Aran Sei

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

‘என் மகன் மீண்டும் சிறைக்குத் திரும்பாமல் முதல்வர் பார்த்துக்கொள்வார்’ – அற்புதம்மாள்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

இதழின் உள்ளே...

தலையங்கம்

நியாயத் தராசு எந்தப்பக்கம் சரியும்…?

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ குழுமம் என்கிற நிறுவனத்தின் தயாரிப்பான ‘பெகசிஸ் ஸ்பைவேர்’ எனும் உளவு பார்க்கும் மென்பொருள், உலகின் 10 நாடுகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கும், ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. சுமார் 50,000 மொபைல் போன் எண்கள் அடங்கிய அந்த ஆவணத்தை, உலகின் தலைசிறந்த 17 பத்திரிகை நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஊடகமும், ஆம்னஸ்டி இண்டர் நேஷனலும் வழங்கியுள்ளன. அந்த ஆவணத்தில் உள்ள அலைபேசி எண்களில், தங்கள் நாடுகளைச் சேர்ந்த எண்களின் உரிமையாளர்களை தேடிய அந்த ஊடக நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்தன. ஏனென்றால், பெகசிஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் அந்த எண்கள் பத்திரிகையாளர்கள், நாடுகளின் முன்னாள் இந்நாள் தலைவர்கள், அரசு குடும்பத்தைசேர்ந்தவர்கள், செயல்பாட்டாளர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என சமூகத்தின் மிக முக்கியமான நபர்களுக்கு சொந்தமானவை என்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் பூதகரமாக வெடிக்கவே, ராணுவ ஆயுதங்களுக்கு நிகரான இந்த பெகசிஸ் மென்பொருளை ‘நம்பகமான அரசுகளுக்கு’ மட்டுமே விற்கிறோம் என்றது என்.எஸ்.ஓ நிறுவனம். ஆனால், அந்த மென்பொருளை அந்த அரசுகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது என்று கூறிய அந்நிறுவனம், தான் கூறிய கருத்திற்கே முரணாக, கடந்த காலத்தில் பெகசிஸ் மென்பொருளை தவறாக பயன்படுத்திய நாடுகளுக்கு சேவையை நிறுத்தி விட்டதாகவும் கூறியது.

இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள் பெகசிஸ் வளையத்தில் இருப்பதை தி வயர் இணையதளம் கண்டுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் உத்திவகுப்பாளர் பிரசாந்த கிஷோர் ஆகியோரின் பெயரும் உளவுப் பட்டியலில் இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிக்கு எதிராக புகார் அளித்த பெண்ணும் அவருடைய உறவினர்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது. பீமா கோரேகான் வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ள 15 பேரில் (இந்த வழக்கில் சிறையிலிருந்த ஸ்டான் சாமி சமீபத்தில் மரணமடைந்துவிட்டார்) 8 பேருடைய தொலைபேசிகளும் பெகசிஸ் மூலம் கண்காணிக்கப்பட்ருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுகன் காந்தி உட்பட திராவிட மற்றும் தமிழ்தேசிய அமைப்புகளைச் சேர்ந்த நான்கு பேரின் பெயரும் உளவு பார்த்திருக்கலாம் என்று கருதப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில், அப்போதைய அதிபர் நிக்சன், எதிர்கட்சியை உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வாட்டர்கேட் ஊழல் என்று அழைக்கப்படும் அந்த விவகாரத்தை அந்நாட்டின் ஊடகங்களும், நீதித்துறையும் மிகச்சரியாக கையாண்டதன் விளைவாக நிக்சன் பதவி விலகினார்.

அமெரிக்காவில் அன்று நடந்த அதேபோன்ற தொரு ஊழல் இன்று இந்தியாவில் நடந்தது உறுதியாகியுள்ளது. உண்மையில் சொல்லப்போனால் அமெரிக்காவில் நடந்ததுபோல் இல்லாமல், இந்த ஊழலில் பாகுபாடில்லாமல் பலர் உளவு பார்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஊடகங்கள், அமெரிக்கா அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்த ஊழல் குறித்து ஏதோ பேசி வருகின்றன. எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளன. இருந்தபோதும் அரசு அசைவதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடைசி புகலிடம் நீதித்துறைதான். இந்த விவாகரம் குறித்து அதன் வாசலையும் சிலர் தட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் நீதித்துறையும் நிற்கும் நிலையில், நியாத்தராசு எப்படி சரியும் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

 • ஆசிரியர்

 

ஆசிரியர் குழு

ஆசிரியர்              –              மு. அசீப்

இணை ஆசிரியர்    –              மகிழ்நன்

மூத்த ஆசிரியர்       –              ஆர். மதன்ராஜ்

துணை ஆசிரியர்கள்

அரவிந்ராஜ் ரமேஷ்

தேவா பாஸ்கர்

நந்தா குமார்

சந்துரு மாயவன்

இதழ் வடிவமைப்பு

சுபாஷ் அரவிந்த்

தமிழரசன்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

பெகசிஸ் உளவுசெயலி என்பது என்ன? அது எப்படி தொலைபேசிகளை உடைத்து உள்ளே நுழைகிறது?

இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த உளவுசெயலியின் பெயர்தான் பெகசிஸ். தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்த செயலிகளில் மிகவும் சக்தி வாய்ந்த செயலி அதுதான் என்று நிச்சயமாக சொல்லலாம்.

உங்கள் தொலைபேசிக்குள் நுழைந்த பிறகு, நீங்கள் அறியாமலேயே, உங்கள் தொலைபேசியை 24 மணி நேரமும் உளவு பார்க்கும் கருவியாக மாற்றி விட முடியும். நீங்கள் அனுப்பும் செய்திகளையும் பெறும் செய்திகளையும் நகல் எடுக்க முடியும், உங்கள் புகைப்படங்களை களவாட முடியும், உங்கள் அழைப்புகளை பதிவு செய்ய முடியும்.

உங்கள் தொலைபேசியின் ஒளிப்படக் கருவி (காமரா) மூலம் உங்களைப் படம் பிடிக்க முடியும் அல்லது அதன் ஒலிவாங்கியை (மைக்ரோபோன்) செயல்படுத்தி உங்கள் உரையாடல்களைப் பதிவு செய்ய முடியும். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எங்கெல்லாம் போய் வந்தீர்கள், யாரையெல்லாம் சந்தித்தீர்கள் என்று கூட உளவு பார்த்து விடும் சாத்தியங்களை பெகசிஸ் கொண்டுள்ளது.

பெகசிஸ் என்பது, இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமத்தால் உருவாக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு சந்தைப்படுத்தப்பட்டு உரிமம் வழங்கப்படும் ஒரு உடைத்துப் புகும் மென்பொருள் அல்லது உளவு செயலி. ஆப்பிள் ஐபோனின் ஐ.ஓஎஸ் (iOS) அல்லது பிற தொலைபேசிகளின் ஆண்ட்ராய்ட் செயல்தளங்களை பயன்படுத்தும் கோடிக்கணக்கான தொலைபேசிகளை தொற்றிக் கொள்வதற்கான திறனை அது பெற்றுள்ளது.

பெகசிஸின் மிக ஆரம்பக் கட்ட பதிப்பை ஆய்வாளர்கள் 2016 ஆம் ஆணடில் கண்டுபிடித்தார்கள். அது செய்திகள் அல்லது மின்னஞ்சல்களை அனுப்பி, குறி வைக்கப்பட்டவர் ஒரு லிங்க்கை கிளிக் செய்யும் படி தந்திரமாக சிக்க வைக்கும், ஈட்டி-தூண்டில் (spear-phishing) என்று அழைக்கப்படும் முறையைக் கையாண்டது.

ஆனால், அதற்குப் பிறகு என்.எஸ்.ஓவின் தாக்கும் திறன்கள் மேலும் முன்னேற்றமடைந்துள்ளன. தற்போது, தொலைபேசியின் சொந்தக்காரர் எந்தச் செயலும் செய்யாமலேயே பெகசிஸை புகுத்தப்படலாம். அவை “ஜீரோ கிளிக்” தாக்குதல்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை வெற்றியடைய தொலைபேசிக்கு சொந்தக்காரர் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

இவை, வழக்கமாக “ஜீரோ-நாள்” பலவீனங்களை பயன்படுத்துகின்றன. “ஜீரோ-நாள்” பலவீனங்கள் என்பவை தொலைபேசி உற்பத்தி நிறுவனம் இன்னும் அறிந்திராத, எனவே அவர்களால் சரி செய்யப்படாத இயங்கு-தள ஓட்டைகளை அல்லது பிழைகளைக் குறிக்கின்றன.

என்.எஸ்.ஓவின் மென்பொருளைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப்-ல் இருந்த ஒரு “ஜீரோ-நாள்” பலவீனத்தின் மூலமாக 1,400 தொலைபேசிகளுக்கு உளவு பார்க்கும் செயலிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று 2019-ம் ஆண்டில் வாட்ஸ்அப் அறிவித்தது. குறி வைக்கப்பட்ட தொலைபேசிக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு செய்வதன் மூலமாக மட்டுமே, உளவு செயலி பெகசிஸை அந்தத் தொலைபேசியில் நிறுவி விட முடியும். குறி வைக்கப்பட்டவர், அந்த அழைப்புக்கு பதில் அளிக்கவே செய்யா விட்டாலும் பெகசிஸை அந்தத் தொலைபேசிக்குள் புகுத்தி விட முடியும்.

சமீபத்தில் என்.எஸ்.ஓ, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-மெசேஜ் மென்பொருளில் உள்ள பலவீனங்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. அதன் மூலம் கோடிக்கணக்கான ஐபோன்களுக்குள் பின்வாசல் வழியாக நுழைய வழி வகுத்திருக்கிறது. அத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்காக தனது மென்பொருளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

பெகசிஸ் பற்றிய தொழில்நுட்பப் புரிதலும், அது ஒரு தொலைபேசியில் தொற்றிக் கொள்வதில் வெற்றி அடைந்த பிறகு அது விட்டுச் செல்லும் தடயங்களான துணுக்குகளை எப்படிக் கண்டறிவது என்பதும், பெர்லினில் உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பாதுகாப்பு ஆய்வகத்தில், கிளாடியோ குவார்னியெரி செய்த ஆய்வுகள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன.

“குறி வைக்கப்பட்டவர்கள் உணர முடியாத அளவுக்கு விஷயங்கள் மிகவும் சிக்கலாகியுள்ளன” என்று கூறும் குவார்னியெரி, என்.எஸ்.ஓவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், சந்தேகரீதியான குறுஞ்செய்திகளை பயன்படுத்துவதை பெரும்பாலும் கைவிட்டு விட்டு, அதை விட தடயம் குறைவான “ஜீரோ-நாள்” பலவீனங்களை தாக்குதல்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்கிறார்.

தொலைபேசியிலேயே நிறுவப்பட்டுள்ள ஐ-மெசேஜ் போன்ற மென்பொருட்கள் அல்லது பரவலாக பயன்படுத்தப்படும் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளை குறி வைப்பது என்.எஸ்.ஓ போன்ற நிறுவனங்களுக்கு மிகவும் பலனளிக்கக் கூடியதாக உள்ளது. ஏனென்றால், அது பெகசிஸ் வெற்றிகரமாக தாக்கக் கூடிய தொலைபேசிகளின் எண்ணிக்கையை பிரம்மாண்டமாக அதிகரித்து விடுகிறது.

தி கார்டியன் (மற்றும் இந்தியாவில் தி வயர்) உள்ளிட்ட சர்வதேச ஊடக நிறுவனங்களின் கூட்டு முயற்சியான பெகசிஸ் திட்டப் பணியின் கூட்டாளியாக செயல்பட்ட அம்னெஸ்டியின் ஆய்வகம், மிகவும் மேம்படுத்தப்பட்ட ஐ-ஓ.எஸ் பதிப்புகளை பயன்படுத்தும் ஐ-போன்களில் கூட வெற்றிகரமான தாக்குதல்களின் தடயங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஜூலை 2021 வரையில் கூட நடத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிகள் மீதான தடயவியல் பகுப்பாய்வு, பலவீனத்தைத் தேடும் பெகசிஸின் தொடர்ச்சியான முயற்சி, பிற பரவலாக பயன்படுத்தப்படும் செயலிகளுக்கும் பரவியிருப்பதற்கான தடயங்களை அடையாளம் கண்டுள்ளது. குவார்னியெரியும் அவரது குழுவும் பகுப்பாய்வு செய்த சில தொலைபேசிகளில், ஆப்பிள் நிறுவனத்தின் புகைப்பட (photo) செயலியிலும் இசை (music) செயலியிலும் விசித்திரமான கணினி நெட்வொர்க் தொடர்புகள் இருப்பதைக் காண முடிந்திருக்கிறது. புதிய பலவீனங்களை என்.எஸ்.ஓ பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

ஈட்டி-தூண்டில் தாக்குதலும், ஜீரோ-கிளிக் தாக்குதலும் வெற்றி பெற முடியாத இடங்களில், பெகசிஸை, ஒரு இலக்குக்கு அருகில் உள்ள ஒரு வயர்லெஸ் (கம்பியிலா) பரப்பியின் மூலமாக நிறுவ முடியும். அல்லது பெகசிஸின் விற்பனை ஆவணம் சொல்வதன் படி, குறி வைக்கப்பட்டவரின் தொலைபேசியை ஒரு உளவாளி திருட முடிந்தால், பெகசிஸை நேரடியாக அதில் நிறுவி விடலாம்.

ஒரு தொலைபேசியில் நிறுவப்பட்ட பிறகு, அதில் உள்ள எந்த ஒரு தகவலையும் பெகசிஸால் திருட முடியும், அதில் உள்ள எந்த ஒரு கோப்பையும் எடுத்துக் கொள்ள முடியும். குறுஞ் செய்திகள், தொலைபேசி எண் பட்டியல், அழைத்தவர்கள் பட்டியல், நாள்காட்டிகள், மின்னஞ்சல்கள், இணையத்தில் உலாவிய வரலாறுகள் என அனைத்துமே ஊடுருவப்பட முடியும்.

“ஒரு ஐ-போன் கைப்பற்றப்பட்டவுடன், தாக்கியவர் அந்தக் கருவிக்கான நிர்வாகி அல்லது எல்லா செயல்களையும் இயக்கும் அதிகாரங்களையும் பெற்றவராக செயல்பட முடியும்படி அது செய்யப்படுகிறது. கருவியின் சொந்தக்காரர் செய்ய முடிவதை விட பெகசிஸ் அதிகமானவற்றை செய்து விட முடியும்” என்கிறார் குவார்னியெரி.

என்.எஸ்.ஓவின் வழக்கறிஞர்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் தொழில்நுட்ப அறிக்கை ஊக அடிப்படையிலானது என்று கூறினர். “ஊக ரீதியிலான அடிப்படையில்லாத அனுமானங்களின் தொகுப்பு” என்று அதை சித்தரித்தனர். ஆனால், அந்த அறிக்கையின் குறிப்பான கண்டுபிடிப்புகளையோ, முடிவுகளையோ எதையும் அவர்கள் மறுக்கவில்லை.

அதன் மென்பொருளை அடையாளம் காண்பதை கடினமாக்குவதற்காக என்.எஸ்.ஓ பெருமளவு முயற்சியை செலவிட்டுள்ளது. இப்போது பெகசிஸ் தாக்குதலை அடையாளம் காண்பது மிகவும் கடினமானது. பெகசிஸின் சமீபத்திய பதிப்புகள், தொலைபேசியின் நிரந்தர சேமிப்பகத்தில் தங்காமல் தற்காலிக நினைவகத்தில் மட்டுமே இருக்கும், அதாவது தொலைபேசி அணைக்கப்பட்டதுமே, மென்பொருளின் அனைத்துத் தடயங்களும் மறைந்து போகும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களுக்கும் மனித உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கும் பெகசிஸ் வைக்கும் மிக முக்கியமான சவால் என்னவென்றால், இதுவரை கண்டுபிடிக்கப்படாத பலவீனங்களை அந்த மென்பொருள் பயன்படுத்துகிறது. அதாவது, மிகவும் பாதுகாப்பு-உணர்வு நிரம்பிய தொலைபேசி பயனர் கூட தாக்குதலை தடுக்க முடியாது.

