Aran Sei

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

‘என் மகன் மீண்டும் சிறைக்குத் திரும்பாமல் முதல்வர் பார்த்துக்கொள்வார்’ – அற்புதம்மாள்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

தலையங்கம்

பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் உயிரிழந்து கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலையிலும் நில மீட்புக்கான குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பஞ்சமி நில மீட்புக்காக கோரிக்கை விடுத்திருந்தார். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த திரமென்ஹீர், பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு அளித்த அறிக்கையாலும், அவர் எடுத்த முயற்சியாலும் பஞ்சமர் நிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டன என்பது வரலாறு. “செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்” என்பதே திரமென்ஹீரின் அவ்வறிக்கை. மறைந்த தலித் செயற்பாட்டாளர் வே.அலெக்ஸ் அவ்வறிக்கையை தன்னுடைய எழுத்துப் பதிப்பகத்தின் (மறுபதிப்பு- நீலம் பதிப்பகம்) வழி நூலாக்கினார். நூறாண்டுகளுக்கு முன் தலித் மக்களுக்கு ஆங்கிலேய அரசால் கையளிக்கப்பட்ட நிலம் தற்போது என்னவாக இருக்கிறது எனும் கேள்வியை எழுப்ப வேண்டும்.

தலித்துகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று ஆங்கிலேய அரசு நிலங்களை வழங்கியது என்று சொல்லப்பட்டாலும், வழங்கப்பட்ட பெரும்பான்மையான நிலங்கள் தரிசு நிலங்கள்தான். தரிசு நிலங்களை உழைக்கும் சாதியினருக்கு வழங்கினால், அதில் நடைபெறும் வேளாண் உற்பத்தி மூலமாக அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்பதே எதார்த்தம். டாக்டர் அம்பேத்கர் இந்திய வேளாண் உற்பத்தியில் மாற்றம் வேண்டுமென்றார். இந்த உற்பத்தி முறை சாதியை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாக இருப்பதால் இதனை விட்டொழிக்க வேண்டும் என்றார் என்பதும் நினைவு கூரத்தக்கது.
நிலம் ஆசுவாசத்தை தருகிறது என்பது குறைந்தபட்ச உண்மை. சென்னை நகரிலிருந்து வெளியேற்றப்படும் மக்களின் நிலையைப் பார்க்கும்போது நிலத்தின் முக்கியத்துவம் விளங்குகிறது.

பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான தொடர் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்கும் முக்கியமானது. தலித் அமைப்புகள் நடத்தியுள்ள போராட்டத்தில் சிறிதளவு நிலம் மீட்கப்பட்டுள்ளது. நில மீட்புக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டு கண்க்கெடுத்ததில், 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தரிசு பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு உரியவர்களுக்கோ அல்லது நிலமற்ற பட்டியல் பிரிவினருக்கோ அரசு பகிர்ந்தளிக்க வேண்டும். நிலங்களை மீட்பதற்குச் செயல்படக்கூடிய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்பதே பட்டிலின மக்களின் நீண்டநாள் கோரிக்கை.

 ஆசிரியர்

 

ஆசிரியர் குழு

ஆசிரியர் – மு. அசீப்
இணை ஆசிரியர் – மகிழ்நன்
மூத்த ஆசிரியர் – ஆர். மதன்ராஜ்

துணை ஆசிரியர்கள்

சந்துரு மாயவன்

அரவிந்ராஜ் ரமேஷ்

தேவா பாஸ்கர்

நந்தகுமார்

பிரதீப்

இதழ் வடிவமைப்பு
சுபாஷ் அரவிந்த்
தமிழரசன்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

தமிழக கிராம அமைப்பும் நிலவுடைமையும் பஞ்சமி நிலம் வழங்கப்பட்ட வரலாறும்
– ச.ஜெரோம் சாம்ராஜ்

1994 ஆம் ஆண்டு தமிழகம் ஒரு முக்கியமான நில உரிமைப் போராட்டத்தைச் சந்தித்தது. நிலம் என்பது சமூக உறவுகளுக்கு அப்பால் புரிந்து கொள்ளப்படாததாலும் வரலாறு நெடுகிலும் எந்த ஒரு சாதியும் தனக்கான நில உரிமை போராட்டத்தை முன்னெடுத்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லாததாலும் 1994 ஆம் ஆண்டு நடந்த பஞ்சமி நிலப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. நிலவுடமை அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நாம் பொதுவாக நமது அன்றாட வாழ்வில் நிகழும் பொருளாதார இயக்கத்தின் மூலமாக புரிந்து கொள்கிறோம். அதாவது ஒருவர் நிலம் அற்று இருந்தால் நிலம்வாங்குவதற்கான பணம் இல்லாத காரணத்தினால் அவரிடம் நிலம் இல்லை என்று நினைத்துக் கொள்கிறோம். இந்தப் புரிதல் நம் அன்றாட வாழ்வில் நாம் கடைத் தெருவுக்குச் சென்று ஒரு பொருளை வாங்குவதும் வாங்க இயலாமல் போவதும் எப்படி நம்மிடம் இருக்கும் பணத்தினால் தீர்மானிக்கப்படுகிறதோ அதுபோலவே நிலவுடமையும் அவ்வாறே தீர்மானிக்கப்பட்டதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். இந்தக் கூற்று சரியானதா என்பதை நாம் சற்று வரலாற்றுப் பூர்வமாக நிலவுடைமை அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியா முழுவதும் உள்ள நிலவுடைமை அமைப்பைச் சற்று ஆராய்ந்து பார்த்தோமானால் நிலவுடமை அமைப்பு சாதியக் கட்டமைப்பை ஒத்ததாக இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் அந்தக் கிராமத்தில் உள்ள உயர்த்திக் கொண்ட சாதிகள் நில உரிமையாளராகவும் சாதியக் கட்டமைப்பில் படிப்படியாக கீழே போகப்போக மக்கள் நிலவுடமை குறுகியும் இன்றியும் இருப்பதை காணலாம். இந்த நிலவுடைமை அமைப்பைக் காணும்பொழுது நிலவுடைமை அமைப்பு ஏன் சாதிய கட்டமைப்பைத் தழுவியதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி நம் முன்னே எழுகிறது. ஆக இன்றைய நிலவுடமை அமைப்பு உருவான வரலாற்றுப் பின்புலத்தையும் அந்த வரலாற்றுப் போக்கில் பஞ்சமி நிலம் வழங்கப்பட்ட பின்புலத்தையும் அறிந்து கொள்வதற்கு காலனிய ஆட்சிக்கு முந்தைய நிலவுடைமை அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

காலனியாட்சிக்கு முந்தைய நிலவுடைமை அமைப்பு:
காலனி ஆட்சிக்கு முந்தைய நிலவுடைமை அமைப்பை புரிந்து கொள்வதற்கு நமது கிராமங்களின் சமூக-பண்பாட்டு-பொருளாதார அமைப்பைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். மேலோட்டமாக பார்த்தால், நாம் கிராமத்தைப் பல்வேறு மக்கள் சேர்ந்து வாழக்கூடிய வாழ்விடமாக புரிந்து கொள்வது இயல்பு. ஆனால் இக்கிராமங்களில் உற்பத்தி என்பது எவ்வாறு நிகழ்கிறது, மக்கள் எவ்வாறு உற்பத்தியில் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கிறார்கள், யாருடைய அதிகாரத்தில் நிலம் இருக்கிறது, யாருக்கு தாணியமாகவோ காசாகவோ கூலி வழங்கப்பட்டது, யார் ஊர் சோறு எடுக்க வேண்டும், யாருக்கு உணவு கொடுத்து வேலை வாங்கப்பட்டது போன்ற விடயங்களைக் கவனித்தால் நமக்குக் கிராமம் என்பது ஏற்றத்தாழ்வான சமூக உறவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு வேளாண் உற்பத்தி நிறுவனம் என்பது விளங்கும். கிராமங்களில் நிகழும் உற்பத்திக்கான இடுபொருட்களையும், உற்பத்தியையும், உற்பத்தி உறவுகளையும், பரிமாற்றங்களையும் சற்றே ஆழமாக பார்த்தால் ஒவ்வொரு கிராமமும் ஒரு உற்பத்தி நிறுவனம் என்பதை உணர முடியும்.

வரலாற்றெழுதியல் என்பது சான்றுகள் சார்ந்தது. காலனி ஆட்சிக்கு முந்தைய நிலவுடைமை அமைப்பைப் புரிந்து கொள்வதற்கு நாம் கல்வெட்டுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகளை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. தான் செய்த காரியங்களையும் கொடுத்த கொடைகளையும் கல்வெட்டுகளில் செதுக்கி அக்கல்வெட்டுகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் அந்த நிகழ்வைப் பறைசாற்றும் அளவிற்கு நிலயான சான்றுகள் உருவாக்கும் அதிகாரம் எல்லோருக்கும் வாய்த்திருக்குமா என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான கல்வெட்டுகள் ஒரு அதிகாரம் படைத்த நபர் நீர்பாசன ஆதாரத்துடன் கூடிய நிலத்தையும் அதில் உழைக்ககூடிய மக்களையும் சேர்த்து அதை பார்ப்பனர்களுக்கு நேரடியாகவோ அல்லது ஒரு கோயிலை உருவாக்கி அந்தக் கோயிலுக்கோ தானமாக கொடுத்ததன் சான்றாக எழுதப்பட்டவையாகவே உள்ளது. கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம் அந்தக் கோயிலை நிர்வகிக்கும் புனித அதிகாரம் கொண்ட பார்ப்பனர்களின் மேலாண்மையில் இருக்கும். மேலும், பார்ப்பனர்களுக்கோ கோயிலுக்கோ வழங்கப்பட்ட நிலங்களோடு அதில் உழைப்பதற்கான மக்களையும் சேர்த்தே தான் இந்தத் தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்படும்போது அந்த மக்களுக்கான குடியிருப்புகள் பற்றியும் மாணியங்கள் பற்றியும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. இது போன்ற குறிப்புகள் பரிமாற்றங்களை மட்டும் உணர்த்தவில்லை மாறாக இந்தப் பரிமாற்றத்தில் யார் எந்த அதிகார நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது. சமூகத்தின் எந்த நிலையில் இருந்தவர் எதை (நிலத்தையோ / கோயிலையோ) யாருக்கு கொடையாக கொடுத்தார்கள் என்பதும், இந்தப் பரிமாற்றங்களில் கொடுக்கும் நிலையிலும், தானத்தைப் பெறும் நிலையிலும் இருந்தவர்கள் யார்? நிலத்தோடு சேர்த்து பரிமாற்றப்பட்டது யார்? சமூகத்தில் அவர்களது அதிகார நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதன் மூலம் கிராம அமைப்பு எத்தகையதாக இருந்தது என்பதையும் கிராமத்தில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும்.

காலனி ஆட்சிக்கு முந்தைய காணி ஆட்சி முறையில் ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலமும் பங்குகளாக பிரிக்கப்பட்டு அது அந்த ஊரில் உள்ள காணியாளர் (பிற்காலங்களில் மிராசி) குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். யார் காணியாளராக / மிராசுதாரராக ஆக முடியும் என்பதை புனிதம்-தீட்டு என்ற சாதிய வரையறையால் தீர்மானிக்கப்பட்டது. தமிழகச் சூழலில் ஆற்றுப்படுகைகளில் நிலவுடமை என்பது பார்ப்பன வேளாள சாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மிராசு முறை இல்லாத கிராமங்களில் எத்தகைய நிலவுடைமை அமைப்பு இருந்தது என்பதை நம்மால் அறிய முடியவில்லை. இதன் காரணமாக கல்வெட்டுகள் அதிகம் காணப்பட்டுள்ள ஆற்றுப்படுகை கிராமங்களின் வரலாறு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அல்லது இந்த நிலப்பரப்பில் உள்ள ஒட்டுமொத்த கிராமங்களின் வரலாறாக பொதுமைப் படுத்தப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகையில் இருந்த கிராமத்தில் ஆதிக்கம் செலுத்திய நபர்கள் பிற்காலத்தில் காலனி ஆட்சி உருவானபோது தங்கள் கிராமங்களில் இருந்த மிராசி முறையை ஒட்டுமொத்த தமிழகத்திலும் இருந்தது என்று நிறுவினர். காலனி ஆட்சிக்கு முந்தைய காலகட்டத்திலும் காலனி ஆட்சியின் போதும் அவர்கள் தொடர்ந்து அதிகார நிலையில் இருந்துள்ளதும் தற்கால சமூக அறிவியல் ஆய்வுகள் காலனிய அதிகாரிகள் உருவாக்கிய ஆவணங்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்படுவதாலும் அந்த ஆதாரங்கள் பெரும்பாலும் பார்ப்பன வேளாள சாதிகளைச் சேர்ந்தோரை மொழிபெயர்ப்பாளராகக் கொண்டு எழுதப்பட்டதும்தான் இந்தப் பொதுமைப்படுத்தலுக்கு அடிப்படைக் காரணம்.

