Aran Sei

அரசியல் தணிக்கையில் ஈடுபடும் தலோஜா சிறை நிர்வாகம் – நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு எல்கர் பர்ஷித் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கடிதம்

குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எழுதும் கடிதங்களை தலோஜா சிறை கண்காணிப்பாளர் நகலெடுப்பதாக எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 10 பேர் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, அருண் ஃபெரேரா, வெர்னான் கோன்சால்வேஸ், மகேஷ் ராவுத், சுதிர் தவாலே, சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன், சாகர் கோர்கே, ரமேஷ் கெய்கோர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில், “ஆனந்த் டெல்டும்டே, ரமேஷ் கெய்கோர் மற்றும் அருண் ஃபெரேராவிற்கு மகாராஷ்டிரா சிறை கையெட்டின் அத்தியாயம் 31 (கைதிகளின் வசதிகள்) விதி 20ஐ பயன்படுத்தி சிறை கண்காணிப்பாளர் குர்லேக்கர் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஆனந்த டெல்டும்டே எழுதிய இரண்டு கட்டுரை, கலாச்சார செயல்பாட்டாளர் மற்றும் அம்பேத்கரியவாதி வீரா சாதிதாருக்கு இரங்கல் கவிதை, ஸ்டான் சுவாமி நினைவாக ரமேஷ் கெய்கோர் எழுதிய கட்டுரை ஆகியவற்றிற்காக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் எழுதியுள்ளது ‘ஆட்சேபனைக்குரியது’, பீமா கோரேகான் குற்றங்களை விசாரிப்பது மற்றும் நக்சல் சித்தாந்தங்களை பரப்புவது தொடர்பான சந்தேகங்களை உருவாக்குகிறது” என அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

”அரசியல் பிரச்சாரத்தின் பொருளாக மாறக்கூடிய விஷயம்” எதையும் எழுதுவதை தவிர்க்கும் விதி 20, அடிப்படை உரிமைகளை மீறுவதாக கூறி 1991 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

குற்றச்சாட்டுகளை மறுக்கும் குர்லேகர், ”நான் ஏன் கடிதங்களை வைத்திருக்க வேண்டும்?. அவை வைத்து நான் என்ன செய்ய போகிறேன்?.” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக மூவருக்கும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

குர்லேகர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டாலும், அவரது அனைத்து நிர்வாக பணிகளுக்கும் தொடர்ந்து பொறுப்பேற்கிறார் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எழுதிய கடிதம் தொடர்பாக மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ள குர்லேகர், அவர்களின் செயல் ’தவறான நடத்தை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

”எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு (தகவல் தொடர்பு மீறலுக்கு சமம்) நாங்கள், எழுதும் கடிதங்களை நகலெடுத்து சேமிக்கும் சிறை கண்காணிப்பாளரின் ‘அரசியல் தணிக்கை’ செயல் ’சட்டவிரோதமானது’. இந்தக் கடிதங்கள் காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம். இவற்றுக்கு எல்லாம் கூடுதலாக, இந்த செயலால் கடிதங்கள் சேர வேண்டிய இடத்திற்கு போய்ச் சேருவதில் மிதமிஞ்சிய காலதாமதம் ஏற்படுகிறது” என எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் இருப்பவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நகலெடுப்பதை நிறுத்த மகாராஷ்டிராவில் உள்ள சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி அந்தக் கடிதத்தில் அவர்கள் கோரியுள்ளனர்.

’அரசியல் தணிக்கை’ என்ற சட்டவிரோத நடவடிக்கையைச் சிறை நிர்வாகம் உடனடியாக நிறுத்துவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சரை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்