Aran Sei

’அயோத்தி ராமர் கோயிலுக்கு இதுவரை 100 கோடி நன்கொடை’ – வரிசை கட்டும் பாலிவுட் நடிகர்கள்

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இதுவரை ரூ.100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், தி இந்துவிடம் கூறியபோது, “ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கிவிட்ட நிலையில், 39 மாதங்களில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். வரும் 2024 ஆம் ஆண்டுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும். ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு நம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்கொடை வழங்கியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவின் ஆன்மா ராமர். குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன். ” என்று தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் உயரமான ராமர் சிலை – நிலத்தையும் வீடுகளையும் இழக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள்

மேலும், இதுவரை கோயில் கட்டுவதற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்த முழுமையான தகவல்கள் தலைமைக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றும் ஆனாலும், இதுவரை ரூ.100 கோடி நன்கொடை கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை வழங்கியுள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ராமர் பாலம் கட்டும்போது அணில் அவருக்கு உதவி செய்த கதையை என்னுடைய மகளிடம் சொன்னேன். அதே பாணியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நம்மால் முடிந்த நன்கொடையை வழங்க வேண்டும். ஆகவே, நான் என்னுடைய நன்கொடை வழங்க வேண்டிய கடமையை நிறைவேற்றிவிட்டேன். நீங்களும் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்களால் முடிந்ததை நன்கொடை வழங்க வேண்டுகிறேன்.” என்று பேசியுள்ளார்.

இந்தி சினிமாவை விழுங்க முயற்சிக்கும் பாஜக

நடிகை பிரணிதா போன்ற திரைப்பிரபலங்களும் ராமர் கோயில் கட்ட நிதி வழங்கியுள்ளதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்