Aran Sei

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

‘என் மகன் மீண்டும் சிறைக்குத் திரும்பாமல் முதல்வர் பார்த்துக்கொள்வார்’ – அற்புதம்மாள்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

இதழின் உள்ளே...

தலையங்கம்

நண்பர்களுக்கு வணக்கம்,

அரண்செய் மாத இதழின் முதல் ஏட்டை, டிஜிட்டல் வடிவில் கையில் ஏந்தியருக்கும் உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆரதவுக்கும், ஆசிரியர் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வளர்ந்துவரும் டிஜிட்டல் தளத்தில், இளம் தலைமுறையினரின் அறிவுத் தேடலை பூர்த்தி செய்யும் வகையில் அரண்செய் மாத இதழ் அமையும் என்று நம்புகிறோம். அந்த லட்சியத்தை நிறைவேற்றும் பயணத்தில் எங்களோடு கைகோர்த்து நடக்க உங்களையும் அழைக்கிறோம்.

விடுதலை எனும் பெரும் நம்பிக்கையோடு

அரசியல் சாசன பிரிவு 161 மாநில அமைச்சரவையின் உரிமை பற்றி விளக்குகிறது. இதை உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் உறுதி படுத்தியுள்ளது.

பேரறிவாளன், அரசமைப்பின் பிரிவு 161-ன் கீழ் அளித்த மனுவை, மாநில அரசு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படியே, 2018 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதுகுறித்து முடிவெடுக்க கால தாமதம் செய்ததுடன், இறுதியில் இதுகுறித்து முடிவெடுக்க குடியரத் தலைவருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று கூறிவிட்டார்.

நமது நாட்டில் அரசமைப்புக்கு மேல் எவரும் இல்லை. அது ஆளுநராக இருந்தாலும் சரி குடியரசு தலைவராக இருந்தாலும் அரசமைப்பே இறுதியான அதிகாரம் படைத்தது.

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் என ஆளுநர் எடுத்த நிலைப்பாடு அரசியல்சாசனத்தின் படி தவறு என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்த வேண்டும். அதேபோல், மாநில அரசும், ஆளுநருக்கு உள்ள அதிகாரம் குறித்த விளக்கத்தை, அவருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்க  வேண்டும்.

“மாநில அமைச்சரவை முடிவு மதிக்கப்பட வேண்டியதை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு” என்பதை பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 11.02.2020 அன்று தெளிவாக கூறியள்ளதை மறக்கலாகாது.

இதுமட்டுமல்ல, ஒரு கொலை குற்றத்தில் தண்டிக்கப்பட்ட சிறைவாசியை விடுதலை செய்யும் மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு இந்த வழக்கில் மட்டும் தான் கேள்வி எழுப்புகிறது என்பது, இவர்களின் விடுதலைக்கு சட்டமில்லை ஆனால் அரசியலே தடையாக உள்ளது என்பதையும் பொது சமூகம் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளது.

எனவே அரசியல் தவிர்த்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசியல்சாசத்தின் பிரிவு 161 மாநிலத்திற்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அறம்சார்ந்த கோரிக்கையாகும்.

  • ஆசிரியர்

 

ஆசிரியர் குழு

ஆசிரியர்              –              மு. அசீப்

இணை ஆசிரியர்    –              மகிழ்நன்

மூத்த ஆசிரியர்       –              ஆர். மதன்ராஜ்

துணை ஆசிரியர்கள்

அரவிந்ராஜ் ரமேஷ்

தேவா பாஸ்கர்

இதழ் வடிவமைப்பு

சுபாஷ் அரவிந்த்

ரெமோஜ்

தமிழரசன்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

எழுவர் விடுதலை : சட்டம் தன் வேலையைச் செய்ய விடாமல் தடுப்பது என்ன? – தியாகு

சிறைச் சுவர்கள் சட்டத்தின் கற்களால் கட்டப்பட்டவை” என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒருவர் குற்றவாளி என்றால் அவரது செயல் எந்தச் சட்டத்தின் படி குற்றம் என்று சொல்லியாக வேண்டும். அவரைக் கைது செய்வதற்குச் சட்டம் உண்டு. அவரைக் காவலில் வைக்க அல்லது பிணையில் விடுதலை செய்யச் சட்டம் உண்டு. அவர் மீது வழக்கு விசாரண நடத்தவும் குற்றத் தீர்ப்பு அல்லது குற்றமற்ற தீர்ப்பு வழங்கவும் சட்ட வழிவகைகள் உண்டு.

எவ்வளவு கடுங்குற்றமானாலும், எவ்வளவு பெரிய தண்டனையானாலும் சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் சென்று விட முடியாது.

தூக்குத் தண்டனை என்றாலும் வாழ்நாள் சிறைத் தண்டனை என்றாலும் அதனைச் செயலாக்கவும் சட்டங்கள் உண்டு. இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், தண்டனை நீக்கம் அல்லது தண்டனைக் குறைப்பு அல்லது தண்டனைக் கழிவு பெறவும் சட்டத்தில் வழிவகைகள் உள்ளன.

சட்டத்துக்கு அப்பாற்பட்ட வழக்கு, சட்டத்துக்கு அப்பாற்பட்ட தண்டனை, சட்டத்துக்கு அப்பாற்பட்ட குற்றவாளி என்று யாருமில்லை. இப்படித்தான் இதுகாறும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,

ஆனால் –

இராசீவ் காந்தி கொலை வழக்கில் முப்பதாண்டு காலமாகச் சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது சட்டத்தின் ஆட்சி குறித்தே ஐயுற வேண்டியுள்ளது.

வழக்கின் நீண்ட பயணம் பற்றி விரிவாகப் பேசும் தருணம் இதுவன்று. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசும் சரி, நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசும் சரி, அறிவு, சாந்தன், முருகனுக்குத் தண்டனைக் குறைப்பு வழங்குவதையே எதிர்த்தன. அப்போது சொல்லி மறுதலிக்கப்பட்ட  அதே காரணங்களே திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டன. இராசீவ் காந்தி முன்னாள் பிரதமர் என்பது போன்ற சாசுவத உண்மைகள்! நூறாண்டு கழிந்தாலும் அவர் முன்னாள் பிரதமராகத்தானே இருப்பார்?

குற்ற நடைமுறைச் சட்டப்படியே முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இந்த எழுவரையும் விடுதலை செய்திருக்க முடியும். அவர் எழுதிய கடிதத்துக்குத் தடை வாங்க இந்தியப் பேரரசு உச்ச நீதிமன்றப் படி ஏறியது. கலந்து கொள்வதும் (Consultation) இசைவு பெறுவதும் (Concurrence) ஒன்றா என்ற பெரும் ஆய்வுக்குப் போய் வழக்கு ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 72ஆம் உறுப்பின்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, அல்லது 161ஆம் உறுப்பின் படி மாநில ஆளுநருக்கு உள்ள  இறைமை வாய்ந்த தண்டனைக் குறைப்பு அதிகாரம் உறுதி செய்யப்பட்டது. அறிவு சிறைக்குள் இருந்த படி  நீண்ட சட்டப் போராட்டமே நடத்தினார். தகவல் உரிமைச் சட்டத்தையும் உரியவாறு பயன்படுத்தி விடுதலைக்கு எதிரான தடைக்கற்களை ஒவ்வொன்றாகப் பெயர்த்தெடுத்தார்.

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் (ரஞ்சன் கோகோய் ஆயம்) மீண்டும் தீர்ப்பு வழங்கிய பின்  2018 செப்டம்பரில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூடி எழுவரையும் விடுதலை செய்யத் தீர்மானித்து, ஆளுநர் ஒப்பமிடுவதற்காக அனுப்பி வைத்தது. அடுத்த சில நாட்களில் விடுதலை வந்து விடும் என்று எழுவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் காத்திருந்தோம். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அசையவே இல்லை. அவர் கோப்பின் மீது ஏறி உட்காந்திருப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது. பிறகு உச்ச நீதிமன்றமும் சுட்டியது.

பலநோக்குக் கண்காணிப்பு முகமையின் முடிவுக்கு ஆளுநர் காத்திருப்பதாக மாநில சட்ட அமைச்சரே நீதிமன்றத்துக்கு அளித்த விளக்கமும் கெட்டிக்காரன் புளுகுதான்!

அமைச்சரவை முடிவை ஏற்று ஆளுநர் ஒப்பமிடுவது தவிர வேறு வழியில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெளிவாக்கி விட்டனர். நாளேடுகளிலும் ஊடக விவாதங்களிலும் ஆளுநரின் அடம்தான் அம்பலப்பட்டது. எழுவர் விடுதலைக்கு ஒப்பமிட ஆளுநருக்கு மனசாட்சி இடம்தராவிட்டால் அவர் பதவி விலகட்டும் (SIGN OR RESIGN) என்று நானும் எழுதினேன்.

இதற்கிடையில் அறிவு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியது, ஆளுநர் முடிவுக்குக் காலமும் குறிக்கப்பட்டது, ஆனால் இம்முறை ஆளுநர் ஒரு புதுக் கரடியை அவிழ்த்து விட்டார். அவருக்கு அதிகாரம் இல்லையாம். கோப்பைக் கட்டிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டாராம்!

எடப்பாடி அமைச்சரவை ஆடியது வெறும் நாடகம்தானோ என்ற ஐயம் எழுந்தது. சட்டப் பேரவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றால் எழுவர் விடுதலை விரைவாக நடந்தேறும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஸ்டாலின்தான் வாறாரு விடியல் தரப் போறாரு என்று பலரும் நம்பியது போலவே சிறை உள்ளங்களும் நம்பின,

புதிய அரசு பொறுப்பேற்ற புதிதில் எத்தனையோ அவசரப் பணிகளுக்கிடையே எழுவர் விடுதலைக்கான சட்ட ஆலோசனைகள் நடப்பதாகச் செய்திகள் உலவின. அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் படி முன்பு அமைச்சரவை இயற்றிய தீர்மானத்தை மீண்டும் ஒரு முறை இயற்றி அனுப்பலாம்! அல்லது அதே தீர்மானத்தை இன்னும் வலுவாக மீள்வரைவு செய்து புதிதாக இயற்றி அனுப்பி ஆளுநரை வலியுறுத்தலாம். சில நாள் அல்லது சில வார அவகாசத்துக்குப் பின் மாநில அரசே நீதிமன்றத்தை அணுகலாம். எப்படியும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் போராடி வெற்றி காணலாம். அது வரை காலவரையற்ற காப்பு விடுப்பு வழங்கலாம்.

இப்படி எதுவும் செய்யாமல் தமிழக முதல்வர் குடியரசுத் தலைவருக்கு மடல் எழுதினால் போதும் என்று அறிவுரை சொன்னது யாரோ? ஆளுநர் பெயரால் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு விட்டுத் தருவது போல் இந்த முயற்சி அமைந்து விட்டது. குடியரசுத் தலைவர் எந்த விடையும் சொல்ல மாட்டார். சொன்னாலும் மறுப்புத்தான் சொல்வார் என்பது முதல்வருக்குத் தெரியாதா?

இப்போது ஸ்டாலின் என்ன சொல்கிறார்? உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு அடுத்த முயற்சி செய்வோம் என்கிறாராம். சிக்கலுக்குள் தானாகவே தலையை நுழைத்துக் கொண்டு இவ்வளவு சிக்கல் என்று தெரியாமல் போய் விட்டதே என்று சொல்வதற்கா?