“ஒருவருக்கு தடயவியல் ஆய்வு செய்யும் ஒவ்வொரு முறையும் எங்களிடம் கேட்கப்படும் கேள்வி என்னவென்றால்: ‘இது போல இனிமேல் நடக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்பதுதான். ‘எதுவும் செய்ய முடியாது’ என்பதுதான் அதற்கு நேர்மையான பதில்” என்கிறார் குவார்னியெரி.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

அசைக்கப்பட்ட நான்காம் தூண் – உளவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள்

கடந்த 2016 ஆம் ஆண்டு, இஸ்ரேலை சேர்ந்த  என்.எஸ்.ஓ  குரூப்  (NSO Group)  என்ற நிறுவனம்,  பெகசிஸ் எனும் உளவு மென்பொருளை (Spyware) உருவாக்கியது. உளவு  பார்ப்பதற்கென்று  பிரத்யேகமாக  உருவாக்கப்பட்ட இந்த  மென்பொருள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் (Operating System) செயல்படக்கூடியது. தீவிரவாதம் மற்றும் குற்றங்களை தடுக்கவே இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்த மென்பொருள் அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. தனியார்  நிறுவனங்களுக்கோ, தனி  நபருக்கோ விற்பனை செய்யப்படுவதில்லை என என்.எஸ்.ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மென்பொருள் யாருக்கு விற்கப்பட வேண்டும் என்பதில், இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை முக்கிய பங்கை வகிக்கிறது. 40 நாடுகளைச் சேர்ந்த 60 வாடிக்கையாளர்கள் தனக்கு  இருப்பதாக என்.எஸ்.ஒ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேரை, ஸ்மார்ட் போன்களில் ஊடுருவச் செய்து, ஒருவரின் தொலைபேசியை முற்றிலுமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.  இது பல்வேறு வழிகளில் ஒருவருடைய ஸ்மார்ட் போன்களில் ஊடுருவுகிறது. முன்னதாக ஏதேனும் இணைப்பை (LINK) ஒருவருடைய கைப்பேசிக்கு அனுப்பி, அதில் உள்நுழைவதன் மூலமாக ஊடுருவச் செய்யமுடியும். அதை விட ஆபத்தான வகையில், இணைப்பின் எந்த  உதவியும் இன்றி, ஒரு குறுந்தகவலை அனுப்பவதன் மூலம், ஸ்மார்ட் போன்களில் பெகசிஸ் ஸ்பைவேரை ஊடுருவச் செய்ய முடியும்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, வாட்ஸ் அப் நிறுவனம், என்.எஸ்.ஒ குரூப் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், பல்வேறு  நாடுகளை  சேர்ந்த  சுமார்  50,000 தொலைபேசி எண்களை கொண்ட அந்த பட்டியல், இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குருப் என்ற நிறுவனத்திலிடமிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கு கிடைத்தது. அந்த நிறுவனம், ஆம்னஸ்ட்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புடன் இணைந்து, உலக அளவில் புகழ்பெற்ற 17 பத்திரிகை நிறுவனங்களுடன் அந்த தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டன.

இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட அந்த 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலன் விசாரணையில், அந்த தொலைபேசி எண்கள் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த எண்களுக்கச் சொந்தமான நபர்களை தொடர்புகொண்டு அதில் சுமார் 30 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், ஊடக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில், என்.எஸ்.ஓ குருப் நிறுவனத்திலிருந்த கசிந்த அந்த 50,000 தொலைபேசி எண்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒட்டு கேட்பதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தி வயர், தி இந்து, இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, நெட்வொர்க் 18 போன்ற முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

பெகசிஸ் உளவு மென்பொருளால் கண்காணிப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் பட்டியல் :

 • எம்.கே. வேணு – தி வயர் இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர்.
 • சுஷாந்த் சிங் – தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர். ரஃபேல் விமான ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிட்டவர்.
 • சித்தார்த் வரதராஜன் – தி வயர் இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர்.
 • எம்.கே. வேணு        நன்றி : opindia
 • பரஞ்சாய் குஹா தாகுர்தா – நியூஸ்கிளிக் இணையதளத்தை சேர்ந்த பத்திரிகையாளர்.
 • எஸ்.என்.எம்.அபிதி – அவுட்லுக் இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர்.
 • விஜிதா சிங் – தி இந்து குழுமத்தைச் சேர்ந்தவர். உள்துறை அமைச்சகம் தொடர்பான செய்திகளை வழங்குபவர்.
 • ஸ்மிதா ஷர்மா – டிவி 18 நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் தொகுப்பாளர்.
 • சிஷிர் குப்தா – இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர்.
 • ரோகிணி சிங் – தி வயர் இணையதளத்தை சேர்ந்த பத்திரிகையாளர். இந்தியாவின் உள்துறை  அமைச்சர்  அமித் ஷாவின்  மகன்  ஜெய்  ஷா மற்றும்  நிகில்  எனும்  தொழிலதிபருக்கும் இடையே  நடந்த ஒப்பந்தங்களை  பற்றி  செய்தி  வெளியிட்ட வர்.
 • தேவிரூபா மித்ரா – தி வயர் இணையதளத்தின் ஆசிரியர்.
 • பிரசாந்த் ஜா – இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர்.
 • பிரேம் சங்கர் ஜா – டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவர் தற்போது தி வயர் இணையதளத்தில் எழுதி வருகிறார்.
 • ஸ்வாதி சதுர்வேதி – தி வயர் இணையதளத்தை சேர்ந்த பத்திரிகையாளர். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடர்பாக புத்தகம் எழுதியவர்.
 • ராகுல் சிங் – இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்தவர். பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை எழுதுபவர்.
 • அவுரங்கசிப் நக்‌ஷ்பந்தி – இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்தவர்
 • ரித்திகா சோப்ரா – தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர். கல்வி மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான செய்திகளை எழுதுபவர்.
 • முசாமில் ஜலீல் – தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையைச் சேர்ந்தவர். காஷ்மீர் தொடர்பான செய்திகளை வழங்குபவர்.
 • சந்தீப் உன்னிநாதன் – இந்தியா டுடே நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர். பாதுகாப்பு மற்றும் இந்திய ராணுவம் தொடர்பான செய்திகளை வழங்குபவர்.
 • மனோஜ் குப்தா – டிவி 18 நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர். புலன்விசாரணை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பவர்.
 • ஜே.கோபிகிருஷ்ணன் – தி பயோணீர் நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர். புலனாய்வின் மூலம் 2ஜி ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்.
 • சாய்காத் தத்தா – பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை சேகரித்தவர்.
 • இஃப்திகார் கிலானி – டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த பத்ரிகையாளர். காஷ்மீர் தொடர்பான செய்திகளை வழங்குபவர்
 • மனோரஞ்சன் குப்தா – ஃப்ராண்டியர் டிவி நிறுவனத்தின் ஆசிரியர். வடகிழக்கைச் சேர்ந்த பத்திரிகையாளர்.
 • சஞ்சய் ஷியாம் – பீகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர்.
 • ஜஸ்பல் சிங் ஹீரான் – பஞ்சாப்பைச் சேர்ந்த ரோசானா பெஹ்ராதார் பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியர்.
 • ரூபேஷ் குமார் சிங் – ஜார்கண்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்
 • தீபக் கிட்வானி – டிஎன்ஏ நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளர்.
 • சுமீர் கவுல் – பிடிஐ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
 • ஷபீர் ஹுசைன் – டெல்லியைச் சேர்ந்தவர், காஷ்மீர் தொடர்பான செய்திகளை வழங்குபவர் மற்றும் அரசியல் விமர்சகர்.

(தற்போது வரை வெளியாகியிருக்கும் பட்டியல்)

இது, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது என்றும் மிகவும் அருவருக்கதக்க செயல் என்றும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு, இந்திய பத்திரிகையாளர் மன்றம் (பிசிஐ), மும்பை பத்திரிகையாளர் உட்பட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

”இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் (நீதித்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள்) வேவு பார்க்கப்பட்டுள்ளனர். இது முன்னெப்போதும் நடக்காத ஒன்று, இதற்கு இந்திய பத்திரிகையாளர் மன்றம் (பிசிஐ) ஒருமனதாக கண்டனத்தை பதிவு செய்கிறது. சில ரகசியமான நோக்கத்திற்காக இந்த உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று பிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.

”இதில் மிகவும் நெருடலானது என்னவென்றால், இந்தியாவின் நலனுக்கு எந்த தொடர்பும் இல்லாத ஒரு வெளிநாட்டு அமைப்பின் வழியாக சொந்த நாட்டு மக்களை உளவு பார்த்துள்ளனர். இது அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, சட்டத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்பட்டு, மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.” என்று இந்திய பத்திரிகையாளர் மன்றம் (பிசிஐ) கூறியுள்ளது.

பெகசிஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்டோர் பட்டியல் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், இந்திய அரசு பெகசிஸை பயன்படுத்தி உள்ளதா இல்லையா? எனும் ஒரே கேள்வி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

CREDITS: thewire, thehindu

 

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

பெகசிஸ் உளவுப் பட்டியலில் நான்கு தமிழர்கள் – உளவுக்கு குறிவைக்கப்பட்ட பெரியாரிஸ்டுகள்

 

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 தொலைபேசி எண்களை கொண்ட அந்தப் பட்டியல், இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குருப் என்ற நிறுவனத்திலிடமிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கு கிடைத்தது. அந்த நிறுவனம், ஆம்னஸ்ட்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புடன் இணைந்து, உலக அளவில் புகழ்பெற்ற 17 பத்திரிகை நிறுவனங்களுடன் அந்த தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கே.ராமகிருஷ்ணன் மற்றும் திராவிடர் கழகத்தின் பொருளாளர் குமரேசன் ஆகியோரின் தொலைபேசி எண்ககள்  பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக உளவு  பார்க்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் பட்டியலில்  இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்தத் தொலைபேசி எண்களைத் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்,  அந்த எண்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த இயலாது. .

பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக உளவு  பார்க்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து தெரிவித்துள்ள திருமுருகன் காந்தி, “இந்துத்துவத்திற்கு எதிராக குரல் எழுப்பக் கூடியவர்களை அடக்க நினைப்பதே  அவர்களின்  சிந்தனை. ஜனநாயக ரீதியாகச் செயல்படக்கூடியவர்கள் மீதான திட்டமிட்ட, ஜனநாயகத் தன்மையற்றத் தாக்குதல் இது” என்றார்.

இதே சம்பவம் குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான், “நான்  கண்காணிக்கப்படுகிறேன்  என்று  எனக்குத் தெரியும். ஏனென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளை  நான் மீண்டும் கட்டமைக்கக்கூடும் என்று அரசு அச்சப்படுகிறது. நான் கண்காணிக்கப்படும் விவகாரம்  குறித்து மிகுந்த விழிப்புணர்வோடு உள்ளேன். இதைப் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து உழைப்போம். ஆனால், இது மிகுந்த  ஜனநாயகத்தன்மை அற்றது, பாசிசமானது” என்று  குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட அந்த 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலன் விசாரணையில், அந்த தொலைபேசி எண்கள் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த எண்களுக்கச் சொந்தமான நபர்களை தொடர்புகொண்டு அதில் சுமார் 30 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், ஊடக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில், என்.எஸ்.ஓ குருப் நிறுவனத்திலிருந்த கசிந்த அந்த 50,000 தொலைபேசி எண்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒட்டு கேட்பதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.

 

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

இனி அந்தரங்கம் என்று எதுவும் இருக்காது – எச்சரிக்கும் ஸ்னோடென்

அரசாங்கள் சர்வதேச உளவுபொருள் வர்த்தகத்தின் மீது உலகளாவிய தடை விதித்த வேண்டும். இல்லையென்றால், அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்களிடமிருந்து, மொபைல் போன்களை பாதுக்காக்க முடியாத ஒரு உலகத்தை எதிர்கொள்ள நேரிடும் என எட்வர்ட் ஸ்னோடென் எச்சரித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) ரகசிய மக்கள் கண்காணிப்பு திட்டங்கள் குறித்து பகிரங்கப்படுத்திய ஸ்னோடென், லாபநோக்குடன் உளவு மென்பொருள் உருவாக்கும் தொழிலை இல்லாமல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். என்.எஸ்.ஓ நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் குறித்து சர்வதேச ஊடக கூட்டமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, கார்டியன் இதழிக்கு அவர் அளித்த நேர்காணலில் இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான என்.எஸ்.ஓ, செல்போன்களில் ரகசியமாக ஊடுருவி அதில் இருக்கும் தகவல்களை திருடும் பெகசிஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி செல்போன்களில் இருக்கும் மின்னஞ்சல்கள், உரையாடல்கள், தொடர்பு எண்கள், இருப்பிட தரவு, புகைப்படங்கள் மற்றும்  காணொளிகளை தனித்தனியாக திருட முடியும். மேலும், செல்போனின் உரிமையாளருக்கே தெரியாமல் செல்போனில் இருக்கும் மைக் மற்றும் கேமராவை ஆன் செய்து நடவடிக்கைகளை ரகசியாமாக பதிவு செய்ய முடியும்.

எஸ்.எஸ்.ஓ குழுமத்தின் வாடிக்கையாளர்களால் வேவு பார்க்கப்பட்ட அல்லது இலக்காக்கப்பட்டதாக கருதப்படும் சுமார் 50 ஆயிரம் எண்கள் கொண்ட தரவுகளின் தொகுப்பை சர்வதேச ஊடக கூட்டமைப்பு பகுப்பாய்வு செய்தது. இது குறித்து பல செல்போன்களை தடயவியல் சோதனை செய்ததில் வெற்றிகரமாக பெகசிஸ் செலுத்தப்பட்டது அல்லது செலுத்த முயற்சிக்கப்பட்டது  கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்ரேல், சைப்ரஸ் மற்றும் பல்கேரியா நாடுகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட, ஏற்றுமதி கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தீவிரமாக்க அரசாங்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த மென்பொருள் விற்கப்படுவதாக  என்எஸ்ஓ குழுமம் கூறுகிறது. ஆனால் அதன் வாடிக்கையாளர்கள் பட்டியலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அஜிர்பைஜான் போன்ற ஒடுக்குமுறை அரசுகளும் அடங்கும்  என்பதை கவனிக்க வேண்டும் என்று ஸ்னோடென் கூறியுள்ளார்.

ஒடுக்குமுறை அரசுகள் பரந்த அளவில், அதிக மக்களை கண்காணிப்பின் கீழ் வைப்பதை, இந்த வணிகரீதியான உளவு மென்பொருள்கள் எவ்வாறு சாத்தியமாக்கியது என்பதை சர்வதேச ஊடக கூட்டமைப்பின் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது. ”முன்னர் சந்தேகத்திற்குரிய ஒரு நபரின் தொலைப்பேசி,  காவல்துறை நடவடிக்கைகளின்படி ஒட்டுக்கேட்க சட்ட அமலாக்கத்துறையினர், சம்பந்தப்பட்ட நபரின் வீடு, கார் அல்லது அலுவலகத்திற்குள் நுழைய வேண்டும். மேலும், இதற்கு தனியாக உத்தரவுகள் பெற வேண்டும். ஆனால் வணிக ஸ்பைவேர் மென்பொருள்கள், பரந்த அளவில் குறைந்த செலவில், அதிகமான மக்களை கண்காணிப்பதை சாத்தியமாக்குகிறது. இந்த வேலை யாருக்கு எதிராகவும், எந்த நேரத்திலும், எவ்வளவு தூரத்தில் இருந்தும் செய்ய முடியும் என ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களை பாதுகாக்க என்ன செய்ய முடியும் என கேள்விக்கு பதிலளித்த ஸ்னோடென், “பெகசிஸ் போன்ற வணிகரீதியான உளவு மென்பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. சாதாரண மக்கள் அதை தடுக்க ஒன்றும் செய்ய முடியாது.  அணு ஆயுதங்களில் இருந்து தங்களை பாதுகாக்க மக்களால் என்ன செய்ய முடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தின் விற்பனையை நாம் தடுக்காவிட்டால், இன்றைக்கு 50 ஆயிரமாக இருக்கும் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரிக்கும். மேலும், நாம் எதிர்பார்த்ததை விட விரைவாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்னோடென்
நன்றி : twitter.com/Adweek/

”சில தொழில்கள் மற்றும் துறைகளில் பாதுகாப்பு இல்லை. அதனால் அதில் தொழில்நுட்பங்களின் பெருக்கத்தை குறைக்க முயற்சிக்கிறோம். உதாரணமாக, ஆணு ஆயதங்களில் வர்த்தக சந்தையை நாம் அனுமதிப்பதில்லை. வர்த்தக உளவு மென்பொருள் அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரே தீர்வு அவற்றின் விற்பனையை தடை செய்வது தான். பெகசிஸ் திட்டம் வெளிப்படுத்துவது என்னவென்றால், என்.எஸ்.ஓ நிறுவனம் உண்மையில் லாபநோக்கம் கொண்ட வணிகமான உளவு மென்பொருள் சந்தையின் ஒரு பிரதிநிதியாகும். என்.எஸ்.ஓ இதை செய்வதற்கு ஒரே காரணம் உலகை காப்பாற்றுவதற்காக அல்ல பணம் சம்பாதிப்பது” என ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.