காணியாட்சி என்பது நிலத்தின் மீதான தனிச்சொத்துரிமை அல்ல. காணியாட்சி முறையில் ஒரு கிராமத்தில் இருக்கும் ஒட்டுமொத்த நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பங்குகளாக பிரிக்கப்பட்டு கிராமத்தில் உள்ள மிராசி சாதியைச் சேர்ந்த குடும்பங்களின் பங்குகளாக இருந்தது. இது நிலத்தின் மீதான உரிமையாக மட்டுமல்லாமல் அந்த நிலத்தில் உழைக்கக்கூடிய அனைத்து சாதி மக்களின் உழைப்பின் மீதான அவர்களின் நேரத்தின் மீதான அதிகாரமாகவும் இருந்தது. இந்த அதிகாரமானது புனிதம் தீட்டு என்ற வரையறையில் அடிப்படையில் நிறுவப்பட்டிருந்த காரணத்தால் யாருக்கெல்லாம் புனித அதிகாரம் இருந்ததோ அவர் மட்டுமே காணியாளராக ஆக முடியும். நிலவுடைமை என்பது கோயிலோடு இணைக்கப்பட்டதால் எந்தெந்த சாதியினருக்கு கோயிலில் அதிகாரம் உள்ளதோ அந்தச் சாதிகளைச் சேர்ந்தோர் தான் காணியாளராக இருக்க முடியும். யார் கோயிலுக்குள் செல்லக் கூடாது, யார் கோயிலுக்குள் எது வரை செல்லலாம், யார் கோயிலின் கருவறை வரை செல்லலாம் என்ற படிநிலையைப் புரிந்து கொண்டால் வழிபாட்டுரிமையில் உள்ள இந்தப் படிநிலையானது மக்களின் சமூக பொருளாதார உரிமைகளைப் பிரதிபளிக்கக்கூடியதாக இருப்பதை உணர முடியும். ஆக, இந்தப் படிநிலையின் ஆகக்கீழ் நிலையில் உள்ள தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டது வழிபாட்டுரிமை மறுக்கப்படுவதல்ல. மாறாக அவர்களின் ஒட்டு மொத்த சமூகப் பொருளாதார உரிமைகளை மறுப்பதாகும். கோயிலுக்குள்ளும், கோயில் இருக்கும் தெருவிற்குள்ளும் வர உரிமை மறுக்கப்பட்டவர்கள் எப்படி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு உரிமையாளராவதை கற்பனை செய்ய இயலும்? அடித்தள சாதிகளின் கோயில் நுழைவு கோரிக்கையும், மண்டகப்படி உரிமைகோரல்களும், தேர் பவனி கோரிக்கையும் ஆதிக்க சாதிகளால் இன்றளவும் மறுக்கப்பட்டு வருவதற்கு அனேக உதாரணங்கள் நம் கண் முன்னே இருக்கின்றன. இத்தகைய போராட்டங்களை நாம் வழிபாட்டுரிமைக்கான போராட்டமாக மட்டும் குறுக்குவது வரலாற்று மற்றும் சமூகப் பொருளாதார புரிதலிண்மையாகவே கொள்ள முடியும்.

புனிதம், தீட்டு என்ற வரையறை யார் யாரை விட மேலானவர், யார் யாருக்கு கீழானவர், யாரை யார் வயது குறைந்தவரானாலும் மரியாதையோடு அழைக்க வேண்டும் வயது முதிர்ந்தவரானாலும் யாருக்கு மரியாதை கொடுக்க அவசியமில்லை போன்ற அனைத்தையும் தீர்மானித்தது. அதோடு கூட யாருக்கு எதனை எவ்வாறு கூலியாக கொடுக்க வேண்டும் என்பதையும் வரையறுத்தது. உதாரணமாக இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணத்திற்கு அல்லது புதுமனை புகுவிழாவுக்கோ வழிபாடு நடத்த வரும் பார்ப்பனர்களுக்கு சமைத்த உணவை வழங்கக்கூடாது, மாறாக அவர்களுக்கு தானியங்களும் பழங்களும் காய்கறிகளும் அதோடு சேர்த்து பணமும் அளிக்க வேண்டும். பார்ப்பனர்களின் புனித அதிகாரத்தின் அடிப்படையில் புழுங்கல் அரிசி கூட தீட்டாக கருதப்படுகிறது. இதே புனிதம் தீட்டு என்ற வரையறையில் தீண்டத்தக்க சாதிகளாக கருதப்பட்ட சாதிகளுக்கு சமைக்கப்படாத தானியத்தை ஊதியமாக வழங்குவதும் அதே சூழலில் சேவை சாதிகளாக உள்ள நாவிதர் மற்றும் வண்ணார் போன்ற சாதிகளுக்கு சமைத்த உணவை வழங்குவதும் அவர்களுக்கும் கீழே கருதப்படும் தீண்டத்தகாத சாதிகளுக்கு சமைத்த உணவை ஊதியமாக வழங்குவதும் இங்கு வழக்கமாக இருந்துள்ளது. சமைத்த உணவு என்று வருகையில் இங்கு உள்ள ஆதிக்க சாதிகள் யாரும் தங்களுக்கு கீழ் உள்ள சாதிகளுக்கு சுடுசோறு உணவாக அளித்து இருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே. நேற்று சமைத்த உணவின் மீதத்தை அவர்களுக்கு போட்டு அவர்களிடமிருந்து உழைப்பை சுரண்டி இருப்பார்கள்.

அடித்தள சாதி மக்களின் பசியே ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு நிலையான அன்றாட ஆயுதமாக இருந்தது என்பதை உணரலாம். இங்கு சில பொது வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட குடும்பங்கள் அந்த கிராமங்களில் அனைத்து தெருக்களிலும் சென்று ஊர் சோறு எடுத்து உயிர்வாழும் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். ஆக கிராமம் என்ற அமைப்பில் இருந்த உற்பத்தி ஆதாரங்களான நிலமும் நீரும் மனிதர்களும் சாதிப் படிநிலையில் புனித/ உயர் சாதி நிலையில் இருந்த சாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் பிற சாதிகள் உற்பத்தியில் தங்கள் உழைப்பை வழங்கி அதற்கான கூலியை தானியமாகவோ உணவாகவோ பெற்று உயிர்வாழும் நிலையில் இருந்ததையும் உணர முடிகிறது. இதுவே நமது கிராம அமைப்பு. அதன் காரணமாகவே இன்றளவும் அடித்தள சாதியினர் சமூக-பொருளாதார சுதந்திரம் அடைவதை ஆதிக்க சாதிகள் வெறுகின்றனர். நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு எதிராகவும் பொது விநியோகத் திட்டத்தில் விலையின்றி அரிசி வழங்கியதற்கு எதிராகவும் முன்வைக்கப்படும் வாதங்களை நினைவுகூறுவது இங்கு பொறுத்தமானதாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஒரு கிராமத்தில் வாழும் மனிதர்கள் அந்தக் கிராமத்தில் எந்தப் பகுதிக்கு செல்லலாம் எங்கு செல்லக்கூடாது; எங்கு எப்படி செல்ல வேண்டும்; யார் தோளின் மீது துண்டு போடலாம்; யார் துண்டை இடுப்பிலோ அல்லது கக்கத்திலோ வைத்துக் கொள்ள வேண்டும்; எந்த தெருவில் செருப்பு அணிந்து செல்லலாம் என்ற ஏற்றத்தாழ்வு மிக்க சமூக உறவுகளால் கட்டமைக்கப்பட்ட தாகவே இருப்பதை உணர முடியும். இங்கு சாதி அமைப்பே அரசு அமைப்பாகவும் சாதியக் கட்டமைப்பை அரசின் கட்டமைப்பாகும் விளங்கியது.

தமிழக வரலாற்றாராசிரியர்களுள் மிகவும் முக்கியமானவரான பேரா. நொபொரு கராஷிமா அவர்கள் சோழர்கால (பத்தாம் நூற்றாண்டு) கல்வெட்டுகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அக்கால சமூக அமைப்பை புரிந்துகொள்வதற்கு 1812-14 காலகட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் எல்லிஸ் எழுதிய ‘மிராசி பற்றிய குறிப்புகள்’ல் உள்ள தகவல்களை அடிப்படியாகக் கொள்கிறார். அதுபோலவே, எவ்வளவு நவீன நிறுவனக்களும் பொருளாதார அமைப்புகளும் உருவாகியிருந்தாலும் இன்றும் கூட கிராம சமூக அமைப்பும் மக்களின் பொருளாதார நிலையும் பெரிதும் மாறாத கிராமங்களை நம்மால் காண முடியும். ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் கூட நமது கிராமங்களின் சமூக அமைப்பு பெரிதும் மாற்றமடையாமல் இருப்பதிலிருந்தும் அனேக மக்கள் இன்றளவும் தங்களின் பாரம்பரிய தொழில்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இயலாமல் இருப்பதிலிருந்தும் பிறப்பு அடிப்படையில் நிறுவப்பட்ட சாதியக் கட்டமைப்பின் நிலைத்தண்மையை புரிந்துகொள்ளலாம்.

சமகால தமிழ்ச் சமூகத்தில் ஒரு கிராமத்தில் இருந்து வேறு தொழில் தேடி வெளியேறுவதும் வேளாண் வேலைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதலினால் உருவான வேலைவாய்ப்புகளை துணையாகக் கொண்டு அந்த கிராமத்தில் உள்ள சமூகப் பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொள்வதே இங்குள்ள பல சாதிகளின் ஏக்கமாக இருப்பதை உணர முடியும். உள்ளூர் ஆதிக்க சாதிகளின் நிலங்களில் வேலை பார்த்து கூலி வாங்குவதைவிட ஒரு நகர் மயமான சூழலில் கட்டடத் தொழிலாளியாகவோ பெயிண்டராகவோ அல்லது பிற கூலி வேலையில் ஈடுபடுவதோ சுயமரியாதை மிக்கதாக இருக்கிறது.

காலனி ஆட்சியில் ஏற்பட்ட நில நிர்வாக மாற்றங்களும் மக்களின் நில உரிமையும்:
இத்தகைய படி நிலையான சமூக அமைப்பின் மீது தான் காலனிய ஆட்சி நிர்வாகம் அமைக்கப்பட்டது. வெளியிலிருந்து வந்து தன்னை ஒரு அதிகாரமாக நிறுவ முனைந்த ஆங்கிலேயர்களுக்கு உள்ளூரில் அதிகாரம் படைத்தவர்களாக இருந்த சாதிகளின் அங்கீகாரம் தேவைப்பட்டது. அதுபோலவே இந்த நிலப்பரப்பில் புதிய வல்லாதிக்கம் கொண்ட அதிகாரமாக தன்னை நிறுவிக்கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் உள்ளூர் சமூகத்தில் தாங்கள் கொண்டிருந்த அதிகாரத்தை அங்கீகரிக்கவேண்டும் என்ற அவசியம் உள்ளூர் ஆதிக்க சாதிகளுக்கு இருந்தது.

