Aran Sei

ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் நீராடல் : காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்

தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஹரித்வார் கும்பமேளாவின் மூன்றாவது புனித நீராடல் நிகழ்ச்சியில் நேற்று (ஏப்ரல் 14) ஒரேநாளில் 13.51 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

மிக புனிதமானதாக கருதப்படும் இந்த மூன்றாவது புனித நீராடல் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. அதிகாலை 5 மணியளவில் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவதால், இந்த ஹரித்வார் கும்பமேளா ஒரு சூப்பர்-ஸ்ப்ரெடராக (தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக) மாறும் என்ற அச்சம் மெய்யாகி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறித்து ஆராய்ந்து வரும் செயற்பாட்டாளர் அனூப் நௌடியால், “ஹரித்வார் மாவட்டம் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்துள்ளனர். இன்னும் வர உள்ளனர். கெடுவாய்ப்பாக, இந்த கும்பமேளா பெருந்தொற்று பரவலுக்கு வழிவகுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு தப்லிகி ஜமாத் மாநாட்டை குற்றம் சாட்டியவர்கள்: கும்பமேளா பற்றி வாய்திறக்காமல் இருப்பது ஏன்?

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும் பகுதியில், ஏப்ரல் 10-ம் தேதி 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களான, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை 961 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.கே.ஜா தெரிவித்துள்ளார். அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக 300-ஐ விட அதிக தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மொத்தமாக, ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும்  பகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி மாலை 4 மணி வரை 1,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹரித்வார் கும்பமேளா: ‘இது தப்லிக் ஜமாத் அல்ல; கங்கை மாதாவின் ஆசிர்வாதத்தால் நமக்கு கொரோனா வராது’ – பாஜக முதல்வர்

நேற்று முன்தினம் (ஏப்ரல் 13), செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட்  முதலமைச்சர் தீரத் சிங் ராவத், “கும்பமேளா கங்கை ஆற்றங்கரையில் நடக்கிறது. கங்கை மாதாவின் ஆசீர்வாதம் அங்கு உள்ளது. அதனால், நமக்கு கொரோனா வராது.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்