சட்டப்படி எல்லாச் சிக்கல்களும் அவிழ்க்கப்பட்டு பூட்டு திறக்கப்பட்டு விட்டது. விடுதலைக் கதவு விரியத் திறக்க வேண்டும். இதற்குப் பிறகும் அது தடைபட்டால் — ஒருநாள் தாமதப்பட்டாலும் — சட்டம் காரணமில்லை. அரசியல் காரணமாக இருக்கலாம். அந்த அரசியலில் மாட்டிக் கொள்ளாமல் தமிழக அரசு தன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

தளைப்படுத்தவும் சிறைப்படுத்தவும் பொருந்திய சட்டம் விடுதலைக்கு மட்டும் பொருந்தாமல் போய் விடுமா? அடைபட்டவர்கள் குற்றமறியாதவர்களே ஆனாலும் சட்டத்தை மதிக்கிறார்கள். அடைத்து வைத்திருப்பவர்கள் சட்டத்தை மதிக்க மாட்டார்களா? பார்ப்போம்!

– தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ராஜீவ் காந்தி படுகொலை: 40 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – தேவா பாஸ்கர்

1984 – 1990

1984

அக்டோபர் 31 – இந்திராகாந்தி தனது மெய்காப்பாளர்களால் கொல்லப்படுகிறார். அன்று மாலையே, ராஜீவ் பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

டிசம்பர் – இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி 401 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெறுகிறது. ராஜீவ் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்

1985 

1985  மற்றும்  1986  ஆண்டுகளுக்கு  இடையே அஸ்வமேத யாகத்தை (பண்டைய இந்திய மன்னர்கள் தங்கள் ஆட்சியின் இறையாண்மையை நிரூபிக்க இந்த யாகத்தை நடத்தினர்) நடத்த, சந்திராசாமி இலங்கை செல்கிறார். (ஜெயின் கமிஷனிடம் சாட்சியம் அளித்தபோது சந்திராசாமி இதை தெரிவித்தார்)

1986

அக்டோபர் 2 – கரம்ஜித்சிங் என்ற சீக்கிய இளைஞர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், இந்த கொலை முயற்சி தோல்வியடைகிறது. ராஜீவ் உயிர்தப்புகிறார்.

பிப்ரவரி 28  –  போபர்ஸ்  பீரங்கி பேரத்தில் சம்பந்தபட்ட சுவீடன் நாட்டு பிரதமர் ஓலப் பால்மே, ஒரு மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.

1987

ஜூலை 29 –  ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது பிரபாகரன் டெல்லியில் இருக்கிறார். அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த பிரேமதாசா இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கிறார்.

ஜூலை 29 –  இலங்கை கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொள்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இலங்கை கடற்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியின் பின்புறமாக ராஜீவ் காந்தியை தாக்க முயல்கின்றார்.

ஜூலை – இந்திய ராணுவம், அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு செல்கிறது.

நவம்பர் 23 – ஓஸ்லோவில் (நார்வே நாட்டின் தலைநகரம்) உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர் ஒருவர், சீக்கியர்களுடன் தொடர்புகொள்ள முயல்வதாக இந்திய உளவு அமைப்பான ‘ரா’ அறிக்கை அளிக்கிறது. சீக்கியர்களும் ராஜீவ் காந்தி மீது கோபாமாக உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

1988

பிரேமதாசா, இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

1989

மே – பிரேமதாசா புலிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குகிறார்.

நவம்பர் 9 – சோசியலிச மற்றும் முதலாளித்துவ ஜெர்மனிகளை பிரித்து வைத்திருந்து பெர்லின் சுவர் தகர்க்கப்படுகிறது. இது, சோவித் யூனியனின் வீழ்ச்சியை உறுதி செய்கிறது. இதன் தாக்கம், உலகின் பல்வேறு நாடுகளில், வேகமான பல அரசியல் மாற்றங்களை கோருகிறது.

நவம்பர் 24 –  புலிகளுக்கும், பிரேமதாசாவுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக ‘ரா’ அறிக்கை அளிக்கிறது. (ஜெயின் கமிஷன் முன்பு லெப்.ஜெனரல் அமர்ஜித்சிங் கல்கத் அளித்த வாக்குமூலத்தில், 1989 இறுதியில் இலங்கை ராணுவம் புலிகளுக்கு ஆயுதம் வழங்குவதாக மற்ற தமிழ் போராளிக் குழுக்கள் தங்களிடம் தெரிவித்தனர் என கூறினார்.)

டிசம்பர் –  நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றதால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை இழக்கிறார். ஜனதா தளம் கட்சியை சேர்ந்த வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்கிறார்.

டிசம்பர் 12 – இந்திய உளவுத்துறையின் அறிக்கை புலிகளால் ராஜீவ் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு நேரடியாக அச்சுறுத்தல் உள்ளது என கூறுகிறது. மேலும், கூடங்குளம் அணுமின் உலைக்கு திட்டத்திற்கு எதிராக, நக்சல்கள் ராஜீவ் மீது கோபமாக உள்ளதாகவும், இது தவிர ஆப்ரேஷன் புளுஸ்டார் காரணமாக ராஜீவ் மீது சீக்கியர்களும் கோபமாக உள்ளதாக கூறுகிறது.

டிசம்பர் 31  – இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படும் என இந்திய மற்றும் இலங்கை அரசுகள் அறிவிக்கின்றன.

1990

ஜனவரி 30 –  உரிய மாற்று நடவடிக்கை எதுவும் இல்லாமல் ராஜீவுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்த சிறப்பு பாதுகாப்பு படையின் (Special Protection Group) திரும்பபெறப்பட்டது.

ஜீலை 19 – அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவுடன் புலிகள் தொடர்பில் இருப்பதாக உளவுத்துறையின் ஆண்டறிக்கை கூறுகிறது. அதில் சி.ஐ.ஏ தங்களுக்கு உதவும் பட்சத்தில், திரிகோணமலை மீதான அமெரிக்காவின் ஆசையை தீர்ப்பதாக புலிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் – இந்தியாவின் 8 வது பிரதமராக சந்திரசேகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

செப்டம்பர் – இஸ்ரேல் உளவுத்துறையான மொசட் (Mossad) அமைப்பின் முன்னாள் அதிகாரி விக்டர் ஓஸ்ட்ரோஸ்ட்கி எழுதிய By way of deception என்ற புத்தகம் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் போராளிக் குழுவுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் மொசாட் எவ்வாறு பயிற்சி அளித்தது என்பதை அந்த புத்தகத்தில் ஓஸ்ட்ரோஸ்ட்கி விளக்குகிறார்.

1991 – 2000

1991                                                    

ஜனவரி 16 – வளைகுடாப் போர் துவங்குகிறது. அமெரிக்க போர் விமானங்கள் ஈராக் மீது குண்டு வீசித் தாக்குகின்றன.

ஜனவரி 20 – ஈராக் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலை கண்டித்து பிரதமர் சந்திரசேகருக்கு ராஜீவ் காந்தி கடிதம் எழுதுகிறார். அதில், இந்தியா அமெரிக்காவுக்கு ஆதவளிக்கக் கூடாது என்று குறிப்பிடுகிறார்.

ஜனவரி 23 – இந்திய உளவுத்துறை, ராஜீவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அமைப்புகளின் பெயர்களை வெளியிடுகிறது.

பிப்ரவரி 7 – ராஜீவ்காந்தி, வளைகுடா போர் பற்றி ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். அதில், அமெரிக்காவை கடுமையாக விமர்சிக்கிறார்.

பிப்ரவரி 10 – நாடாளுமன்ற இல்லத்தில் ராஜீவ் காந்தியை சந்திக்கும், அகாலி தளம் கட்சியின் தலைவர் மகந்த் சேவாதாஸ் சிங், ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிக்கிறார்.

பிப்ரவரி – ராஜீவ் காந்தியின் இல்லத்தை வேவுபார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த இரண்டு காவலர்கள் பிடிபடுகின்றனர்.

பிப்ரவரி – மகந்த் சேவாதாஸ் சிங் ராஜீவை அவருடைய இல்லத்தில் மீண்டும் சந்திக்கிறார். அப்போது ஹரியானவைச் சேர்ந்த காவலர்கள் பிடிபட்டதை சுட்டிக்காட்டி, அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதை மீண்டும் தெரிவிக்கிறார்.

பிப்ரவரி 28 – இந்தியா வந்த ஆயுத வியாபாரி அட்னான் கசோகி, பிரதமர் சந்திரசேகரையும் சந்திராசாமியையும் சந்தித்தார்.

மார்ச் 13 – பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத்தின் தூதர், ராஜீவை சந்தித்து, அவரின் உயிருக்கு உள்ள ஆபத்து பற்றி கூறுகிறார். .

ஏப்ரல் – சந்தேகத்திற்கிடைமான வகையில், இரண்டு அமெரிக்க உளவாளிகளின் நடமாட்டம் பற்றி  இந்திய உளவுத்துறைக்கு (IB) ‘ரா’ தகவல் அளிக்கிறது. (இந்த தகவல், ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது).

ஏப்ரல் – பாலஸ்தீனத்தின் தூதர் ராஜீவை மீண்டும் சந்தித்து அவரை எச்சரிக்கிறார்

மே –  ராஜீவ் கொலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இன்டலிஜன்ஸ் டைஜெஸ்ட் என்ற உளவுத்துறையின் பத்திரிக்கையின் நகலை, அனைத்து மாநிலங்களுக்கும் அதன் இணை இயக்குநர் பட்நாயக் அனுப்பினார். அதில் தீர்க்கதரிசனமாக, ராஜீவை வித்தியாசமான முறையில் கொலை செய்ய தீவிரவாதிகள் சதிசெய்வதாக கூறப்பட்டிருந்தது.

மே –  ராஜீவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அவர் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை தொலைகாட்சியில் பார்த்த யாசர் அராபத், இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதரை தொடர்புகொண்டு, ராஜீவின் உயிருக்கு உள்ள அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவிக்கிறார்.

மே – சென்னையில் ராஜீவ் கலந்துகொள்ள இருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு, செங்கல்பட்டு சாலையில் இருந்த பள்ளி மைதானம் காவல்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சி அந்த இடத்தை ஏற்க மறுக்கிறது.

மே 20 – (கொலைக்கு முன்தினம்) உளவுத்துறையின் இணை இயக்குனர் தாக்கூர், உள்துறை இணைசெயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ராஜீவிற்கு உடனடியாக என்.எஸ்.ஜி (National Security Guard) பாதுகாப்பு அளியுங்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டது.  (இந்த கடிதம் என்னுடைய அறிவுரையின் பேரில் தான் எழுதப்பட்டது என்று வர்மா கமிஷனின் முன்பு சாட்சியளித்த அப்போதைய உளவுத்துறை தலைவர் எம்.கே.நாராயணன் தெரிவித்தார்.)

மே 21 – சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற  தேர்தல்  பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராஜீவ்  காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

மே 22 – இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர்  காவல் நிலையத்தில் முதல்  தகவல்  அறிக்கை  பதிவு  செய்யப்பட்டது.

மே 23 – காலாவதியான தடா (TADA) சட்டம் அரசாணையின் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

மே 24 – ராஜீவ் காந்தியின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடைபெற்றது.

மே 24 – இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.  வழக்கை   விசாரிக்க  சிறப்பு புலனாய்வுக் குழு (Special Investigation Team) உருவாக்கப்பட்டது. இதன்  தலைவராக  ஐபிஎஸ்  அதிகாரி  கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

மே 27 –  ராஜீவ்  காந்திக்கு  வழங்கப்பட்ட  பாதுகாப்பில்  குறைபாடு இருந்ததா?  என்பது  குறித்து  விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

ஜீன் 2  –  ஆங்கில  பத்திரிக்கையான  அப்சர்வர் (இங்கிலாந்து நாளிதழ்), பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர்  யாசர்  அராபத்,  ராஜீவ்   காந்தியை  சந்தித்தபோது, ”நீங்கள் (ராஜீவ் காந்தி) கொலை செய்யப்படலாம்”  என  அவரிடம் கூறியதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

ஜுன் 11 – இந்த கொலை வழக்கில், முதன்முதலாக பாக்கியநாதன் மற்றும் பத்மா கைது செய்யப்பட்டனர். (நளினியின் தாய் மற்றும் அண்ணன்)

ஜுன் 14 – நளினி மற்றும் முருகன் கைது.

