Aran Sei

 தீஸ்தா செடல்வாட், ஆர்.பி. ஸ்ரீகுமார், பத்திரிகையாளர் முகமது சுபேர உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – மக்கள் குடிமை உரிமைக் கழகம் கோரிக்கை

மூக செயல்பாட்டாளரும், ஊடகவியளாலருமான தீஸ்தா செடல்வாட், முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.பி. ஸ்ரீ குமார் மற்றும் ஆல்ட்நியூஸ் ஊடகத்தின் இணை நிறுவனருமான முகமது சுபபரின் கைதினை வன்மையாக கண்டித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் குடிமை உரிமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தேசிய செயலாளர் பொதுச் செயலாளர் மருத்துவர் வி. சுரேஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியளாலருமான தீஸ்தா செடல்வாத், முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.பி. ஸ்ரீ குமார். மற்றும் ஆல்ட்நியூஸ் ஊடகத்தளத்தின் இணை நிறுவனருமான முகமது சுபேரின் கைதினை வன்மையாகக் கண்டித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இன்று ராஜரத்தினம் அரங்கம் எழும்பூர் அருகில் போராட்டம் மேற்கொள்கிறோம்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் Justice அக்பர் அலி Justice ஹரிபரந்தாமன், NGR பிரசாத் போன்ற மூத்த வழக்கறிஞர்கள், குடிமை சமூக மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து கைதை எதிர்த்து கண்டனங்களை தெரிவிக்கிறோம். நாடு முழுவதும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் இக்கைதுகளை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது – விளக்க கேட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடிதம்

”கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த மதவாத வன்முறைக்கு பின்னால் உள்ள கூட்டுசதி குறித்து முறையான விசாரணை வேண்டும் என்று சகியா ஜாப்ரி அவர்கள் தொடுத்த வழக்கினைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சகியா ஜாப்ரீ க குஜராத் மாநிலம் வழக்கில் அளித்த தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்தின் மீது பற்றுடைய அனைவருக்கும் ஓர் ஆழ்ந்த வலியையும் இழப்புணர்வையும் ஏற்படுத்துகிறது உச்ச நீதிமன்றம் கொலை, பாலியல் வன்புணர்வு பொருட்சேதம் ஆகிய குற்றங்களைப் புரிய சதித் திட்டம் தீட்டப்பட்டதான கருத்தை நிராகரித்ததோடு நில்லாமல், ஒரு படி மேலே சென்று. கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட மதவாத வன்முறைக்கு நீதி பெற்றுத் தர பாடுபட்டவர்களையும் கண்டனத்திற்கு உட்படுத்தியது.

இது ‘தங்களுக்கே பொய் என்று தெரிந்த ஒரு சில தகவல்களைக் கூறி ஓர் பரபரப்பை ஏற்படுத்த குஜராத் மாநிலத்தின் அதிருப்தியில் இருக்கும் அலுவலர்கள் மற்றும் பிறரின் கூட்டுமுயற்சி’ என்று நீதிமன்றம் கூறியது. தாக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுத் தர பதினாறு வருடங்களுக்கு மேலாக சட்டப்பூர்வமாக முயன்று வருபவர்களை, ‘ஒவ்வொரு அதிகாரியின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் திமிர் உடையவர்கள்’ என்று தாக்கியும், அவர்களது செயல்கள் உள்நோக்கமுடையவை என்று களங்கப்படுத்தியும் அத்தீர்ப்பு தொடர்கிறது. ‘இந்த முறைகேட்டில் பங்குபெற்ற அனைவரும் விசாரணை கூண்டிலேற்றப்பட்டு, சட்டப் பூர்வமான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் கூறியது.

மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் ஜூபைர் கைது – நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா கண்டனம்

24.6.2022 அன்று தீர்ப்பினைத் தொடர்ந்து, 25.6.2022 அன்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை விரைவாக செயல்பட்டு, வலுக்கட்டாயமாக தீஸ்தா செதல்வாத் அவர்களது வீட்டினுள் புகுந்து அவரைத் தாக்கி, தூக்கிச் சென்று தனது காவலில் வைத்தது. தீஸ்தா, சாண்டா குரூஸ் காவல் நிலையத்தின் அளித்த கையெழுத்துப் புகாரில் “நான் என் உயர் குறித்து பெரிதும் அஞ்சுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் தீஸ்தாவை காவலில் வைக்க பயன்படுத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஓய்வுபெற்ற குஜராத் காவல்துறை அதிகாரிகள் ஆர்.பி. ஸ்ரீ குமார், சஞ்சீவ் பாட் மற்றும் செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் ஆகியோர் துப்புகளை சோடிக்க, சாட்சிகளுக்குப் பயிற்சியளிக்க மற்றும் சட்டத்தினை தவறாக பயன்படுத்த சதித் தீட்டியதாக குற்றம் சாட்டுகிறது.