”சாதாரண மக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு, கூட்டாக வேலை செய்வது தான். இது தனித்தனியாக முயன்று தீர்க்கக் கூடிய பிரச்னை அல்ல. ஏனெனில் நாம் எதிர்ப்பது 100 கோடி மதிப்பு கொண்ட ஒரு பெரிய நிறுவனம். நாம், நம்மை பாதுகாத்து கொள்ள விரும்பினால், விளையாட்டை மாற்ற வேண்டும். இதை செய்ய ஒரே வழி மென்பொருளின் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வருவது தான்” எனக் கூறியுள்ளார்.

என்.எஸ்.ஓ குழுமம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு எதிரான கருத்துக்களை, தொடர்ச்சியான அறிக்கைகள் வாயிலாக என்.எஸ்.ஓ நிறுவனம் மறுத்து வருகிறது. மேலும், அதன் வாடிக்கையாளர் பெகசிஸை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது  குறித்து நாங்கள் கவனிப்பதில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மென்பொருள் அரசாங்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்கப்பட்டது என்றும், அதன் தொழில்நுட்பம் பயங்கரவாதம் மற்றும் கடுமையான குற்றங்களை தடுக்க உதவியது என்றும் என்.எஸ்.ஓ கூறியதுள்ளது. கசிந்த தரவுகளுக்கும் என்.எஸ்.ஓவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ள அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஷலேவ் ஹுலியோ, ”ஊடங்களிள் வெளியான அறிக்கைகள் குறித்து ’மிகவும் கவலை’ கொண்டதாகவும், அவை அனைத்தையும் விசாரிப்பதாகவும், ”சில சமயங்களில் எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த அமைப்பை தவறாக பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

‘வெட்கமே இல்லாமல் என் மனைவியையும் உளவு பார்த்துள்ளனர்’ – உளவுத்துறை முன்னாள் அதிகாரி

 

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி கொல்கத்தாவில் எல்லை பாதுகாப்பு தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கம் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு இணைந்த ஒரு வலதுசாரி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் (Border Security Force) அப்போதை தலைவர் கே.கே.ஷர்மா எல்லை பாதுகாப்பு படையின் சீருடையுடன் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அந்த வலதுசாரி அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா கோபால், பாரதிய ஜனதா கட்சியின் அறிவுஜீவிகள் பிரிவை சேர்ந்த மோஹித் ராய், ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடைய தொண்டு நிறுவனங்களின் அறங்காவலர் ரந்திதேப் சென்குப்தா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய அமைப்பால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் கலந்துகொண்டது அப்போது பேசுபொருளானது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓப்ரைன், இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகத்திடம் எடுத்துச் செல்வேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்று ஒரு மாதம் கூட கழியாத நிலையில், கே.கே.ஷர்மாவின் தொலைபேசி, பெகசிஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி ஒட்டுக்கேட்டதாக கருதப்படும் தொலைபேசி எண்களின் பட்டியலில் இடம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 தொலைபேசி எண்களை கொண்ட அந்த பட்டியல், இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குருப் என்ற நிறுவனத்திலிடமிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கு கிடைத்தது. அந்த நிறுவனம், ஆம்னஸ்ட்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புடன் இணைந்து, உலக அளவில் புகழ்பெற்ற 17 பத்திரிகை நிறுவனங்களுடன் அந்த தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டன.

இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட அந்த 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலன் விசாரணையில், அந்த தொலைபேசி எண்கள் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த எண்களுக்குச் சொந்தமான நபர்களை தொடர்புகொண்டு அதில் சுமார் 30 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், ஊடக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில், என்.எஸ்.ஓ குருப் நிறுவனத்திலிருந்து கசிந்த 50,000 தொலைபேசி எண்களும் பெகசிஸ் ஸ்பைவேர் வழியே ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒட்டு கேட்பதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.

எல்லை பாதுகாப்பு படையிலிருந்து கே.கே.சர்மா ஓய்வு பெற்ற பிறகு, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு காவல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கண்காணிக்கும் பொறுப்பு கே.கே.சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

அந்த பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பறும் முனைப்போடு செயல்பட்டது. அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வை பயன்டுத்தி குறிப்பிடத்தகுந்த இடங்களை கைப்பற்ற விரும்பியது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான கண்காணிப்பாளராக கே.கே.சர்மா நியமிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. 2018ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் சார்பு இயக்கம் நடத்திய கருத்தரங்கில் சர்மா கலந்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியது. இதுதொடர்பாக மம்தா பானர்ஜி இந்திய தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதவே, கே.கே.சர்மா அந்த பொறுப்பிலிருந்த விடுவிக்கப்பட்டார்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜகவுடன் இவ்வளவு நெருக்கமாக இருந்த கே.கே.சர்மா ஏன் உளவுபார்க்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். அவர் எல்லை பாதுகாப்பு படையின் தலைமை பொறுப்பை வகிக்கும்போதே ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருக்கமாக இருந்த நிலையில், அவருடைய ஓய்வுக்குப் பிறகும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதிலிருந்து அந்த பொறுப்பை அவர் பெற தகுதியானவரா என்ற அளவில் அவரும் வேவு பார்க்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இருந்திருக்கலாம் என்று தி வயர் இணையதளம் கூறுகிறது. அதாவது, கே.கே.சர்மாவுக் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இருந்த நெருக்கத்தின் தீவிரம் அவரை பெகசிஸ் ஸ்பைவேரின் மூலம் உளவு பார்த்ததால் உணரப்பட்டிருக்கலாம் என்று அந்த இணையதளம் தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக, கே.கே.சர்மாவை தி வயர் இணையதளம் தொடர்புகொண்டு கருத்து கேட்டுள்ளது. ஆனால், சர்மா அதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

உளவாளிகளே உளவு பார்க்கப்பட்டனர்

எல்லை பாதுகாப்பு படையின் மற்றொரு முக்கிய நபரின் தொலைப்பேசி எண்ணும் பட்டியலில் உள்ளது. அஸ்ஸாம் மற்றும் வங்கதேச எல்லையில், ஆள் இல்லா கண்காணிப்பு (Smart Fencing) என்ற திட்டத்தை முன்வைத்த, எல்லை பாதுகாப்பு படையின் ஐ.ஜியாக இருந்த ஜகதீஷ் மைதானியும் பெகசிஸ் ஸ்பைவேர் மென்பொருளால் வேபு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று தி வயர் கூறுகிறது.

இதுகுறித்து மைதானியை தி வயர் தொடர்பு கொண்ட போது அவர் நேரடியாக கருத்து கூற மறுத்துவிட்டார். தி வயர் இணையதளத்திடம் பேசிய எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் அதிகாரி ஒருவர், உளவு திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை ஜகதீஷ் மைதானி கவனித்துக் கொண்டதால், இஸ்ரேலியர்களுக்கு அவரிடமிருந்து தெரிந்துகொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதேபோல், இந்தியாவின் வெளிவிவகார உளவு நிறுவனமான ‘ரா’ (Research and Analysis Wing) அமைப்பின் முன்னாள் அதிகாரி ஜிதேந்திர குமார் ஓஜா மற்றும் அவருடைய மனைவின் தொலைபேசி எண்களும் உளவு பட்டியலில் உள்ளன.

2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில், இந்திய உளவாளிகளுக்கு பயிற்சி அளித்த ஜிதேந்திர குமார் லண்டனிலும் பணியாற்றியவர். அவருடைய பதவிக் காலம் முடியும் முன்னரே அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டதை எதிர்த்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அவர் ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த சமயத்தில் அவருடைய தொலைபேசி எண்ணும், அவருடைய மனைவியின் எண்ணும் உளவு பார்க்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தி வயர் இணையதளம் கூறுகின்றது.

“இந்த செயல் மோசமான செயல், குறிப்பாக என்னுடைய மனைவியையும் உளவு பார்த்தது வெக்கமற்ற குற்றச் செயல். நான் என்னுடைய வழக்கையை நடத்திக்கொண்டிருக்கும் போது எனக்கு எதிராக மனரீதியான தாக்குதலை தொடுப்பதற்காக, தவறான அதிகாரிகள் இதை செய்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.” என்று ஜிதேந்திர குமார் ஓஜா தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

பட்டியலில் ராணுவ வீர்கள்

2017ஆம் ஆண்டு அமைதிப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று பாதுகாப்புத்துறை எடுத்த முடிவுக்கு எதிராக, கர்னல் முகுல்தேவ் குரல் எழுப்பினார். இந்த முடிவை கண்டித்து பாதுகாப்புத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார்.

கர்னல் முகுல்தேவின் தொலைபேசி எண் பெகசிஸ் ஸ்பைவேர் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தி வயர் இணையதளத்திடம் பேசியுள்ள கர்னல் முகுல்தேவ் “இப்படி ஒன்று நடந்ததை தெரிந்து எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்திய ராணுவ வீர்களின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் “யாரெல்லாம் நியாயமான விஷயங்களுக்கு குரல் எழுப்புகிறார்களோ அவர்கள் இந்த அரசாங்கத்தால் சந்தேகத்துடனே பார்க்கப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக கர்னல் அமித் குமாரின் தொலைபேசி எண்ணும் உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வடக்கு காஷ்மீரில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீர்களில் 356 பேருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்னல் அமித் குமார் வழக்கு தொடர்ந்தார். ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் (Armed Forces Special Power Act) நடைமுறையில் உள்ள பகுதியில், ராணுவ வீர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்பதே அமித் குமாரின் வாதம். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமித் குமார் இந்த வழக்கை தொடர்ந்த சில மாதங்களில் அவருடைய தொலைபேசி எண், பெகசிஸ் ஸ்பைவேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து தி வயர் இணைதயதளம் அவரை தொடர்புகொண்டபோது “நான் தேசவிரோதி இல்லை. என்னுடைய தொலைபேசியிலிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கும். என் தொலைபேசி தேசப்பற்றால் நிரம்பியிருக்கும். அதைத்தாண்டி வேறு எதுவும் இருக்காது” என்று கூறியுள்ளார். தேசத்தின் பாதுகாப்பிற்காக அரசு ஒருவரை ஒட்டு கேட்டாலும் கூட சட்டப்படி அதற்கு முறையான முன் அனுமதிகளை பெற வேண்டும் என்பதையும் அதை செய்யத்தவறுவது குற்றம் எனவும் கார்னல் அமித் குமார் கூறியுள்ளார்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

எல்கர் பரிஷத் தொடங்கி ஹூரியத் மாநாடு வரைநீளும் உளவுப் பட்டியல்

 

நன்றி : indianexpress

2017 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில், டெல்லி பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஹானி பாபு, டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றும் அவருடைய மனைவி ஜென்னி ரோவானாவுடன் கேரள மாநிலம் கொல்லத்திற்கு சுற்றுலா சென்றார்.

தனது குழந்தை பருவத்தை கொல்லத்தில் கழித்திருந்த ரோவானா, நீண்ட காலத்திற்கு பிறகு அங்கு செல்கிறார். அங்கு, கொல்லத்தை பூர்வீகமான கொண்டவரும், டெல்லியை சேர்ந்த பழைய நண்பருமான ரோனா வில்சனை சந்திக்கிறார்.

அங்கிருந்து ஒரு ரிசார்ட்டிற்கு சென்ற அவர்கள் அனைவரும், அரசியல் முதல் பழைய கேரள வாழ்க்கை வரை பல விஷயங்களை பேசி, அரட்டை அடித்து பொழுதை கழித்தனர். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த இந்த தருணத்தில், அவர்களது செல்போன் எண்கள் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்கும் பட்டியலில் இணைக்கப்பட்டது குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இந்த சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு ஆண்டிற்கு பிறகு, 2018 ஜூலை 6 ஆம் தேதி, எல்கர் பரிஷத் வழக்கில் ‘முக்கிய குற்றவாளி’ என்று பெயரிடப்பட்டு, சிறை கைதிகளின் உரிமைக்காக குரல்கொடுத்து வந்த செயல்பாட்டாளர் ரோனா வில்சன் கைது செய்யப்படுகிறார். அன்றிலிருந்து தற்போது வரை அவர் சிறையில் உள்ளார்.

பின்னர் ஹானி பாபு கைது செய்யப்பட்ட 2020 ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒரு வாரம் முன்பிருந்து, அவர்களின் கேரள பயணம் தேசிய புலனாய்வு முகமையின் முதன்மையான நோக்கமாக மாறியது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஹானி பாபு       நன்றி : scroll.in

2018 முதல் 2020 வரையிலான காலத்தில், எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பேரின் எண்கள், வேவு பார்க்கப்பட்டவர்கள் என்று கருதப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஹானி பாபு மற்றும் ரோனா வில்சனின் செல்போன் எண்கள் தவிர்த்து, எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வெர்னன் கான்சால்வேஸ், கல்வியாளரும் சிவில் உரிமைகள் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, ஓய்வுபெற்ற பேராசிரியர் ஷோமா சென் (அவரது செல்போன் எண் தான் முதலில் இணைக்கப்பட்டுள்ளது), பத்திரிக்கையாளரும் மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான கவுதம் நவ்லகா, வழக்கறிஞர் அருண் ஃபெரேரா, வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் சுதா பரத்வாஜ் ஆகியோரது எண்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் நாடு முழுவதிலும் இருந்து பதினாறு சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 84 வயதான பழங்குடியினர் உரிமைக்காக செயல்பட்டு வந்த அருட்தந்தை ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டார். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, மருத்துவக்காரணங்களையும் மீறி தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 5 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஸ்டான் சாமி        நன்றி : BBC

எல்கர் பரிஷத் வழக்கில் நேரடியாக குற்றம்சாட்டப்பட்டவர்களை தவிர, கைது செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சக ஊழியர்கள் என 12க்கும் அதிகாமானவர்களின் எண்களும் உளவு பார்க்கப்பட்ட நபர்களின் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது.

கசிந்த தரவுகளின்படி தெலுங்கு கவிஞரும் எழுத்தாளருமான வரவர ராவின் மகள் பாவனா, வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங்கின் மனைவி மினால் கட்லிங், அவரது இணை வழக்கறிஞர்கள் நிஹால் சிங் ரத்தோட் மற்றும் ஜெகதீஷ் மேஷ்ராம், சுரேந்திர கட்லிங்கின் முன்னாள் வாடிக்கையாளரும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருமான மாருதி குர்வாட்கர், சுதா பரத்வாஜின் வழக்கறிஞர் ஷாலினி கேரா, ஆனந்த் டெல்டும்டேவின் நண்பரும் கேரளாவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலருமான ஜெய்சன் கூப்பர், நக்சல் இயக்கம் தொடர்பான ஆய்வாளரும் பக்சாரை (சத்தீஸ்கர்) சேர்ந்த வழக்கறிஞருமான பேலா பாடியா, கபீர் கலா மஞ்ச் கலாச்சார குழுவின் பழமையான உறுப்பினர்களில் ஒருவரான ருபாலி ஜாதவ், பழங்குடியின உரிமைகள் ஆர்வலர் மகேஷ் ராவத்தின் நெருங்கிய நண்பரும் வழக்கறிஞருமான லால்சு நகோட்டி மற்றும் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களின் எண்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மசாசூசெட்டை தலைமையிடமாக கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்சனல் நடத்திய ஆய்வில், புனே காவல்துறையினர் ஆய்வு செய்வதற்கு முன்னர் சுரேந்திர கட்லிங்கின் மடிக்கணினி மற்றும் ரோனா வில்சனின் கணினி இரண்டிலும் அவர்களை குற்றம்சாட்டும் வகையிலான ஆதாரங்கள் செயற்கையாக பதியப்பட்டது தெரியவந்துள்ளது.

credits : the scroll
ரோனா வில்சன்     credits : the scroll

எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்பிருப்பவர்கள் வேவு பார்க்கப்பட்டதை போலவே, டெல்லி பல்கலைக்கழகத்தின் ஷாகீர் உசேன் கல்லூரியில் அரபி மொழி பேராசிரியரான சையத் அப்துல் ரகுமான் கிலானியும் வேவு பார்க்கப்பட்டுள்ளார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அவரது ஐபோனை தடயவியல் ஆய்வு செய்ததில், 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அவது  செல்போன் வேவு பார்க்கப்பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது என அம்னெஸ்டி இண்டர் நேஷனல் தெரிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட கிலானியை, குற்றமற்றவர் என அக்டோபர் 2003 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதே தீர்ப்பை 2005 ஆகஸ்டில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மக்கள் அதரவைப் பெரிய அளவில் பெற்ற கிலானி, விடுதலை அடைந்ததும் அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருப்பவர்களின் உரிமைக்காக அவரது வாழ்வை அர்பணிக்க முடிவு செய்தார்.