ஜுன் 18 – ராபர்ட் பயஸ் கைது.

ஜுன் 19 – பேரறிவாளன் கைது.

ஜுன் 26 – ஜெயக்குமார் கைது.

ஜுலை 2 – சுபா சுந்தரம் கைது.

ஜுலை 4 – டெல்லியில் கனக சபாபதி மற்றும் ஆதிரை கைது.

ஜுலை 7 – பாஸ்கரன் மற்றும் விஜயன் கைது.

ஜுலை 17 – கோடியக்கரை சண்முகம் கைது.

ஜுலை 18 – சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த கோடியக்கரை சண்முகம் சந்தேகத்திற்கடமான வகையில் தப்புகின்றார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட மாளிகையின் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில், அவர் தூக்கில் தொங்குவது கண்டுபிடிக்கப்படுகிறது.

ஜுலை 22 – கோடியக்கரை சண்முகம் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக காவல்துறை கூறியிருந்த நிலையில், அவருடைய கழுத்து எழும்பு முறிபடவில்லை என தி இந்து செய்தி வெளியிட்டது.

ஜுலை 22 – சின்ன சாந்தன் கைது

ஜுலை 30 – கோவையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த டிக்சன் மற்றும் குணா சயனைட் குப்பியை கடித்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.

ஆகஸ்ட் 18 – பெங்களுருவில் ரங்கநாத் என்பவரை பிடித்த காவல்துறை, அவர் மூலம் சிவராசன் மற்றும் சுபா ஒளிந்திருந்த இடத்தை கர்நாடக காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர்.

ஆகஸ்ட் 19 – பெங்களுரு புறநகரான கோனனேகுண்டாவில், ராஜீவ் காந்தியை கொலை செய்த குழுவில் இடம் பெற்றதாக கருதப்படும் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், கீர்த்தி, அம்மன், ஜமுனா ஆகியோர் சயனைட் குப்பி கடித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். (அவர்களை ஏறக்குறைய 36 மணி நேரத்திற்கு முன்பே ஆயுதப்படைகள் சுற்றிவளைத்த சூழலிலும், அவர்களை உயிருடன் பிடிக்க தவறியது பலத்த சந்தேகத்தை எழுப்பியது)

ஆகஸ்ட் 23 – ராஜீவ் காந்தியின் கொலையில் உள்ள மிகப்பெரிய சதியை (Larger Conspiracy) விசாரிக்க நீதிபதி எம்.சி.ஜெயின் தலைமையில் ஜெயின் கமிஷன் உருவாக்கப்பட்டது.

செப்டம்பர் 3 – சிவராசன் மற்றும் சுபாவின் உடல்கள் தீயிட்டு எரிக்கப்படுகிறது.

அக்டோபர் 3 – இரும்பொறை கைது.

அக்டோபர் 13 – தனசேகரன் கைது

அக்டோபர் 13 – திருச்சியில், குண்டு சாந்தன் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

1992

ஜனவரி 6 – ரவிச்சந்திரன் மற்றும் சுசீந்திரன் கைது

ஜனவரி 31 – விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், பெண் புலிகள் பிரிவின் தலைவர் அகிலா ஆகிய மூவரையும், தலைமறைவு குற்றவாளிகளாக இந்திய அரசு அறிவிக்கிறது.

பிப்ரவரி 4 – விக்கி கைது.

பிப்ரவரி 14 – குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.

மே 16 – விஜயானந்தன், ரூபன், சண்முக வடிவேலு என்கிற தம்பியண்ணா, ஜெயக்குமாரின் மனைவி சாந்தி, விஜயனின் மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் கைது.

மே 19 – சங்கர் கைது

மே 20 –  சிபிஐயின்  சிறப்பு  புலனாய்வுக்  குழு,  நீதிபதி  சித்திக்  முன்பு,  இறந்த  12  பேர், தலைமறைவான  3  பேர், கைதான  26  பேர்  உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட  41  பேர்  மீதும்  449  பக்க குற்றப்பத்திரிக்கையை  தாக்கல்  செய்தது.

ஜுன் 15 – வர்மா கமிஷன் தன்னுடைய இறுதி அறிக்கையை, சமர்ப்பித்தது. அதில், ராஜீவ் காந்திக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் ஆனால் உள்ளூர் (தமிழக) காங்கிரஸ் கட்சியினர், அவருடைய பாதுகாப்பு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 9 – இந்த  வழக்கில்  விடுதலை  புலிகள் இயக்கத்தின்  தலைவர்  பிரபாகன்  முதல் குற்றவாளியாகவும்,  பொட்டு  அம்மான்  இரண்டாவது  குற்றவாளியாகவும், அகிலா  மூன்றாவது  குற்றவாளியாகவும் தடா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.

1993

மே 1 – இலங்கை அதிபர் பிரமேதாசாவை புலிகள் தற்கொலை தாக்குதல் மூலம் படுகொலை செய்கின்றனர்.

மே 5 – பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில், ராஜீவ் கொலை வழக்கின் முன்  விசாரணை (Pre Trial) தொடங்கப்பட்டது. சிபிஐயின்  சிறப்பு  புலனாய்வுக்  குழு  (எஸ்.ஐ.டி)   தரப்பில்  பி.ராஜமாணிக்கம் ஆஜரானார். குற்றம்  சுமத்தப்பட்ட  41  பேரில்,  முன்று பேர் தலைமறைவு  குற்றவாளிகளாகவும்,  12  பேர் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டனர்.

நவம்பர் 2 – இந்த வழக்கின் முன் விசாரணை முடிந்தது.

நவம்பர் 24 –  குற்றம்  சுமத்தப்பட்ட  26  பேர் (நளினி, சாந்தன், முருகன், சங்கர், டி.விஜயானந்தன், சிவரூபன், கனகசபாபதி, சந்திரலேகா, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தி, விஜயன், செல்வலக்‌ஷ்மி, பாஸ்கரன், சண்முகவடிவேலு, ரவிச்சந்திரன், சுசீந்திரன், பேரறிவாளன், இரும்பொறை, பாக்கியநாதன், பத்மா, சுந்தரம், தனசேகரன், ராஜசூரியா, விக்னேஷ்வரன்,  ரங்கநாத்) செய்த குற்றங்கள் தொகுக்கப்பட்டு நீதிமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்டது.

1994

ஜனவரி 19 – ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை தொடங்கியது.

மே 29 – விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிராபகரன், பொட்டு அம்மான் மற்றும் அகிலா தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

ஜுன் 3 – பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் அகிலாவை நாடு கடத்த இலங்கை அரசிடம்  இந்திய  அரசு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்தது.

1995

நவம்பர் 1 – ராஜீவ் கொலை வழக்கின் மூன்றாவது குற்றவாளியான அகிலா  மரணமடைந்தார்.

டிசம்பர் 28 – சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவின் வழக்கு ஆவணங்களின் (CASEDIARY, CRIME RECORD) நகலை சமர்ப்பிக்க வேண்டும் என, ஜெயின் கமிஷன் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

1996

ஜனவரி 25 – வழக்கு ஆவணங்கள் தொடர்பாக ஜெயின் கமிஷனின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.பி.பருச்சா மற்றும் எஸ்.சகீர் அகமது அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு, சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் (தடா நீதிமன்றம்)  நிலுவையில் இருக்கும் நிலையில், அதில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

1997

மே 5 – அரசு தரப்பு சாட்சிகளான 288 பேரிடம் விசாரணை முடிந்தது.

ஜுன் 21 – சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளிடம் கேள்வி  கேட்பது  தொடங்கியது.

ஜீலை 21 – அரசுதரப்பு, வழக்கு குறித்து மீள்வரையரையை வழங்க  துவங்கியது. இது ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவடைந்தது.

ஆகஸ்ட் 23 –  ஜெயின் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை அப்போதைய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவிடம் வழங்கியது. அதில், சந்திரசேகர் ஆட்சி காலத்தில் ராஜீவுக்கு அச்சுறுத்தல் அதிகம் இருந்தும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என நீதிபதி ஜெயின் குறிப்பிட்டிருந்தார்.

ஆகஸ்ட் 14 – குற்றவாளிகள் தரப்பு  வாதம்  தொடங்கியது

நவம்பர் 5 –  குற்றவாளிகள்  தரப்பு  வாதம்  முடிந்து, ஜனவரி 28 ஆம் தேதிக்கு (1998) தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

1998

ஜனவரி 7 – சந்திராசாமிக்கு நெருக்கமானவரான ராஜேந்திர ஜெயின் என்பவர், ஜெயின் கமிஷன் முன்பு வாக்குமூலம் அளிக்க இருந்த நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில், மர்மமான முறையில்  இறந்து கிடந்தார்.

ஜனவரி 28 – தடா நீதிமன்ற நீதிபதி நவநீதம், குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்தார். ராஜீவ் காந்தியின் கொலைக்கு விடுதலை புலிகளே காரணம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. தண்டனை பெற்ற அனைவரும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மார்ச் 7 –  ஜெயின் தனது 2000 பக்க இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். அந்தஅறிக்கையில், சந்தேகத்திற்கு இடமானவர்கள் என்று கூறிய 21 பேரை பற்றி விசாரிக்கவும், சந்திராசாமிக்கு இந்த கொலையில் உள்ள தொடர்பை விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ராஜீவ் கொலையில் வெளிநாட்டு சதி இருப்பதை மறுக்க முடியாது என்றும் ஜெயின் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் சாமியார் சந்திராசாமி

ஆகஸ்ட் 14 – ஜெயின் கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் இவ்வழக்கை விசாரிக்க, சிபிஐ தலைமையில், பல்நோக்கு விசாரணை முகமை என்ற விசாரணை அமைப்பை (எம்டிஎம்ஏ) அப்போதைய பாஜக அரசு உருவாக்கியது.

செப்டம்பர் –  உச்சநீதிமன்ற நீதிபதிகள், கே.டி.தாமஸ், டி.பி.வத்வா மற்றும் எஸ்.எஸ்.எம்.காதிரி அடங்கிய அமர்வு 26 பேரின் மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணையை தொடங்கியது.

1999

மார்ச் 14 – ஜெயின் தனது சொந்த ஊரான ஜோத்பூருக்கு சென்றார். அவரை சோனியா காந்தி நேரில் சந்தித்து நன்றி கூறினார்

மார்ச் 27 – உச்சநீதிமன்றம் 26 பேரின்  மரணதண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

மே 11 – உச்சநீதிமன்ற நீதிபதிகள், கே.டி.தாமஸ், டி.பி.வத்வா மற்றும் எஸ்.எஸ்.எம்.காதிரி அடங்கிய அமர்வு நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது.

ராப்ர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. தடா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜுன் 17 – பல்நோக்கு விசாரணை முகமை விசாரணையை தொடங்கியது. அந்த அமைப்பு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஜுலை 17 – தூக்கு தண்டனையை எதிர்த்து பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினி மறுசீராய்வு மனுதாக்கல் செய்தனர்.

அக்டோபர் 8 – பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினியின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

அக்டோபர் 10 – பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினி தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக ஆளுநரிடம்  கருணை  மனுவை அளித்தனர்.

அக்டோபர் 27 – பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினியின் கருணை மனுவை ஆளுநர் நிராகரித்தார்.

2000

ஏப்ரல் 19 – அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவை, நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக  குறைக்க முடிவெடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

ஏப்ரல் 21 – தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஏப்ரல் 26 – தமிழக அரசு முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது.