தனது வலையை மிகப் பரவலாக விரித்து, 1.1.2002 முதல் 25.6.2022 வரை குற்றம் நடந்த காலகட்டம் என்று முதல் தகவல் அறிக்கை வழக்கைப் பதிவு செய்கிறது. அதன்படி, 2002 படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுத்த எந்தவொரு முயற்சியும் – நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்தது உட்பட குற்றமாக்கப்படுகின்றன. கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை நிரூபித்து அரசாங்கத்தினை பொறுப்பேற்கச் செய்யும் குற்றவியல் வழக்காடுதலின் ஒரு சாதாரண நடைமுறை இன்று குற்றம் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் முகம்மது சுபேர், செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்

அதே போல, செய்திகள் மற்றும் தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸ் ஊடகத்தின் இணை-நிறுவனர் ஆன முகமது சுபைர் அவர்கள் கைது செய்யப்பட்டார். அவர் 2018-இல் பகிர்ந்த ஒரு டுவீட் இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாகவும், மதக்குழுக்களிடையே கலவரத்தைத் தூண்டுவதாகவும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153A மற்றும் 295A கீழ் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும், தான் பிணை பெற்றுள்ள ஒரு வழக்கின் விசாரணைக்குச் சென்ற இடத்தில் இவ்வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார் உண்மையில் அவர் பதிவிட்ட டுவீட் 1983இல் வெளியாகிய இந்தித் திரைப்படம் ஒன்றில் இடம்பெற்ற காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமே. இருந்தும், சுபைரை மேலும் நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதியளித்துள்ளது. மேலும், ஒரு ஊடகவியலாளரின் தனிப்பட்ட மின்சாதனங்களில் அவரது சொந்த விடயங்கள் மட்டுமின்றி அவரது பணிகுறித்த முக்கியமான விடயங்களும் இருக்கும் என்ற அவரின் வழக்கறிஞரின் வாதத்தைப் பொருட்படுத்தாது சுபைரின் மின்சாதனங்களை பறிமுதல் செய்ய தில்லி பெருநகர தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவெளியில் சிறுபான்மை மதத்தினரின் நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பல பிரமுகர்கள் சுதந்திரமாக திரிந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், முகமது சுபைரின் கைது இந்த அரசாங்கத்தின் பொய் பிரச்சார கட்டமைப்பிற்கெதிராக ஒரு பத்திரிக்கையாளராக அவர் ஆற்றிவரும் பணியை முடக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை சுபைர் கைது செய்யப்பட்ட அதே நாளில் ஜி7 மாநாட்டில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வரையப்பட்ட கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது.

மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையென மும்பை பிரஸ் கிளப் கண்டனம்

2002 குஜராத் படுகொலையின் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து நிறுவப் பாடுபட்டவர்கள், ஆதாரமற்ற தகவல்களை செய்தி என்ற பெயரில் பல்வேறு ஊடகங்கள்மூலம் மக்களிடையே பரவுவதை எதிர்க்கப் போராடுபவர்கள் போன்றோர் இன்று குறிவைக்கப்படுகிற இவ்வேளை, பொய் உண்மையாக மாறும் ஓர் ஆர்வெலிய நிலைமை.

இந்நடவடிக்கைகள் தற்செயலானவை அன்று அதிகாரத்தினை நோக்கி கேள்வி எழுப்பும் குரல்களை சட்டத்தின் போர்வையில் நசுக்கும் ஓர் பெரும் சதி. பீமாகோரேகான் வழக்குகள் உட்பட இது போன்ற அதிகார, சட்ட துர்பிரயோக நடவடிக்கைகள் எதிர்காலத்தில், குடிமக்கள் அரசாங்கத்திற்கெதிராக கேள்வி எழுப்புவதை தடுத்து நிறுத்த முயல்வதோடு. அரசாங்கம் தவறிழைப்பதில்லை என்ற ஒரு கருத்தை விதைக்கின்றன உண்மைகளை வெளிக்கொண்டுவர, பொய் பிரச்சாரங்களை உடைத்து பொதுமக்களுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்களைக் கொண்டு சேர்த்திட பாடு படும் சமூக செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் சமூக விரோதிகளாக்கப்படுகின்றனர். இதுவே குடிமைச் சமூக அமைப்புகளில் இருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கை.

அரசாங்கத்திற்கெதிராக கேள்விகளெழுப்பி, ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்ட போராடுபவர்களின் குரலை நசுக்கி, குற்றவாளிகளாக்க விழையும் இந்நாசகர முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தீஸ்தா செதல்வாத், ஸ்ரீகுமார் ஆகியோர் மீது போடப் பட்டிருக்கும் பொய்யான, பழியுணர்வு கொண்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப்பெறப்பட்டு, தீஸ்தா செதல்வாத், ஸ்ரீகுமார் மற்றும் சுபைர் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சங்கிகள் மண்டையில் குட்டு வைத்த Supreme Court | Nupur Sharma Comment on Muhammad | Deva’s Update -1

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்