2018 ஆம் ஆண்டில், கிலானி அவரது நண்பரும் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான ரோனா வில்சனுடன் இணைந்து, அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு என்ற அமைப்பை உருவாக்கினார். நாட்டில் உள்ள அனைத்து மனிதஉரிமை மீறல்களுக்கும் எதிராக அவர்கள் குரல்கொடுத்து வந்தனர்.

ஜி.என். சாய் பாபாவின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான 17 பேர் கொண்ட குழுவிலும் கிலானி முக்கிய பங்காற்றினார். டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியான சாய் பாபா, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.

90 விழுக்காட்டிற்கும் அதிகமாக உடல் செயலற்ற நிலையில் இருக்கும் சாய்பாபா, சிறையில் கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், அவரது ஜாமீன் மனுவை தொடர்ந்து நீதிமன்றங்கள் மறுத்துவருகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுப்பதை நோக்கமாக கொண்டே அந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.

ஜி.என். சாய் பாபா       நன்றி : The Print

2019 ஆம் ஆண்டு அக்டோபரில், மாரடைப்பால் கிலானி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவரது செல்போனை (ஐபோன்) தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். அதனை தடயவியல் பகுப்பாய்வு செய்ததில், அவர் வேவு பார்க்கப்பட்டார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

கிலானி மற்றும் காஷ்மீரை சேர்ந்த சில தலைவர்களையும் வேவு பார்க்க, பெகசிஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என தி வயர்  தெரிவித்துள்ளது. காஷ்மீரை சேர்ந்த ஹூரியத் கூட்டமைப்பின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் எண்கள் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

2017 முதல் 2019 ஆம் ஆண்டின் மத்திய பகுதிவரை இவர்கள் வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என ஆம்னெஸ்டி இண்டர்நேஷல் கூறுகிறது. ஹூரியத் தலைவர் பிலால் லோன் வேவு பார்க்கப்பட்டார் என்பது அவரது செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் நிரூபணமாகியுள்ளது.

இதே போல் காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் (பிடிபி) ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தியின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரின் செல்போன் எண்கள் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த எண்கள் மெகபூபா பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் அந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட மெகபூபா, காஷ்மீரிகளுக்கு வேவு பார்க்கப்படுவது புதிதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி தலைவர் அல்டாப் புஹாரியின் சகோதரர் தாரிக் புஹாரியின் எண்ணும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பிடிபி கட்சி உறுப்பினராக இருந்த அல்டாப் பிடிபி, பாஜக கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு அவர் புதிய கட்சி தொடங்கினார்.

மெகபூபா முஃப்தி        நன்றி : economictimes

ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தற்போதைய தலைவரான மிர்வாய்ஸ் உமர் பரூக் மற்றும் முக்கிய மனித உரிமைகள் செயல்பாட்டளருமான வக்கார் பத்தியின் எண்களும் வேவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், காஷ்மீரைச் சேர்ந்த 5 ஊடகவியலாளர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸின் முசமில் ஜலீல், ஹிந்துஸ்தான் டைம்ஸின் அவுரங்கசீப் நஷ்க்பந்தி, டிஎன்ஏ இணையதளத்தின் இஃப்திகர் கிலானி மற்றும் பிடிஐயின் சுமூர் கவுலின் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஐந்தாவது ஊடகவியலாளரின் பெயர் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணைங்க மறைக்கப்பட்டுள்ளது என்றும், ஊடகவியலாளர்கள் தவிர காஷ்மீரை சேர்ந்த டெல்லியில் உள்ள அரசியல் விமர்சகர் ஷபீர் உசேனின் பெயரும் பட்டியலில் உள்ளது என்று தி வயர் கூறியுள்ளது.

காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர்கள் எண்களும் இதில் இடம்பெற்றுள்ளது என கூறியுள்ள தி வயர், அவர்கள் பெயர்களை குறிப்பிடவில்லை.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ஒட்டுக் கேட்கப்பட்ட அனில் அம்பானி – ரபேல் வழக்கும், ரஞ்சன் கோகாயும்

 

2018 மார்ச் 13 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய விமானப்படைக்கு, பிரான்ஸ் நாட்டில் இருந்து, இந்திய அரசு வாங்கவுள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், விமானங்கள் வாங்கப்பட்ட தொகையை தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

செப்டம்பர் 5 ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு அதே ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி,  தீர்ப்பு வழங்கியது. அதில், கொடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 2019ல் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீடியாபார்ட் என்ற ஊடக நிறுவனம், ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதற்கான ஆதாரத்துடன்  வெளியிட்ட புலனாய்வு அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு, அந்நாட்டை சேர்ந்த ஷிர்பா என்ற தன்னார்வ அமைப்பு விசாரணை கோரி புகார் அளிக்கிறது. இதனை ஏற்று, ரபேல் வழக்கில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக இந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பலர் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ குழுமத்தின் தயாரிப்பான பெகசிஸ் என்ற மென்பொருளை கொண்டு பல நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அமைச்சர்கள், நீதித்துறையினர், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் என்பது உலகின் தலை சிறந்த ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்திய புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.

என்.எஸ்.ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களால் வேவு பார்க்கப்பட்ட அல்லது பார்ப்பதற்கு இலக்காக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானியின் செல்போன் எண்ணும் இடம்பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டில் அவரது செல்போன் எண் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அவரது எண் பட்டியலில் இருப்பதாலேயே அவர் வேவு பார்க்கப்பட்டார் என்பதை உறுதியாக சொல்லமுடியாது என கூறும் தி வயர் இணையதளம், அவர் 2018 ஆம் ஆண்டு பயன்படுத்திய அதே எண் தான் தற்போதும் பயன்படுத்துகிறாரா என்பதும் தெரியவில்லை என கூறியுள்ளது.  இந்த பட்டியலில் அம்பானியின் கைப்பேசி எண் மட்டுமல்லாது, அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் கார்பரேட் தொடர்புகள் துறை தலைவரான டோனி ஜேசுதாசன் மற்றும் அவரது மனைவியின் செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன.

வேவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் பட்டியலில் அம்பானி குழுமத்தினர் மட்டுமல்லாது, ரபேல் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் வெங்கட ராவ் போசினா மற்றும் ஏலத்தில் கலந்து கொண்ட பிற நிறுவனங்களான சாப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் இந்திரஜித் சியால், போயிங் இந்தியா தலைவர் பிரத்யுஷ் குமார் ஆகியோரின் எண்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இவர்களது எண்கள் அந்த பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு டசால்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட பிறகு, சாப் நிறுவனத்தில் இருந்து விலகிய இந்திரஜித் சியால், தி வயர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், சில அரசு முகமைகள் அவரை கண்காணிப்பின் கீழ் வைக்க முயற்சித்தாக  கூறினார். செல்போன் எண் இணைக்கப்பட்ட காலத்தில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் முக்கிய பதவிக்கான போட்டியில் பங்கெடுத்த இந்திரஜித் சியால், தற்போது அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான டெக்ஸ்ட்ரானின் இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் தலைவராக உள்ளார்.

இந்த வழக்கில் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில், ஊழல் புகாருக்கு தொடர்புடையவர்களின் எண்கள் மட்டுமல்லாது, இதை வெளிக்கொண்டு வந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் இணை ஆசிரியர் சுசாந்த் சிங்கின் செல்போன் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. இவர் தான் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்ய அழுத்தம் அளிக்கப்பட்டதாக தெரிவித்த பிரான்சுவா ஹோலண்டின், பெண் தோழியும் நடிகையுமான ஜூலி கயேட், சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திற்கு அனில் அம்பானி நிதி அளித்து உதவியது குறித்த செய்தியை முதலில் வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரபேல் விமான ஊழல் வழக்கிற்கு இணையாக அதே காலகட்டத்தில் பேசப்பட்ட மற்றொரு வழக்கு, அப்போதையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்றத்தின் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகார் வழக்கு. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர், அவரது குற்றச்சாட்டுகளை பிரமாண பத்திரமாக ஏப்ரல் 20, 2019 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தப் புகார் அளித்த சில நாட்களில் அவரது கணவர், சகோதர் என அவரது குடும்பத்தினர் 8 பேரின் செல்போன் எண்கள் உட்பட மொத்தம் 11 எண்கள் வேவு பார்க்கும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

credits : the hindu
ரஞ்சன் கோகாய்       நன்றி : the hindu

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே (ரஞ்சன் கோகாய்க்கு பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றவர்), இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு, குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை எனக்கூறி விசாரணை அறிக்கையை குற்றம்சாட்டப்பட்ட ரஞ்சன் கோகாயிடமே சமர்பித்தனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 17, 2019 ஆம் தேதி வரை பதவியில் இருந்தார். அவர் ஓய்வு பெற்ற ஆறு மாத காலத்தில் அவருக்கு பாஜக அரசு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியது. இதே ரஞ்சன் கோகாய் தான் மேற் கூறிய ரபேல் விமான பேரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

உண்மை… உளவு… கொலை… – உயிரைப் பறித்த உளவு செயலி

நன்றி : ndtv

2018 அக்டோபர் 2 ஆம் தேதி, துருக்கியின் உள்ளுர் நேரப்படி மதியம் 1:14 மணியளவில், பத்திரிகையாளர் ஜமால் கசோகி, இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு உள்ளே செல்கிறார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என துருக்கி அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால் இதை ஒப்புக்கொள்ள சவுதி அரசுக்கு 18 நாட்கள் ஆனது.

சவுதியில் பிறந்து அங்கிருந்து வெளியேறி துருக்கியில் வாழ்ந்து வந்த கசோகி உயிருடன் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், இன்று வரை அவரது உடல் கிடைக்கவில்லை.

கசோகி உயிரிழப்பதற்கு சில மாதங்கள் முன்பிருந்தும், அவர் இறந்து பல மாதங்களுக்கு பிறகு வரையும் அவருக்கு நெருக்கமான இரண்டு பெண்களின் மொபைல் எண்கள் பெகசிஸ் உளவு மென்பொருளால் வேபு பார்க்ப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 தொலைபேசி எண்களை கொண்ட பட்டியல், இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குருப் என்ற நிறுவனத்திலிடமிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கு கிடைத்தது. அந்த நிறுவனம், ஆம்னஸ்ட்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புடன் இணைந்து, உலக அளவில் புகழ்பெற்ற 17 பத்திரிகை நிறுவனங்களுடன் அந்த தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டன.

இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட அந்த 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலன் விசாரணையில், அந்த தொலைபேசி எண்கள் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த எண்களுக்கச் சொந்தமான நபர்களை தொடர்புகொண்டு அதில் சுமார் 30 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், ஊடக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில், என்.எஸ்.ஓ குருப் நிறுவனத்திலிருந்த கசிந்த அந்த 50,000 தொலைபேசி எண்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒட்டு கேட்பதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.

கசோகியுடன் தொடர்புடைய ஹாடிஸ் செங்கிஸ், ஹனான் எலாட்ரின் ஆகியோரது செல்போன்களை பரிசோதனை செய்ததில், அவர்கள் வேவு பார்க்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், கசோகியுடன் இணைந்து பணிபுரிந்த அவரது உதவியாளர், கசோகியின் கொலை தொடர்பான விசாரணையில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த இரண்டு உயர்மட்ட அதிகாரிகளின் எண்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கசோகி கொலை தொடர்பாக ரகசிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க புலனாய்வு அமைப்பு, சவுதி அரேபிய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த கசோகியை கொல்ல அல்லது கைது செய்ய சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஒ நிறுவனம், எங்கள் நிறுவனத்திற்கும் ஜமால் கசோகியின் கொடுரமான கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

ஜமால் கசோகியின் மரணம் போலவே மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளரான செசிலியோ பினெடா பிர்டோ மரணத்தின் பின்னணியிலும் பெகசிஸ் ஸ்பைவேர் இருப்பது தெரியவந்துள்ளது.

2017 மார்ச் 2 ஆம் தேதி, குற்றங்களின் போர்க்களம் என அழைக்கப்படும் தெற்கு மெக்சிகோவின் டியர்ரா காலியேட்டில் உள்ள சியுடாட் அல்டாமிரானோவில் செசிலியோ சுட்டுக் கொல்லப்பட்டார்.

செசிலியோ சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக முகநூல் நேரலையில் பேசிய செசிலியோ, எல் டெக்கிலேரோ என்ற வன்முறைக் கூட்டத் தலைவனுக்கு காவல்துறையினரும் உள்ளூர் அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்கு முந்தைய வாரங்களில் இருந்தே அவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. அதே காலகட்டத்தில் தான் அவரது செல்போன் எண் என்.எஸ்.ஒ நிறுவனத்தின் மெக்சிகோவை சேர்ந்த வாடிக்கையாளர்களால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

செசிலியோ மரணம் தொடர்பாக அவரது மனைவி மரிசால் டோலிடோ, “அதிகாரித்தில் இருப்பவர்களால் யாருக்கும் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்” என கூறியுள்ளார்.

2016 முதல் 2017 வரையிலான காலத்தில் மெக்சிகோ நாட்டில் குறைந்தபட்சமாக 26 ஊடகவியலாளர்களின் எண்கள் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

பெகசிஸ் என்ற உளவு பிசாசு – அரசர் முதல் அமைச்சர்கள் வரை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா உட்பட 14 நாடுகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் அரசின் தலைவர்களின் தொலைபேசி எண்கள் பெகசிஸ் ஸ்பைவேர் மென்பொருளால் ஒட்டுக் கேட்டதாக கருதப்படும் பட்டியல் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 தொலைபேசி எண்களை கொண்ட அந்த பட்டியல், இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குருப் என்ற நிறுவனத்திலிடமிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கு கிடைத்தது. அந்த நிறுவனம், ஆம்னஸ்ட்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புடன் இணைந்து, உலக அளவில் புகழ்பெற்ற 17 பத்திரிகை நிறுவனங்களுடன் அந்த தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டது.

இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட அந்த 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலன் விசாரணையில், அந்த தொலைபேசி எண்கள் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த எண்களுக்குச் சொந்தமான நபர்களை தொடர்புகொண்டு அதில் சுமார் 30 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், ஊடக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில், என்.எஸ்.ஓ குருப் நிறுவனத்திலிருந்த கசிந்த அந்த 50,000 தொலைபேசி எண்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒட்டு கேட்பதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.

என்.எஸ்.ஓரு குருப் நிறுவனத்திலிருந்து கசிந்த ஆவணத்தில் மொராக்கோ நாட்டின் மன்னர் ஆறாம் மும்மதுவின் தொலைபேசி எண்ணும் இடம் பெற்றுள்ளது. அதேபோல், ஈராக் அதிபர் பர்ஹாம் சாலியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. எகிப்து பிரதமர் முஸ்தபா மெட்பௌலி, மொராக்கோவின் சாட் எட்டின் எல் ஒத்மானி ஆகியோரின் தொலைபேசி எண்களும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் மோடியுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி : Twitter

இதேபோல், லெபனானின் சாட் ஹரிரி, உகாண்டாவின் ருஹாகனா ருகுண்டா, அல்ஜீரியாவின் நூர்தீன் பெதோனி, பெல்ஜியத்தின் சார்லஸ் மைக்கேல் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த முன்னாள் அதிபர்கள், அவர்கள் பதவிலிருந்தபோது பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு தொலைபேசி எண்களும் இடம் பெற்றுள்ளன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் 2019 ஆம் ஆண்டு ஆப்ரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த அந்த சமயத்தில், மொராக்கோவிலிருந்து அவருடைய தொலைபேசி உளவு பார்க்கப்பட்டுள்ளது. அந்த சமயம் அவர், வடக்கு ஆப்பிரிக்காவில், மொராக்கோவுக்கு அருகில் உள்ள ஜிபூட்டி மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்க பயணம் மேற்கொண்டார்.