ஆங்கிலேயர்களின் அரசு என்பது தமிழக வரலாற்றில் முதன்முதலாக சாதி அமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு அரசாகும். சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு தொடர்பில்லாத ஒரு அரசு உருவாகியிருக்கும் சூழலை ஆங்கிலேயே அரசின் உருவாக்கம் ஏற்படுத்தியது. ஏற்றத்தாழ்வான சாதிய படிநிலை கொள்கைக்கு தொடர்பில்லாத ஒரு அரசு உருவானபோது சமூகத்தில் அரசு எந்திரம் என்பது தனியாகவும் சாதிக் குழுக்கள் தனியாகவும் இருப்பதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. ஆக ஒரு சாதி இன்னொரு சாதியின் ஊடுருவல் இல்லாமல், கண்கானிப்பு இல்லாமல் அரச அதிகாரத்தை அனுகலாம். ஆனால் என்னதான் சாதிய படிநிலைக்குத் தொடர்பில்லாத அரசாக இருந்தாலும் ஆங்கிலேய அரசை அணுகும் வாய்ப்பினை சாதி அதிகாரப் படிநிலைதான் தீர்மானித்தது. உதாரணாமாக, திப்புவின் படையெடுப்புக்குப் பின் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நிலவிய சொத்துத் தகராறுகளை இங்கிருந்த நாட்டாண்மைகளை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அனுகினார்கள். இங்குள்ள பார்ப்பன வேளாள சாதிகளின் அதிகாரத்தை அவர்கள் அங்கீகரித்த ஆங்கிலேய அதிகாரிகள் அதே வேளையில் பறையர்களை ஊர்சொல்வதற்கு பயன்படுத்தினார்கள் என்பதையும், அதனால் புதிதாக வந்துள்ள அரசை சுதந்திரமானதாகவோ சாதி அமைப்பிற்கும் படிநிலைக்கொள்கைக்கும் தொடர்பில்லாததாகவோ புரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேய ஆட்சியில் பல்வேறு காலக்கட்டங்களில் கொண்டு வரப்பட்ட பல சட்டங்களை ஆராய்ந்து பார்த்தால் அது சாதிப் படிநிலையில் எந்தெந்த சாதிகளுக்கு சாதகமாக அமைந்தது என்பதையும் அப்படி ஒரு சட்டம் உருவானது காலச் சூழலையும் புரிந்து கொள்ள இயலும். எடுத்துக்காட்டாக, காலனி ஆட்சியின் தொடக்க காலத்தில் ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் உள்ளூர் சமூகத்தில் உள்ள நிலவுடைமை அமைப்பை புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்தச் சூழலில் இங்கு இருக்கக்கூடிய பார்ப்பன வேளாள சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆங்கிலேயே அரசு அதிகாரிகளோடு தொடர்பு கொள்ளும் நிலையில் இருந்தார்கள். தங்களின் இந்த அதிகாரங்களை பயன்படுத்தி தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் காணியாட்சி முறையே இருந்தது என நம்ப வைக்கப் பட்டிருந்தனர். ஆதலினால் ஆங்கிலேய அரசு தொடக்க காலத்தில் மிராசு உரிமையை அங்கீகரித்தது. இதன் விளைவாக கிராமங்களில் இருந்த அனைத்து நிலமும் பார்ப்பன வேளாள சாதிகளின் சொத்தாக பாவிக்கப்பட்டது. கிராமத்தில் இருக்கும் அத்தனை இடங்களும் அந்த ஊரில் வசிக்கும் பார்ப்பனர் வேளாளர் குடும்பங்களின் தனிச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் நமது கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களிலும் விவசாயம் செய்யும் வழக்கமில்லை. மக்கள் அவர்கள் தேவைக்கு ஏற்ப நிலத்தில் ஒரு பகுதியில் விவசாயம் செய்வர். ஆதலினால் முதன்முதலில் வரி விதித்த ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்த நிலத்திற்கும் வரி விதிக்காமல் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு மட்டும் வரி விதித்தது. இதன்படி நிலத்தை விவசாயம் செய்தால் மட்டும் வரி கட்டினால் போதும் விவசாயம் செய்யாத நிலங்களுக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கிராமங்களில் நிறைய நிலங்கள் விளைவிக்காமல் இருப்பதை கண்ட ஆங்கிலேய அதிகாரிகள் சிலர் ஆங்கிலேய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனேயே அனைத்து நிலங்களையும் விவசாயம் செய்யாமல் இருப்பதாக கருதினார்கள். இதன் விளைவாக நிலங்கள் அனைத்திற்கும் வரி செலுத்த வேண்டும், அப்படி செலுத்தாவிட்டால் வரி செலுத்தப்படாத நிலங்கள் பிறருக்கு வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்தார்கள். இதனால் விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் வரி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நிலம் பிறருக்கு (பிற சாதியினருக்கு) செல்வதை விரும்பாத பார்ப்பன, வேளாள சாதிகளைச் சேர்ந்த மிராசுதாரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஒட்டு மொத்த நிலத்திற்கும் வரி செலுத்தினார்கள். ஆனால் வேளாண்மை செய்யாத நிலங்களுக்கும் சேர்த்து வரி செலுத்துவதை சிறிது காலத்திலேயே மிராசுதார்களுக்கு பெரும் சுமையாக மாறியது. இந்தச் சூழலில் தான் அவர்களால் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த விளைவிக்கப்படாத நிலங்கள் பிற சாதியினருக்கு கொடுக்கும் முடிவை தடுக்க முடியாமல் போனது.
இதன் தொடர்ச்சியாக, 1830களின் நடுப்பகுதிகளில் சில ஆங்கிலேய அதிகாரிகள் இம்முறையை கேள்விக்கு உட்படுத்தினார்கள்.

மிராசி முறையை அங்கீகரிப்பது என்பதை ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டு மொத்த நிலமும் பார்ப்பன, வேளாள சாதிகளின் தனிச் சொத்தாக மாறியதால் பிற சாதிகளை சேர்ந்த அனைவரும் நில உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும், தங்களால் முழுவதுமாக விவசாயம் செய்ய முடியாமல் போனாலும் பிற சாதியினருக்கு நிலங்கள் கிடைக்காதவாறு இந்த மிராசி ஜாதிகள் தடுத்து வருகிறார்கள் என்றும் இந்த அதிகாரிகள் புரிந்து கொண்டிருந்தார்கள். ஆதலால் விளைவிக்கப்படாத நிலங்களை விவசாயம் செய்ய விரும்பும் பிறருக்கு கொடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் இந்த கோரிக்கையின் விளைவாக இதை பரிந்துரை செய்த அதிகாரி ஒருவர் மெட்ராஸ் மாகான தலைமையிடத்தில் வருவாய் வாரியத்தில் (Board of Revenue) இருந்து பணியிட மாற்றம் செய்து வேறு ஒரு மாவட்டத்தில் ஆட்சியாளராக அனுப்பப்பட்டார். இதிலிருந்து இந்த பார்ப்பன, வேளாள சாதிகள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பதை உணரமுடியும். அப்படி இரண்டு அதிகாரிகளை மாற்றியதற்கான சான்றுகளை யுஜீன் இர்ஷிக் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் (Eugene Irschick, Dialogue and History). 1834ஆம் வருடம் சி.எஸ்.க்ரோல் என்ற அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட இந்த கொள்கை மாற்றத்தை உள்ளடக்கி தர்க்காஸ்து திட்டத்தை 1868ல் தான் வருவாய் வாரியம் நடைமுறைசெய்தது. தர்க்காஸ்து என்றால் மனு. இந்த திட்டத்தின் படி, தங்களுக்கு தெரிந்த விவசாயம் செய்யப்படாத நிலத்தினை விவசாயம் செய்ய விரும்பும் ஒருவர் வருவாய்த்துறையிடம் மனு ஒன்றை சமர்ப்பிக்கலாம். வருவாய்த்துறை அவரது மனுவை பரிசீலனை செய்து அந்நிலத்தை அவருக்கு வழங்கும். அதிலும் அப்படி வழங்கப்பட்ட நிலத்திற்கு உடனேயே வரி செலுத்தவேண்டாம், மூன்று வருடம் கழித்து வரி செலுத்தத் தொடங்கினால் போதும் என்ற சலுகையும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு மிராசி சாதிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு சில வரையறைகளையும் முன்வைத்தார்கள். அதன்படி, தர்க்காஸ்த்தின் மூலம் நிலம் வழங்குவதாயின் அந்த நிலம் இதற்கு முன்பு பட்டாதாரராக இருந்த ஒருவருக்குத் தான் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆங்கிலேய அரசும் இவர்களது இந்தக் வரையறையை ஏற்றது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் பார்ப்பன, வேளாள சாதிகளை சேர்ந்தோர் மட்டுமே ஏற்கனவே பாட்டாதாரராக இருந்திருக்க முடியும் என்பதையும், அவர்கள் அப்படி ஒரு வரையறை முன்வைத்ததன் நோக்கத்தையும் ஆங்கிலேயே அரசு சில வருடங்களுக்கு பிறகுதான் உணர்ந்தது. அப்படி வழங்கப்பட்ட நிலத்திற்கு மூன்று வருடங்கள் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சூழலில், அந்த நிலம் பிற சாதியினரின் அனுபவத்திற்குச் சென்றுவிடாதவாறு தடுக்கமுடிந்தது. இந்த வரையறையை அவர்கள் முன்வைத்த நோக்கமும் அதுதான்.
அவ்வாறு உணர்ந்த பின்னும் பட்டாதாரர் மட்டுமல்ல நிலத்தை விளைவிக்க விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என்று ஆங்கிலேய அரசு தீர்மானித்தது. அப்போதும் இந்த பார்ப்பன வேளாள சாதிகள் மீண்டும் தங்களது சூழ்ச்சியை செயல்படுத்தினார்கள். முதலில் பட்டாதாரர்களுக்கு மட்டுமே நிலத்தை வழங்கவேண்டும் என்று கூறிய பார்ப்பன வேளாள சாதியினர், தற்பொழுது பிறருக்கும் வழங்கலாம், ஆனால் அதே நிலத்திற்கு பட்டாதாரர் ஒருவர் மனு செய்திருந்தால் அந்நிலத்தை பட்டாதாரருக்கு தான் வழங வேண்டும் என்று புதியதொரு வரையறையை உருவாக்கினார்கள். இதன் காரணத்தால் பிற சாதிகளைச் சேர்ந்த எந்த ஒரு நபரும் நிலத்தை வேண்டி தர்க்காஸ்து சமர்ப்பித்திருந்தாலும் அதே நிலத்திற்கு தங்கள் சாதியைச் சேர்ந்த ஒருவரை தர்க்காஸ்து சமர்ப்பிக்கச் செய்து நிலத்தை தங்கள் சாதியைச் சேர்ந்தவருக்கு மட்டுமே கிடைக்கும்படி வழிவகை செய்து கொண்டார்கள். இதன் நடைமுறை அர்த்தம் என்னவென்றால் எந்த ஒரு சாதியைச் சேர்ந்த நபர் மனுவை சமர்ப்பித்திருந்தாலும் அந்த சாதிக்கு மேலே உள்ள சாதிகளிலிருந்து வேறு ஒருவர் மனுவை சமர்ப்பித்தால் நிலம் அந்த உயர் சாதியினருக்கு வழங்கப்படும்.

தர்காஸ்த்தின் அடிப்படையில் பிற சாதியினர் நிலம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடங்கிய காலகட்டத்தில் இந்த மிராசி சாதிகள் சில ஒடுக்குமுறைகளையும் கையாண்டனர். நீண்டகாலமாக ஆங்கிலேய அரசுடன் நெருக்கமாக இருந்த இந்த பார்ப்பன வேளாள சாதியை சேர்ந்தவர்கள் வருவாய்த்துறையின் மாவட்ட / தாலுக்கா அளவிலான அலுவலகங்களில் பணியில் இருந்தார்கள். அதனால் எந்தக் கிராமத்தில் இருந்து யாரொருவர் தர்க்காஸ்து மூலம் விண்ணப்பம் செய்தாலும் அவரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு அவர்களை நேரில் சென்று அடித்தும் துன்புறுத்தியும் அவர்கள் வாழும் குடிசையை அகற்றி விடுவதாக மிரட்டியும் அவர்களை தங்களின் தர்க்காஸ்து மனுவை திரும்பப் பெற செய்தார்கள். அவர்களின் மிராசி உரிமையும் அந்த மிராசி உரிமையில் ஒட்டுமொத்த கிராமக் குடியிருப்புப் பகுதிகளும் அடங்கியதும் அவர்களின் இந்த அதிகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

ஆனால் 1834இல் சி.எஸ். க்ரோல் (C.S. Crole) மற்றும் அலெக்சாண்டர் ரீட் (Alexander Read) போன்ற ஆட்சியாளரால் முன்மொழியப்பட்ட இந்த தற்காஸ்த்து முறையானது ஆங்கிலேய அரசால் 1868ல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் என்ன தான் ஆங்கிலேய அரசு வல்லாதிக்கம் படைத்த ஆட்சியாளர்களாக இருந்திருந்தாலும் உள்ளூரில் அவர்கள் என்ன திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதை உள்ளூரில் சாதி ஆதிக்கத்தில் இருந்த சமூகத்தினரே தீர்மானம் செய்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். 1868ல் தான் பார்ப்பன வேளாள சாதிகளுக்கு அடுத்த நிலையில் இருந்த சாதிகளுக்கு நிலம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக மிராசி அல்லாத ஊர்களையும் மிராசு இன்று அங்கு உள்ள நிலத்தை தங்களது நிலம் ஆக்கிக் கொண்ட பார்ப்பன வேளாள சாதிகளின் சூழ்ச்சியை அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர் விரிவாக எழுதியுள்ளார். தொடர்ச்சியாக அவர் எழுதிய கடிதங்கள் பார்ப்பாரும் வேளாளரும் பறித்துக்கொண்ட வன்னியரின் மன்ன வேடுவர்கள் என்ற நூலாக வெளியிடப்பட்டது. 1870-80களில் இவர் தொடர்ச்சியாக பல கடிதங்களை வெளியிட்டுள்ளார். இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்களை பார்த்தோமானால் இவர் காலனிய ஆட்சியின் வருவாய் வாரியத்திற்கும் அந்த வருவாய் வாரியத்தின் ஆள் ஏற்படுத்தப்படும் சட்டங்களைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லாமல் வாழ்ந்த மக்களுக்கும் இடையேயான பாலமாக செயல்பட்டு உள்ளார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இவரது கடிதங்கள் அனைத்தும் வருவாய்த்துறையின் கொள்கைகளையும் முடிவுகளையும் வன்னியர் சாதி மக்களுக்கு விளக்கும் விதமாகவே அமைந்துள்ளது என்பதையும் மேலும் தன் சாதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயலாற்றி வந்தார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

