Aran Sei

அசாம் – மிசோராம் எல்லையில் நடந்த மோதல் எதிரொலி : பேச்சுவார்த்தைக்கு வர இருமாநில டிஜிபிகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

சாம் மற்றும் மிசோரம் மாநில காவல்துறையினருக்கு இடையிலான மோதலில், 5 அசாம் காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாகவும், 42 காவலர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜுலை 24 ஆம் தேதி மேகாலயா தலைநகர் சில்லாங் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையில் இருக்கும் அனைத்து எல்லை பிரச்னைகளுக்கும் தீர்வு காண காண நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்து வருவதாக தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 24 ஆம் தேதி மாலை 4.40 மணியளவில், மிசோரம்  மாநிலத்தில் கோலாசிப் பகுதியின் எல்லையோர நகரமான வைரெங்கேவிற்கும் அதனை ஒட்டியுள்ள அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள லைலாப்பூருக்கும் கலவரம் வெடித்தது.

இதன் காரணமாக மிசோரம்  முதலமைச்சர் ஜோரம்தங்கா, அசாம் முதல்மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இருவரும் ட்விட்டரில் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் பிரதமர் அலுவலகம் தலையிட்டுத் தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பில் அவர்களை டேக் செய்து, பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த இரு மாநில அமைச்சர்களும் ட்விட்டரில் பதிவிட்டனர் என தி வயர் கூறுகிறது.

அசாம் முதல்மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது ட்விட்டர் பக்கத்தில் சில காணொளிகளை பதிவிட்டிருந்தார். அதில், “மிசோரம் காவல்துறை எப்படி நடந்து கொள்கிறார்கள் மற்றும் பிரச்சனையை அதிகரித்தனர் என்பதை தெரிந்துகொள்ள” என்றும், அசாம் காவல்துறையினர் மரணமடைந்த பிறகான காணொளியை ”மிசோரம் காவல்துறையினர் மற்றும் குண்டர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள்” என்றும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

அசாம் காவல்துறையின் துணை ஆய்வாளர் ஸ்பவன் ராய் மற்றும் காவலர்கள் லிட்டன் சுக்லபைத்யா, என். ஹுசைன், சம்சுல் ஜமான் பர்புயா, எம்.எச். பர்புயா ஆகியோர் இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் என்றும், கச்சார் மாவட்ட காவதுறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை தலைவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மிசோரம் காவல்துறையினர் இலகு ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, “நிலைமையின் நோக்கம் மற்றும் ஈர்ப்பு குறித்து” இது பேசுவதாக அவர் குறிப்பிட்டதாக  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 24 ஆம் தேதி அமித் ஷா மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்துகொண்ட கூட்டத்தில் கலந்து கொண்ட ஜோரம்தங்கா, “அசாம் அரசால் உரிமைக் கோரும் பகுதிகள், மிசோரம் மக்களால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார் என தி வயர் தெரிவித்துள்ளது.

மேலும், ”பராக் பள்ளத்தாக்கில் இருந்து குடியேறும் ‘புலம்பெயர்ந்தவர்களின்’ எண்ணிக்கை அதிகரித்துவதால் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க அசாம் இந்த பகுதிகளை உரிமை கோரத் தொடங்கியுள்ளது” என்று அவர் குற்றம்சாட்டியதாக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களான கொலசிப், மிமிட் மற்றும் ஐஸ்வால் மாவட்டங்கள் மாநிலத்தின் 165 கிலோமீட்டர் எல்லையை அசாமின் பராக் பள்ளத்தாக்கின் கச்சார், ஹைல்கண்டி மற்றும் கரீம்கஞ்ச் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கின்றன.

ஜூலை 26 ஆம் தேதி காலை 11.30 மணியில் இருந்து மாலை 4.40 மணிவரை ஜோரம்தங்காவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். கலவரம் வெடித்தபோது அதை தடுக்க அவரிடம் கோரினேன். துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது அவருக்குத் தெரிவித்தேன், அவர் வருத்தம் தெரிவித்தார். இது தான் நான் கடைசியாக அவரிடம் தொலைபேசியில் பேசியது” என்று சர்மா கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இரு வடகிழக்கு மாநிலங்களைடையே எல்லை வரையறை தொடர்பாக சிக்கல்கள் உள்ளன.

எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அசாம் காவல்துறையினருக்கு கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். மத்திய ரிசர்வ் காவல் படையினருடன் 3 ஆயிரம் காவலர்கள் கொண்ட  பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். சம்பவம் அசாம் மாநில எல்லைக்குள் நடைபெற்றிருப்பதால், இது தொடர்பாக வழக்கு பதிய அசாம் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருப்பதாக தி வயர் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்னையைத் தீர்க்க ஜூலை 29 ஆம் தேதி டெல்லி வருமாறு அசாம் மற்றும் மிசோரம் காவல்துறையின் தலைமை இயக்குநர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்