2000 – 2021

2002

ஏப்ரல் 10 – விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியில், பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் கலந்து கொண்ட அந்த சந்திப்பில், அவரிடம் ராஜீவ் கொலைபற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த பிரபாகரன், ’’அது பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு துன்பியல் நிகழ்வு, அது தொடர்பாக கருத்து கூற நான் விரும்பவில்லை’’ என்று பதில் அளித்தார்.

2007

பல் நோக்கு விசாரணை முகமைக்கு (எம்டிஎம்ஏ)  8 வது முறையாக கால நீட்டிப்பு செய்யப்பட்டது.  இருந்தபோதும்,  அந்த  அமைப்பு இடைக்கால அறிக்கையைக் கூட சமர்ப்பிக்கவில்லை.

2008

மார்ச் 18 – சிறையில் இருக்கும் நளினியை, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்.

2011

ஆகஸ்ட் 12 – முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் கருணை மனுவை 11 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு தலைவர் நிராகரித்தார்.

ஆகஸ்ட் 26 – செப்டம்பர் 9 ஆம் தேதி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 30 – குடியரசுத் தலைவர், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்  என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 30 – முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,   மூவரின்  மரண  தண்டனைக்கும் தடை விதித்தது. பின்னர் இந்த  வழக்கு  உச்ச  நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

2012

மே 1 – முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் மனுவை  உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

2013

செப்டம்பர் – பல்நோக்கு விசாரணை முகமையால் விசாரிக்கப்பட்டு வரும் ராஜீவ் கொலை வழக்கை கண்காணிக்க வேண்டும் என, தடா நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.

மார்ச் 19 – நீதிபதி வர்மா கமிஷன் மற்றும் ஜெயின் கமிஷன் அறிக்கைகளைத் தரக் கோரி, தகவல் அறியும் உரிமைச சட்டத்தின் கீழ் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.

ஜுலை 13 – வர்மா மற்றும் ஜெயின் கமிஷன் தொடர்பான ஆவணங்கள் தங்களின் இல்லை என உள்துறை அமைச்சகம் பதில் அளித்தது.

டிசம்பர் 10 – வர்மா மற்றும் ஜெயின் கமிஷன் தொடர்பான ஆவணங்களை கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

2014

பிப்ரவரி 18 – பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தனின் கருணை மனு மீது முடிவெடுப்பதில், குடியரசு தலைவர் தரப்பில் செய்யப்பட்ட கால தாமதத்தை அடிப்படையாக வைத்து, உச்ச நீதிமன்றம் மூவரின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

பிப்ரவரி 19 – இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 435ஐ பயன்படுத்தி ஏழு தமிழர்களை (முருகன், சாந்தன், நளின், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்) உடனடியாக விடுதலை செய்ய உள்ளோம் என்று தமிழக அரசின் முடிவை, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒன்றிய அரசிடம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

ஏப்ரல் 1 – உச்ச நீதிமன்றம் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஒன்றிய அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏப்ரல் 25 – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் எழுவரின் தண்டனை காலத்தை குறைப்பது அல்லது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க, அரசியல் சாசன அமர்வை உருவாக்கிய உச்ச நீதிமன்றம், ஏழு கேள்விகளுக்கு முடிவு காண அந்த அமர்விற்கு உத்தரவிட்டது.

ஜுலை 23 – மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் தண்டனை காலத்தை குறைத்து அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.

2015

ஆகஸ்ட் 12 – மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டணைகளை குறைப்பது, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தமிழக அரசு விடுவிப்பதனால் ஏற்படும் அரசியலமைப்பு பிரச்சனைகள் ஆகியவை தொடர்பாக தீர்ப்பளிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியது.

டிசம்பர் 2 – குற்றவாளிகள் விடுதலை செய்யப்படலாமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மனு அளிக்காமல், மாநில அரசு தாமாக முன்வந்து குற்றவாளிகளின் தண்டனை காலத்தை குறைக்க கூடாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 14 – தமிழக அரசு தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

டிசம்பர் 30 – சிறையில் 24 வருடங்களை கழித்த நிலையில், தண்டனை காலத்தை குறைக்க கோரிய கருணை மனுவை பேரறிவாளன் தமிழக ஆளுநரிடம் தாக்கல் செய்தார்.

2016

ஜனவரி  16  –  பாலிவுட்  நடிகர்  சஞ்சய்  தத்,  எதன்  அடிப்படையில்  தண்டனை காலத்திற்கு  முன்பே  சிறையில்  இருந்து  விடுவிக்கப்பட்டார்  என்பதை  பற்றி அறிய  விரும்புவதாக  பேரறிவாளன்  தகவல்  அறியும்  உரிமைச்  சட்டத்தின்  கீழ்  தகவல்  கோரினார்.

மார்ச் 2 – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

ஏப்ரல் 19 – தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

ஏப்ரல் 20 – ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தண்டனை காலத்தை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் உருவாக்கியது.

2017

ஏப்ரல் 20 – பேரறிவாளனின் மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், ராஜீவ் கொலையில் உள்ள சதியையும், பெல்ட் குண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பாகவும் விசாரிப்பதாக ஒப்புக் கொண்டது.

நவம்பர் 14 – இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்த நிலையில், 1991 ஆம் ஆண்டு, பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்த சிபிஐ அதிகாரி வி.தியாகராஜன், இரண்டு  9 வோல்ட் பேட்டரிகள் எதற்கு வாங்கப்பட்டது என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பேரறிவாளன் கூறியதை, வாக்குமூலத்தில் பதிவு செய்யவில்லை  என்ற தகவலை, உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தார்.

டிசம்பர் 12 – ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சதி திட்டத்தை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை முகமை, இவ்வழக்கில் எந்த விஷயத்தையும் கண்டறியவில்லை எனவும் இது முடிவில்லாமல் போய் கொண்டிருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

2018

ஜனவரி 23 – குற்றவாளிகளின் தண்டனை காலத்தை குறைப்பது தொடர்பாக உருவாக்கப்பட்ட மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு, ஏழு தமிழர்களின் தண்டனை காலத்தை குறைப்பது தொடர்பாக தமிழக அரசு கொடுத்த முன் மொழிவிற்கு, மத்திய அரசு மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மார்ச் 14 – 1999 ஆம் ஆண்டு மே மாதம், விதிக்கப்பட்ட தீர்ப்பை மறுவிசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏப்ரல் – ஏழு தமிழர்களின் தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு பரிந்துரை செய்ததை மத்திய அரசு நிராகரித்திருப்பாதகவும், குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஜுன் 11 – ஏழு தமிழரை விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்க மேலும் சில தகவல்களை தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் கோரியது.

ஜுன் 15 – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

ஆகஸ்ட் 20 – தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் இரண்டு ஆண்டுகளுக்கு (2016) முன்னர் தமிழக ஆளுநரிடம் அளித்த மனுவின் பிரதியை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 6 – பேரறிவாளன் ஆளுநருக்கு அளித்த கருணை மனு தொடர்பான வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு, பேரறிவாளனின் கருணை மனு மீது, அரசியல்சாசன பிரிவு 161ன் கீழ், ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது.

செப்டம்பர் 9 – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, ஏழு தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

2021

ஜனவரி – உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆளுநர் இதன் மீது பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தது.

இதை தொடர்ந்து நீதிபதி, ”இதற்கு நீங்கள் தான் பொறுப்பு, ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என ஆளுநரிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.

விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசு தான் முடிவெடுக்கும் என ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறியபோது, “அரசியல் சாசன பிரிவு 161-ன் படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமையுள்ளது” என நீதிபதி கூறினார்.

ஜனவரி 25 – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கிறார்.

மே 19 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுவிக்க கோரி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

ஜூலை 1 – அரண்செய் சிறப்பிதழுக்கு அளித்த நேர்காணலில், ‘என் மகன் மீண்டும் சிறைக்குத் திரும்பாமல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

பொம்மலாட்டம் :  ஒரு கொலை, பல கரங்கள் – மு.அசீப்


புகழ்பெற்ற பத்திரிகையாளர் தாரிக் அலி, இந்திரா காந்தியின் படுகொலை தொடர்பாக   எழுதிய புத்தகத்தில்  (The Assassination: Who Killed Indira Gandhi?) , அமெரிக்காவின் ஆதிக்க வளையைத்திற்குள் சிக்காமல், அவருடைய தந்தை நேருவைப் போலவே சுதந்திர சிந்தனை கொண்டவராக இந்திரா காந்தி திகழ்ந்தார் என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்திராகாந்தி மீது சீக்கியர்களுக்கு இருந்த நியாயமான கோபத்தை, தங்களுக்கு சாதகமக பயன்படுத்தி, இந்திராவை பகை தீர்த்திக் கொண்டது வாஷிங்டன் என்று கூறுகிறார்.

அதுஒரு கற்பனை கலந்த தொலைகாட்சித் தொடருக்காக எழுதப்பட்ட கதை. அந்த நோக்கம் நிறைவேறாததால், தாரிக் அலி அதை புத்தகமாக கொண்டு வந்தார். அதை படிக்கும்போது, கற்பனை என்று அதில் சேர்க்கப்பட்ட விஷயங்கள், சுவாரஸ்யத்திற்கான சில இடை செருகல்கள் மட்டுமே என்பதையும், மற்றபடி அதன் அடிப்படையாக கதை நெடுக நடைபெறும் நிகழ்வுகளும், காட்சியமைப்பும், வசனங்களும் கூட உண்மையோடு நெருக்கமாக இருப்பதை உணர முடியும்.

தாயின் மரணத்திற்குப் பின்னால், அந்த பொறுப்பை ஏற்ற தனையனுக்கும் அதுவே நேர்ந்தது. இம்முறை படுகொலை செய்யப்பட்ட இடமும், விதமும் அதை செய்து முடித்த நபர்களும் வேறாக இருந்தாலும், இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்காக தாரிக் அலி கூறும் காரணம், ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும் அப்படியே பொருந்துவதை பார்க்க முடிகிறது. ராஜீவ் படுகொலைக்குப் பின்னால் உள்ள, மிகப்பெரிய சதியை (Larger Conspiracy) விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் கமிஷன் முன்வைத்த பரிந்துரையும், அதைத்தொடர்ந்து சிபிஐ தலைமையில் பல்வேறு ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைத்து, பல்நோக்கு விசாரணைக் குழு (எம்டிஎம்ஏ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதுமே இதை உறுதிப்படுத்துவதற்கான சாட்சியங்களாகும்.

வலிமையான தலைவர்

ராஜீவ்காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒரு விபத்து என்றே கூறலாம். இந்திரா காந்தி தனது மூத்த மகன் சஞ்சய் காந்தியையே தனது அரசியல் வாரிசு என்று வெளிப்படையாக அறிவித்திருந்த நிலையில், சஞ்சையின் மரணம், அந்த இடத்தில் ராஜீவை நிரப்பியது. வெளிநாட்டில் உயர் கல்வி பயின்ற ராஜீவ், ஒரு விமானியாகவே விரும்பினார். இந்திராவின் படுகொலை, ராஜீவை அரசியல் களத்திற்கு தள்ளியது. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 401 இடங்களில் வெற்றி பெற்று,  அசுர பலத்துடன் ஆட்சியை தக்கவைத்தது. ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ நாடுகள் ஒரு புறமும், சோவியத் யூனியன் தலைமையில் சோசியலிச நாடுகள் ஒருபுறமும் என உலகம் இரண்டாக பிளவுற்றிருந்த அந்த காலத்தில், இரண்டு புறமும் சாராமல் நடுநிலை வகிக்கிறோம் என்று கூறிக்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நேரு உருவாக்கிய இந்த அணிசேராக் கொள்கையில், இந்திராவும், அதைத்தொடர்ந்து ராஜீவும் கொள்கைரீதியாக எந்த பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை. அந்தவகையில், இந்தியா தனது ஆளுமையை செலுத்தக் கூடிய பகுதியில், வல்லரசுகள் கால்பதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே இந்தியாவின் நிலைபாடு.

