Aran Sei

இலங்கை அரசின் 13வது சட்டத்திருத்தம்; தமிழர்களை ஏமாற்றும் சூழ்ச்சி – வேல்முருகன்

லங்கை அரசின் 13வது சட்டத்திருத்தம் தமிழர்களை ஏமாற்றும் சூழ்ச்சி என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சட்டத்தில் – 1988 ஆம் ஆண்டு, ஜெயவர்த்தனா கொண்டு வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடும் என்று இந்திய அரசும், சிங்கள அரசும் பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே கும்பலும், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகின்றது.

இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி, உலக அரங்கில் அவமானப்பட்டுக் கிடக்கும் இந்திய அரசும், ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்று பேசி வருகிறது. இது எவ்வளவு பெரிய முரண்பாடானது, நகைப்புக்குரியது.

13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே சம உரிமை கிடைத்து விடும் என்பதெல்லாம்,  ஈழத்தமிழர்களை ஏமாற்றும் நரிதந்திரம். 13வது சட்டத் திருத்தத்தில் என்ன உரிமைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கூறவோ, விவாதிக்கவோ, இந்த இருநாட்டு அரசுகளும் தயாராக இல்லை.

13வது அரசியல் சட்டத் திருத்தம் என்பது தமிழர்களை சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமைப்பட்டிருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வது தான். இந்த சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதியில் மாகாண கவுன்சில்களையும், அமைச்சர்களையும் நியமித்துக் கொள்ளலாம்.

ஆனால், அமைச்சர்களுக்கு அதிகாரங்கள் ஏதும் இல்லை. இலங்கை குடியரசுத் தலைவரால் மகாண கவுன்சிலுக்கு நேரடியாக நியமனம் செய்யப்படும் – ஆளுநருக்கு தான் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரங்களும் ஆளுநருக்குத்தான் உண்டு, அமைச்சரவைக்கு அல்ல. மாநில காவல்துறையைக் கட்டுப்படுத்தும் உரிமைக்கூட அமைச்சரவைக்கு இல்லை.

இந்த 13வது சட்டத்திருத்தம், சட்டரீதியாகவே தமிழர் மண்ணை பறித்துக் கொள்கிறது. தமிழ் மண்ணின் நிலத்தை மற்றவர்களுக்கு வழங்குவதற்கான உரிமையை சிங்கள அரசு சட்டப்பூர்வமாக தனது உரிமையாக்கிக் கொள்வதன் வாயிலாக,  தமிழர் பகுதிகளில் சிங்களர்களின் குடியேற்றம் சட்டப்படி நடக்க கதவு திறந்து விடப்பட்டுள்ளது.

13வது சட்டத்திருத்தத்தால், ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து புரிந்து கொள்ளாத சிலர், அல்லது கவலைப்படாத சிலர், அச்சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது வேதனையானது. முக்கியமாக,  13வது சட்டத்திருத்தம் என்பது தமிழர்களுக்கு உரிமை வழங்கும் சட்டத் திருத்தம் அல்ல.

தற்போது, 13வது சட்டத்திருத்தம் குறித்து பிரதமர் மோடி பேசுவதெல்லாம்,  இலங்கை மீது தமது பிடியை வைத்திருப்பதற்கு மட்டுமே. மோடியின் இந்த நகர்வு தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனைக் கொண்டுவருமா எனப் பார்த்தால் நிச்சயமாக இல்லை. தமது நலன்களுக்காக இந்தியா மேற்கொள்ளும் மற்றொரு காய்நகர்த்தல்தான் இது.

1980- களில் அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்க தமிழ்ப் போராளிகளை ராஜீவ் காந்தி பயன்படுத்தினார். தற்போது,  சீனாவின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை விடுவிக்க 13வது சட்டத்திருத்தத்தை  மோடி பயன்படுத்துகின்றார். அதாவது மீண்டும் பகடைக்காய்களாக தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். அவ்வளவே!

1985 ஆம் ஆண்டு, தமிழ்ப் போராளி குழுக்கள், சிங்கள – இந்தியா அரசு ஏற்பாட்டில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையின் படி, ஈழத்தில் வாழும் தமிழர்களை ஒரு தேசமாகவோ, தேசிய இனமாகவோ அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு பாரம்பர்ய பிரதேசம் இருப்பதை அங்கிகரிக்க வேண்டும். அவர்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

இதுவே, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வை காண்பதோடு, அவர்களின் உரிமைகளை பெற்றுத்தரும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது

எனவே, திம்பு பேச்சுவார்த்தையின் படி, அக்கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

13வது சட்டத்திருத்தத்திற்கு எதிராக இலங்கையில் போராட்டங்களையும், பேரணியையும் முன்னெடுத்துள்ள தமிழ் அமைப்புகளுக்கு, பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதோடு, ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு துணை நின்று போராடும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்