1780 தொடங்கி 1890 வரையிலான ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அனைத்து கிராமங்களிலும் இருந்த நன்செய் நிலங்கள் பார்ப்பன வேளாள சாதிகளின் தனிச் சொத்தாகவும் பார்ப்பன வேளாள சாதிகள் இல்லாத ஊர்களில் அந்த ஊரில் எந்த சாதிகள் ஆதிக்கம் மிகுந்தவர்களாக இருந்தார்களோ அவர்களின் சொத்தாகவும் மாறியது. ஆங்கில அரசுடன் தங்களுக்கு இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி மிராசு அல்லாத ஊர்களையும் கூட மிராசி ஊர்கள் என்று நிறுவி அந்த ஊரில் உள்ள நிலங்களையும் தங்கள் சொத்துக்களாக பார்ப்பன வேளாள சாதிகள் மாற்றியிருந்தனர். ஆக தர்காஸ்து முறை செயல்படுத்தப்படும் முன்பே நஞ்சை நிலங்கள் அனைத்தும் பார்ப்பன வேளாள சாதிகளின் தனிச் சொத்தாக மாறி விட்ட காரணத்தினால் புஞ்சை நிலங்கள் மட்டுமே தர்காஸ்து முறையில் படிநிலையில் அவர்களுக்கு அடுத்த சாதிகளுக்கு கிடைத்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் இதைவிட ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த தீண்டத்தகாத சாதிகளின் வறிய நிலையை ஆங்கிலேயே அரசுக்கு இங்குள்ள கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள். தீண்டத்தகாத சாதியினர் அனைத்து வகையிலும் ஒடுக்கப்பட்டுள்ளதையும் நில உரிமை மறுக்கப்பட்டுள்ளதையும், அதனால் அவர்கள் வேளாண் உற்பத்தியில் அடிமைகளாக நிலவி வருவதையும் அவர்கள் தொடர்ச்சியாக ஆங்கிலேய அரசிற்கு எழுதி வந்தார்கள். இதன் விளைவாகவே ஆங்கிலேயே அரசு தனது ஆளுகையில் உள்ள மாகாணங்களில் தீண்டத்தகாத சாதிகளின் நிலையைக் குறித்து விரிவான அறிக்கையைக் கோரியது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாகாணத்தின் ஆளுநர் சென்னை மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் உள்ள தீண்டத்தகாத சாதிகளின் நிலை குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். அவ்வாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் பல்வேறு மாவட்ட அதிகாரிகளும் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் ஆட்சியர்களின் உதவியாளர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் பார்ப்பன வேளாள சாதிகளைச் சேர்ந்தவர்களே இருந்தபடியால் பெரும்பாலான ஆட்சியாளர்கள் மிகவும் மேலோட்டமான அறிக்கையையே சமர்ப்பித்திருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருந்த ஜெ.எச்.ஏ.திரெமென்ஹீர் (J.H.A. Tremenhere) என்பவர் மிகவும் விரிவான ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கைக்கு அவர் “Notes on Pariahs of Chenglepet (செங்கற்பட்டு பறையர்கள் பற்றிய குறிப்புகள்)” என்று தலைப்பிட்டு இருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படியில் தான் 1892ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட 1010 மற்றும் 1010A ஆகிய அரசாணைகள் வெளியிடப்பட்டது. அந்த அரசாணை குறித்தும், அந்த அரசாணையில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்திற்கு திரெமென்ஹீர்ரால் முன்மொழியப்பட்ட மூன்று முக்கிய திட்டங்கள், அதன் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு நிபந்தனைகளின்படி வழங்கப்பட்ட நிலங்களே பஞ்சமி நிலம். (பகுதி – 1)

ச.ஜெரோம் சாம்ராஜ்,
உதவிப்பேராசிரியர், பொருளியல் துறை,
புதுவைப் பல்கலைக்கழகம்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

நினைவுகளில் வாழும் திரமென்ஹீர்…  – ஸ்டாலின் ராஜாங்கம்

 

திரமென்ஹீர் பெயர் யார் மூலம் வெளியானது என்று துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. அது புலப்படாத விதத்தில் மெல்ல மெல்லப் பரவியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழலாக 1990களின் போராட்ட வாய்ப்பு இருந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். திரமென்ஹீரின் பிம்ப உருவாக்கத்தில் இவ்வாறு அவர் பெயரை களத்திற்கு கொணர்ந்தமை முதல் கட்டம். அவரின் பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றியோ அவர் அறிக்கையோ அறியப்படாமல் இருந்தது.

இதன் அடுத்த கட்டம் பின்னர் நடந்தது. அதாவது தலித் வரலாற்று வரிசை என்ற பெயரில் அதுவரை தமிழில் வெளிவராத தலித் தொடர்பான வரலாற்று ஆவணங்களை தொகுத்தும் மொழி பெயர்த்தும் 4 நூல்களாக கொணர்ந்தார் வரலாற்றாளர் வே.அலெக்ஸ். எழுத்து பதிப்பகம் என்ற பெயரில் கொணரப்பட்ட அந்நூல்களுள் ஒன்று பஞ்சமி நிலவுரிமை (2009) என்பதாகும்.

அதுவரை பஞ்சமி நிலத்திற்கென அறிக்கை வெளியிட்டவர் என்ற அளவில் தகவலாக மட்டுமே அறியப்பட்டிருந்த திரமென்ஹீரின் அறிக்கை முதன் முறையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இப்பெயரில் நூலாக வந்தது. இந்நூலை ஆ.சுந்தரம் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். நூலில் அறிக்கையின் மொழிபெயர்ப்போடு பேராசிரியர் ஆர்.அழகரசன் திரட்டிய திரமென்ஹீரின் பணிக்கால பதிவேடு, அக்காலத்தில் சுதேசமித்திரன் ஏடு திரமென்ஹீரை எதிர்த்து எழுதிவந்தபோது விரிவாக மறுத்து எழுதிவந்த இரட்டை மலை சீனிவாசனின் பறையன் இதழ் குறிப்புகள், வரலாற்றாளர் ரூபா விஸ்வநாத்தின் ஆழமான முன்னுரை என்று அந்நூல் விரிந்த பின்னணியோடு அமைந்திருந்தது.
ஆங்கிலத்தில் எங்கோ அறிக்கையாகக் கிடந்த இது தமிழில்தான் விரிவான பின்னிணைப்புகளோடு முதலில் வெளியானது. அந்த அளவிற்கு அந்நூல் முக்கியமானது. இன்றைக்கும் தமிழில் பஞ்சமி நில வரலாறு பேசும் யாரும் அந்நூலைக் குறிப்பிடாமல் செல்ல முடியாது. ஆனால், இவ்வளவும் இருந்த அந்நூலில் திரமென்ஹீர் பெயரைத் தவிர வெறெந்தத் தகவலும் இல்லை. சிறு குறிப்பு தேவையென்றாலும் கிடைக்கும் வரை வெளியிட விரும்பாத வே.அலெக்ஸ், பல ஆண்டுத் தேடலுக்குப் பின்னரும் அவரின் நிழற்படமும் அவரைப் பற்றிய குறிப்புகளும் கிடைக்கவில்லை என்றே பதிப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நூல் பரவலான பின் திரமென்ஹீர் என்ற பாத்திரத்தின் மீது அறிக்கையை வாசிக்கும் யாருக்கும் இயல்பான ஆர்வம் எழும். அவ்வாறு ஆர்வம் கொண்ட வெவ்வேறு இடத்திலுள்ள தலித் இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி அவர் ஆட்சியராக இருந்த , பஞ்சமி நிலவுரிமைப் போராட்டம் எழுந்து இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்ட செங்கல்பட்டிலேயே திரமென்ஹீர் பெயரிலேயே பவுண்டேஷன் ஒன்றை ஆரம்பித்தனர். அதற்கு இந்நூல் காரணமானது. அவர் பெயரைச் சூடிக்கொண்ட இளைஞர் ஒருவரும் அக்குழுவில் உண்டு. அவர் வாழ்க்கைக் குறிப்பும் படமும் கிடைக்கவில்லை என்ற அலெக்ஸின் குறிப்பை வைத்துகொண்டு இளம் வழக்கறிஞர் அசோக் தலைமையிலான குழுவினர் தேட ஆரம்பித்தனர். இது அவருக்கான பிம்ப உருவாக்கத்தில் அடுத்த கட்டம்.

கை கொடுத்த இணையம்

இம்முயற்சியில் பெரும் வாய்ப்பாக அமைந்தது இணையத் தொடர்புகள்தாம். முதலில் திரமென்ஹீர் என்ற பெயர்களைத் தேடித் தொகுத்தனர். அதிலிருந்து ஒவ்வொருவராகத் தொடர்புகொள்ளும் முயற்சியில் கூட்டாக ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவரின் தூரத்து உறவினர் சோபியா என்பவரின் தொடர்பு கிடைத்தது. அதன் விளைவாக அலெக்ஸுக்குக் கிடைக்காத தரவுகள் சில இவர்களுக்கு கிடைத்தன. அதாவது திரமென்ஹீர் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பும் புகைப்படமும் கிடைத்தன.
சோபியா தொடர்பு மூலம் அடுத்தடுத்த தொடர்புகள் நீண்டன. அதன் விளைவாக அவர் கிரிக்கெட் வீரராக இருந்தமை அறியப்பட்டது. பிறகு கிரிக்கெட் சங்க ஆவணக் காப்பகம் வரையிலும் சென்றபோது அங்கு கிடைத்த தகவலின் வழியே செல்டெர்ஹம் கல்லூரியின் 1871-1872ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து செல்டெர்ஹம் கல்லூரி கிரிக்கெட் அணியில் அவர் விளையாடியது அறியப்பட்டது. அந்த கிரிக்கெட் அணியின் ஒரே ஒரு படம் 2013இல் கிடைக்கப்பெற்றது.

இது அந்த இளைஞர் குழுவை உற்சாகப்படுத்தியது. அவருடைய படத்தைச் சுவரொட்டிகளிலும் சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தி பவுண்டேஷன் சார்பாக அவர் படம் பொறித்த இலச்சினையுடன் கூட்டங்களையும் நடத்தத் தொடங்கினர். அக்கூட்டங்கள் 2013க்குப் பிறகு பஞ்சமி நிலவுரிமை அரங்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறுதான் அவருடைய படம் முதன் முறையாக பொதுவெளிக்கு வந்தது. பிறகு அப்படம் ஃப்ரண்ட்லைன் இதழில் பஞ்சமி நிலம் பற்றிய கட்டுரையின் போது குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அப்படம் மெல்ல மெல்ல பஞ்சமி நிலவுரிமையைக் கோருவதில் ஒரு அங்கமாக இணைந்திருக்கிறது.

ஒரு நூலும் , வாழ்க்கைக் குறிப்புகளும் தர முடியாத வெகுமக்கள் மத்தியிலான அழுத்தத்தினை ஒரு புகைப்படம் தந்துவிடும். அதுதான் இப்படம் விஷயத்திலும் நடக்கிறது. இவற்றின் அடுத்த கட்டமாகத்தான் அப்புகைப்படம் அடுத்த நிலையை எட்டியிருக்கிறது. நீலம் பண்பாட்டு மையம் அவர் பிம்பத்தை ஒரு சிற்பமாக மாற்றியிருக்கிறது. அதைக் கண்காட்சி என்ற பொது வெளியில் வைக்கும்போது அது வெகுஜன நினைவுக்குள் போய்ச் சேர்கிறது. அதன் மூலம் பஞ்சமி நிலவுரிமை என்ற நினைவைத் தக்கவைக்கிறது.
திரமென்ஹீர் பிம்பத்தை வளர்த்தெடுப்பதில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் அவரவர் அளவில் பஞ்சமி நிலவுரிமை போராட்ட உணர்வுக்கு பங்களித்து இருக்கிறார்கள். இதில் ஒருவர் மட்டுமில்லை. சங்கிலித் தொடர் போல ஒருவருக்கு அடுத்து மற்றவர் என்று பலர் பங்களித்துள்ளனர். இது ஒரு கூட்டுப் பணி. இந்த வரிசையே புதுமையாகவும் மாறுபட்டதாகவும் இருக்கிறது.