1970களின் இறுதியில், இலங்கையில் உள்நாட்டுப்போர் தொடங்கியது. தமிழ் ஆயுதக் குழுக்கள், இலங்கை அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தை தொடங்கின. இலங்கையை தனது ஆளுகை பரப்பின் கீழ் தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்வதற்கு, இந்த உள்நாட்டுப்போரை இந்திய அரசு பயன்படுத்திக்கொண்டது.

தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு, இந்திய உளவுத்துறை இந்தியாவில் பயிற்சி அளிக்கத் தொடங்கின. மறுபுறம், இலங்கை ராணுவத்திற்கு இஸ்ரேல் உளவுத்துறை மொசாட் பயிற்சி அளித்தது. இந்நிலையில், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற ரேடியோ நிலையத்தை, அமெரிக்க அரசு இலங்கையில் நிறுவுவதற்கு முயற்சி மேற்கொண்டது. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தார். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்பது வெறும் ரேடியோ நிலையம் அல்ல, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலில், அமெரிக்கா கால்பதிப்பதன் தொடக்கம் என்பதை ராஜீவ் காந்தி அறிந்திருந்தார். இந்திய தரப்பிலிருந்து இலங்கையின் இந்த விபரீத முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆயுதக் குழுக்களுக்கு எதிராக இலங்கை அரசு மிகப்பெரிய ராணு நடவடிக்கையை மேற்கொண்டது. தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான யாழ்பாணத்தை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தது. ராணுவ முற்றுகையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் தவித்தனர். மிகப்பெரிய மனித பேரவலம் எந்நேரமும் நிகழலாம் என்ற சமயத்தில், இந்தியாவின் உதவியை ஈழத்தமிழர்கள் கோரினர். முற்றுகையில் சிக்கியிருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று, ராஜீவ் அரசுக்கு தமிழகத்திலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதைய புவிசார் அரசியல் சூழலில், இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது இந்திய அரசுக்கு அவ்வளவு கடினமாக காரியமில்லை. அத்துடன் அது  விருப்பமான ஒன்றும் கூட.

யாழ்ப்பாணத்தின் மீது பறந்த இந்திய விமானப்படை விமானங்கள், முற்றுகையில் சிக்கியிருந்த தமிழர்களுக்கு உணவு உட்பட அத்தியாவசியப்பொருட்களை வீசின. இந்திய விமானங்களுக்கு இலங்கை ராணுவம் இடையூறு விளைவிக்க நினைத்தால், எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுப்பட்டிருந்தது. “ஆப்ரேஷன் பூமாலை” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அந்த மனித நேய ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, ராஜீவின் வழிக்கு வந்தார். 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி ராஜீவ் காந்தியின் முன்னெடுப்பில் இலங்கையில் அமைதி திரும்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்த்திற்குப் பின் இருநாட்டு அதிபர்களும் ஒரு கடிதத்தை பரிமாறிக்கொண்டனர். அந்த கடிதத்தில், திரிகோணமலை துறைமுகமோ அல்லது இலங்கையின் வேறு எந்த துறைமுகமோ ராணு பயன்பாட்டிற்காக வேறு ஒரு நாட்டிற்கு வழங்கப்படாது என்றும், ஒலிபரப்பு தொடர்பாக (வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா) வெளிநாட்டுடன் (அமெரிக்கா) இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தம் மறுபரிசீலினை செய்யப்படும் என்றும் இலங்கை அரசு உறுதியளித்தது.

இதைத்தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு, மாலத்தீவில், தமிழ் போராளிகளின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை, இந்திய ராணுவத்தை அனுப்பி ராஜீவ் காந்தி தடுத்து நிறுத்தினார்.

இதற்கிடையில், ஸ்வீடன் நாட்டிலிருந்து போபர்ஸ் பீரங்கி வாங்கியதில், மிகப்பெரிய பணம் இந்தியாவில் உள்ள இடைத் தரகர்களுக்கு கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த குற்றச்சாட்டு ராஜீவின் அரசு மீது மிகப்பெரிய கரையை ஏற்படுத்தியது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அதைத்தொடர்ந்து, வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசும், அதன் பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன், சந்திரசேகர் அரசும் ஆட்சியில் இருந்தன.

ஆட்சியில் இல்லாதபோதும், ராஜீவ் காந்தி அணிசேராக்  கொள்கையில் உறுதியாக இருந்தார். சோவியத் யூனியன் அந்திம காலத்தை நெருங்கியிருந்த நிலையில், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தங்களின் எதிரிகள் என்று கருதியவர்களுடன் ராஜீவ் நட்பு பாராட்டினார். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத்தை ஆதரித்தார். வளைகுடாப்  போரை கடுமையாக எதிர்த்தார். ஈராக் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க போர் விமானங்களுக்கு, இந்தியாவில் எரிபொருள் நிரப்ப அனுமதியளிக்கக் கூடாது என்று உறுதியாக கூறினார். ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீராகம் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். சோவியத் யூனியன் முடிவுக்கு வந்த அந்த சமயத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்து நாடுகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று முழங்கினார்.

இவ்வாறாக, தெற்காசியாவின் மிக முக்கியமான நாட்டின் முன்னாள் பிரதமரும், அடுத்த நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டவருமான ராஜீவ் காந்தி, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்கு தங்கள் நலனுக்கு ஆபத்தானவராக பார்க்கப்பட்டார்.

ஜெயின் கமிஷன் உருவாக்கம்

1991, மே மாதம் 21 ஆம் தேதி, சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி, குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இரவு 10.20 மணியளவில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு குறித்து, மறுநாள் அதிகாலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அன்றை தினமே வழக்கு குற்றப்பிரிவு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதற்கு மறுநாள், மே 23 ஆம் தேதி, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அப்போதை சிபிஐ இணைய இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) உருவாக்கப்பட்டு, அந்த குழு படுகொலை தொடர்பான விசாரணையை உடனடியாக தொடங்கியது.

இதற்கிடையில், நாட்டின் முன்னாள் பிரதமரும், பிரதான எதிர்கட்சியின் தலைவருமான ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த, பணியில் இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த படுகொலையை நிகழ்த்தியவர்களை கண்டுபிடிப்பது மட்டுமின்றி, இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய சதித் திட்டத்தையும் வெளியில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை செய்து முடிக்க, வர்மாக கமிஷனின் விசாரணை வரம்பை அதிகப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. அவ்வாறு செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, அந்த தகவல் நீதிபதி ஜெ.எஸ்.வர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணியில் இருக்கும் நீதிபதி, இந்த வரம்பபை தாண்டி விசாரணை நடத்த முடியாது என்று வர்மா அந்த யோசனையை நிராகரித்துவிட்டார்.

இந்தப் பின்னணியில்தான், 1991ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23 ஆம் தேதி, ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய சதியை விசாரிக்க நீதிபதி எம்.சி.ஜெயின் தலைமையில் மற்றொரு கமிஷன் உருவாக்கப்பட்டது. ராஜீவ் படுகொலைக்கு முந்தைய காலங்களில் நடந்த  நிகழ்வுகள் மற்றும் உண்மைகளை விசாரிக்கும் படி இந்த கமிஷன் பணிக்கப்பட்டது. இந்தப் படுகொலை சதி வேலைய? அப்படியானால் அந்த சதிக்கு, தனி மனிதன், மனிதர்கள் அல்லது ஒரு அமைப்பு காரணமா என்பதையும் விசாரிப்பது ஜெயின் கமிஷனின் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது.

வாக்கு மூலங்கள்

பஞ்சாபை சேர்ந்த சிரோமணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த மகந்த் சேவா தாஸ் சிங் ஜெயின் கமிஷன் முன்பு அளித்த வாக்குமூலத்தில், ராஜீவ் படுகொலைக்குப் பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் இருந்ததாக கூறினார். பிரதமர் சந்திரசேகரின் வேண்டுகோளின்படி, லண்டனில் உள்ள காலிஸ்தான் தலைவர்களின் ஒருவரான ஜக்ஜித் சிங் சௌகான் என்பவரை சந்திக்கச் சென்றாதாக அவர் கூறினார். மேலும்  பஞ்சாப் பிரச்சனை குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, காலிஸ்தான் தலைவரை அழைப்பதற்காக அந்த சந்திப்பு நடந்துள்ளது.

அப்போது, ராஜீவ் கொல்லப்படவுள்ளதாக சௌகான் தன்னிடம் கூறியதாக ஜெயின் கமிஷனிடம் மகந்த் சேவாதாஸ் சிங் வாக்குமூலம் அளித்தார். லண்டனில் உள்ள சௌகானின் வீட்டில் நடைபெற்ற அந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, உல்ஃபா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அங்கு இருந்ததாக ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை அவர் தெரிவித்தார். இறுதியாக ராஜீவ்காந்தி டெல்லியில் கொல்லப்படமாட்டார் என்றும், சந்திராசாமியோடு தான் தொடர்பில் இருப்பதாவும் சௌகான் தன்னிடம் கூறியதாக ஜெயின் கமிஷனில் மகந்த் சேவாதாஸ் சிங் வாக்குமூலம் அளித்தார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்குமூலம், ராஜீவ்காந்தி படுகொலையில், பல போராளிக்குழுக்கள் சம்பந்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. சிபிஐ கைப்பற்றிய சிவராசனின் டைரியில், உல்ஃபா இயக்கத்தின் தலைவர்கள் பரேஷ் பரூவா, அரபிந்தோ ராஜ்கோவா ஆகிய இரண்டுபேரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதும், மே 21ஆம் தேதி சென்னையில் ராஜீவ் கொல்லப்படாமல் இருந்திருந்தால், அவருடைய பயணத்திட்டத்தின்படி, மே 24ஆம் தேதி, அஸ்ஸாமில் உள்ள கௌஹாத்தி நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டிருப்பார் என்பதையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, மகந்த் சேவாதாஸ் சிங் கூறிய தகவல்களுக்குப் பின்னால் மிகப்பெரிய உண்மை ஒளிந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதை மறுக்க முடியாது.

1996 ஆம் ஆண்டு, ஜெயின் கமிஷனில் வாக்குமூலம் அளித்த ஒன்றிய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் ஜாபர் சைபுல்லா, 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சாமி மற்றும் அரசியல் சாமியார் என்று அழைக்கப்பட்ட சந்திராசாமிக்கு, இஸ்ரேல் உளவுத்துறை மொசாட் மற்றும் அமெரிக்க உளவுத்துறை சிஐஏவிடமிருந்து வந்த தகவல்களை இந்திய கப்பல்படை இடை மறித்ததாக கூறினார். அந்த தகவல்கள் இந்த இருவர் மூலம் தமிழகத்தில் உள்ள சிலருக்கோ அல்லது யாழ்பாணத்தில் உள்ளவர்களுக்கோ அனுப்பட்டவை என்றும் கூறினார். இந்திய உளவுத்துறையில் உள்ள அதிகாரிகள் மூலம் இந்த தகவல் தனக்கு கிடைத்ததாகவும்  ஜாபர் சைபுல்லா வாக்குமூலம் அளித்தார்.

ஜாபர் சைபுல்லாவின் இந்த வாக்குமூலம், சுப்பிரமணியன் சாமி மற்றும் சந்திராசாமிக்கு மொசாட் மற்றும் சிஐஏவுடன் தொடர்பிருந்ததை உறுதி செய்ய முடிகிறது. ஆனால், இதுகுறித்து ஒன்றிய அரசிடம் ஜெயின் கமிஷன் கேள்வி எழுப்பியபோது, அதுபோன்ற இடைமறித்த தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.

