக்கள் இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 140-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரு வருட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலையில் இருக்கின்றன என தி இந்து தெரிவிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கடைசியாக மார்ச் 3, 2020 அன்றுதான் உச்ச நீதிமன்றத்தில் பேசப்பட்டது. மனுதாரர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷின் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மார்ச் மாதம் 3 ஆம் தேதி, தலைமை நீதிபதியிடம் இச்சட்டத்திற்குத் தடை விதிக்கப்பட வேண்டும். இது அவசியமற்ற சட்டமாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். ஹோலி விடுமுறைக்குப் பிறகு இடைக்கால தடை கோரி வழக்குப் பதிவு செய்யுங்கள், முதலில் சபரிமலை வழக்கில் நிலுவையில் இருக்கும் மனுக்களைத்தான் நீதிமன்றம் விசாரிக்கும் எனத் தலைமை நீதிபதி தெரிவித்திந்தார். மேலும், வழக்கு அரசியலமைப்பு அமர்வினால் விசாரணை செய்யப்படலாம் என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து, மனுதாரரான ஜெய்ராம் ரமேஷ், “இது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் வழக்கை விசாரணையாவது செய்ய வேண்டும், அல்லவா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

2019 டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குத் தடை கோரிய போது, மத்திய அரசு இச்சட்டத்தின் சட்ட நோக்கத்தைப் பரவலாக விளக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால், சட்டத்திற்குத் தடை விதிக்கவில்லை.

2010 ஜனவரியில் சட்டத்திற்குத் தடை கோரிய போது, “இந்தச் சட்டம் குறித்துதான் எல்லோருமே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனுக்களை விசாரிக்கத் திட்டமிட வேண்டும்” என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அப்போதும் தடை விதிக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன், மத சிறுபான்மையினராக இருந்து மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகியதால், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய மக்களுக்குக் குடியுரிமை அளிக்கிறது 2019-ன் குடியுரிமை திருத்தச் சட்டம். இத்தகைய மக்கள் பதினோரு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் மட்டுமே அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் எனும் விதிமுறை இப்போது ஆறு ஆண்டுகள் வாழ்ந்தால் போதும் எனத் திருத்தப்பட்டிருக்கிறது.

மேலும், இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் எனும் ஆறு மதப் பின்புலங்களைக் கொண்டவர்களுக்கே மேற்சொன்ன சலுகை என்றும் மாற்றப்பட்டிருக்கிறது. மத பாகுபாட்டினால் இப்பட்டியலில் இஸ்லாம் மதம் சேர்க்கப்படாதது, நாடு முழுதும் இருக்கும் மக்கள் மத்தியில் சீற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்