Aran Sei

விவசாயிகள்: “நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நிறுத்திவைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை” – தோல்வியில் முடிந்த 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை

Image Credit : thewire.in

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரி கடந்த 58 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுடன் அரசு நடத்திய முந்தைய பேச்சுவார்த்தைகள் தோல்விடைந்த நிலையில், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையிலும் இரு தரப்புக்கும் இடையே சுமூகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை.

மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் டிராக்டர் அணிவகுப்பு – அரசுக்கு நிகராக பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க, அரசு தயாராக உள்ளது. இந்த காலகட்டத்தில், அரசு பிரதிநிதிகளும் விவசாயிகளின் பிரதிநிதிகளும் ஒரு தீர்வை காண்பார்கள். தீர்வு என்னவாக இருந்தாலும் அது முன்னெடுத்துச் செல்லப்படும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நேற்று (ஜனவரி 21) மாலை, டெல்லி சிங்கு எல்லையில், போராடும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டு முன்னணியான, சம்யுக்ட் கிசான் மோர்ச்சா மூன்று விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை, ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முன்மொழிவை, நிராகரிப்பது என்று முடிவு செய்தது.

இந்நிலையில், இன்று (ஜனவரி 22) விவசாய சங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான 11 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மூன்று விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை, ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முன்மொழிவை, நிராகரிக்க முடிவு செய்ததை அரசிடம் தெரிவிக்காமல், ஊடகங்களிடம் தெரிவித்ததற்கு அரசு தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டநீக்கம் அல்ல நிறுத்திவைப்பு தான்: ‘எங்கள் தலைக்கு மேல் கத்தியை தொங்கவிடும் மத்திய அரசு’ – விவசாயிகள் வேதனை

இதைடுத்து, விவசாய சங்கங்கள் சர்ச்சைக்குரிய இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளனர். அப்போது, மத்திய அரசு தரப்பில், 12 முதல்18 மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைக்கும் திட்டத்தை பரிசீலனை செய்து, தங்களுக்குள் மீண்டும் விவாதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, விவசாயச் சங்கங்கள், தங்களுக்குள் தனித்தனியாக சந்தித்து பேசிவிட்டு, மீண்டும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் சபையின் (AIKS) தலைவர் பி. கிருஷ்ணபிரசாத், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தைத் நிறுத்தி வைக்கவோ, அல்லது இடைநிறுத்தவோ, மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அவர்களுக்கு கிடைத்த சட்ட ஆலோசனையின் அடிப்படையில் தான், அரசாங்கத்தின் முன்மொழிவை சங்கங்கள் நிராகரித்துள்ளது என்று கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

”விவசாயிகளின் நலனில் சங்கங்கள் அக்கறை காட்டாமல் இருப்பதால், பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இது வருத்தமளிக்கிறது. அரசு மாற்று யோசனைகளை வழங்கிவிட்டது” என விவசாயத்துறை அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்