Aran Sei

தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்ட 10% EWS! –  தடுக்குமா ஸ்டாலின் ஆட்சி?

மிழ்நாட்டில் நடந்துவரும் திமுகவின் ஆட்சி நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சி என சட்டமன்றத்தில் அறிவித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வரலாற்றுச் சிறப்புமிக்க சமூக நீதி கண்காணிப்பு குழு அமைத்த அவரின் ஆட்சியில் 10% EWS என்னும் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு சத்தம் இல்லாமல் தமிழ்நாட்டில் அமலாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10% EWS என்னும் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை 2019 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அமல்படுத்தியபோது அதைக் கடுமையாக எதிர்த்த கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். அதையொட்டி, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, 10% EWS-க்கு தமிழ்நாட்டில் அனுமதியில்லை என கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரின் வாக்குறுதி கடந்தாண்டே தமிழ்நாட்டில் மீறப்பட்டது.

GAT-B (Graduate Aptitude Test in Biotechnology) என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வுமூலம் பயோடெக்னாலஜி சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்திய தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவை 10% EWS முறையில் மாணவர் சேர்க்கையை நடத்திவிட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 10% EWS அமலாவதை எதிர்த்து அன்றைய தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடியபோது, அந்தப் பிரிவில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என மழுப்பலாக பதில் சொல்லி நழுவியது அண்ணா பல்கலைக்கழகம். தற்போது ஆட்சி மாறியுள்ள சூழலில், 10% EWS நிறுத்தப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த ஆண்டும் 10% EWS முறை தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

GAT-B 2021 என்றால் என்ன?

அகில இந்திய நுழைவுத் தேர்வான GAT-B (Graduate Aptitude Test in Biotechnology) மூலம் இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் பயோடெக்னாலஜி சார்ந்த பட்டமேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் மூலம் சேரும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகையாக பன்னிரெண்டாயிரம் ரூபாயும், ஆராய்ச்சி நிதியாக எண்பத்து ஐந்தாயிரம் ரூபாய் (ரூ.85,000/-) வரையிலும் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள எட்டு கல்லூரிகளில் கடந்த ஆண்டு இந்தத் தேர்வுமூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

கடந்தாண்டு (2020) GAT-B தமிழ்நாடு கல்லூரிகளின் பட்டியல்:

எண் கல்வி நிறுவனம் படிப்பு இடங்கள்
1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 1.எம்.டெக். – பயொடெக்னாலஜி

 

2. எம்.டெக். – கம்ப்யூடேஷனல் பயாலஜி

25

 

20

2. பாரதியார் பல்கலைக்கழகம், கோவை எம்.எஸ்.சி – மெடிக்கல் பயோடெக்னாலஜி 10
3. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி எம்.எஸ்.சி – பயோடெக்னாலஜி 10
4. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எம்.எஸ்.சி – பயோடெக்னாலஜி 30
5. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை எம்.எஸ்.சி – அக்ரிகல்சுரல் பயோடெக்னாலஜி 30
6. நேஷனல் கல்லூரி, திருச்சி எம்.எஸ்.சி – பயோடெக்னாலஜி 10
7. கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு எம்.டெக். – பயொடெக்னாலஜி 10
8. வேல் டெக் ரங்கராஜன் Dr.சகுந்தலா அறிவியல் & தொழில்நுட்பக் கழகம், சென்னை எம்.டெக். – பயொடெக்னாலஜி 10

 

அண்ணா பல்கலைக்கழகம் நீக்கம் – இடஒதுக்கீடு காரணமா?