இதுவரை சொல்லப்பட்டவை பிம்ப உருவாக்கம் பற்றிய புரிதலுக்கான முயற்சியே. ஒரு போராட்டத்தில் பிம்பம் அவசியம். ஆனால் பிம்ப உருவாக்கம் பிடி இல்லாத ஆயுதம் போன்றது. பிம்பத்தின் ஆட்சியின்போது அதிலிருந்து தள்ளியிருந்து அதனோடு ஊடாடுவது இன்றைக்கு சவாலானது. எந்த ஒரு பிம்பமும் தனியானதாக இல்லாமல் அவை உருவானதற்குக் காரணமான அரசியலை விட்டு விலகும்போது அது பிம்பமாக மட்டுமே உறைந்து போகும் அபாயம் உள்ளது. திரெமென்ஹீர் பிம்பம்,போராட்ட அரசியலோடு இணையும்போது தான் அது பிம்பமாக மட்டுமே உறைவதிலிருந்து விலக முடியும். இந்த எச்சரிக்கையோடு தான் இதை அணுக வேண்டியிருக்கிறது. இதைக் கலாச்சார தளத்தினரும் அரசியல் தளத்தினரும் யோசிக்க வேண்டும். மற்றபடி திரமென்ஹீர் அடைந்திருக்கும் பிம்ப உருவாக்கம் முக்கியமானது.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

ஜான் தாமஸ், ஏழுமலை உயிரிழப்பும் பஞ்சமி நில உரிமை போராட்டமும்
– தொல். திருமாவளவன்

1994 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10ஆம் நாள் ஜான் தாமஸ் ஏழுமலை என்கிற இரண்டு தலித் இளைஞர்கள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் பலியான அந்த நிகழ்வுதான் தமிழகத்தில் பஞ்சமி நிலம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஏற்கனவே அதற்கான விழிப்புணர்வு உள்ளவர்கள் ஆங்காங்கே அரசிடம் கோரிக்கை மனு கொடுத்து பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு முயற்சித்தாலும் கூட செங்கல்பட்டு வீதியில் நடந்த பேரணியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல் துப்பாக்கிச் சூடு தமிழகத்தை குறிப்பாக தலித் சமூகத்தை அதிரவைத்தது ஒட்டுமொத்த தலித் இயக்கங்களும் பஞ்சமி நிலம் குறித்து அறிந்து கொள்வதற்கு போராடுவதற்கு அந்த கொடூர சம்பவம் தான் வழி வகுத்தது.

செங்கல்பட்டு அருகே காரணை என்னுமிடத்தில் 600 ஏக்கருக்கு மேலான பஞ்சமி நிலங்கள் ஒரே பகுதியில் இருப்பதை அறிந்து கொண்ட தலித் மக்கள் அந்த நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்களை வெளியேற்றிவிட்டு தலித் மக்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி ஒன்றை நடத்திச் சென்றனர். பேரணி அமைதியாக நடைபெற்றது. பொதுமக்களுக்கும் பொது ஒழுங்குக்கும் எந்த இடையூறும் இல்லை. பேரணி நிறைவடைந்த பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக அந்தப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சித்தபோது அதிகாரிகள் உரிய மதிப்பளிக்கவில்லை என்கிற காரணத்தால் பேரணியில் வந்தவர்களும் அதிகாரிகளை சந்திக்க சென்றவர்கள். அனைவரும் அதே இடத்தில் நீதி கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயற்சிக்காமல் உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். தடியடி நடத்தினார்கள். அதன் விளைவாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஜான் தாமஸ் ஏழுமலை ஆகிய இரு இளைஞர்களை படுகொலை செய்தார்கள். 20க்கு மேற்பட்டோர் காயம் அடைந்த கொடூரம் அரங்கேறியது. அதனையொட்டி பஞ்சமி நிலமீட்பு போராட்டக் குழு உருவானது. தலித் இயக்கங்கள் விழிப்புணர்வை பெற்றன. நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே மாவட்டம் தோறும் போராட்டங்கள் வெடித்தன. விடுதலைச் சிறுத்தைகளும் அந்த களத்தில் தீவிரமாக இறங்கினோம். பஞ்சமி நிலத்தை மீட்போம். பழந்தமிழ் குலத்தை காப்போம் என்கிற முழக்கத்தோடு விடுதலைச் சிறுத்தைகள் களமிறங்கியது. பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் பங்கேற்றதோடு மாவட்டம் தோறும் அதற்கான விழிப்புணர்வு இயக்கங்களை மேற்கொண்டோம்.

பஞ்சமி நிலம் என்பது வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். தலைமுறை தலைமுறையாய் நிலவளம் ஏதுமில்லாமல் கொத்தடிமைகளாக ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் உழன்று கிடந்த சமூகத்திற்கு விவசாயம் செய்வதற்கான நிலம் வழங்குவதன் மூலம், அவர்கள் தலை நிமிர்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பிய அன்றைய வெள்ளைய ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனிப்பட்ட முறையிலே ஒதுக்கிய நிலம்தான் பஞ்சமி நிலம் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பாக அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டமலை சீனிவாசன் போன்ற தலைவர்கள் இதுகுறித்த விழிப்புணர்வை பெற்றிருந்த காரணத்தினால் வெள்ளையர் ஆட்சி காலத்தில் நில உரிமையை கோரிக்கையாக வைத்தார். பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் உதகையிலே நடத்திய மாநாடு ஒன்றில் அதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர் கிடைத்த கோரிக்கை மனு அளித்து வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதன் அடிப்படையில்தான் வெள்ளையர்கள் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று நிலங்களை ஒதுக்கினார்கள். அந்த நிலத்தை விலைக்கு வாங்கக் கூடாது, குத்தகைக்கு விடக்கூடாது, தானமாக அளிக்க கூடாது, யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை உடனடியாக மீட்டு, தகுதியுள்ள தலித்துகளுக்கு வழங்க வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதற்கான பட்டா உரிமத்தை தலித் அல்லாதவர்களுக்கு மாற்றி வழங்கக் கூடாது என்றெல்லாம் கடுமையான சட்ட விதிகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. அதை ஏடி கண்டிஷன் லேண்ட் என்று அழைக்கிறார்கள். சில இடங்களில் டிசி லேண்ட் என்றழைக்கிறார்கள். சில இடங்களில் வெட்டி மானியம், தோட்டி மானியம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆக தலித் மக்களுக்கு என்று பயிர் செய்வதற்காக, விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட அந்நிலங்களில், ஏறத்தாழ 12.5 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 12 லட்சம் ஏக்கர் நிலங்களும் இன்றைக்கு தலித் மக்களின் கைகளில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

1994 வரையில் இந்த நிலைதான். ஜான் தாமஸ் ஏழுமலை ஆகியோரின் உயிரிழப்புக்கு பிறகு படுகொலைக்குப் பிறகு ஆங்காங்கே ஏற்பட்ட விழிப்புணர்வின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டங்களில் அடுத்து ஏறத்தாழ ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் இப்போது மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கே கடுமையான போராட்டங்கள். வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் நிலங்களை மீட்பதற்கு முனைப்பு காட்டவில்லை. ஆங்காங்கே தலித் இயக்கங்கள் போராடுவதன் வாயிலாக ஏற்படுகிற அழுத்தத்தின் அடிப்படையில்தான், சில இடங்களில் இந்த நிலங்களை அடையாளம் கண்டு தலித் மக்களுக்கு ஒப்படைத்திருக்கிறார்கள். 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டும் இந்தப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மீட்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு வகையில் ஆறுதல் அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் குறிப்பாக வில்லேஜ் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் அதற்கு முன்பு இருந்த முன்சீப் கர்ணம் இவர்கள் ஜமாபந்தியின்போது பஞ்சம் நிலம் குறித்த தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே தான் இந்த நிலங்கள் இருக்கின்றன என்ற பொய்யான தகவல்களை அரசுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் வரலாற்றுண்மை. ஆக்கிரமிப்பு இருந்தால் அதை ஜமாப்பந்தியிலே தெரிவித்து அதை உடனடியாகவே அப்புறப்படுத்தி தலித் மக்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் விதி. அதுதான் அதிகாரிகள் செய்ய வேண்டிய கடமை. ஆனால் நீண்ட காலமாகவே இந்த ஏழை எளிய தலித் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் அதிகாரிகளோடு எத்தகைய உறவும் இல்லாத காரணத்தினாலும் அவர்களை மிக இலகுவாக ஏமாற்றியிருக்கிறார்கள். வஞ்சித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜமாபந்தியின் போதும் அந்தந்த மாவட்டத்தின்னுடைய அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் தான் அந்த நிலங்கள் இருக்கின்றன என்ற தவறான தகவல்களை கொடுத்து அதை அப்படியே நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார்கள். தற்போதைய போராட்டச் சூழல்கள்தான். அதாவது ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோரின் தியாகத்திற்கு பிறகுதான் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற இயக்கங்கள் எழுச்சி பெற்ற பிறகுதான் இதுகுறித்து அதிகாரிகள் இடத்திலே கேள்வி எழுப்பவும் வாதாடும் போராடவும் என்கிற நிலை ஏற்பட்ட பிறகுதான். இந்த ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்க முடிந்திருக்கிறது. மிச்சம் உள்ள நிலங்களை மீட்க வேண்டும். இதற்கு அரசு தனியே ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எமது கட்சியின் சார்பில் தொடர்ந்து நாங்கள் போராடி இருக்கிறோம். அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்த போது அன்றைய முதல்வர் கலைஞர் இடத்தில், இது குறித்து நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற ஒரு மாபெரும் விழாவில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு அம்பேத்கர் சுடர் என்கிற விருதை நாங்கள் வழங்கிய போது அதை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றிய அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அந்தக் கூட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு தனி ஆணையம் ஒன்றை அறிவிப்போம் என்று அறிவிப்பு செய்தார். அதன் அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணையம் தற்போது ஆட்சி மாற்றத்தின் காரணமாக செயலிழந்து கிடக்கிறது. பஞ்சமி நிலமீட்பு ஆணையம் அமைப்பதற்குரிய ஒரு சூழலை ஏற்படுத்துவதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு மகத்தானது. பல்வேறு போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற்றாலும் கூட இதற்காக பல்வேறு இயக்கங்கள் போராடி இருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றாலும் கூட, அன்றைக்கு ஆளும் கட்சியோடு இருந்த நட்பை பயன்படுத்தி உறவை பயன்படுத்தி விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக திராவிட முன்னேற்றக் கழக அரசு பஞ்சமி நில மீட்பு ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த பத்து பதினைந்து ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாகவும் இடதுசாரிகளும் இந்த குரலை உரத்து எழுப்பியதாலும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பாக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தேசிய அளவிலான ஒரு கட்சி என்ற அடிப்படையில். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் குரலும் வலுவாக இருந்தது. அரசை அசைக்கக் கூடியதாக இருந்தது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அப்படிப்பட்ட பல்முனை தாக்குதல்களின் அடிப்படையில்தான் அன்றைய திமுக அரசு பஞ்சமி நிலமீட்பு ஆணையத்தை அமைத்தது. அதற்கான செயல் திட்டங்களையும் அறிவிப்பு செய்தது. ஆனால் இப்போது செயலிழந்து கிடக்கிறது. ஆகவே மீண்டும் பஞ்சமி நில மீட்பு ஆணையத்திற்கு உயிர் வழங்க வேண்டும். அதை உயிர்ப்பிக்க வேண்டும். நாடு தழுவிய அளவில் அரசாங்கமே எங்கெங்கே பஞ்சமி நில மீட்பு செய்யப்பட வேண்டும் என்பதை ஆராய வேண்டும். எத்தனை லட்சம் ஏக்கர் நிலங்களில் இன்னும் ஆக்கிரமிப்பில் இருக்கும் என்பதை அரசாங்கமே அறிந்து, அவற்றை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். இது வெள்ளைக்கார அரசாங்கம் வழங்கிய நிலம். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கடமை இருக்கிறது அல்லது இந்திய அரசு அப்படி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

வெள்ளைக்காரன் வழங்கிய நிலத்தையாவது மீட்டு வழங்குங்கள் என்று கேட்கின்ற இடத்தில்தான் இன்றைக்கு நாம் இருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் அடக்குமுறைகள் அதிகரிப்பதற்கு காரணம் அவர்கள் அதிகார வலிமை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக நிலம் இல்லாத ஒரு சமூகமாக இருக்கிறார்கள். நிலம் இல்லாத காரணத்தினால்தான் நிலம் உள்ள ஆதிக்க சமூகத்தினரிடம் கட்டுண்டு கிடக்க வேண்டிய நிலை இருக்கிறது. கைகட்டி நிற்க வேண்டிய நிலை இருக்கிறது. அவர்களின் வயல்களில் உழைப்பதனால் அவர்களின் சொற்களுக்கு அடிபணிந்து வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே தலித் மக்கள் அத்தகைய அடக்குமுறைகளிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு அவர்கள் நிலம் உள்ளவர்களாகவும் பரிணாமம் பெற வேண்டிய தேவை இருக்கிறது. அதுதான் அதிகார வலிமையை வழங்கக்கூடியது. எனவே பஞ்சமி நிலத்தை மீட்பது தலித் விடுதலைக்கான பல்வேறு படிநிலைகளில் மிக முக்கியமான ஒரு படிநிலையாக அதை நாம் கருதலாம். பஞ்சமி நில மீட்புப் போராட்டம் என்பது மேலும் தீவிரப் படுத்தப் பட வேண்டிய தேவையை அதற்கான வரலாற்று அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் போராடி இருக்கிறோம் என்றாலும் கூட பஞ்சமி நில மீட்பு போராட்ட குழுவோடு இணைந்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை யில் நடைபெற்ற ஊர்தி பயணத்தில் பங்கேற்று இருக்கிறோம்.

