மேற்கு வங்க சட்டபேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளால் தப்பி ஓடிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று 115 கல்வியாளர்கள் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, நேற்று (ஜூன் 3) அனுப்பப்பட்ட கடிதத்தில்ல், நூற்றுக்கணக்கான பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அஸ்ஸாம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு உயிர்பிழைப்பதற்காக தப்பியோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்கடிதத்தில், “மே 2 ஆம் தேதி மேற்கு வங்க சட்டபேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் விளைவாக, 11,000-க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலும் பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடிகளை சேர்ந்த மக்கள். மேலும், 1626 கோரமான தாக்குதல்களில் 40,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று விளக்கப்பட்டுள்ளது.
“ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவாளர்களும் அம்மாநில காவல்துறையினரும் இணைந்து பட்டியல் மற்றும் பழங்குடிச் சமூகத்தைக் குறிவைத்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர். இந்த மிருகத்தனமான வன்முறைகளால் சூறையாடப்பட்ட பட்டியல் மற்றும் பழங்குடிச் சமூகத்தினரின் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பி, அவர்களை மீண்டும் அதே வீடுகளில் மீளக்குடியமர்த்த வேண்டும். அதற்கு உங்களின் உத்தரவாதம் தேவை.” என்று கல்வியாளர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் கோரியுள்ளனர்.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.