உளவு பார்த்தது உண்மை என்றால் இது மிகவும் தீவிரமான விவகாரம் என்று கூறியுள்ள பிரான்ஸ் அரசு இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், மொராக்கோவின் மன்னர் மற்றும் பிரதமரை உளவு பார்த்தது யார் என்ற கேள்விக்கு மொராக்கோவின் பாதுகாப்புத்துறையாக இருக்கலாம் என்று தி வயர் கூறுகின்றது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் பெயரும் பெகசிஸ் ஸ்பைவேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை முதன் முதலில் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டது. இம்ரான்கானை யார் உளவு பார்த்திருக்க முடியும் என்ற சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையில், 2019 ஆம் ஆண்டின் மையப் பகுதியில், ஏற்கனவே இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்த அந்த பட்டியலில் இம்ரான் கானின் தொலைபேசி எண்ணும் சேர்க்கப்பட்டுள்ளதாக தி கார்டியன் கூறுகிறது.

இம்ரான் கானின் தொலைபேசி எண் உளவு பட்டியலில் சேர்க்கப்பட்ட காலம் மிகவும் முக்கியமானது. அதற்கு சில மாதங்களுக்கு முன், இந்தியா பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவியது.

2019ஆம் ஆண்டு பிப்ரவர் மாதம் 26ஆம் தேதி, பாகிஸ்தானின் பாலா கோட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததாக இந்தியா அறிவித்தது. அதற்கு மறுநாளே பாகிஸ்தான் விமானம் இந்திய வான் வெளியில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகள் தலையிட்டு இருநாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை தணிக்க முயற்சி மேற்கொள்ளும் அளவிற்கு நிலைமை தீவிரமாக இருந்தது. இந்த சமயத்தில்தான் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தி வயர் கூறுகின்றது.

இந்நிலையில், பெகசிஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி யாரையும் நாங்கள் உளவு பார்க்கவில்லை என்று இந்திய அரசு மறுத்துள்ளது.

ஈராக் அதிபர் பர்ஹம் சாலியின் தொலைபேசி எண்,  உளவு பார்த்ததாக கருதப்படும் பட்டியில், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சிலரின் தொலைபேசி எண்களோடு இரண்டு இடங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக தி வயர் கூறுகின்றது. ஆனால், அந்த இரண்டு நாடுகளும், இதுகுறித்து விளக்கமளிக்க மறுத்துள்ளன.

தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமஃபோசாவின் தொலைபேசி எண், உளவு பட்டியலில், ருவாண்டா நாட்டைச் சேர்ந்தவர்களின் தொலைபேசி எண்களோடு இணைக்கப்பட்டுள்ளதாக தி வயர் கூறுகின்றது. ஆனால், பெகசிஸ் ஸ்வைவேர் மென்பொருளை நாங்கள் வாங்கவில்லை என்று ருவாண்டா அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. அத்துடன் ருவாண்டாவுடன் பிற நாட்டிற்கு பகையை ஏற்படுத்த திட்டமிட்ட இதுபோன்ற பொய் செய்திகள் பரப்பப்படுவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பல நாடுகளை சேர்ந்த முன்னாள் அதிபர்களின் தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் விசாரணையில் அதை ஆதரப்பூர்வமாக உறுதி செய்ய முடியவில்லை என்றும் இந்த புலன் விசாரணையை நடத்திய பத்திரிகை நிறுவனங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

உளவு பார்க்கப்பட்ட மன்னரின் மகள் – உதவி செய்ததா இந்திய அரசு?

 

2018 பிப்ரவரி மாதத்தின் இறுதிப் பகுதி. ஓமன் நாட்டின் கடற்கரையில் இருந்து  நோஸ்ட்ரோமோ என்ற கப்பல் புறப்படுகிறது. அக்கப்பலில், சுதந்திரம் பெற்றுவிட்ட நம்பிக்கைக் கொண்டு, 8 நாட்கள் பயணத்தை எதிர்நோக்கி பயணிக்கிறார் ஷேகா லத்தீஃபா.

துபாய் நாட்டை விட்டு தப்பிய அந்நாட்டு மன்னரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரசீத் அல் மக்குட்டோமின் மகளான லத்தீஃபா, ஓமனில் இருந்து கடல்வழியாக பயணித்து கோவா வந்தடைந்து, பின்னர் அங்கிருந்து விமானத்தில் அமெரிக்க செல்லவும், அங்கு அடைக்கலம் கோரவும் திட்டமிட்டிருந்தார்.

2018 மார்ச் 4 ஆம் தேதி அரபிக் கடலில், இந்திய கடல் எல்லையில் இருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில், சர்வதேச கடல் பகுதியில் கப்பல் வந்து கொண்டு இருந்த போது, கப்பலை சுற்றி வளைத்த இந்திய கமாண்டோ படையினர் லத்தீஃபாவை கைது செய்தனர்.

மும்பை அழைத்து வரப்பட்ட லத்தீஃபா, அங்கு அவரை அழைத்து செல்ல காத்திருந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சிறப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இந்திய அதிகாரிகள் அவரை ஒப்படைக்கும் முன்பாக அவர் சொன்ன கடைசி வார்த்தை, “என்னை இங்கேயே சுட்டு வீழ்த்திவிடுங்கள், மீண்டும் என் நாட்டிற்கு அழைத்து செல்லாதீர்கள்”. என்று தெரிவித்தார்.

பிரிட்டனில் வசித்துவரும் மூத்த சகோதரி சாம்சாவுடன் சேர்ந்துகொள்ளலாம் என்று 2002 ஆம் ஆண்டு முதல்முறையாக முயன்ற லத்தீஃபாவின் திட்டம் முறியடிக்கப்பட்டு, அவர் மீண்டும் நாடு கடத்தப்பட்டு, மூன்று ஆண்டுகளக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் அவர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்குதலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

முதல்முறையாக தப்பிக்க முயன்ற திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் முறையாக 2018 ஆம் ஆண்டு கவனமாக திட்டமிட்டார். இம்முறை அவரது நெருங்கிய நண்பரும் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருமான பின்லாந்தைச் சேர்ந்த டின்னா ஜௌஹியானெனுடன் இணைந்து தப்பிக்க லத்திஃபா திட்டமிட்டார். இவர்களுக்கு உதவுவதற்காக டின்னா ஜௌஹியானெனின் நண்பர்களான பிரான்சைச் சேர்ந்த ஹெர்வி ஜாபர்ட் மற்றும் சக பயிற்சியாளரான கிறிஸ்டியன் எலாம்போ உதவ முன்வந்தார்.

தப்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 40 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்ட லத்தீஃபா, “இந்த காணொளியை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், ஒன்று நான் இறந்திருப்பேன் அல்லது மோசமான சூழ்நிலையில் இருக்கிறேன்” என பேசியிருந்தார்.

முதல் முறை தப்பிக்கும் திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், இந்த முறை சிக்கிக்கொள்ளக் கூடாது என மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறார். அதன்படி பிப்ரவரி 24, 2018 ஆம் ஆண்டு, துபாயில் இருந்து வெளியேறியவர், தாங்கள் கண்காணிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தங்கள் செல்போன்களை ஒரு விடுதியின் கழிவறையில் வீசிவிட்டு செல்கின்றனர்.

கண்காணிக்க எதுவும் இல்லை, இனி சுதந்திரமான வாழ்க்கை என்ற கனவோடு கடலில் பயணித்த லத்தீஃப்பா, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கண்காணிக்க முடியாது என நினைத்த லத்தீஃபா கண்காணிக்கப்பட்டு, கைது செய்ய நேர்ந்தது எப்படி என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் கனடாவின் டொராண்டோ ஆய்வகத்தின் முடிவுகள் உண்மையை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நீதித்துறையினர், சமூக செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்தவர்கள் சட்டவிரோதாமாக வேவு பார்க்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 தொலைபேசி எண்களை கொண்ட பட்டியல், இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குருப் என்ற நிறுவனத்திடமிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கு கிடைத்தது. அந்த நிறுவனம், ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புடன் இணைந்து, உலக அளவில் புகழ்பெற்ற 17 பத்திரிகை நிறுவனங்களுடன் அந்த தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டது.

இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட அந்த 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலன் விசாரணையில், அந்த தொலைபேசி எண்கள் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த எண்களுக்குச் சொந்தமான நபர்களை தொடர்புகொண்டு அதில் சுமார் 30 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், ஊடக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில், என்.எஸ்.ஓ குருப் நிறுவனத்திலிருந்த கசிந்த அந்த 50,000 தொலைபேசி எண்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒட்டு கேட்பதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.

லத்தீஃபா அவரது செல்போனை வீசிவிட்டு வந்த பிறகு, அவரது தாயார் மற்றும் நண்பர்களுடன் மின்னஞ்சல், வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக தொடர்புகொள்ள இரண்டு செல்போன்களை பயன்படுத்தியிருந்தார்.

இந்த செல்போன்களை பயன்படுத்தி லத்தீஃபா  தொடர்பு கொண்ட நபர்களின் செல்போன்களில் பெகசிஸ் உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது. அவர்கள் செல்போன் மூல்ம கிடைத்த தகவல்களை வைத்து லத்தீஃபா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

இதுவரை லத்தீஃப்பாவை கைது செய்து அவர் நாட்டிற்கு அனுப்பி வைத்தது தொடர்பாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. லத்தீஃபாவை ஐக்கிய அரபு அமீரகதத்திற்கு திருப்பி அனுப்பியதற்கு பிரதிபலனாக, அதே ஆண்டில், அமீரகத்தில் இருந்த பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரை அந்நாடு இந்தியாவுக்கு நாடு கடத்தியது என மைக்கேலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்கியதில் நடைபெற்றதா கூறப்படும் முறைகேட்டில் தொடர்புடைய வழக்கில், இந்திய அரசால் கிறிஸ்டியன் மைக்கேல் தேடப்பட்டு வந்தார். இவருக்கு காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பிருப்பதாக பாஜக அரசு தீவிரமாக நம்புகிறது.

லத்தீஃபா மற்றும் அவரது நெருங்கிய வட்டம் கண்காணிக்கப்பட்டி இருக்கிறது என்பதன் மூலம், என்.எஸ்.ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளராக ஐக்கிய அரபு அமீரகம் இருந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில், வளைகுடா நாடுகளளை சேர்ந்த 6 எண்கள் உளவு பார்க்கப்பட்டோர் என்று கருதப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு எண்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தது எனவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இதுவரை, ஐக்கிய அரபு அமீரகம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில், துபாய் மன்னருக்கு தொடர்புடையவர்களில் லத்தீஃபா மட்டுமல்லாது, மன்னரிடமிருந்து பிரிந்து இங்கிலாந்து தப்பிச் சென்ற அவரது மனைவி ஹாயா பிண்ட் ஹுசைன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இருப்பவர்களிடம், இது குறித்து கேட்கப்பட்டதற்கு அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

பெகசிஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது தொடர்பான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அரசர் சார்பாக, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் தனிப்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதேவேளையில், லத்தீஃபாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனமான டெய்லர் வெஸ்சிங்ஸ், ஊடகங்களில் லத்தீஃபா குறித்து பேசுவதை தவிர்க்குமாறு, அவரின் நண்பர்கள் மற்றும் வாதிடும் குழுக்களுக்கு கடிதம் அளித்துள்ளது.

”நான் விரும்பும் இடத்தில் பயணம் செய்யலாம். என் வாழ்க்கையை அமைதியாக வாழ முடியும் என்று நம்புகிறேன்” என லத்தீஃபா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பெகசிஸ் திட்டம் தொடர்பாக லத்தீஃபாவின் ஊடக தொடர்பாளரிடம் கேட்ட போது, “அவர் தொலைபேசி அல்லது வீடியோ வழியாக நேர்காணல் அளிக்க மறுத்துவிட்டார். அவர் ஊடக கேள்விகளைப் படித்துள்ளார். ஆனால், கடந்த காலங்கள் குறித்து பேச மறுத்து விட்டார்” என தெரிவித்தார்.

லத்தீஃபாவின் கடைசி புகைப்படம் கடந்த மாதம் அவரது நண்பரால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. ”லத்தீஃபாவுடன் ஐரோப்பிய சுற்றுலா. நாங்கள் கொண்டாடத்தில் இருக்கிறோம்” என அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

தனியுரிமையை மீறிய கண்காணிப்பு – பெண்களின் உடல் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சமம்

உலகையே உலுக்கிகொண்டிருக்கும் பெகசிஸ் ஸ்பைவேர்  பற்றிய குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு நாளும் புதிய பரிமாணத்தில்  வெளிவந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவில் உள்ள 60க்கும் மேற்பட்ட பெண்களின்  கைப்பேசிகளை  பெகசிஸ் ஸ்பைவேர்  மூலம் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த இல்லத்தரசிகள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், அரசு பணியில் உயர் பதவியில் உள்ள  அதிகாரிகள் என 60க்கும் மேற்பட்ட பெண்களின் தொலைப்பேசி எண்களை பெகசிஸ் ஸ்பைவேர்  மூலம் இந்திய உளவு நிறுவனம் கண்காணி்க்க திட்டமிட்டிருக்கலாம் என தி வயர்  இணையதளத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. அந்த குறிப்பிட்ட பெண்களின் பெயர் விவரங்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்த நிலையில், சிலரின்  கோரிக்கையை ஏற்று அவர்களின் பெயர்களை தி வயர் நிறுவனம் வெளி்யிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் இந்த பெகசிஸ் ஸ்பைவேர் அரசியல் மற்றும் இராஜதந்திர  விவாகரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பைவேரின் தாக்கத்தினால் இந்தியாவிலுள்ள பல பெண்களின்  தனியுரிமையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளை தொலைவிலிருந்தே ஹேக் செய்யலாம். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நபரின்  கைப்பேசியில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், மின்னஞ்சல், பயனாளர் செல்லும் இடம் போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்க முடியும். அத்துடன் மறையாக்கம் செய்யப்பட்ட மேசேஜ்களை கூட பெகசிஸ் மூலம் படிக்கலாம். மேலும் ஸ்பைவேர்  இருக்கும் ஒரு கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோஃபோன் ஹேக்கர்களால் இயக்கிய தனி்ப்பட்ட நபரின் அந்தரங்களை பதிவு செய்ய முடியும். இது குறித்த  நடந்த தடயவியல் சோதனைகளில் தரவுத்தளத்தில் உள்ள எண்களுடன் தொடர்புடைய குறைந்தது 37 தொலைபேசிகளாவது இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகசிஸின் அறிகுறிகளைக் காட்டியுள்ளன. இவர்களில் பத்து பேர் இந்தியாவை  சேர்ந்தவர்கள், அவர்களில் இருவர் பெண்கள்.

எனது கைப்பேசி என்னில் ஒரு அங்கம்

சில வாரங்களுக்கு முன்பு, தி வயர்  மினல் கேட்லிங் என்ற பெண்ணை தொடர்பு கொண்டு. அவரின்  கைப்பேசி பெகசிஸ் ஸ்பைவேரின் தாக்குதலுக்குள்ளாகி இருக்கறது என்ற தகவலை தெரிவித்தபோது  அவரின் பதட்டத்தை உணர முடிந்தாக தி வயர் கூறியுள்ளது. நாற்பத்து எட்டு வயதான  அந்த இல்லதரசியின் அச்சம், அவரின் தனியுரிமை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளால் சூழ்ந்திருந்தது. எனது கைப்பேசி என் உடலின் ஒரு அங்கம் போன்றது, என் படுக்கை அறை  உட்பட, நான் அதை எல்லா இடங்களுக்கும் எடுத்து செல்வேன்,  என்று மினல் கூறியுள்ளார்.

அவரது கணவர், நாக்பூரில் நன்கு அறியப்பட்ட குற்றவியல் வழக்கறிஞரான சுரேந்திர காட்லிங், எல்கர் பரிஷத் வழக்கில் 2018 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பெகசிஸ் திட்டம் தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான ஆர்சனல் கன்சல்டிங் மூலம், மினால் தனது கணவரின் மடிக்கணினியும் கண்காணிக்கப்பட்டிருந்ததாக அறிந்துள்ளார் . “இது எல்லா தரப்பிலிருந்தும்  குண்டுவெடிப்பு  நிகழும் என்ற அச்சத்தை போன்றது. ஒவ்வொரு திசையிலிருந்தும் எங்கள் தரவுகளையும் வாழ்க்கையையும் கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ”என்று அவர் கூறியுள்ளார்.

