Aran Sei

ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கு தற்காலிக முடக்கம் ஏன்? – ட்விட்டர் நிர்வாகம் விளக்கம்

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது ஏன் என்று ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி டெல்லியின் புரானி நங்கல் பகுதியைச் சேர்ந்த 9 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேரைக் கைது செய்து டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி, அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு நான் துணை நிற்பேன் என பதிவிட்டிருந்தார்.

போக்சோ சட்டவிதிகளின்படி பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள், காணோளிகளை வெளியிடுவது சட்டப்படி குற்றம். இதற்கு 6 மாதம் முதல் ஒரு ஆண்டுவரை சிறையும் அபராதமும் விதிக்கப்படும்.

எனவே, சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டது, போக்சோ சட்டத்தை விதிகளுக்கு எதிரான எனக் கூறிய தேசிய குழந்தகளை உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) , இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ட்விட்டர் நிர்வாகம் மற்றும் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி ராகுல் காந்தியின் பதிவு நீக்கப்பட்டதோடு, கணக்கும் 24 மணி நேரத்திற்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இதற்கு ட்விட்டர் நிர்வாகம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிர்வாகம், ”ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படவில்லை. விதிமீறல் காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்டது. ட்விட்டர் சமூக வலைதளைத்தில் தனிநபர்களுக்குத் தீங்கு ஏற்படாமல் பாதுகாப்புது எங்கள் கடமை. போக்சோ விதிகளைச் சுட்டிக் காட்டின் என்சிபிசிஆர் அளித்த புகாரில் உண்மைத்தன்மை இருந்தததால் ராகுல் காந்தியின் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க்கணுங்கு, “குழந்தைகளின் நலன்கள், உரிமைகளைப் பாதுகாப்பது எங்களது தலையாய கடமை. ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு தொடர்பாக ‘தலித் பாசிட்டிவ் மூவ்மெண்ட்’ என்ற இயக்கம் எங்களிடம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில், டெல்லி காவல்துறை மற்றும் ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம். இதனைத் தொடந்து பதிவை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம் கணக்கையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. வேண்டுமென்றே சிறுமியின் அடையாளத்தை ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.” என கூறியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்