இதேபோல், மேலும் பல ஆவணங்கள் குறித்த கேள்விகளுக்கும் இல்லை என்ற பதிலையே அரசாங்கம் ஜெயின் கமிஷனிடம் தெரிவித்தது. அதில் முக்கியமான ஒன்று, கொலை நடைபெற்ற மே 21ஆம் தேதி அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சாமி எங்கிருந்தார் என்பதற்கான ஆவணம் கேட்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து கமிஷனுக்கு பதில் கிடைக்கவில்லை.

ஜனதா கட்சியில் பணியாற்றிய திருச்சி வேலுசாமி (தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்) ஜெயின் கமிஷனில் அளித்த வாக்குமூலத்தில், கொலை நடைபெற்ற நாளில் சுப்பிரமணியன் சாமி எங்கிருந்தார் என்பது சந்தேகத்தை எழுப்புதாக கூறியுள்ளார். 1991ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி தமிழகம் வந்த சுப்பிரமணியன் சாமி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், மே 21ஆம் தேதி டெல்லியில் உள்ள சுப்பிரமணியன் சாமி இல்லத்திற்கு தொலைபேசியில் அழைத்ததாகவும், அப்போது அவருடைய மனைவி சுப்பிரமணயின்சாமி டெல்லிக்கு வரவில்லை என்று கூறியதாகவும் திருச்சி வேலுசாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். படுகொலை நடைபெற்ற தினத்தில், சுப்பிரமணியன் சாமி சென்னையில் உள்ள ட்ரைடன் ஹோட்டலில் தங்கியருந்ததாகவும், அன்று இரவு அவரும், சந்திராசாமியும், காரில் ஸ்ரீபெரும்புதூர் சென்றதாவும் திருச்சி வேலுசாமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வேலுசாமியின் இந்த கருத்தை உறுதி செய்வதற்கு நீதிபதி ஜெயின், சுப்பிரமணியன் சாமியின் பயண விபரங்களை கேட்டபோது, அரசு தரப்பில் அந்த ஆவணம் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.

சர்வதேசஅளவில் பல போராளிக்குழுக்கள் , பிசிசிஐ என்ற வங்கியை, தங்களின் பரிவர்த்தனைக்காக  பயன்படுத்துவதாக குற்றச்சாட்ட எழுந்தது.  அதேபோல்  பல நாடுகளின், உளவு நிறுவனங்கள், அந்த வங்கியின் மூலம் தங்களின் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாவும்  குற்றம்சாட்டப்பட்டது.

1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த வங்கி 1991ஆம் ஆண்டு மூடப்பட்டது.  இந்நிலையில் பிசிசிஐ வங்கியை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, பிசிசிஐ வங்கியின் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக, அமெரிக்க அரசு, செனட் உறுப்பினர் ஜான் கெர்ரி தலைமையில் ஒரு குழுவை உருவாக்கியது. அந்தக் குழுவின் விசாரணையில், பிசிசிஐ வங்கி முறைக்கேட்டில் ஈடுபட்டது உண்மை என்பதும், அந்த வங்கியை சிஐஏ, தனது ரகசிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதும் தெரிவந்தது.

இந்நிலையில்  சர்வதேசளவில் பல்வேறு குற்றசாட்டுக்குளுக்கு உள்ளான  பிசிசியை வங்கியில், சந்திராசாமிக்கு கணக்கு இருந்ததை ஜான் கெர்ரியின் அறிக்கை உறுதி செய்தது. அந்த வங்கி கணக்கை சர்வதேச ஆயுத வியாபாரி அட்னன் கசோகி மூலம் சந்திராசாமி பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திராசமியின் சீடர் என்று அறியப்பட்ட எர்னி மில்லர் மூலமும் அந்த வங்கியை சந்திராசாமி பயன்படுத்தியுள்ளார். அதேபோல், விடுதலைப்புலிகளின் சர்வேதச பொறுப்பாளராக இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமார பத்மநாதனுக்கும், பிசிசிஐயின் மும்பை கிளையில் ஒரு கணக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் கவனிக்கத்தக்க வகையில், 1990 மற்றும் 91க்கு இடைப்பட்ட காலத்தில் ஆயுத வியாபாரி அட்னன் கசோகியின் வங்கி கணக்கிற்கும், குமாரபத்மநாதன் வங்கி கணக்கிற்கும் இடையில் பல மில்லியன் டாலர் பணப்பறிமாற்றம் நடைபெற்றுள்ளதை கெர்ரி குழுவின் அறிக்கை உறுதி செய்தது.

இந்த குறிப்பிட்ட காலத்தில்தான், குமாரபத்மநாதன் சிஐஏவுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஆகவே, சிஐஏ தனது ரகசிய நடவடிக்கைகளுக்கு பிசிசிஐ வங்கியை பயன்படுத்திக் கொண்டதை கெர்ரி குழு உறுதி செய்ததையும், வெளிநாட்டு உளவு நிறுவனங்களிலிருந்து சந்திரசாமிக்கு தகவல்கள் வந்தததாக ஜாஃபர் சைபுல்லா ஜெயின் கமிஷனில் தெரிவித்ததையும் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, ராஜீவ் படுகொலையில் வெளிநாட்டு சதி இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது என்று ஜெயின் கமிஷன் தனது இறுதி அறிக்கையில் தெரிவித்ததற்கான காரணத்தை நன்றாக உணர முடியும்.

ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை

1998, மார்ச் 7 ஆம் தேதி, நீதிபதி எம்.சி.ஜெயின் தனது 2000 பக்க இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். அதில்,

  • அமோஸ் ராடியா மற்றும் ஜியார்ஸ் பெட்ச்சர் ஆகியோர் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட்டின் (Mossad) ஏஜென்ட்கள் என்கிறார் ஜெயின்.
  • ராஜீவ் கொலைக்கு ஒரு மாதம் முன்பு சந்தேகத்திற்கு இடமான இரண்டு அமெரிக்க உளவாளிகளின் நடமாட்டம் பற்றி இந்தியாவுக்கான வெளிநாட்டு உளவு நிறுவனமான ‘ரா’ (R&AW), இந்திய உளவுத்துறைக்கு அளித்த தகவல்களையும் ஜெயின் சுட்டிக்காட்டுகிறார்.
  • அராஃபத்தின் எச்சரிக்கையை ரா மேலும் விசாரித்திருக்க வேண்டும் ( 1990 யின் முற்பகுதியில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத்தும், இந்தியவிற்கான அப்போதைய பாலஸ்தீன தூதரும், ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக எச்சரித்திருந்தனர்) எனவும், அமெரிக்க போர் விமானங்கள் இந்தியாவில் எண்ணெய் நிரப்ப ராஜீவ் மறுப்பு தெரிவித்த நிலையில், மொசாட் மூலமாக, சிஐஏ வேலை செய்திருக்க வேண்டிய சாத்தியக்கூறு குறித்து ரா விசாரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • பல நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியது தொடர்பாகவும், கொலைச்சதியில் ஈடுபட்டது தொடர்பாகவும் சிஐஏ மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், அராஃபத்தின் எச்சரிக்கை இந்த வகையில் ஆராயப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஜெயின் கூறுகிறார்.
  • மும்பையில் இருந்த பிசிசிஐ வங்கியின் கிளையில் கே.பிக்கு இருந்த கணக்கில், ராஜீவ்கொலை தொடர்பாக பணம் கொடுக்கப்படவில்லை என்ற வாதத்தை, பிசிசிஐ குறித்து விசாரித்த ஜான் கெர்ரி குழுவின் ஆவணங்கள் கிடைக்கப்பெறாமல் கூறுவது தவறு என்றும், தற்போது கிடைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அப்படி ஒன்று நடைபெற்றதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்றும் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தியர்களை பொறுத்தவரை, சந்திராசாமி, சுப்பிரமணியன்சாமி, சந்திரசேகர் (முன்னாள் பிரதமர்) ஆகியோர் மீது சந்தேகப்படும் வகையில் ஜெயின் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
  • கமிஷன் முன்பு தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின் மூலம் சந்திராசாமிக்கு பிசிசிஐ வங்கியில் 7 கணக்குகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இவற்றை அட்னன் கசோகி மற்றும் ஆர்.டபிள்யூ.ரொனால்ட் நிர்வகித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த கணக்குகள் அனைத்தும் லண்டன் மற்றும் வரிகுறைந்த தீவுகள் (Tax Heaven) மற்றும் மொண்டெனேகுரோ (montenegro )இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
  • சுப்பிரமணியசாமி மற்றும் சந்திராசாமி அடிக்கடி மொண்டெனேகுரோ போனதை ஒப்புக்கொண்டதாக கமிஷனின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • காலிஸ்தான் அமைப்புடன் லண்டனில் நடைபெற்ற சந்திப்பில், புலிகள் இருந்தது பற்றி சந்திரசேகரின் தூதுவராக சென்ற அகாலிதளம் கட்சியின் தலைவர் மகந்த சேவா தாஸ் கூறியதும், ரா-வின் (R&AW) அறிக்கையும் ஒத்துபோவதாக ஜெயின் கூறுகிறார். மேலும், காலிஸ்தானின் தலைவர் சந்திரசேகருக்கு எழுதிய கடிதத்தையும் ஜெயின் குறிப்பிட்டு, அந்த கடிதம் அரசு ஆவணமாக உள்ளதை சுட்டிக்காட்டி, அப்படி ஒரு சந்திப்பு நடந்ததை உறுதிப்படுத்துகிறார். மேலும் மகந்த் சேவாதாஸ் சிங் லண்டன் செல்ல அரசே ஏற்பாடு செய்ததையும் ஜெயின் சுட்டிக்காட்டுகிறார்.
  • கிடைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் இந்த கொலையில் சந்திராசாமிக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது என்று கூறும் ஜெயின், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
  • பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரமேஷ் தலால் (இவர் சந்திராசாமிக்கு, புலிகள், சிஐஏ மற்றும் மொசட்டுடன் உறவு இருப்பதாக கமிஷனில் தெரிவித்தார்) என்பவர் அளித்த சாட்சியை குறிப்பிடும் ஜெயின், இதற்கு முன்னரே சந்திராசாமி குறித்து இவர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
  • சந்திராசாமி, மகந்த்சேவா தாஸ் சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், டி.என்.சேஷன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியிருந்தால் பல உண்மைகள் தெரியவந்திருக்கும் என்று ஜெயின் தெரிவித்துள்ளார்.
  • விடுதலைப் புலிகளைத் தாண்டி, இந்த கொலையில் வெளிநாட்டு சதி இருப்பதை முழுவதும் மறுக்க முடியாது என்று நீதிபதி எம்.சி.ஜெயின் தனது இறுதி அறிக்கையில் கூறுகிறார்

1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அப்போதைய பாஜக அரசால் எம்டிஎம்ஏ உருவாக்கப்பட்டது. ராஜிவ் காந்தி படுகொலையில், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக என்பதை கண்டுபிடிப்பதே அதன் முக்கியநோக்கமாகும். 23 ஆண்டுகள் கடந்தும் அந்த அமைப்பு இதுவரை என்ன செய்தது? எதைக் கண்டுபிடித்தது என்பது குறித்து அதிகாரப்பூவர்மான தகவல் இல்லை. ராஜிகாந்தி படுகொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற 7 பேர், கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நிலையில், எம்டிஎம்ஏ இன்றும் தனது விசாரணையை நடத்தி வருவதாகவே கூறிக்கொள்வது தான் நகைமுரண்…

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ஏழு தமிழர் விடுதலையும் மாநில அரசின் உரிமையும் – வழக்கறிஞர் பிரபு நேர்காணல்

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் வாதாரடும் அவருடைய வழக்கறிஞர் பிரபு, அரண்செய் இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல். 

