Aran Sei

15 வேலைகளுக்கு 11,000 பேர் விண்ணப்பம் – மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் வேலையின்மை

த்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பியூன், ஓட்டுநர் மற்றும் வாட்ச்மேன் வேலைகளுக்கான 15 இடங்களுக்குக் கிட்டத்தட்ட 11,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

10 ஆவது படித்திருந்தாலே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற போதும், இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள் போன்ற படித்த இளைஞர்களே இதில் அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.

“நான் ஒரு அறிவியல் பட்டதாரி பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட இதே வரிசையில் தான் உள்ளனர்” என்று அஜய் பாகேல் என்ற இளைஞர் கூறியுள்ளார்.

பிற மதங்களுக்கு எதிராக வன்முறை தூண்டியதாக நபிகள் நாயகத்தின் மீது புகார் – இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் இந்துத்துவாவினர்

நான் சட்டம் படித்திருக்கிறேன்; ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்துள்ளேன். எனக்கு இந்த வேலை கிடைத்தால் நீதிபதி தேர்வுக்குத் தயாராகும் எனக்குப் புத்தகம் வாங்காவாவது பணம் கிடைக்கும். அதனால் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன்” என்று ஜிதேந்திர மவுரியா என்ற இளைஞர் கூறியுள்ளார்.

அல்தாஃப் போன்ற ஒரு சிலர் பிற மாநிலங்களில் இருந்தும் வந்தும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்ததுள்ளனர். “நான் ஒரு பட்டதாரி, உத்தரபிரதேசத்தில் இருந்து இங்கு வந்து பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன்” என்று அவர் என்டிடிவியிடம் கூறியுள்ளார்.

“நாங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம். காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புவோம். எல்லோருமே அரசு வேலை பெறவே விரும்புகின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்” என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருந்தார்.

‘மருத்துவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும், தெருக்களில் அல்ல’ – பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

ஆனால் யதார்த்தம் வேறு மாதிரியாக உள்ளது. மத்தியபிரதேசத்தின் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள மொத்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 32,57,136 ஆகும். பள்ளிக் கல்வித்துறையில் 30,600, உள்ளாட்சித் துறையில் 9,388 , சுகாதாரத் துறையில் 8,592, வருவாய்த் துறையில் 9,530 காலி பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது. மத்தியபிரதேசஅரசின் பல்வேறு துறைகளில் சுமார் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மத்தியப்பிரதேசத்தில் அண்மையில் தெரு வியாபாரிகளுக்கான அரசுத் திட்டத்தில் பயன்பெற 15 லட்சம் பேர் விண்ணப்பித்தனர், இதில் தேர்வான 99,000 பேரில் 90% பேர் பட்டதாரிகள் ஆவர்.

“17 ஆண்டுக்கால சிவராஜ் சிங் அரசின் ஆட்சி உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை இது நமக்குக் காட்டுகிறது. மாதம் 1 லட்சம் பேருக்கு வேலை தருவது பற்றிக் கூறிய தலைவர்கள் எங்கே? அவர்கள் வீதிக்கு வந்து உண்மையை அறியட்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா கூறியுள்ளார்.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) என்ற அமைப்பின் ஆய்வின்படி நவம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேசத்தில் வேலையின்மை விகிதம் 1.7% மட்டுமே, இது இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மிகக் குறைவாகும்.

ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் மட்டும் வேலையின்மை காரணமாக 95 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்