இப்படி தோழமை இயக்கங்களோடு அங்காங்கே கலந்துகொண்டு தலித் இயக்கங்கள் கட்டமைக்கிற கூட்டமைப்புகளிலே பங்கேற்று எங்களுடைய பங்களிப்பு செலுத்தியிருக்கும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இதற்கென்று ஒரு பெரிய மறியல் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் நடத்தினர். பிறகு, அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 15 ஆம் தேதி வரையில் ஒவ்வொரு நாளும் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அரசின் கவனம் ஈர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கண்டறியப்படாமலேயே உள்ளன. காரணை பகுதியிலேயே அடையாளம் காணப்பட்ட நிலங்களே இன்னும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஆகவே, அடுத்தடுத்து நாம் போராட வேண்டிய தேவை இருக்கிறது. தனித்தோ அல்லது கூட்டமைப்பாக இணைந்தோ தொடர்ந்து போராடுவதன் மூலம்தான் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு அரசாங்கத்தை நாம் அழுத்தம் கொடுத்து செயல்பட வைக்க முடியும். பஞ்சமி நில மீட்பிற்கு நாடு தழுவிய அளவில் அதற்கான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு கட்சி மாறுபாடில்லாமல் இக்கருத்திலே கோரிக்கையில் உடன்பாடு உள்ள அனைவருடனும் விடுதலை சிறுத்தைகள் கைகோர்த்துப் போராட தயாராக இருக்கிறோம். பல்வேறு தகவல்கள் எல்லாம் கேள்வி தகவல்கள்தான். உரிய ஆவணங்களோடு ஆதாரங்களோடு அவற்றை இன்னும் நாம் கண்டறியவில்லை.

எல்ஐசி கட்டிடம் இருப்பதே பஞ்சமி நிலத்தில்தான் என்றும் அறிவாலயம் கட்டப்பட்டிருப்பது பஞ்சமி நிலத்தில்தான் என்றும் சிறுதாவூர் பங்களா பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டு இருக்கிறது என்ற விவாதம் நடைபெற்றபோது எல்லோராலும் சொல்லப்பட்டது. அதே கருத்தை நானும் சில இடங்களில் மேற்கோள் காட்டி இருக்கிறேன். ஆனால், எல்லாவற்றுக்கும் தீர்வு அரசாங்கமே அதற்கு ஒரு ஆணையத்தை அமைத்து அதன் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்ல வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு நிலம் வழங்குவது என்பது மிக மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நிலம் இல்லாமல் அதிகாரம் இல்லாமல் ஆயுதம் இல்லாமல் காலங்காலமாய் தலைமுறை தலைமுறையாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இன்றைக்கு சாதிய வாதிகள் அணிதிரளக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சாதியவாத சக்திகளிடமிருந்து இந்த மக்களை பாதுகாப்பதற்கு இவர்கள் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய தேவை இல்லை, இவர்களே தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்திட அரசாங்கமே இந்த ஏழை எளிய மக்களுக்கு நிலம் வழங்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று.

அதற்கு முதல்கட்டமாக பஞ்சமி நிலத்தை மீட்டு வழங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை. ஆகவே யாருடைய ஆக்கிரமிப்பில் இருந்தாலும் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய வேண்டுகோள். சிறுதாவூர் நிலமாக இருந்தாலும் சரி அல்லது அறிவாலயம், எல்ஐசி கட்டிடம் போன்ற இடங்களாக இருந்தாலும் சரி, அதில் உள்ள உண்மையை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தினுடைய பொறுப்பு. அரசாங்கத்தினுடைய கடமை. அதன் அடிப்படையில் அந்த நிலங்கள் மீட்கப்பட வேண்டும். தலித் மக்களுக்கு தகுதி உள்ளவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும். அதுதான் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு அடித்தளமாக அமையும். பஞ்சமி நிலம் தொடர்பாக தோழர் ரவிகுமார் மிக அழுத்தமாக பேசியிருக்கிறார். மக்கள் மன்றத்திலே அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மக்களுக்கு இன்னும் அதைப்பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. கூடுதலாக தேவைப்படுகிறது. ஆக அந்தப் பணிகளை நாங்கள் தோய்வின்றி முன்னெடுத்துச் செல்வோம். பிற இயக்கங்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் தேசிய இயக்கங்கள் அல்லது இடதுசாரி இயக்கங்கள், தலித்தல்லாத இயக்கங்களும் இந்தக் களத்திலே தங்களுடைய பங்களிப்பைச் செலுத்த முன் வரவேண்டும் என்பதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது. இடதுசாரிகள் இந்த புரிதலை பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தேசிய சக்திகள் இதைப் பற்றிய விவாதத்திற்கு தயாராக இல்லை. அதைப் பற்றி பேசுவதற்கு கூட யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் யதார்த்த நிலை. இயல்நிலை. ஆகவே அனைத்து தரப்பினரும் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக்கு தன்னுடைய பங்களிப்பை செலுத்த முன் வரவேண்டும். பஞ்சமி நிலங்களை கண்டறிவதற்கு அதை தலித் மக்களிடம் ஒப்படைப்பதற்குரிய களத்தில் அவர்களும் கைகோர்க்க வேண்டும் என்று நான் இந்த சூழலில் அறைகூவல் விடுக்கிறேன்.

-தொல். திருமாவளவன்
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

நன்றி: மும்பை விழித்தெழு இயக்கம்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

பஞ்சமி நிலங்களை மீட்க சிறப்பு சட்டம் வேண்டும்  – செ.பீமாராவ்

இந்தியாவை பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்தபோது செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் திரமென்ஹீர் என்பவர் 1891 அக்டோபர் 5-ம் தேதி பறையர்கள் மனிதர்களாக நடத்தப்படவும், சுயமரியாதையுடன் சுய முன்னேற்றம் காணவும், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் அவர்கள் நிலவுடைமையாளர்களாக இருக்க வேண்டியது கட்டாயம் என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அவருக்கு முன்னதாகவே பண்டிதர் அயோத்திதாசர் போன்றோர் அறிக்கைகள், மாநாடுகள், பத்திரிகைகள் மூலம் அரசுக்கு கோரிக்கைகள் வைத்திருந்தாலும் ஜேம்ஸ் திர்மென்ஹீரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பறையர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.

திரமென்ஹீரின் அந்த அறிக்கையில் அவரது ஆலோசனைகளாக சில குறிப்புகளைப் பட்டியிலிடுகிறார். அதாவது,

 மாகாணத்தில் நில விண்ணப்பச் சட்டத்தின்படி பட்டாதாரருக்கு உள்ள உரிமையைக் கிராமத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்கும்படி மேற்படி சட்டத்தைத் திருத்த வேண்டும்.
 சாகுபடிக்கேற்ற புறம்போக்கு விவசாய நில பகிர்மானத் திட்டம் கிராமத்திலுள்ள பறையர்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
 1875-க்கு முன்பு வரி பாக்கிக்காக மிராசுதார் மற்றும் பட்டாதாரர்களிடமிருந்து அரசு கைப்பற்றிய நிலத்தைப் பறையர்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
 தேவையில்லாமல் வனத்துறையுடன் சேர்க்கப்பட்ட விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களிலும் மிராசுதார் இல்லாத கிராமங்களில் அதிகமாக விவசாயத்திற்குப் பயன்படும் நிலம் உள்ள இடங்களில் பறையர்கள் குடியிருப்பை அமைக்க வேண்டும்.
 இத்தகைய குடியிருப்புகளில் உள்ள பறையர்களுக்கு விவாசாயத்திற்கேற்ற மற்ற நிலத்தை அரசு கொடுக்க வேண்டும்.
 மெட்ராஸ் மாகாண குத்தகைச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் பறையர்களும் மற்ற விவசாயிகளும் மிராசுதாரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
 பறையர்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் சார்பாக இருக்கும்படி சட்டம் திருத்தப்பட வேண்டும்.
 கூலி விவசாயிகள் அடிமை முறைகளிலிருந்து விடுபடும் விதத்தில் உடன்படிக்கை மீறல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கூலி உடன்படிக்கையை ஒரு ஆண்டிற்கு உட்பட்டதாக ஆக்கப்பட வேண்டும்
 பறையர்கள் வாழும் வீட்டிற்குப் பட்டா உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 பறையர்கள் அரசு உதவியுடன் மற்ற நாட்டிற்குக் குடிபெயரும் நிலமை உருவாக்கப்பட வேண்டும்.
 கள்ளு, சாராயக் கடைகள் அதிகமாகப் பறையர்களுக்கென்று இருப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 பறையர்களுக்குக் கல்வியை அனுமதித்து அரசு தெளிவாகவும் நேரடியாகவும் அவர்களின் கல்விக்கு வழிவகுப்பது அரசின் கடமையாகும்.
 பறையர்களின் சுகாதரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
 பறையர்கள் வீடுகளை மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதிலிருந்து விடுவிப்பது.
 பறையர்களின் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது.

திரமென்ஹீர் அனுப்பிய இந்த ஆய்வறிக்கை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1891-ம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதனடிப்படையில், அந்த ஆய்வறிக்கையே செங்கல்பட்டுப் பறையர் மக்களைப் பற்றிய குறிப்புகளாக அரசாணை எண் : 1010 (ம) 1010A Revenue நாள் : 30.09.1892 மற்றும் அரசாணை எண் : 68 Education நாள் : 01.02.1893 ஆகிய இரண்டு வருவாய் அரசாணையாக வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு அரசாணைகளின்படி பறையர்களுக்கு 12 இலட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் நிலங்களை சில நிபந்தனைகளுடன் பிரிட்டிஷ் அரசு வழங்கியது. இந்நிலங்களே பஞ்சமி DC நிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பிரிட்டிஷ் அரசு வழங்கிய நிபந்தனைகளுள் சில,

 முதல் பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது.
 பத்தாண்டுகளுக்குப் பிறகும் வேறு பட்டியலின மக்களுக்கு மட்டுமே விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது தேவைக்குத் தரவோ செய்யலாம்.
 நிபந்தனை மீறிச் செய்யப்படும் உரிமை மாற்றங்கள் சட்டப்படி செல்லாது என்ற விதிமுறைகள விதித்தது.

கடந்த 26.7.2006-ம் நாளிட்ட நில நிர்வாக ஆணையர் அலுவலக கடிதம் ந.க.எப்1/20616/2006-ல் தமிழகத்தில் மொத்தம் 1,26,113.06 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது எனவும், சென்னை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் ஏதுமில்லையென தமிழக அரசின் நில நிர்வாகத்துறை புள்ளி விவரங்களை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் நில நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி பார்த்தால் மீதமுள்ள 11,34,899.94 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
பஞ்சமி நிலங்கள் வருவாய்த்துறைப் பதிவேட்டின்படி தலித் மக்களின் பெயரில் உள்ளதா என்பதை அறிய மாதமொருமுறை பார்வையிட்டு மண்டல வட்டாட்சியருக்குக் கிராம நிர்வாக அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை ஜமாபந்தி நடைபெறும் போது வருவாய் கோட்டாட்சியர் அல்லது துணை கலெக்டர் பதவியில் உள்ள அதிகாரிகள் வருவாய்த்துறை ஆவணங்களைப் பார்வையிட்டுக் கையெழுத்திட வேண்டும். ஆனால், இவையெதுவுமே முறையாக நடைபெறுவதில்லை.

1892-ம் ஆண்டு யூடிஆர் (Updating Registration Scheme – UDR) சர்வே நடைபெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு 1984-ம் ஆண்டும் யூடிஆர் சர்வே நடைபெற்றுள்ளது. அதில் கண்டுபிடிக்கப்பட்ட குறைகள் சரிசெய்யப்படாதது மட்டுமல்ல, அதற்குப் பிறகு சர்வே நடைபெறவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக உண்மை அறிய முற்படுகிறபோதெல்லாம் நில நிர்வாகத்துறை அளிக்கும் விவரங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளிக்கும் அறிக்கைக்கும் பெரும் முரண்பாடு இருப்பது வழக்கமாக இருக்கிறது.
தலித் நிலவுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ப.சிவகாமி தன் இயக்கத்தின் மூலம் பஞ்சமி நிலம் தொடர்பாக விழிப்புணர்வு போராட்டங்களை நடத்தினார். அதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு காஞ்சீவரம் நகரில் பஞ்சமி நிலம் பற்றிய மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாடு மற்ற திராவிட கட்சிகளுக்கு அழுத்தம் தரவே 2006-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பஞ்சமி நிலம் மீட்பு என்ற வாக்குறுதியை அளித்தது.
தலித் விடுதலை இயக்கம் கடந்த 2006-ம் ஆண்டு அரசாங்கம், தனியார் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டது. இதில் தொண்டு நிறுவன ஆக்கிரமிப்புகளும், அரசாங்க ஆக்கிரமிப்புகளும் அடங்கும். சான்றுக்காக அவற்றில் சில,

மதுரை:
 வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தில் சர்வே எண் : 365/4C-ல் உள்ள பஞ்சமி நிலத்தில் அரசு ஆரம்பப் பள்ளிக்கூடக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

 வாடிப்பட்டி வட்டம் நாச்சிக்குளம் கிராமத்தில் அரசினர் ஆதிதிராவிடர் மேனிலைப் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

 வாடிப்பட்டி வட்டம் அலங்கா நல்லூர் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் சர்வே எண் : 189/2-ல் உள்ள பஞ்சமி நிலத்தைத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (NGO) ஒன்று ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியுள்ளது.