பேரறிவாளனின் சட்டப்போராட்டம் கடந்து வந்த பாதையை சுருக்கமாக சொல்ல முடியுமா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் 1999-ல் தீர்ப்பு வழங்கியது. 2000-ல் குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்ட கருணை மனு, 2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரைக்கும் முடிவெடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்திய அரசியலைப்பு சட்டம் 72-ன் படி, இந்திய குடிமகன் ஒருவர், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிலையில் மன்னிப்பு கோரி கருணை மனு தாக்கல் செய்யலாம்.

ஏறத்தாழ 11 ஆண்டுகள் 8 மாதங்கள்  கருணை மனு காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டதே அரசியலைப்பிற்கு எதிரானது என்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, முருகன், சாந்தன், பேரறிவாளன் தரப்பில் இருந்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.  சாதாரண கைதி சிறையில் இருப்பதற்கும், ஒரு தூக்கு தண்டனை கைதி சிறையில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தூக்கு தண்டனை கைதியின் தலைக்கு மேல் எந்நேரமும் கத்தி தொங்கும். தினமும் எழுகையில், இன்று நம் கருணை மனு ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற பதைபதைப்பு இருக்கும்.

எதற்காக கருணை மனு நிறுத்தி வைக்கப்பட்டது என்பதற்கு நியாயமான காரணத்தை முன்வைக்க வேண்டும். அப்படி காரணம் சொல்லவில்லை என்றால், அதன் பலனை மனுதாரருக்கு கொடுக்க வேண்டும். அவ்வாறே, இவ்வழக்கில் அவரது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுளாக குறைத்து உத்தரவிட்டது.

இவ்வழக்கு விசாரணை தொடர்பாக நிறைய ஆர்.டி.ஐகளை போட்டு, தகவல் வாங்கியபோதுதான், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையே இன்னும் முடிவடையவில்லை என்ற உண்மைகள் தெரிந்தது. அதன் மூலம் ராஜீவ் காந்தி கொலை போன்ற மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு கொலை வழக்கில் விசாரணையே முடிவடையாத போது குற்றவாளிகள் என சிலருக்கு தூக்கு தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டது எப்படி என்ற குழப்பம் வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை இன்னமும் முடியவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

சிபிஐ-யுடைய பல்நோக்கு விசாரணை முகைமை (எம்டிஎம்ஏ) ராஜீவ் காந்தி கொலை வழக்கை இன்னமும் விசாரித்து வருகிறது. அது தொடர்பான, ஆவணங்களை கேட்டு மத்திய அரசின்p உள்துறையில் ஆர்.டி.ஐ தாக்கல் செய்தோம். அதற்கு, இது இந்திய நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல் என்பதால், தர இயலாது என்று மறுத்துவிட்டார்கள்.

மீண்டும் மேல்முறையீடு செய்தபோது, இவ்வழக்கு விசாரணை தொடர்பான சில ஆவணங்களை மட்டும் தந்தார்கள். அதில், எங்களுக்கு சில உண்மைகள் தெரிய வந்தது. உச்ச நீதிமன்றம் ஏழு நபர்களை குற்றவாளிகளென தீர்ப்பெழுதிய பிறகு, சிபிஐ, எம்டிஎம்ஏ சென்னை தடா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்கிறது. அதில், சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் இன்னும் உண்மையான குற்றவாளிகள் பிடிப்படவில்லை. அதற்கான விசாரணைக்கு எங்களுக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. அதற்கு பின்தான், பல்நோக்கு விசாரணை குழுமம் (எம்டிஎம்ஏ) தொடர்ந்தும் விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்கிறது.

பல்நோக்கு விசாரணை குழுமம் (எம்டிஎம்ஏ) இவ்வழக்கு விசாரணையில் என்ன முன்னேற்றத்தை கண்டிருக்கிறது?

பல்நோக்கு விசாரணை குழுமம் (எம்டிஎம்ஏ) இதுவரை இவ்வழக்கு தொடர்பாக எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. இது ஒருபுறமிருந்தாலும், அவர்களின் விசாரணையில் எதாவது புதிதாக கண்டுபிடித்திருக்கிறார்களா என்பதை ஆராய்ந்தோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, சீலிடப்பட்ட உறையில் (sealed cover) வழக்கு நடைபெறும் தடா நீதிமன்றத்தில் எதையோ சமர்ப்பிக்கிறார்கள். கொலைக்கான பின்புலத்தை அவர்கள் ஆராயவே இல்லை.

அந்த கவர்களின் பிரதியைக் கேட்டு ஒரு மனு போட்டோம். ‘இது முக்கியமான ஆவணம். பாதுகாப்பு காரணங்களால் இதை கொடுக்க மாட்டாம். நீங்களே ஒரு குற்றவாளி. உங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும்’ என்று மறுத்தார்கள். ஒரு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கிறார்கள். ஆனால், அதே முதல் தகவல் அறிக்கையை மீண்டும் கையில் எடுத்து, 20 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது என்றால், அது குறித்து தகவல்கள் எங்களுக்கு தேவைதானே? அதைப் பற்றி கேட்பதில் நியாயம் இருக்கிறதல்லவா?

2013 ஆம் ஆண்டு, தடா நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்கிறோம். அதில், ‘இவ்விசாரணையை பிரத்யேகமாக கவனம் செலுத்தி கண்காணியுங்கள். பல்நோக்கு விசாரணை குழுமத்தின் (எம்டிஎம்ஏ) மூடப்பட்ட உரைகளை (sealed cover) திறந்து பார்த்து, அதில் வழக்கு விசாரணையில் என்ன முன்னேற்றங்கள் உள்ளது என்று பாருங்கள். இதே வழக்கில்தான் நான் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கிறேன். ஒருவேளை எனக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்த குண்டிற்கு பேட்டரியே தேவையில்லை. சால்ட்ரிங் செய்யப்பட்டு இன்பில்ட் செய்யப்பட்ட பேட்டரியுடன்தான் சம்பவம் நடந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டது என்று எம்டிஎம்ஏ, தன் விசாரணையின் முடிவில் கூறினால், நான் அதில் பலியாடுதானே? இதையேதான் ஜெயின் கமிஷனும் கேட்டடது. Origin of bomb (வெடிகுண்டு எங்கிருந்து வந்தது) என்ன என்பதே தெரியாமல் இவர்கள் இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறியது. ஒருவரை கத்தியால் ஒருவர் கொலை செய்தால், அக்கத்தி யாரிடம் இருந்து கிடைத்தது? கொலையாளியுடையதுதானா? கொலை செய்துவிட்டு அதை எங்கே மறைத்து வைத்தார்? என்றெல்லாம் ஒரு கொலை வழக்கில் விசாரணை செய்யப்படவேண்டும்.’ எவற்றையெல்லாம் இம்மனுவில் குறிப்பிட்டோம்.

இதை ஏற்க மறுத்த தடா நீதிமன்றம், நீங்கள் குற்றவாளி. உங்களுக்கு தர முடியாது என்றது. ஒருவேளை, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்விசாரணையின் முடிவில் எனக்கு சாதகமான சாட்சிகள் கிடைத்தால்? என்று கேட்டோம். நீதிமன்றம் அதையும் ஏற்கவில்லை.

பொதுவாகவே ராஜீவ் காந்தி கொலைவழக்கு என்றாலே அதற்கு வேறு ஒரு பார்வை இருக்கும். சட்டத்தின் பார்வையில் எவரும் இதனை பார்ப்பதில்லை. பல்வேறு முன் முடிவுடன் தான் நீதித்துறை இந்த வழக்கை அணுகுகிறது. அதனாலேயே எங்களுடைய வாதங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

 

எம்டிஎம்ஏ வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்ததை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்ட உச்ச நீதிமன்றம் செல்கிறீர்கள். அங்கு உங்கள் வாதங்கள் ஏற்கப்பட்டு, வழக்கு முன்நகர்ந்ததா?

உச்ச நீதிமன்றத்தில்தான் இவ்வழக்கின் தீவிர தன்மையை உணர்த்த முடிந்தது. அங்கு இந்த பெல்ட் வெடிகுண்டு தொடர்பான விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேட்டது. அதற்கு எம்டிஎம்ஏ ஒரு ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கிறது.

எம்டிஎம்ஏ தொடங்கப்பட்டபோது கூறிய நிலைத்தகவலையே பிறகும் கூறினார்கள். அதையேதான், இப்போதும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். 1999-ல் எம்டிஎம்ஏ தொடங்கப்படுகிறது அப்போது கூறிய காரணத்தையே இப்போதும் கூறுகிறீர்களே என்று நீதிமன்றம் கேட்கிறது. ஒரு முன்னாள் பிரதமரின் கொலை வழக்கை இப்படித்தான் விசாரணை செய்வீர்களா என்று கேள்வி எழுப்புகிறது. அதற்கு எம்டிஎம்ஏ திணறுகிறது. அதைத்தொடர்ந்து நாங்கள் ஒரு சீலிட்ட கவரை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம்.

ஆர்டிஐ-யில் எங்களுக்கு சில முக்கியமான ஆவணங்கள் கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் எம்டிஎம்ஏ, தான் உருவாக்கப்பட்ட காரணத்தை ரிப்போர்ட்டாக வைக்கிறது. இதுபோல ஒவ்வொரு வருடமும் இதை தாக்கல் செய்யவேண்டும். 2011-இல் இதேபோல ஒரு ரெனிவல் டாக்குமெண்டையும் சேர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம். பாருங்கள் 2001-ல் கொடுக்கப்பட்ட ரிபோர்ட், 2011-ல் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டும் இந்தாண்டு 2016-ல் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரிப்போர்ட்டும் ஒன்றாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறோம்.

இது நாட்டில் மிக முக்கியமான கொலை வழக்கு. சிபிஐ ஒரு பலமான அமைப்பு. எம்டிஎம்ஏ என்ற தனி குழுவை உருவாக்கி இவ்வழக்கு குறித்து கோடிகள் செலவு செய்து விசாரிக்கிறார்கள். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

எம்டிஎம்ஏ 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்படுவதற்கு 62 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இந்த 20 ஆண்டுகளில் எப்படியும் இதற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு இருக்கும். இலங்கை உட்பட 16-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எம்டிஎம்ஏ குழு விசாரணைக்கு செல்ல வேண்டும். இதில் இலங்கை உட்பட சில நாடுகளில் இவர்களை விசாரணைக்கு அனுமதிக்கவில்லை. விசாரிக்க வேண்டும் என்கிற எம்டிஎம்ஏவின் கோரிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு விசாரணை இவ்வளவு அலட்சியமாக நடத்தப்படுகிறதா என்று உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்தது.

 

இந்த விசாரணைகள் ஒருபுறம் இருக்கையில், 2014 பிப்ரவரி 19 ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ’ஏழு பேரையும் விடுதலை செய்ய நான் பரிந்துரைக்கிறேன்’ என்று அறிவிக்கிறார். அந்த பரிந்துரையின் தொடர்ச்சி என்ன ஆனது?

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் 2014 பிப்ரவரி 18 ஆம் தேதி உத்தரவிட்ட மறுநாள், 19 ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். ‘ஏழு பேரும் 23 ஆண்டுகள் சிறையில் உள்ளார்கள். நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய நான் பரிந்துரைக்கிறேன். இவர்களின் வழக்கானது ஒன்றிய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரித்ததால், இவர்களின் விடுதலையின் போது ஒன்றிய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது.’ என்பதை சுட்டிக்காட்டி ஒன்றி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்புகிறார்.  இதற்கு நீங்கள் மூன்று நாளைக்குள் பதில் சொல்லுங்கள் என்று காலக்கெடு விதித்தார்.