பெகசிஸ் குறித்து கசிந்த தரவுத்தளத்திலுள்ள தகவலின்படி,  2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கட்லிங்கின் இணை வழக்கறிஞரான நிஹால்சிங் ரத்தோட்டும், இலக்காக குறிவைக்கபட்டிருந்தை தெளிவாக தெரிவிக்கின்றது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அவரின் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி ஷாலினி, “எனது கணவரின் வேலையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே, நான் இந்த “பைத்தியக்காரத்தனத்திற்கு” இழுத்துச் செல்லப்பட்டுள்ளேன். யாராவது எல்லா இடங்களிலும் எங்களைப் பின்தொடர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் என்னை மிகவும் அச்சத்திற்குள்ளாகிறது” என்று கூறியுள்ளார்.

கசிந்த தரவுத்தளத்தின்படி, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயி்ன் மீது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்த, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் பெண்  ஊழியர்  மற்றும் அவரின் குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் கைப்பேசி எண்களையும் கண்காணிக்க, என்எஸ்ஓ குழுமத்திடம்  இருந்து பெகசிஸை ஒரு இந்திய வாடிக்கையாளர்  பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் தி வயர் அவரை  சந்தித்தபோது, அவர் மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். பெகசிஸ் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், அவரை  மேலும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும்.

பெகசிஸ் உளவு மென்பொருளால்  பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலுள்ள பழங்குடியினர் உரிமை ஆர்வலர் சோனி சோரி, தனது சொந்த வாழ்க்கையை விட, சத்தீஸ்கரிலுள்ள பஸ்தார் பிராந்தியத்தில் பாதுகாப்பு படையினரால் சட்டரீதியாக அல்லது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மற்றும்  அவர்களின் குடும்பங்களுக்காவும் கவலை கொள்கிறார். “எப்போதுமே மோதல்  மற்றும் குழப்பம் சூழ்ந்திருக்கும் பிராந்தியத்தில், அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்கும் ஒரு நிலையில், இத்தகைய கண்காணிப்பு ஒரு ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்களை களத்தில் சந்திப்பதே எனது வேலை; சிலர் என்னுடன் பல மாதங்கள் தங்குகிறார்கள். இதுபோன்ற கண்காணிப்பு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை  எந்தளவிற்கு பாதிக்கும் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என்று சோரி கூறியுள்ளார்.

பெகசிஸின் விபரீத தன்மை என்பது வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் போன்ற செயலிகளின் மூலம் நடைபெறும் உரையாடல்களைக் கூட கேட்கக்கூடிய ஒன்று. அதைவிட கவலை தரக்கூடிய விஷயம், கைப்பேசியின்   கிட்டத்தட்ட  மொத்த கட்டுப்பாட்டையும் தன்வசம் கொண்டு வரும் திறன் படைத்தது என்பது தான், பட்டியலில் உள்ள அனைவரையும் கவலையடைய செய்துள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக  பெண்களின் விஷயத்தில் தொழில்நுட்பம்,  ஒருபோதும் நடுநிலை வகிப்பதில்லை.

கடந்த மாதத்தில் தி வயர் நேர்காணல் செய்த பட்டியலில் உள்ள பெரும்பாலான பெண்கள், பெகசிஸ் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய விதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று  எனவும், தங்கள் தனிப்பட்ட உரிமையை மீறியதாகவும்  உணர்ந்துள்ளனர். கண்காணிப்புக்கு உள்ளான ஒருவர்  அந்த சமயத்தில் மைனராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இல்லாத டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிருந்தா பண்டாரி, இந்த வகையான கண்காணிப்பு வெறும் தரவு மீறல்களுக்கும் மேலானது என்றும்,  “இது உண்மையில் ஒரு உடல் ரீதியான அத்து மீறல்,” என்று தி வயரிடம்  கூறியுள்ளார். இது குறித்து 2017  ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றில், உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், தனி மனித சுதந்திரம் என்பது மனது மற்றும் உடலின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உள்ளடக்கியது.  தகவல், தனியுரிமைக்கு மட்டுமானது இல்லை என்று அந்த தீர்ப்பின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஸ்க்ரோல் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில், கண்காணிப்பு அல்லது  ஹேக்கிங் குறித்து அவர் வரையறுக்கும்போது, பெகசிஸ் ஸ்பைவேரை  பயன்படுத்துவது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு   69ன் கீழ் சட்டப்படி அனுமதிக்கப்பட்டவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டது. எந்த விதமான ஒட்டுகேட்பும், தேசிய பாதுகாப்பு, பொது அமைதியை நிலைநாட்டல், குற்றச்செயலை தடுப்பது போன்ற பொது அவசரம் அல்லது பொதுமக்களின் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சட்டப் பிரிவு 69ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பிருந்தா பண்டாரி கூறியுள்ளார்.

“ஊடகவியலாளர்கள், நீதிபதி, பாலியல் துன்புறுத்தல் குறித்த  புகார் செய்தவரின் குடும்பத்தினர் போன்றவர்களை  குறிவைத்து  ஹேக் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இவர்களால்  பொது பாதுகாப்பிற்கு   எதேனும் பிரச்சனை  ஏற்படும் என்று அரசு கருதுவதற்கு  என்ன நோக்கம் உள்ளது? நீங்கள் அவர்களின் வேலையை சமரசம் செய்ய வைக்கிறீர்கள்.  அரசாங்கத்தை குறித்து விமர்சிக்கும் அனைவரையும் நீங்கள் அச்சுறுத்துகிறீர்கள். இது மிகவும் கடுமையானது, ”என்று பண்டாரி தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தற்போது தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சூழ்நிலையில், டிஜிட்டல் கண்காணிப்பை  செய்யும்போது, பாலினம் குறித்த முக்கியத்துவம் \ ஏன் அவசியம்? என்பதை பல டிஜிட்டல் உரிமை அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். இந்த விஷயத்தை வலியுறுத்தி, டாக்டர் அஞ்சா கோவாக்ஸ், தனது பாலின கண்காணிப்பு இணையதளத்தில் “பாலின பேதம் இன்றி  நடக்கும் கண்காணிப்பின் மூலம் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கத்தை, நாம் வீட்டிற்கு கொண்டு வர முடியும். உண்மையில், பெண்களைக் கண்காணிப்பது என்பது நம் சமுதாயத்தில் மற்ற இடங்களைப் போலவே நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.  அனைத்து சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த பெண்கள் இவ்வகை கண்காணிப்புகளை எதிர்கொண்டாலும், அவை இடத்திற்கு ஏற்ப வித்தியாசமாக பாதித்தாலும் ,அது அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு “டிஜிட்டல் இந்தியா” முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்தியாவில் 95% இணைய நுகர்வு, மொபைல் போன்கள் மூலமாகவே நடக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் மொபைல் போன்களை சார்ந்திருப்பது  வெளிப்படையாக அதிகரித்துள்ளது.

ஒரு கேஜெட்டை (Gadget) ஒரு தனி நபருக்கு எதிராக ஒரு “ஆயுதமாக” பயன்படுத்தும்போது, தொழில்நுட்ப வழக்கறிஞரும், SFLC.in என்ற சட்ட சேவை அமைப்பின் நிறுவனருமான மிஷி சவுத்ரி கூறுகையில்,  “நீங்கள் ஒரு பாறைக்கும், கடினமான இடத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார். “டேட்டிங் பயன்பாடுகள் முதல், மாதாந்திர டிராக்கர், ஆன்லைன் வங்கி வரை அனைத்தும், மெதுவாக நம் கைப்பேசிகளில் நுழைந்துள்ளன. இவை அனைத்தையும் ஹேக்கர்களால் அணுக முடிந்தால்,  எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்று சவுத்ரி கூறுகிறார்.

உலகெங்கிலும் கடந்த வாரம், பெகசிஸ்  கண்காணிப்பில் தொடர்ச்சியான சிலிர்க்கும் கதைகள் வெளிவந்தபோது, இந்த ஸ்பைவேர் பயனர்களை ஆதரிப்பவர்களிடமிருந்து வந்த முதல் பதில்களில் ஒன்று, “மறைக்க எதுவும் இல்லை” மக்கள் கவலைப்படக்கூடாது. இது அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது.  இந்த வாதம் “மக்கள் மறைக்க விரும்பும் தகவல்களைப் பற்றி தவறான தார்மீக தீர்ப்பை  உணர்த்துகிறது”  என்று, தரவு தனியுரிமை குறித்து தொடர்ந்து எழுதி வரும், பண்டாரி மற்றும் ரேணுகா சானே ஆகியோர் 2017 இல்  லைவ்மின்டிற்கான ஒரு கட்டுரையில் வாதிட்டுள்ளனர்.

“மறைக்க ஒன்றுமில்லை” என்ற வாதம் தனியுரிமையை ரகசியத்துடன் தவறாக சமன் செய்கிறது” என்று இந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவை தனித்துவமான கருத்துகளாக இருந்தாலும்,  “தனியுரிமை என்பது  ஒருவர் தன்னை குறித்த தகவல்களைப் பகிர்வதை தடுத்து நிறுத்துவதற்கான தேர்வைப் பயன்படுத்துவதாகும்”. அது  மற்றவர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. மறுபுறம், “ரகசியம் என்பது   மக்களுக்குத் தெரிந்துகொள்ள உரிமை உள்ள தகவல்களைத் தடுத்து நிறுத்துவதாகும்”என்று பண்டாரி மற்றும் சானே குறிப்பிட்டுள்ளனர்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

ரகசியமாக சேர்க்கப்பட்ட ஆவணங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அமெரிக்க நிறுவனம்

 

2021 பிப்ரவரி மாதம், சமூக செயல்பாட்டாளர் ரோனா வில்சனின் கணினியை, உளவு மென்பொருளைப் பயன்படுத்தி ஹேக் செய்து, அதில் சில கடிதங்களை அவர் எழுதியது போல சேர்க்கப்பட்டுள்ளது என்று, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டிஜிட்டல் ஆய்வு நிறுவனமான அர்செனல் கன்சல்டிங் நிறுவனம் கண்டறிந்தது.  இக்கடிதங்களைதான் புனே காவல்துறையும் தேசிய புலனாய்வு முகமையும் பீமா கொரேகான் வழக்கில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முதன்மை ஆதாரமாக பயன்படுத்தியிருந்தன.

அதைத்தொடர்ந்து, ஏப்ரல் மாதம் மேலும் 22 கடிதங்கள் வில்சனின் மடிக்கணினியில், உளவு மென்பொருள் வழியாக புகுத்தப்பட்டதாக ஆதாரங்களை அர்செனல் நிறுவனம் வெளியிட்டது.

பீமா கோரேகான் வன்முறை வழக்கு தொடர்பான பொய்யான ஆதாரங்களை புகுத்துவதற்காக, 53 வயதான வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கின் கணினியும் ஹேக் செய்யப்பட்டதாக அர்செனல் கண்டுபிடித்தது. நெட்வயர் என்ற பெயரிலான உளவு மென்பொருள், சுரேந்திர காட்லிங் கணினியில் செலுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகள் வேவுப்பார்க்கப்பட்டுள்ளது.

கேட்லிங், வில்சன் ஆகிய இருவரும் 2018-ல் கைது செய்யப்பட்டனர். அர்செனல் கன்சல்டிங் இருவரின் கணினிகளின் மின்னணு நகல்களையும், மின்னஞ்சல் கணக்குகளையும் அவர்களின் வழக்கறிஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆய்வு செய்தது.

ஏப்ரல் மாதம் இதுதொடர்பாக அர்செனல் கன்சல்டிங் வெளியிட்ட அறிக்கையில், வில்சனின் மடிக்கணினியில் உள்ள மறைக்கப்பட்ட கோப்புறையில் (Hidden Folder) ஆவணங்களை புகுத்த, இந்த மென்பொருள்  பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்களின் கூட்டங்கள் தொடர்பான தரவுகள், மாவோயிஸ்ட் தலைவர்களுடன் நடைபெற்றதாக கூறப்படும் கடிதங்கள் மற்றும் அவர்களிடம் பணம் பெற்றது பற்றிய தகவல்கள் ஆகியவை தொடர்பான கோப்புகள் வில்சனின் மடிக்கணினியில் புகுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஜூலை மாதம் அர்செனல் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், காட்லிங் மற்றும் வில்சனின் கணினிகளை குறிவைக்க பயன்படுத்தப்படும் மின்ணணு முறைகள் குறித்து கூடுதல் தகவல்கள் வெளிவந்தன.  இந்த இரண்டு விவகாரத்திலும், உளவு மென்பொருளை ஏவிய ஹேக்கர் ஒரே மாதிரியான மால்வேரையே (Malware) பயன்படுத்தியிருக்கிறார்.  இருவரும் மின்னஞ்சல் வழியாகவே குறிவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஜூலை 2017-ல், 20 நிமிட இடைவெளியில் இரண்டு பேரின் கணினிகளிலும் ஹேக்கர் அடுத்தடுத்து உள்நுழைந்ததாக அர்செனல் கன்சல்டிங்கின் கூறுகிறது. அப்போதுதான் மாவோயிஸ்ட்களின் நிதியுதவி குறித்த ஆவணங்கள் காட்லிங் மற்றும் வில்சனின் கணினிகளில் புகுத்தப்பட்டிருப்பதாகவும் அர்செனல் கூறுகிறது.

இதற்கு முன்னர், பிப்ரவரி 2016-ல் கேட்லிங்கிற்கு மால்வேர் நிரப்பப்பட்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மேலும் 14 பேருக்கும் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இருவர் பின்னர் கேட்லிங்கினுடன் பீமா கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்களில் ஒருவர் 84 வயதான பழங்குடியினர் உரிமை ஆர்வலர் ஸ்டான் சாமி. அண்மையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

இந்த மால்வேர் குறித்து வாஷிங்டன் போஸ்ட்  கூறும்போது, மால்வேர்களுடன் அனுப்பப்படும் மின்னஞ்சலைத் திறந்தாலே போதும், அவர்களின் கணினி மால்வேரின் கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டிருக்கும் வந்துவிடும் என்று குறிப்பிடுகிறது.

அவ்வாறே ரோனா வில்சனுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருந்த, “அனதர் விக்டரி” (anothervictory.rar) என்ற இணைப்பை (File), அவர் திறக்க முற்பட்டபோது, ஹேக்கர் அனுப்பிய மால்வேர், அவருடைய கணினிக்குள் நுழைந்திருக்கிறது.

2016, நவம்பர் 3 ஆம் தேதி, ‘கேபேக்கப்’ (kbackup) என்ற பெயரில், ஒரு ஃபோல்டரை (Folder) உருவாக்கியுள்ள ஹேக்கர், பிறகு அதற்கு ‘ஆர்பேக்கப்’ (Rbackup) என்று பெயர் மாற்றம் செய்து, அதை கண்டுபிடிக்க முடியாத வகையில் கணினிக்குள் மறைத்து வைத்துள்ளதாக அர்சனலின் அறிக்கை தெரிவிக்கிறது.

ரோனா வில்சனின் கம்ப்யூட்டரிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு ஆவணத்தில், “மற்றொரு, ராஜீவ் காந்தி கொலையை போன்றதொரு நிகழ்வு” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பாக, ரோனா வில்சன் இந்த வழக்கில் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ள மற்ற நபர்களான சுரேந்திரா கட்லிங், மகேஷ் ரவுத், ஷோமா சென், சுதீர் தாவாலே, அருண் ஃபெரேரா, வெர்னான் கொன்சால்வஸ், சுதா பரத்வாஜ் மற்றும் வரவர ராவ் உட்பட 15 பேருடன், சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தங்களுக்கு எதிராக சமர்பிக்கப்பட்ட முதன்மை மின்னணு ஆதாரங்கள் பொய்யாக புனையப்பட்டிருப்பதால், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி ரோனா வில்சன், பிப்ரவரி 10 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தற்போதும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மால்வேர் மற்றும் டிஜிட்டல் தடயவியல் தொடர்பான மூன்று வல்லுநர்கள் தி வாஷிங்டன் போஸ்ட்டிட் பத்திரிகையிடம், அர்செனலின் அறிக்கை குறித்து கூறுகையில், “இந்த ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானது. கேட்லிங் மற்றும் வில்சனின் கணினிகளை குறிவைத்து மால்வேர்களை புகுத்தியது ஒரே நபர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்று உறுதிப்படக் கூறியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம், ஐஐடி பேராசிரியரும் பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருப்பவருமான, ஆனந்த் டெல்டும்ப்டே பிணை கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு, பதில் மனு தாக்கல் செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை, (என்ஐஏ), ரோனா வில்சன் மடிக்கணிணியில் ஒரு கடிதம் இருந்ததாகவும், அந்தக் கடிதத்தில், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரிசில் நடந்த மனித உரிமை மாநாட்டில் ஆனந்த் டெல்டும்ப்டே கலந்து கொண்டது, தலித் பிரச்சனைகள் தொடர்பாக டெல்டும்ப்டே பேசியது, உள்நாட்டில் எரிந்து கொண்டிருந்த பிரச்சனையிலிருந்து விலகுவதற்காகத்தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source; Washington post, scroll.in, thewire.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

நிக்சனை வீழ்த்திய வாட்டர்கேட் ஊழல் – பெகசிஸ் விவகாரத்தில் இந்தியாவிலும் நடக்குமா?