திருவண்ணாமலை:
 தண்டராம்பட்டு வட்டம் மலமஞ்சனூர் கிராமத்தில் சர்வே எண் : 282/3A1-ல் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஆக்கிரமித்துச் சாலையும் பயணியர் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளன.

 தண்டராம்பட்டு வட்டம் மலமஞ்சனூர் கிராம சர்வே எண் : 282/4A1-ல் உள்ள பஞ்சமி நிலம் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை இயக்குனர் சென்னை-6 என்னும் பெயரில் பத்திரப் பதிவுசெய்யப்பட்டு “அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம்” கட்டப்பட்டுள்ளது.

திருப்பூர்:
 திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி 27-வது வார்டின் எல்லைக்குட்பட்ட அணைமேடு பெத்திசெட்டிபுரம் சர்வே எண் : 749-ல் “தமிழக அரசின் திருப்பூர் ஆடிட்டர் அசோசியேசன்” சார்பாக அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
 பெரம்பலூர் மாவட்டத்தில் பாண்டக்கப்பட்டி கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுப் பொதுப்பணித் துறையின் மூலம் ஏரியாக மாற்றப்பட்டுள்ளது.

 பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (அறக்கட்டளை) ஒன்று பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியுள்ளது.

 பெரம்பலூர் மாவட்டம், நாகமங்கலம் வருவாய்க் கோட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் கட்டப்பட்டுள்ளன.

கரூர்:
 கரூர் மாவட்டம், தேவர் மலைப் பகுதியில் (புலியூர்) பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து ஒரு சிமெண்ட் ஆலை கட்டப்பட்டுள்ளது.
 திண்டுக்கல்:
 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் கள்ளிமந்தயம் வாகரையில் சர்வே எண் : 227, 228 மற்றும் 229-ல் சுமார் 25 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் “கிளாஸிக் போலோ” என்ற மில் கட்டப்பட்டுள்ளது.

தேனி:
 தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சார்ந்த தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு “காவல் துறையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிலையம்” கட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசு பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அம்பேத்கரிய அமைப்புகள், ஜனநாயக சக்திகள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த 1996-ம் ஆண்டு அஇஅதிமுக அரசு தனது ஆட்சி முடியப்போகும் நேரத்தில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அக்குழு செயலற்றுப் போனது.
அதன்பின்பாக, 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.எம்.மருதமுத்து தலைமையில் நில நிர்வாக ஆணையர் மற்றும் ஓய்வுபெற்ற குடிமைப்பணி அதிகாரிகளான திரு.மணிவண்ணன், திரு.வே.கருப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இக்குழுவும் செயல்படாமல் முடங்கிப் போனது.

மேலும், தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி நிலங்களை கண்டறிந்து அவற்றை உரியவர்களிடம் மீட்டு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆராய மத்திய குழு ஒன்றை அமைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணை மனு எண் : 24818/2015-ல் கடந்த 12.08.2015 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், நில நிர்வாக ஆணையர் அவர்களின் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மை செயலர் மற்றும் வருவாய்த்துறை முதன்மை செயலர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழுவும் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற நீதிப்பேராணை மனு எண் : W.A. Nos.1446 to 1448 of 2008-ல் கடந்த 05.04.2010 அன்று நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மற்றும் நீதிபதி P.P.S.ஜனார்தன ராஜா அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் பஞ்சமி நிலம் பட்டியல் சமூகம் அல்லாத இனத்தவர் வாங்கியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதே தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் பஞ்சமி நிலம் தொடர்பாக வழங்கிய மூன்று தீர்ப்புகளைச் சுட்டிகாட்டியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் வி.சாகுர் அகமது வழக்கு எண் AIR 1973 SC 2520-லும், கர்நாடகா மாநிலத்தில் ஸ்ரீமனச்ச கவுடா வழக்கு எண் AIR 1985 SC 1151-லும், மஹாராஷ்டிர மாநிலத்தில் லிங்கப்ப பொசன்னா வழக்கு எண் AIR 1985 SC 386 ஆகியவற்றில் மேல்முறையீடானது மறுக்கப்பட்டு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பஞ்சமி நிலங்களை பிற சாதியினர் பட்டியல் சமூகத்தினரிடமிருந்து கிரயத்துக்கு வாங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்திருந்தாலும்கூட வருவாய் வாரிய நிலையாணை எண் 15(41)-ன் படியும், வருவாய் வாரிய நடவடிக்கை குறிப்பு எண். 46 தேதி 27.06.1929-ன் படியும் அது நிபந்தனையை மீறிய விற்பனை என்பதால் அது செல்லாது எனக் கூறுகின்றது. இவ்வளவு சட்டப் பாதுகாப்புகள் இருந்தும் தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 12.5 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஒரு நூற்றாண்டு காலமாக மீட்கப்படாமல் இன்னும் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.
இந்த நிலையில்தான், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எ.ஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தமிழகத்தில் 1.47 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிற தவறான புள்ளி விவரம் ஒன்றை சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நில நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய குழுவானது தமிழகத்தில், சுமார் 2.5 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை கண்டறிந்துள்ளதாக தி இந்து நாளேட்டில் கடந்த 15.10.2020 அன்று செய்தி வெளியாகியுள்ளது.

(https://www.thehindu.com/news/cities/chennai/25-lakh-acres-in-tamil-nadu-identified-as-panchami-land/article32857279.ece/)

எனவே, தமிழக அரசானது முதற்கட்டமாக தற்போது கண்டறியப்பட்டுள்ள 2.5 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியினை முதலில் தொடங்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுக்கள், ஆணையங்கள் அனைத்துமே கண் துடைப்பாகவே இருந்து வந்துள்ளன. உச்ச நீதிமன்றமும் மற்றும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களும் பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு வழக்குகளில் கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநில வழக்குகளை முன் வைத்தே தீர்ப்புகளை வழங்கியுள்ளன. காரணம், அந்த மாநிலங்களில் பஞ்சமி நிலங்களை பாதுப்பதற்கான சிறப்பு சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்பதுதான்.
ஏற்கெனவே இருக்ககூடிய 1989-ம் ஆண்டு பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமானது சட்ட ரீதியான சில பாதுகாப்புகளை நமக்கு அளித்தாலும், அச்சட்டமானது தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த பஞ்சமி நிலங்களையும் பாதுகாக்கும் படியானதவும், அந்நிலங்களை முழுமையாக மீட்கும் படியானதாகவும் இல்லை.

எனவே, தமிழக அரசானது பொதுமக்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் உரிய முறையில் கருத்து கேட்டு, பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான வரைவு சட்டம் ஒன்றை உருவாக்கி, அதனை சட்டமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவந்து, உடனடியாக பஞ்சமி நில மீட்புக்கான சிறப்பு சட்டத்தை கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 12.5 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சமூக மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

– செ.பீமாராவ்
சமூகச் செயற்பாட்டாளர்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

பஞ்சமி நில மீட்பும் தலித் அமைப்புகளும் – அருள் முத்துக்குமரன்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் தென்கரை உள்வட்டம் அயன் தென்கரை கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் பள்ளி கட்டப்பட்டிருந்த 2 ஏக்கர் 66 சென்ட் பஞ்சமி நிலம் மீட்டக்ப்பட்டுள்ளது
பஞ்சமி நிலம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் தலித் விடுதலை இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி பஞ்சமி நிலம் மீட்க முடியாது என்ற பொய் பிரச்சார பிம்பத்தை உடைத்திருக்கிறது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மேலக்கால், தென்கரை, தனிச்சியம், கல்லணை, பெரிய இழந்தைக்குளம், குட்டிமேக்கிப்பட்டி, கீழக்கரை, மாணிக்கம்பட்டி, வலையபட்டி, இராமக்கவுண்டன்பட்டி, கோணம்பட்டி, செம்பட்டி, சேந்தமங்கலம், இராஜக்கால்பட்டி, மேட்டுப்பட்டி மற்றும் தாதம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 750 ஏக்கர் பஞ்சமி நிலமானது பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள பஞ்சமி நிலங்களில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி நிலமில்லா பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கக்கோரி தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ச.கருப்பையா அவர்கள் கடந்த 04.08.2020 அன்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை வருவாய் கோட்டாட்சியர், நில நிர்வாக ஆணையர், தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 26.12.2020 அன்று மதுரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், ச.கருப்பையா அவர்கள் அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் குறித்து உரிய விசாரணை செய்தும், புலத்தணிக்கை செய்தும் அறிக்கை அனுப்பி வைக்குமாறு வாடிப்பட்டி வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். வாடிப்பட்டி வட்டாட்சியர் அவர்கள் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மேற்குறிப்பிட்ட கிராமங்களில் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்ட 750 ஏக்கர் பஞ்சமி நிலங்களின் பல்வேறு இனங்களில் விதிகள் மீறப்பட்டிருப்பது குறித்த கருப்பையா அவர்களின் மனு மீது முறையாக விசாரணை செய்தும், புல தணிக்கை செய்தும் விதி மீறப்பட்ட இடங்களில் அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாமென தனது 16 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த 05.02.2021 அன்று மதுரை வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பியிருந்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் முத்தன் சாம்பான் என்பவருக்கு 1932 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் கிராம சர்வே எண் 365/4 படி 2 ஏக்கர் 66 சென்ட் நிலம் வழங்கியுள்ளது. முத்தன் சாம்பான் நில விதிமீறல் செய்தாக கூறி மதுரை கோட்டாட்சியர் பட்டாவை 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாளன்று ரத்து செய்திருக்கிறார். அடுத்த சில ஆண்டுகளில் கோட்டாட்சியர் முத்தன் சாம்பானுக்கு வழங்கிய நிலத்தை மொக்கசாமி தேவருக்கு பட்டா வழங்கியுள்ளார்.

மொக்கசாமி கிராம சர்வே எண் 365/4 கொண்ட முத்தன் சாம்பான் நிலத்தை தியாகராஜபாண்டியன் என்கிற தியாகுக்கு கிரயம் கொடுத்துள்ளார். கிரயம் வாங்கியவர் இதுவரை பட்டா மாறுதல் செய்யாமல் உள்ளார்.
மேற்கண்ட தகவலின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 17 ஆம் நாளன்று வாடிப்பட்டி வட்டாட்சியர் அறிக்கையின் அடிப்படையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் அயன் தென்கரை கிராம சர்வே எண் 365/4C பரப்பளவு 2 ஏக்கர் 66 சென்ட் முத்தன் சாம்பான் என்பவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதால் நில ஒப்படை உத்தரவினை ரத்து செய்தும், உரிய கிராம கணக்குகளில் தேவையான மாறுதல் செய்து அறிக்கை அளிக்கும்படியும் வாடிப்பட்டி வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
வட்டாச்சியரின் உத்தரவை பின்பற்றி அயன் தென்கரை கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தன் கிராம கணக்கு ‘அ’ பதிவேட்டில் மாற்றம் செய்து முத்தன் சாம்பான் குடும்பத்துக்கு நிலத்தை வழங்க வேண்டும். முத்தன் சாம்பான் குடும்ப வாரிசுகள் இல்லாத பட்சத்தில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியபடி நிலமில்லாத பட்டியல் மக்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும்.

சென்னை உயர்நீதி மன்றம் 5 ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மற்றும் நீதிபதி P.P.S.ஜனார்தன ராஜா அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் (W.A. Nos.1446 to 1448 of 2008) பஞ்சமி நிலம் பட்டியல் சமூகம் அல்லாத இனத்தவர் வாங்கியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதே தீர்ப்பில், உச்சநீதி மன்றம் பஞ்சமி நிலம் தொடர்பாக வழங்கிய மூன்று தீர்ப்புகளைச் சுட்டிகாட்டியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் வி.சாகுர் அகமது வழக்கில் AIR 1973 SC 2520-லும், ஸ்ரீமனச்ச கவுடா கர்நாடகா மாநிலத்தில் AIR 1985 SC 1151-லும், மஹாராஷ்டிர மாநிலத்தில் லிங்கப்ப பொச்சன்னா AIR 1985 SC 386 ஆகியவற்றில் மேல்முறையீடானது மறுக்கப்பட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது.