இந்த ஆண்டு சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் பட்டியலில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. இந்த இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைக் கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசு நிதிப்பங்களிப்பு செய்வதால், மாநில அரசின் 69% இடஒதுக்கீட்டு கொள்கைக்கு மாறாக ஒன்றிய அரசின் 49.5% இடஒதுக்கீடை அமல்படுத்த ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், அதற்குத் தீர்வு காண முடியாமல் மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

கொரோனா கால கல்லூரி சேர்க்கைக்கான அவசர வழக்காக இதை விசாரித்த நீதிமன்றம், மிக விரைவாக வழக்கை முடித்து மாணவர் சேர்க்கையை நடத்த ஏதுவாக 49.5% இடஒதுக்கீட்டு முறையையே கடந்த ஆண்டு கடைப்பிடிக்க உத்தரவிட்டது. இதற்கு மாறாக இந்த ஆண்டு தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கான முயற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அதற்கு மாறாக, ஒட்டுமொத்த திட்டத்தில் இருந்தும் அண்ணா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் 10% EWS!

GAT-B நுழைவுத் தேர்வுமூலம் மாணவர் சேர்க்கை நடத்திய தமிழ்நாட்டின் இதர பல்கலைக்கழகங்களாக மதுரை காமராஜர், காரைக்குடி அழகப்பா, கோவை பாரதியார் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகும். அவை 49.5% இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடித்ததோடு மட்டுமல்லாமல் கூடுதலாக, முற்பட்ட பிரிவினருக்கான பொருளாதார இடஒதுக்கீடான 10% EWS (Economically Weaker Section) முறையையும் கடைபிடித்தன. இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான செயலாகும்.

இந்த நான்கு பல்கலைக்கழகங்களிலும் இவ்வாண்டும் ஒன்றிய அரசின் 49.5% முறையிலும் கூடுதலாக 10% EWS முறையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இவை போக, சென்னை வேல்டெக் ரங்கராஜன் அறிவியல் தொழிநுட்பக்கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி நேஷனல் கல்லூரி ஆகிய தனியார் கல்லூரிகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. இவற்றிலும் கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்பட்டுள்ளது. இவ்வாண்டும் தொடரும் நிலை உள்ளது.

தமிழகத்தின் உரிமை

மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC – University Grants Commission), அகில இந்திய தொழிநுட்பக் கல்விக் குழுமமும் (AICTE – All India Council for Technical Education) வரையறுத்துள்ளன. இந்நிலையில் நிதிப்பங்களிப்பு என்னும் பெயரில் ஒன்றிய அரசு மாநில இடஒதுக்கீட்டில் தலையிடுவது மாநில உரிமையை மீறும் செயலாகும். இதில் தமிழக அரசு உடனே தலையிட்டு விரைந்து நீதி பெற்றுத் தர வேண்டும்.

மாணவர்களின் கல்விக் கனவு நிறைவேறுமா?

இந்தியாவில் GER (Gross Enrolment Ratio) எனப்படும் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. இந்தியாவின் சராசரி GER 27% ஆகும். 51.4% GER உடன் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதோடு நில்லாமல் சீனாவின் 50.5%ஐ விடவும் முன்னணியில் உள்ளது. எனவே, தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டிய நிலையில், ஒன்றிய அரசின் இடஒதுக்கீடு என்னும் பெயரில் நமது மாணவர்களின் இடங்கள் மற்ற மாநிலங்களுக்குத் திறந்துவிடப்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். மேலும், ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்பு என்பதும் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியே ஆகும்.

மாணவர்களின் கோரிக்கைகள்:

  1. GAT-B திட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தமிழக பல்கலைக்கழகங்களிலும் மற்றும் கல்லூரிகளிலும் ஒன்றிய அரசின் 49.5%+10% EWS கைவிடப்பட்டு, தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்
  2. GAT-B நிதிப்பங்களிப்பு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் அந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்
  3. இந்த திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட 49.5% இடஒதுக்கீடு முறை கைவிடப்பட்டு தமிழ்நாட்டின் 69% முறை பின்பற்றப்பட வேண்டும்.

தன்னை அறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசு என்றும், கலைஞர் கருணாநிதியின் கொள்கை வாரிசு என்று முழங்கிவரும் ஸ்டாலின், நிதிப்பங்களிப்பு என்னும் பெயரில் பறிக்கப்படும் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை மீட்டு சமூக நீதியை நிலைநாட்டுவாரா என்னும் எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்