Aran Sei

திமுக கொடி கட்டும் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி பலி – சுபஸ்ரீக்காக பேசியவர்கள்  தற்போது  எங்கே? என அதிமுக கேள்வி

திமுக கொடி கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (20-8-21), விழுப்புரம் – மாம்பலப்பட்டு சாலையில், நடைபெற்ற திருமண விழாவுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கியுள்ளார். அவரை வரவேற்கும் பணியில், விழுப்புரம் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் 13 வயது சிறுவன் தினேஷ் என்பவரும் ஈடுபட்டுள்ளார்.

திமுக கொடி கம்பத்தை நடும் பணியை தினேஷ் செய்து கொண்டிருந்த நிலையில் மேலே சென்ற மின்கம்பியுடன் கொடி கம்பம் உரசியதால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. உடனடியாக விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட தினேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை தொடர்பு கொள்கையில், திமுக கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்டிருந்த சிறுவன் மரணமடைந்ததை உறுதி செய்ததாகவும், அந்த பகுதியின் திமுக நிர்வாகி அந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.1,50,000 நஷ்ட ஈடாக அளித்ததாகவும் கூறியுள்ளார் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற கொடி கம்பங்களை நடுவதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate) பெற வேண்டும் எனவும் ஆனால் அது போன்ற அனுமதியை திமுக சார்பில் யாரும் கோரவில்லை எனவும் தி இந்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”திமுக  அமைச்சருக்கு  பேனர் கட்டும்போது  மின்சாரம் தாக்கியதில்  13  வயது  சிறுவன்  பலி!  உயிரின்  மதிப்பு  என்பது ஆட்சிக்கு  ஆட்சி மாறுவதில்லை.  சுபஸ்ரீ க்கு  ஆதரவாக  வாய்  பேசியவர்கள்  தற்போது எங்கே? குழந்தைகள்  நல வாரியம்  தலையிட்டு  சம்பந்தப்பட்ட  திமுகவினர்  மீது தகுந்த நடவடிக்கை  எடுக்க  வேண்டும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு,சென்னை துரைப்பாக்கம் சாலையில், சுபஸ்ரீ என்கிற 23 வயது பெண், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அதிமுகவினர் வைத்த விளம்பர பலகை விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாததனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையை காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார். மேலும், சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்