பஞ்சமி DC நிலங்களை பிற சாதியினர் பட்டியல் சமூகத்தினரிடமிருந்து கிரயத்துக்கு வாங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்திருந்தாலும்கூட வருவாய் வாரிய நிலையாணை எண் 15(41)-ன் படியும், வருவாய் வாரிய நடவடிக்கை குறிப்பு எண். 46 தேதி 27.06.1929-ன் படியும் அது நிபந்தனையை மீறிய விற்பனை என்பதால் அது செல்லாது எனக் கூறுகின்றது.
இவ்வளவு சட்ட பாதுகாப்புகள் இருந்தும் குறைந்த அளவு பஞ்சமி நிலங்களை மீட்கவே, நாம் மிக நீண்ட சட்ட போராட்டம் மற்றும் பல உயிர் இழப்புகளையும் நிகழ்த்த வேண்டியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக நம் வலிமையை உணர வேண்டும் அல்லது நம் வலிமையை மக்களுக்கும் அரசுக்கும் உணர்த்த வேண்டும். தலித் விடுதலை இயக்கம் எனும் அமைப்பு சட்டப்போராட்டம் நடத்தி நிலத்தை மீட்கும்போது; பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக தமிழக அரசு பஞ்சமி நில மீட்பில் கவனம் குவிக்க வேண்டும்.

மாநில அரசு பஞ்சமி நிலத்தை விதிகளை மீறி பட்டா மாறுதல் செய்த அரசு அதிகாரிகள் மற்றும் இவ்வளவு காலம் தெரிந்தும் உரிமைகொண்டாடி வந்தவர் என அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். இனிமேல் இது போன்று நடக்காமல் ஒவ்வொரு ஆண்டும் சமாபந்தி நடைபெறும் நாட்களில் வட்டாட்சியர் கிராம கணக்கு ‘அ’ பதிவேட்டைக் கண்காணிக்க மாநில அரசு உத்தரவிட வேண்டும்.

கட்டுரையாளர்: அருள் முத்துக்குமரன், கணித ஆசிரியர்
ஓணம் பண்டிகை: பௌத்தப் பண்பாட்டு வரலாறு நூலின் ஆசிரியர்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

புத்தாயிரத்தில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – சந்துரு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மலிகம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அவர்களின் மகன் தனபால் என்பவருக்கு 4 ஏக்கர் 15 சென்ட் பஞ்சமி தரிசு நிலம் சொந்தமாக இருந்து வந்துள்ளது. அந்நிலத்தை அதே கிராமத்தில் வசிக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்த பாண்டுரங்க சமட்டியார் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். பாண்டுரங்க சம்பட்டியார் கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் இருந்தவர் என்பதால் நிலம் தொடர்பான வருவாய் துறை ஆவணங்களில் தனது பெயருக்கு மாற்றம் செய்து கொண்டார். நிலம் தொடர்பான வழக்கு பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது. இந்த வழக்கில் தனபால் சாம்பான் வாரிசுகளுக்கு ஆதரவாகத் ஜனவரி 28 ஆம் நாள் தீர்ப்பு கூறப்பட்டது.

இவ்வழக்கில் ஆஜராகி வழக்கை முன்னெடுத்த வழக்கறிஞர் தணிகைச் செல்வன், தலித்தல்லாதவர் பஞ்சமிதரிசு நிலத்தைக் கிரையம் பெற்றது செல்லாது என்றும், பஞ்சமிதரிசு நிலத்தைப் பொருத்து தலித்தல்லாதவரின் அனுபவ பாத்தியம் செல்லாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறினார்.

“பஞ்சமிநிலம் சம்பந்தப்பட்ட உரிமைக்கான ஆவணங்களான கிரையம், அடமானம், கொடை உள்ளிட்ட பத்திரங்கள் எதுவும் தனபால் அவர்களின் வாரிசுகளிடம் இல்லை அதேபோல் உடைமைக்கான ஆவணங்கள் பட்டா & சிட்டா, “அ” பதிவேடு, அடங்கல் உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்கள் எதுவும் தனபால் வாரிசுகள் பெயரில் இல்லை. ஆனால் இவையனைத்தும் பாண்டுரெங்கன்சமுட்டியார் வசம் இருந்தது

இந்தச் சூழலில்தான் இந்த வழக்கை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பஞ்சமிதரிசு நிலம் என்பதை நிறுவிட அவர்கள் பெரும்முயற்சிகள் எடுத்தனர்.
பஞ்சமி நிலத்தில் பாண்டுரங்க சம்பட்டியார் முந்திரி பயிரிட்டிருந்தார். அந்த இடம் தற்போதுவரை ’பறையங்காடு’ என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. வழக்காறு என்பதன் பின்னுள்ள வரலாற்றை அறிய முற்பட்டால் பல்வேறு உண்மைகள் துளங்கும். வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய ஆவணங்களைக் கொண்டு பஞ்சமி நிலங்களை மீட்க முடியும் என்று வழக்கறிஞர் தணிகைச்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வழக்குத் தொடர்பாகப் பல்வேறு மிரட்டல்களைச் சந்தித்த்தாகக் கூறிய அவர், பஞ்சமி நில மீட்பு விவகாரத்தை ஒரு இயக்கமாகச் சேர்ந்து முன்னெடுக்கும்போது மட்டுமே பலன் கிடைக்கும் என்று கூறினார்.
தலித் இயக்கங்கள், கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் உள்ளிட்டவை நிலமீட்புக்கு உறுதுணையாக இருந்தால் இவ்வருடத்தில் மட்டுமே சில நூறு ஏக்கர் நிலங்களை மீட்க முடியும் என்றார்.

பெயரளவில் தலித் ஆதரவு என்று சொல்லாமல் பஞ்சமி நில மீட்புக்கு ஜனநாயக சக்திகள் கைக்கொடுக்கும்போதுதான் இப்போராட்டம் வெல்லும்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

 

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

பஞ்சமி நிலம் மீட்ட நீலதுண்டு கூத்தாநல்லூர் கே. கிருஷ்ணமூர்த்தி
– அருள் முத்துக்குமரன்

பட்டியல் சமூக மக்களின் ஆக்கபூர்வமான போராட்டங்களை கையில் எடுத்து சாதித்துகாட்டிய பஞ்சமி நில மீட்பு போராளி அய்யா நீலதுண்டு கூத்தாநல்லூர் கே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்தித்தோம்.

1938-ல் பிறந்து மருத்துவ உதவியாளராக பணியாற்றியவர் தன்னுடைய அரசு பணியை துறந்து இளமைக்காலம் முதல் தற்போது வரை மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய போராட்ட அனுபவங்களை 84 வயதிலும் உற்சாகமாக சீர்காழி பனங்காட்டுத்தெருவில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தபோது எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.
1967-70 காலகட்டத்தில் கும்பகோணம் அரசு கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களுடன் இணைந்து அம்பேத்கர் மன்றம் என்ற பெயரில் மாணவர் அமைப்பு தொடங்கி டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை பல போராட்டங்கள் மற்றும் இடர்பாடுகள் மத்தியிலும் நண்பர்கள் உதவியுடன் கல்லுரியில் இடம்பெற செய்தார்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு தன் சொந்த கிராமத்தில் குழந்தைகளுக்கு இரவு பள்ளியை நடத்தினார். கல்லூரியில் தொடங்கி நடத்தி வந்த அம்பேத்கர் மன்றத்தை சுற்று வட்டார இளைஞர்களுடன் இணைந்து விரிவுபடுத்த திருவாலி, கோட்டகம், புளியந்துறை, நந்தியநல்லூர் போன்ற 60 கிராமங்களில் இரவு பள்ளிகளை ஆரம்பித்து நடத்தினார். சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பி.எஸ்.மணி அவர்களிடம் ஆறாண்டுகள் உதவியாளராக பணியாற்றினார்.

இதுபோன்ற சமூக பணிகளால் ஈர்க்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் நாகை மாவட்ட தலைவர் வடகரை நரியன் தெருவை சேர்ந்த சி.செல்வநாதன் அவர்கள் கே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை அழைத்து கட்சியில் இணைந்து பணி செய்யுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாவட்ட செயலாளராக பத்தாண்டுகள் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தில் பணி செயதார்..

மாவட்ட செயலாளராக இருந்த காலத்தில் டாக்டர் அம்பேத்கர் பற்றி அம்பேத்கர் பேசுகிறார் என்ற குறுநூல் வெளியிட்டார். அதன் பிறகு ராம்விலாஸ் பஸ்வானின் தலித் சேனாவில் சில காலம் பணியாற்றியுள்ளார், தலித் சேனாவில் இருந்து வெளியேறி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து மாநில விவசாய பிரிவு துணைசெயலாளராக மக்கள் பணி செயதார்.
சீர்காழியில் தலித் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியாகி பிரச்சனை எழுந்தபோது அதை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அப்போதைய காவல்துறை ஆய்வாளர் முருகவேல், துணைக் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசியதற்கு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்த காவல்துறை சரமாரியாக அடித்து காவல் நிலையம் அழைத்து சென்றதாக தெரிவித்தார். காவல் நிலையத்தில் மறுபடியும் காட்டுமிராண்டி தனமாக அடித்தில் தன்னுடைய கேட்கும் திறனை இழந்தார்.

கொடக்காரமூலை கிராமத்தில் குப்புசாமி நாயுடு என்பர் 200க்கும் மேற்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறும் கிருஷ்ணமூர்த்தி, மக்களிடம் ஊர்பணம் பெற்று அதனை சட்ட ரீதியாக வழக்கறிஞர் சடாசரம் அவர்களின் மூலமாக போராடி 74 ஏக்கர் நிலத்தை மீட்டு நிலமற்ற சுக்கிரி, செல்லையன், நடேசன், கல்யாணம் போன்ற 20-கும் மேற்பட்ட புளியந்துறை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

சீர்காழியின் புறநகர்ப் பகுதியில் இருந்த மூன்று ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு தலைவர் கே.பி.எஸ்.மணியின் பெயரில் நகரை உருவாக்கி 100-கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்களின் குடும்பங்கள் வசிப்பதற்கு வழிவகை செய்தார்.
இவ்வளவு களப்பணிகள் செய்து கடைசியாக தான் முதலில் தொடங்கிய அம்பேத்கர் மன்றத்தை மறுபடியும் கட்டமைத்து தற்போதும் பஞ்சமி நில மீட்புக்கு போராடி வருகிறார். சீர்காழி புதிய பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் பன்னிர் செல்வம் நகரில் சர்வே எண் 443-1A,1B,1C கொண்ட மொத்தம் 10 ஏக்கர் 11 சென்ட் பஞ்சமி நிலம் அதில் சர்வே எண் 443-1A,1B சர்வே எண் கொண்ட இடத்தை அரசு கையகப்படுத்தி மருத்துவமனையை கட்டிவிட்டது. மீதம் உள்ள சர்வே எண் 443-1C-ல் இருக்கும் 2 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப்படி மீட்டுள்ளார். மீட்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மக்களிடம் வழங்குவதில் அரசியல் தலையீடு இருப்பதால் தடைபட்டு நிற்கிறது. அதற்கான சட்டப் போராட்டமும் அம்பேத்கர் மன்றம் சார்பாக நடத்தி வருகிறார்.
தன் வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை கண்ட நிலையிலும் என்றைக்கும் நீலதுண்டு அணிவதை விட்டதில்லை அதன் காரணமாக இவரை மக்கள் நீலதுண்டு கூத்தாநல்லூர் கே.கிருஷ்ணமூர்த்தி என்றே அழைக்கின்றனர். அந்த பகுதி மக்களிடம் நீலதுண்டு என்று சொன்னாலே போதும் அவரின் முகவரியையும் அவரையும் பற்றியும் சொல்வதற்கு அந்த அளவிற்கு மக்களின் மனதில் இருக்கிறார். பாபாசாகிப் வழியில் தனது துணைவியாரோடு பௌத்தம் ஏற்று தன் மற்றும் துணைவியாரின் பெயர்களை கெளதமன்-கெளதமி என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் தன்னை இளைய சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக இன்றும் திகழ்கிறார். நீலதுண்டு கூத்தாநல்லூர் கே.கிருஷ்ணமூர்த்தி இறுதியாக என் இறப்புக்கு பிறகு பௌத்த முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் நீலதுண்டை என் உடலில் போர்த்த வேண்டும் என்று எங்களிடம் கூறினார். தான் ஏற்றுகொண்ட கொள்கைக்கு எந்த சமரமின்றி நேர்மையாக பணியாற்றி இருக்கும், கே.கிருஷ்ணமூர்த்தி போன்ற வட்டார தலைவர்களை நாம் நினைவுகூர்வது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நம் கடமையாகும்.

கட்டுரையாளர்: அருள் முத்துக்குமரன், கணித ஆசிரியர்
ஓணம் பண்டிகை: பௌத்தப் பண்பாட்டு வரலாறு நூலின் ஆசிரியர்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்