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் வாட்டர்கேட் ஊழலைப் போல தோற்றமளிக்கிறது. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனை பதவி விலகக் கோரி, போர் கொடியேந்திய அமெரிக்காவை போல, பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பானவர்கள் பதவி விலகக் கோர இந்தியாவால் முடியுமா என்பது பெரும் கேள்வியாக முன்னிற்கிறது.

ஒன்று, நிக்சனை பதவி விலக கட்டாயப்படுத்தியது போல, இந்திய அரசாங்க கட்டமைப்பில் உட்சப்பட்ச பதவியில் இருக்கும் ஒரு நபரை, ஒரு குற்றச்சாட்டுக்கு உட்படுத்தி பதவி விலக கட்டாயப்படுத்தும் படியான சட்ட வழிமுறைகள் இந்தியாவில் இல்லை.

இந்திய அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர் என்ற முறையில், மக்களவையின் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே, பிரதமரை ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியும். இப்போது எழும் ஒரு பெருங்கேள்வி என்னவென்றால், பாஜக இரு அவைகளிலும் மிகப்பெரிய பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

அதேநேரம், ஜனநாயக நாடுகள் நிறைந்த இந்த உலகில் மிக சக்திவாய்ந்த பதவியில் இருப்பவரான நிக்சனும் தனக்கு கீழ் இயங்கும் வெள்ளை மாளிக்கையின் முழு பலத்தையும், தனக்கு எதிரான ஆதாரங்களை எதிர்த்துப் போராட பயன்படுத்தினார். ஆனால், அமெரிக்காவின் ஊடகங்கள், நீதித்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அவைகள் (நாடாளுமன்றம், மாகாண சட்டப்பேரவைகள்) ஒன்றிணைந்து தன் கடமையை செய்ய, நிக்சன் பதிவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர்களின் கூட்டு முயற்சி வெற்றி பெற்றது.

இப்போது இந்தியா எதிர்கொள்ளும் கேள்வி இதுதான்; இந்தியாவின் ஊடகங்கள், நீதித்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அவைகள் தங்களின் பணியை செய்திடுமா?

பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற ஒட்டுக்கேட்பு விவகாரங்களுக்கு புதியவரல்ல. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோதே இதுபோன்றதொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், இவ்விவகாரத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட விளக்கமும் வெட்கக்கேடான செயல்.

பெகசிஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தியது தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சையானது, வாட்டர்கேட் விவகாரத்தைப் போன்றதுதான். குறிப்பாக சொல்வதென்றால், வாட்டர்கேட்  ஒட்டுக்கேட்பின் ஒரு விரிவுப்படுத்தப்பட்ட முறையாக இது உள்ளது. இதுதொடர்பான எல்லா தரவுகளையும் கணக்கில் கொண்டால், ஏராளமான ஊடகவியலாளர்கள், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் உட்பட பல அரசியல்வாதிகள், நீதித்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் சமுக செயல்பாட்டாளர்கள் இந்த ஒட்டுக்கேட்பில் இலக்காகியுள்ளனர்.

ரிச்சர்ட் நிக்சன்      நன்றி : AP

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைதான் இரண்டு விவகாரங்களையும் (வாட்டர் கேட் மற்றும் பெகசிஸ்) விசாரித்தது. ஆனால், வாட்டர்கேட் விவகாரத்தில் வாஷிங்டன் போஸ்ட் தனி நிறுவனமாக செய்ததை, பெகசிஸ் விவகாரத்தில் உலகெங்கிலும் உள்ள ஊடக நிறுவனங்களுடன் இணைந்து, அக்குழுவின் ஒரு பகுதியாக செயலாற்றி இருக்கிறது.

வாட்டர்கேட் விவகாரத்தில், வாஷிங்டன் நகரில் உள்ள வாட்டர்கேட் என்ற கட்டிடத்தில் உள்ள ஜனநாயக தேசியக் குழு கட்சியின் (டிஎன்சி) தலைமையகத்திற்குள் இருக்கும் தொலைபேசியை, நிக்சன் மற்றும் அவரது உதவியாளர்கள் ஒட்டுக்கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, குற்றவாளிகளென அறிவிக்கப்பட்டனர்.

ஜூன் 17, 1972 அன்று வாஷிங்டனில் உள்ள ஜனநாயக தேசியக் குழு கட்சியின் (டிஎன்சி) தலைமையகத்தில் இருந்து, சட்டத்திற்கு புறம்பாக ஒட்டுக்கேட்டதற்காக ஐந்து பேரை காவல்துறை கைது செய்ததில் இருந்து வாட்டர்கேட் ஊழலின் முக்கிய கட்டம் தொடங்கியது. இந்த ஐந்து நபர்களில் நான்கு பேர் அமெரிக்க அரசின் உளவு அமைப்பான சிஐஏவின் ஊழியர்கள். ஐந்தாவது நபர் தேர்தலில் நிக்சனுக்காக பணியாற்றும் குழுவின் ஒரு அங்கமாக இருந்தவர் .

பின்னர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரின் தலைமையகத்தை உளவு பார்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த ஆண்டு தெரியவந்தது. இதன் விளைவாக, ஒரு விரிவான பார்வை இவ்விகாரத்திற்கு தேவைப்பட்டது. மேலும், இதுதொடர்பாக விசாரிக்க எஃப்.பி.ஐக்கு (FBI) நிக்சன் உத்தரவிட்டார்.

தேர்தல் பரப்புரை முழுவதும், வாஷிங்டன் போஸ்ட் நிருபர்களான பாப் உட்வார்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டைன் ஆகியோருக்கு எஃப்.பி.ஐ துணை இயக்குனர் டபிள்யூ. மார்க் ஃபெல்ட் தகவல்களை வழங்கினார். ஆனால், அவரது பெயர் முப்பதாண்டுகள் கழித்தே பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதுவரை அவர், ‘டீப் த்ரோட்’ என்ற புனைப்பெயரிலே அழைக்கப்பட்டார்.

வாஷிங்டன் போஸ்ட்டைத் தவிர்த்து, 1972 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்களுக்கு முன்னர், இந்த ஊழல் பெரும்பாலான அமெரிக்க ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மற்றும் அவர்களின் இரண்டு கூட்டாளிகள் மீதான வழக்கு விசாரணை, நிக்சனின் இரண்டாவது பதவியேற்புக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. மீண்டும், வெள்ளை மாளிகை (நிக்சன்) இந்த ஊழல் விவகாரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வர முயன்றது. ஆனால், தலைமை நீதிபதி ஜான் ஜே.சிரிகா, தளராத உறுதிப்பாட்டுடன் வழக்கை தொடர்ந்தார்.

தண்டனை அறிவிப்பு தேதி நெருங்கியதும், அமெரிக்க செனட் சபை 1972 அதிபர் தேர்தல் பரப்புரையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. அப்போதிருந்து, நீதித்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அவைகள் இணைந்து, நிக்சனின் நிர்வாகத்தை தப்பவிடாது குறிப்பார்த்தபடி இருந்தனர். இதன் விளைவாக தொலைகாட்சிகளும் இவ்விசாரணைகளை விளம்பர இடைவேளையின்றி ஒளிபரப்பின.

இவ்விசாரணையின் முடிவில் நிக்சன் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஒட்டுக்கேட்பு, நிக்சனின் நிர்வாகத்திற்கு விருப்பமான செனட் வேட்பாளர்களுக்கு நிதியளிப்பதற்காக பணமோசடி செய்தது போன்ற குற்றங்களும் வெளிவந்தன.

வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான அலெக்சாண்டர் பி.பட்டர்ஃபீல்ட், அதிபர் அலுவலகங்களில் நடந்த அனைத்து உரையாடல்களையும் ரகசியமாக டேப்பில் பதிவு செய்ததாக தெரிவிக்கையில்தான், நிக்சன் நிர்வாகம் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. நீதிபதிகள் அந்த டேப்புகளை ஒப்படைக்க நிக்சனுக்கு உத்தரவிட்டனர். இதை முற்றாக ஏற்க மறுத்த நிக்சன், அதற்கு பதிலாக அதன் எழுத்து வடிவத்தை வழங்குவதாக கூறினார். இதனால் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்.

இவ்விவகாரங்கள் வெளிவந்து தோராயமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மே 1974 ஆம் ஆண்டு, நீதிபதிகள் கமிட்டி நிக்சன் மற்றும் அவரின் நிர்வாகத்தின் மீதான அரசியல்சார் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய தொடங்கியது. இவ்விசாரணையில் மறைக்கப்பட்ட குற்றங்கள் மொத்தமும் வெளியானதால், நிக்சன் மூன்று மாதங்களுக்குப் பிறகு தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இறுதியில், ஜனநாயகத்தை காக்கும் சட்டங்களின் துணைகொண்டும் ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்களான ஊடகங்கள், நீதித்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அவைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் துணை கொண்டும் குற்றவாளியான அமெரிக்க அதிபர் வீழ்த்தப்பட்டார்.

டெலகிராப் இந்தியா இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழிப்பெயர்ப்பு

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

கேலிக் கூத்தாக்கப்பட்ட ஜனநாயகம் – வாய் திறக்க மறுக்கும் அரசு

பெகசிஸ் எனும் உளவு மென்பொருளால், பத்து  நாடுகளைச்  சேர்ந்த அதிபர்கள்,  பத்திரிகையாளர்கள்,  செயற்பாட்டாளர்கள், நீதித்துறையினர்,  எதிர்கட்சித் தலைவர்கள்,  அரசு அதிகாரிகள்,  வழக்கறிஞர்கள்  உட்பட  பலரும் வேவுபார்க்கப்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 தொலைபேசி எண்களை கொண்ட அந்த பட்டியல், இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குருப் என்ற நிறுவனத்திலிடமிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கு கிடைத்தது. அந்த நிறுவனம், ஆம்னஸ்ட்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புடன் இணைந்து, உலக அளவில் புகழ்பெற்ற 17 பத்திரிகை நிறுவனங்களுடன் அந்த தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டன.

இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட அந்த 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலன் விசாரணையில், அந்த தொலைபேசி எண்கள் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த எண்களுக்கச் சொந்தமான நபர்களை தொடர்புகொண்டு அதில் சுமார் 30 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், ஊடக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில், என்.எஸ்.ஓ குருப் நிறுவனத்திலிருந்த கசிந்த அந்த 50,000 தொலைபேசி எண்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒட்டு கேட்பதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது குறித்து, பிரான்ஸ், ஹங்கேரி, அமெரிக்கா ஆகிய நாடுகள், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்திய அரசு மட்டும் கள்ள மெளனம் சாதித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெகசிஸ் மென்பொருளால் கண்காணிக்கப்பட்டதாக கருதப்படும் 155 நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெகசிஸ் திட்டம் என்று பெயரிடப்பட்ட இந்த புலன்விசாரணையை நடத்திய ஊடக நிறுவனங்கள், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகள் அடங்கிய பட்டியலை ஒன்றிய அரசிடம் முன்வைத்துள்ளன.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், இந்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”இந்தியா ஒரு வலிமையான ஜனநாயக நாடு, அனைத்து குடிமக்களின் தனியுரிமையையும் அடிப்படை உரிமையாக பாதுகாக்க உறுதிப்பூண்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், தனி நபரின் தகவல்கள் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம், தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக பாதுகாப்பது தான் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். நாங்கள் குடிமக்களிடத்தில் நேரடியான உரையாடல் வழியாக அனைத்தையும் தெரிவிக்க தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறோம். இருப்பினும், ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கும் கேள்விகள், எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி முன்முடிவுக்கு வரக்கூடிய ஒரு கற்பனை கதையாகும். இதில் கேள்விகளை கேட்பவர்களே, விசாரிப்பவராகவும், வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் செயல்படுகின்றனர்” என்று அந்த அறிக்கையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ”இதற்கான பதில்கள் அனைத்தும், ஏற்கனவே பொது தளத்தில் வெகு காலமாக இருப்பதே, பத்திரிகை நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் எவ்வாறு ஆய்வு மற்றும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அரசாங்க அமைப்புகளால் யாரும் வேவு பார்க்கப்படவில்லை என்பதை மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேச நலன் போன்ற முக்கிய விவகாரங்களில், மாநில மற்றும் ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று, ஒருவர் ஒட்டு கேட்கப்படலாம், அதற்கென்று பிரத்யேக விதிமுறைகள் உள்ளன. தற்போது சில குறிப்பிட்ட நபர்களை அரசு வேவு பார்த்துள்ளது என்று கூறுவதில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் உண்மையும் இல்லை. அனுமானம் மற்றும் மிகைப்படுத்துதலின் மூலமாக இந்தியாவையும் அதன் அரசாங்க அமைப்புகளையும் அவமதிக்க முயல்கின்றனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 26.07.21 அன்று மக்களவையில் பேசிய, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், அஷ்வினி வைஷ்னவ், ”கடந்த காலத்திலும், பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதில் எவ்விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

பெகசிஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, வாட்ஸ் அப் நிறுவனம், என்.எஸ்.ஒ குரூப் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தது.  இது தொடர்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, அக்டோபர் 30 ஆம் தேதி, வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைவர் வில் காத்கட், “இன்றைய தினம் பெகசிஸ் ஸ்பைவேர் எனும் உளவு மென்பொருளுக்கு எதிரான நிலைப்பாட்டை வாட்ஸ் அப் நிறுவனம் எடுக்கிறது. என்.எஸ்.ஒ நிறுவனம் பொறுப்பாக அரசாங்ககளுக்கு வேலை செய்வதாக கூறுகிறது. ஆனால், அவர்களால் வேவுப்பார்க்கப்படும் பட்டியலில், 100 க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த துஷ்பிரயோகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, காமன் வெல்த் அமைப்பின் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர், வாட்ஸ் அப் பயனாளர்கள் பெகசிஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம், தகவல்களை கோரியிருந்தார்.

கடந்த டிசம்பர் 2, 2019 அன்று, வெங்கடேஷ் நாயக்குக்கு பதிலளித்திருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இது போன்ற ஹேக்கிங்களை கண்காணிக்கும், இந்திய கணினி அவசர உதவி குழுவிடம், பெகசிஸ் ஊடுருவல் பற்றி வாட்ஸ் அப் சுட்டிக்காட்டி புகாரளித்துள்ளது என்று வெங்கடேஷ் நாயக்குக்கு அளித்த பதிலில் கூறியுள்ளது.

இதன் மூலம், பெகச்ஸ் ஸ்பைவேர் மூலம் வாட்ஸ் அப் பயனாளர்கள் உளவு பார்க்கப்பட்டதை இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இருந்தும், தற்போதைய தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர், கடந்த காலத்தில் பெகசஸால் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டதற்கான எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைவர், வில் காத்கட், ”நாங்கள் இத்தனை ஆண்டுகளாக கூறிக் கொண்டிருந்ததை, தற்போது வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. என்.எஸ்.ஒ நிறுவனத்தின் ஆபத்தான ஸ்பைவேர், உலகம் முழுவதும் பல்வேறு மனித உரிமை மீறலை செய்து வருகிறது. இந்த துஷ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

”இந்த சம்பவம் இணைய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. கைப்பேசி தான் லட்சக்கணக்கான மக்களின் முதன்மையான கணினி. அரசு மற்றும் நிறுவனங்கள், இணையத்தை பாதுகாக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். நமது பாதுகாப்பும், சுதந்திரமும் இதில் தான் அடங்கியுள்ளது.” என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ”மனித உரிமை ஆர்வலர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, இணையத்தை பாதுகாக்கவும், ஸ்பைவேரை தவறாக பயன்படுத்திய அனைவரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இவ்வேளையில் பெகசிஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எதிர்கட்சிகள் இரண்டு முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளன. ”இந்திய அரசு இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஒ நிறுவனத்திடமிருந்து பெகசிஸ் உளவு மென்பொருளை வாங்கியதா?  சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக அதை பயன்படுத்தியதா?” என்பதே அந்த கேள்விகள்.

காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி, ”அரசு பெகசிஸ் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க மறுக்கிறது. அவர்கள் எதையோ மறைக்கிறார்கள். அவர்களுக்கு மறைக்க நிறைய விஷயங்கள் உள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த விடாமல் செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி பேசுகையில், ”இந்திய அரசு தன் சொந்த நாட்டு மக்களுக்கு எதிரான ஆயுதமாக பெகசிஸை பயன்படுத்தியதா? என்ற ஒற்றை கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியின் குரல்கள் நசுக்கப்படுகின்றன.  நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா பெகசிஸ் ஸ்பைவேரை இந்தியாவுக்கு எதிராகவும் இந்திய அமைப்புகளுக்கு எதிராகவும் பயன்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியை சிதைத்துவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, ”பெகசிஸ் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த, நாடாளுமன்றம் தொடங்கிய நாள் முதல் கேட்டு வருகிறோம். ஆனால் அரசு இதில் ஆர்வம் காட்ட மறுக்கிறது” என்று கூறியுள்ளார்.

ஒன்றிய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, ”இரண்டு அவையிலும், தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர், பெகசிஸ் தொடர்பான அறிக்கையை அளித்துள்ளார். இது அவ்வளவு முக்கியமான விவகாரம் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “கொரோனா பெருந்தொற்று பரவலை இந்திய அரசு கையாண்ட விதத்துக்கும், 75% மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியதுக்கும் பிரதிபலனாக இந்திய அரசு பழிவாங்கப்படுகிறதா?  ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லை. 45 க்கும் மேற்பட்ட நாடுகள் பெகசிஸை பயன்படுத்தியும் இந்தியாவை மட்டும் குறி வைப்பது ஏன்?” என்று கேள்வியெழுப்புகிறார்.

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த செய்திகள், குறிப்பிட்ட சில நபர்களால், ஒற்றை நோக்கத்திற்காக திட்டமிட்டு பரப்பபடுகிறது. தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து இந்தியாவை உலக அரங்கில் அவமதிக்க வேண்டும். நமது தேசத்தைப் பற்றி ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்க பல கற்பிதங்களையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்,  இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்க வேண்டும் என்று இதை செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

பெகசிஸ் உளவு விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோ, இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

‘பெகசிஸை வைத்து திமுகவை உடைக்கலாம். இவ்விவகாரத்தை திமுக கையிலெடுக்க வேண்டும்.’ – திருமுருகன் காந்தி நேர்காணல்

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 தொலைபேசி எண்களை கொண்ட அந்த பட்டியல், இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ குருப் என்ற நிறுவனத்திலிடமிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கு கிடைத்தது. அந்த நிறுவனம், ஆம்னஸ்ட்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புடன் இணைந்து, உலக அளவில் புகழ்பெற்ற 17 பத்திரிகை நிறுவனங்களுடன் அந்த தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டன.

இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட அந்த 17 பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட புலன் விசாரணையில், அந்த தொலைபேசி எண்கள் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த எண்களுக்கச் சொந்தமான நபர்களை தொடர்புகொண்டு அதில் சுமார் 30 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெகசிஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருள் செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்தவகையில், ஊடக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில், என்.எஸ்.ஓ குருப் நிறுவனத்திலிருந்த கசிந்த அந்த 50,000 தொலைபேசி எண்களும் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒட்டு கேட்பதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கே.ராமகிருஷ்ணன் மற்றும் திராவிடர் கழகத்தின் பொருளாளர் குமரேசன் ஆகியோரின் தொலைபேசி எண்ககள்  பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக உளவு  பார்க்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் பட்டியலில்  இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக,  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்.

இந்த பட்டியலில் உங்களுடைய பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பான தகவல்கள் வந்தவுடன் முதலில் என்ன நினைத்தீர்கள்?

பாஜக இதுவரைக்கும் எங்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையின் பின்னணியை புரிந்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. இவையெல்லாம் ஒரு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை. இதில் மிகவும் முக்கியமான விஷயம், நாங்கள் உண்மையிலேயே பாஜகவிற்கு எதிராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இதைவிட வேறென்ன வாய்ப்பு கிடைத்து விடும்?

பாஜகவின் இந்துத்துவ மதவெறி அரசியலை எதிர்ப்பதில், மே 17 இயக்கம் முன்னிலையில் நின்று  பணிகளை செய்து வருகின்றது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. பட்டியலில் இருக்கக்கூடியவர்களையும் அப்படிதான் இதை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல செயல்பாட்டாளர்களோடு, மே17 இயக்கமும் இந்த களத்தில் இருப்பதை இந்த பட்டியலில் உறுதிப்படுத்துகிறது.

அப்படி இருக்க இவர்களுள் திருமுருகன் காந்தி என்ற ஒரு நபரை மட்டும் குறி வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இதில் நான் மட்டுமே குறி வைக்கப்பட்டு இருப்பதாக நான் நினைக்கவில்லை. பிற அமைப்புகளும் தலைவர்களும் இப்பட்டியலில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மே 17 இயக்கத்தை அவர்கள் கவனத்தில் வைத்திருப்பதற்கான காரணங்களில் ஒன்று, இந்துத்துவ மதவெறி அரசியலை நாங்கள் வெளிப்படையாக அம்பலப்படுத்துகின்றோம். தமிழ் தேசியம் தமிழர்களுக்கான அரசியலுக்கும், இந்துத்துவ அரசியலுக்கும் இடையிலே இருக்கக்கூடிய வேறுபாடுகள் எளிமையான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று பேசியது. ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என்று பேசியது. மேலும் ஆர்எஸ்எஸ் தான் எங்களது எதிரி என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறோம். பண்பாட்டு தளத்தில் மட்டுமே மே17 இயக்கம் இயங்கவில்லை.கருத்தியல் தளத்திலும் சரி அல்லது அவர்களுடைய புதிய பொருளாதாரக் கொள்கை தளத்திலும் சரி தொடர்ச்சியாக மே 17 இயக்கம் செயல்பட்டு வருகிறது.

நிச்சயமாக வலதுசாரியாக இருந்தால், பொருளாதார கொள்கை இல்லாமல் இருக்க முடியாது. வலதுசாரிகளின் பொருளாதாரக் கொள்கையை அம்பலப்படுத்தினால்,வலதுசாரிகளும் அம்பலப்பட்டு போவதோடு தனிமைப்படுத்தபடுவார்கள். ரேசன் கடைகளை பற்றி பேசியது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை கொடுத்தது. ரேஷன் கடை மூடப்படுவது அல்லது உணவு பாதுகாப்பை அவர்கள் சிதைப்பதென்பது , ஒரு பொருளாதார கொள்கை சார்ந்தது. இது பண்பாட்டு சார் திட்டமல்ல. இந்துக்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்ட திட்டமல்ல. இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் சேர்த்தே கொண்டு வரப்பட்ட திட்டம் இது. இதுபோன்ற, உலக வர்த்தக கழகத்தினுடைய ஒப்பந்தங்கள் குறித்தெல்லாம் பேசுவதை அவர்கள் தொல்லையாக இடையூறாக பார்த்திருக்கிறார்கள். இவைகள்தான் நாங்கள் குறி வைக்கப்பட்டதற்கான முக்கிய காரணிகளாக நாங்கள் பார்க்கின்றோம்.

நீங்கள் சொல்லக்கூடிய காரணத்தின் தொடர்ச்சியாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு சென்று, தமிழ்நாட்டில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், ஈழ தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக நீங்கள் பேசியது கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

நிச்சயமாக ஈழ தமிழர்கள் பிரச்சனையில் உள்ள சர்வதேச பின்னணி என்ன என்பதை மே 17 இயக்கம் தொடர்ச்சியாக பேசி வருகிறது. இனப்படுகொலையில் இலங்கை அரசு மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளுடன், கார்ப்ரேட் நிறுவனங்களும் பங்கெடுத்திருக்கிறது. ஐநாவும் சர்வதேச என்.ஜி.ஓக்களும் இதில் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும், இந்தியாவும் இதில் பெரும் பங்கெடுத்திருக்கிறது. இவற்றையெல்லாம் மே 17 இயக்கம் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கையில், ஒரு ஆபத்தான அமைப்பாக, அதாவது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் எதிர்காலத்தை பாதிக்கும் அமைப்பாக மே 17 இயக்கம் உள்ளது. இந்திய அரசிற்கு பாதிப்பா என்று பார்ப்பதைவிட, தங்களுக்கு என்ன பாதிப்பு என்று தான் பார்க்கிறார்கள்.

இந்த பட்டியலில் பாஜககாரர்கள், ஆர்எஸ்எஸ்-காரர்களையும் வேவுப் பார்த்திருக்கிறார்கள் என்றால், மோடியும் அமித்ஷாவும் தங்களுடைய அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக தங்களுக்கு சந்தேகத்திற்கிடமான உள்ளவர்கள் அனைவரையும் வேவுப் பார்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஆனால், ஒன்றிய அரசை பொறுத்த வரை, நாங்கள் பெகசிஸ் ஸ்பைவேரை உபயோகிக்கிறோம் அல்லது உபயோகிக்கவில்லை என்ற நேரடியான பதிலை இதுவரை கூறவில்லை. நடந்த விஷயங்களை குறித்து கேள்வி எழுப்பையில், நாடாளுமன்றத்தில் தகவல் தொழிற்நுட்பத்துறையின் இணையமைச்சர் ‘அப்படியான ஒன்று நடக்கவே இல்லை’ என்கிறார். அப்படி இருக்கையில், எதை வைத்து, ஒன்றிய அரசுதான் இதை செய்தது என்று சொல்கிறீர்கள்?

ஒன்றிய அரசு இதை மறுக்கவில்லை என்ற இடத்தில் இருந்துதான் இது கவனம் பெறுகிறது. உறுதியாக இதை மறுத்திருந்தால், அது வேறு விஷயம். பெகசிஸை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று இவர்கள் சொல்லவே இல்லை. இஸ்ரேலின் ஸ்பைவேரை ஒன்றிய அரசின் வெளியுறவு உளவுக்கு பயன்படுத்தினால், அத்தகவல்களை இஸ்ரேல் எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், மென்பொருட்களில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கலாம். அப்படியிருக்கையில், அவர்களுடைய மென்பொருளை நீங்கள் வாங்கினால், அவர்களுக்கும் அத்தகவல்கள் போகும்தானே?

பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், எதிர்கட்சியினர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவர்மீதும் ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பீமா கொரேகான் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, இந்த ஸ்பைவேரை உபயோகப்படுத்திருக்கிறார்கள். அந்த வழக்கில்தான், முதல்முதலாக இந்த விவகாரம் அம்பலமானது. அரசு உறுதியாக இதை பயன்படுத்தியிருக்கிறது. அதிகாரத்தின் தேவைக்காக இதை ஒன்றிய அரசு செய்திருக்கிறது.

இதில் கவலையளிக்கும் விஷயம் என்ன என்றால், இவ்விவகாரம் குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் சொல்லாமல் கடந்து போவதால், இந்த மென்பொருளை பயன்படுத்தி, பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ரோனா வில்சனுக்கு நடந்தது, யாருக்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற அச்ச நிலையை ஒன்றிய அரசு உருவாக்குகிறது. ஏனென்றால், ரோனா வில்சன் எழுதாத மின்னஞ்சலை அவர் எழுதியதாக காட்ட வேண்டும் என்று பெகசிஸ் மென்பொருளை பயன்படுத்தி, அவருடைய கணினியை ஹேக் செய்திருக்கிறார்கள். இப்படி ஜோடித்த வழக்கின் படிப்படையில் ரோனா வில்சன் மூன்று ஆண்டுகள் சிறையில் உள்ளார். பீமா கொரேகான் வழக்கு முழுவதுமே ஜோடிக்கப்பட்ட வழக்குகள்தான்.

என்னுடைய அலைபேசியில் இவர்கள் என்னென்ன தகவல்களை பதிந்தார்கள் என்று தெரியவில்லை. நாளை என்ன வழக்கில், அதை ஆதாரமாக வைப்பார்களா என்று தெரியாது. இது ஒருவகையில் அச்சுறுத்தல். ஒரு அரசால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

நாளையே என்மீது பொய்யாக வழக்கு ஜோடிக்கப்பட்டால், அதற்கு பின்னால் இந்த பெகசிஸ் ஸ்பைவேரின் பங்கு இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன். என் மீது சிபிசிஐடி விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது. அவ்விசாரணையிலும் இந்த ஸ்பைவேர் உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம்.

அதனால், இவ்விவகாரத்தில் அரசின் மௌனம் மிகமிக ஆபத்தான ஒன்று. இதற்கு பின்னால், பெரிய திட்டம் உள்ளது. 2019 தேர்தலுக்கு முன்பு இதை தீவிரமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த சமயத்தில் அந்த ஸ்பைவேரை பயன்படுத்துகிறார்கள் என்றால். 2024 தேர்தலுக்காக இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

பட்டியலில் எதிர்கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. நீதிபதிகள், நீதிமன்றத்தில் பணியாற்றியவர்கள் பெயர்களும்ம் இடம்பெற்றிருக்கின்றன. இதுகுறித்து, ப்ரெஸ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், போதுமான எதிர்வினை ஜனநாயகத்தின் பிற தூண்களிடம் இருந்தும் வந்ததாக நினைக்கிறீர்களா? நிதித்துறை, எதிர்கட்சிகள் சரியாக இவ்விவகாரத்தை கையாண்டிருக்கிறார்களா?

அடிப்படையான தனியுரிமைக்கும், அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், நீதிமன்றங்கள் தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்திருக்க வேண்டும்.  நீதித்துறையே அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அதற்காக எங்கிலும் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

எதிர்கட்சிகள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டியிருக்க வேண்டும். இதுதான் அரசியல். டிவிட்டரில் மட்டும் அரசியல் பேசுவதுதான் ராகுல் காந்தியின் வேலையா? காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், இந்த பெகசிஸை சீனாவும் பாகிஸ்தானும் பயன்படுத்தியிருக்கலாம் என்று பேசுகிறார். இங்கு நாம் மோடியை பற்றிதான் பேசியிருக்க வேண்டும். காங்கிரஸில் இருந்தே மூன்று வகையான கருத்துகள் வருகின்றன. ப.சிதம்பரம், சசி தரூர், ராகுல் காந்தி மூவரும் ஒவ்வொரு மாதிரியாக டிவீட் செய்கிறார்கள். இந்த நேரத்தில், எல்லா தரப்பு ஆட்களையும் ஒன்று திரட்டி, அனைத்து கட்சி கூட்டத்தை ஒருங்கிணைத்து, எல்லா பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

கொரோனாவால் இத்தனை உயிர்கள் போனதற்கும், விவசாயிகள் போராட்டத்திற்கும், காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. இப்போது நீங்களே தாக்கப்பட்டிருக்கிறீர்கள். இதற்கு மேல் போராட என்ன வாய்ப்பு வேண்டும் எதிர்கட்சிக்கு?

ஊடகத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, மக்களிடையே தங்கள் கருத்துகளை கொண்டு சேர்த்த பெரிய இயக்கம் திமுக. இவ்விவகாரத்தை கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது. நாளை அவர்களுக்கும் நடக்காது என்று என்ன நிச்சயம். நாளை அவர்களின் பெயரும் வெளிவரும். இதையே சாக்காக வைத்து, கட்சியை உடைத்து, கட்சிக்குள் பிளவை உண்டாக்க முடியும். திமுகவின் அடிப்படை பாதுகாப்பு பிரச்சனை இது.

உலகின் பழமையான ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய அமெரிக்காவில், எதிர்கட்சிகளை வேவுப்பார்த்ததால் அதிபர் தன் பதவியை இழக்கின்றார். இப்போது மிகப்பெரிய ஜனநாயக நாடு சொல்லப்படுகின்ற இந்தியாவில் எதிர்கட்சிகளை வேவுப்பார்த்தது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தக்கட்டமாக என்ன நடக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மோடியும் அமித் ஷாவும் தங்களது அதிகாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, அனைவரையும் சந்தேகித்து வேவுப் பார்க்கிறார்கள். அவர்களது தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸை கூட நம்ப மறுக்கிறார்கள்.

இங்குள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து, இந்த பிரச்சனை சம்பந்தமாக பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.  நீதித்துறையும், ஊடகங்களும் இதற்கு பக்க பலமாக இருப்பார்கள். எதிர்கட்சிக்குதான் ஆட்பலம் இருக்கிறது. இதை அவர்கள் முன்னெடுக்க வேண்டும். அப்படி செய்யாது போனால், எந்த வழக்கிலும் ஒருவர் கைது செய்யப்படலாம், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையடைக்கப்படலாம், அவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் அப்பட்டமாக தெரிகிறது.

நேர்காணல் : மு.அசீப்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்