 

இக்கொலை வழக்கில் ஒரு மாநில அரசு முதன்முதலாக இப்படி ஒரு முன்மொழிவை வைக்கிறது. இதற்கு, காங்கிரஸ் ஒரு கட்சியாகவும் ஒன்றிய அரசாகவும் என்ன எதிர்வினையாற்றியது?

காங்கிரஸ் இதை ஒரு தவறான முன்னுதாரணம் என்று விமர்சித்தது. ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், என் தந்தையை கொன்றவர்களை விடுவித்தால், நாளை சட்டத்தின் மேல் எப்படி மக்களுக்கு பயம் வரும் என்று கேட்டார்

அதைத்தொடர்ந்து, 21 ஆம் தேதி, இவர்களின் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. அதாவது, மாநில அரசு ஒரு முன்மொழிவை மட்டும்தான் வைக்கிறது. ஆனால் ஒன்றிய அரசோ இதற்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கிறது. இந்த முன்மொழிவானது சட்டப் பிரிவு 21-ஐ மீறும் படியாக இருக்கிறது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட 18 பேருக்காக நாங்கள் நிற்கிறோம் என்று கூறி, ஒரு மனுவை (Writ Petition) காங்கிரஸ் அரசு தாக்கல் செய்கிறது.

ஒரு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென்றால், ஒரு தனிநபர் அரசாங்கத்தின் மீது மட்டும் தான் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு தனி நபருக்கு எதிராக ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு மாநில அரசுக்கு எதிராக ஒன்றிய அரசோ ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அந்த நடைமுறைக்கு விதி விலக்காக காங்கிரஸ் அரசு ரிட் மனு தாக்கல் செய்தது.

அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் உயர் மின் அழுத்த கோபுரங்களுக்கான அனுமதியை, ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு கொடுக்கவில்லை என்பதால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, ஒன்றிய அரசின் மேல் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது சட்ட விதிகளுக்குப் புறம்பானது, ஒரு அரசு இன்னொரு அரசின் மேல் ரிட் மனு தாக்கல் செய்யமுடியாது. ஒரு அரசின் மேல் ஒரு குடிமகனுக்கு மட்டும்தான் ரிட் மனு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று சொல்கிறது. அதைத் திரும்பப் பெற சொல்கிறது. இதை சுட்டிக்காட்டி, பேரறிவாளன் ஒரு தனி மனிதர். அவர்மீது எப்படி ஒரு அரசு ரிட் மனு தாக்கல் செய்யமுடியும். என்று கேட்கிறோம். அதை ஏற்க நீதிமன்றம் மறுத்ததுடன், ஏழு பேர் விடுதலைக்கு தடை விதித்தது.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கை, இதுநாள் வரையிலான வழக்குகளுக்கு அப்பாற்பட்ட அல்லது மாறுபட்ட வழக்காக கருதலாமா?

இந்த வழக்கிற்காக பல சட்டங்கள் திருத்தப்பட்டு இருக்கிறது என்பதற்கு நான் மேல சொன்னது ஒரு எடுத்துக்காட்டு. மேலும், இன்னொன்று தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒருவரை அவரின் தடா ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து தண்டனை வழங்கலாம். ஆனால், தடா சட்டப்பிரிவகளில் தண்டிக்கப்படாத ஒருவரின் தடா ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு தண்டனை அளிக்கலாம் என்ற, சட்டத்திற்கு புறம்பான ஒரு தீர்ப்பை இவ்வழக்கில் அளித்தார்கள். இப்படி ஒரு தர்க்கத்துக்கு புறம்பான ஒரு உத்தரவை இந்த வழக்கில் தான் கொடுத்தார்கள்.

மறுபுறம், முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வரும் வழக்கான சஞ்சய் தத்தின் வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அவ்வழக்கு தொடர்பான நபர்களின் தண்டனை குறைப்பு நடவடிக்கைகளை மகாராஷ்ட்ரா மாநில அரசே மேற்கொள்கிறது. அது ஒரு தீவிரவாத வழக்கு, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புதான் (சிபிஐ) விசாரித்தது. இங்கே மற்ற எல்லோருக்கும் ஒரு சட்டம். ஆனால், இந்த ஏழு பேருக்கு – அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை சட்டத்தை கொஞ்சமும் பின்பற்ற மாட்டோம் என்ற கண்ணோட்டத்தில்தான் இவ்வழக்கு பார்க்கப்பட்டது.

 

வர்மா கமிஷனுடைய அறிக்கையின் இறுதி வாக்கியத்தில் ‘நுட்பமான அரசியல் தலையீடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதே? அது குறித்து விசாரிக்கப்பட்டதா?

வர்மா கமிஷன் ஆவணங்களைக் கேட்டு, ஒரு ஆர்டிஐ போட்டோம். அதற்கு, ‘வர்மா கமிஷன் தொடர்பான எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை. அது காணாமல் போய்விட்டது. நாங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறோம்’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு பதிலளித்தது. இவை எல்லாம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதுதான். ஜெயின் கமிஷன் எவ்வளவு பிரச்சனைகள் சொல்கிறதோ, அதே அளவு வர்மா கமிஷனும் சொல்லியிருக்கிறது.

ஒரு குற்றம் நடக்கிறது. அதை விசாரிக்க ஒரு கமிஷன் அமைப்படுகிறது. அக்கமிஷனும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்கிறது. அதன் பின் அக்கமிஷன் குறித்த ஆவணங்கள் காணாமல் போகிறது. ஒரு கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்தபின், சட்டரீதியாக என்ன நடந்திருக்க வேண்டும்?

வர்மா கமிஷனின் அறிக்கை வெள்ளை தாளில் கொடுக்கப்பட்ட சாதாரண ஆவணம் அது. அவ்வளவுதான். அதை ஆக்‌ஷன் டேக்கன் ரிப்போட்டாக மாற்ற வேண்டும். அந்த ரிப்போர்ட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அடுத்து என்ன செய்யலாம் என்று நாடாளுமன்றம் முடிவு எடுக்க வேண்டும். வர்மா கமிஷன் ரிப்போர்ட்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அடுத்த என்ன செய்யலாம் என்று விவாதிக்க ஒரு தேதி குறிக்கப்படுகிறது. அத்தோடு, வர்மா கமிஷன் மூடி மறைக்கப்பட்டுவிட்டது.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த ஒன்றிய விசாரணை அதிகாரி தியாகராஜன், சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு எழுதிய கடிதத்தில் என்ன சொன்னார்?

2011 ஆம் ஆண்டு, கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்கிறார். 09.09.2011 அன்று, தூக்கு தண்டனை என்று தேதி குறிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாங்கள் அதற்கு தடை வாங்குகிறோம். அக்காலக்கட்டத்தில், 2013ல் வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு, ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. ஒடிசா மாநில காவல்துறை இயக்குனர், தியாகராஜன் (ஓய்வு) என்ற பெயரில் வந்த அக்கடிதத்தில், ’உங்களுக்கு எந்த வகையான உதவியையும் செய்ய தயாராக இருக்கிறேன்.’ என்று எழுதப்பட்டிருந்தது. அவர் சட்டம் தெரியாதவர் இல்லை. ஒரு பப்ளிசிட்டிக்காகவும் இதை அவர் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஒரு மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர், தன்னால் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கப்பட்டு, குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட ஒருவருக்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதுகிறார். நாங்கள் நேரில் சென்று அவரை சந்தித்த போது சில முக்கிய தகவல்களை சொன்னார். பேரறிவாளனின் வாக்குமூலம் உச்ச நீதிமன்றத்தில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டதிலேயே (காவல்துறையால் செய்யபட்ட) பல தவறுகள் நடந்திருக்கிறது.

இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரினோம். சம்மதம் தெரிவித்தார். அவர் முன்னிலையிலேயே அதை தயாரித்தோம். ஒரு விசாரணை அதிகாரி “இவர்தான் குற்றவாளி என்று ஒருவரை சொல்லிவிட்டு, பின் மாற்றிப் பேசினால் வரும் பின்விளைவுகள் என்ன என்று” தியாகராஜன் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.

அவர் கூறினார், ‘பொதுவாக, அந்த பேட்டரி எதற்காக பயன்படும் என்றே எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டாலே அது ஒப்புதல் வாக்குமூலம் இல்லை என்றாகிவிடும். ஆனால், தடாவின் கீழ் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கில், அவர்கள் சொன்னது போலவே வாக்குமூலம் எல்லாம் வாங்கவில்லை. ‘நீங்க சொல்றதெல்லாம் சேர்க்க முடியாது. நாங்க சொல்வதுதான்’ என்று பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கினோம். இவ்வாறேதான் அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. தடா சட்டத்தில் உள்ள பிரச்சனை இது. பேரறிவாளன் சொன்னதை அப்படியே எழுதியிருந்தால், டெக்னிக்கலாக அவரை இவ்வழக்கிலேயே சேர்த்திருக்க முடியாது’ என்று தியாகராஜன் சொன்னார். இந்த பிரமாண பத்திரத்தையும் நாங்கள் இவ்வழக்கில் பயன்படுத்தியுள்ளோம். இப்போதும், உச்ச நீதிமன்றத்தில் இது ஆவணமாக உள்ளது.

 

விசாரணை அதிகாரி தியாகராஜனை தொடர்ந்து, அவரை போலவே நிதிபதி கே.டி.தாமஸ் அவர்களும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து என்ன கூறினார்?

இந்த வழக்கில் உள்ள சாட்சி என்ன என்று கேட்டால், குற்றவாளி தடா ஒப்புதல் வாக்குமூலம் மூலம் குற்றத்தை ஒத்துக்கொண்டார் என்று மட்டும் கூறுவது முற்றிலும் தவறான முன்னுதாரணம். இந்த தீர்ப்பு மீளாய்வு செய்யப்பட வேண்டும். சர்வதேச அளவில் இதனால் நமக்கு கெட்ட பெயர்தான் வரும். மேலும், பேரறிவாளன் சிறையில் இருப்பதற்கான காரணங்கள் எதுவுமே இப்போது இல்லை. அதனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னார்.

 

இந்திய குற்றவியல் சட்டம் 432, 433-ன் படி, ஒருவரின் ஆயுள் தண்டனையை குறைக்க மாநில அரசி்ற்கு அதிகாரம் இருக்கிறதா?

ஒரு மாநில அரசுக்கு ஆளுநர் வழியாக, நூறு சதவீதம் தண்டனையை குறைக்க அதிகாரம் உள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் கீழ் உள்ள சிறப்பு சட்டங்களான தடா (TADA), பொடா (POTA) உள்ளிட்ட சட்டங்களின் கீழ் ஒருவர் தண்டனை பெற்றிருந்தால், அதில் மாநில அரசு விடுதலையை முடிவு செய்ய முடியாது. ஒன்றிய அரசிக்குதான் அதில் முழு உரிமை உள்ளது.

இவ்வழக்கை பொறுத்த வரை விசாரணை நீதிமன்றம், இக்கொலையானது இறையாண்மையுள்ள ஒரு நாட்டிற்கு எதிரானது என்று கூறி 26 பேருக்கும் தடா சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை கொடுத்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது என்றால், பிரபாகரன் என்ற தனி நபர் ராஜீவ் காந்தி என்ற தனிநபர் மீது உள்ள கோபத்தில் இக்கொலையை செய்திருக்கிறார். அதனால், அவரோடு சேர்ந்து 17 பேர் இறந்தார்கள். இதை ஒரு நாட்டிற்கு எதிரான குற்றமாக பார்க்க முடியாது. இவ்வழக்கை ஒருசராசரி கொலைவழக்காகதான் அணுக வேண்டும் என்று கூறியது.

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 432 மற்றும் 433 ஆகியன தண்டனைக் குறைப்புக்கான மாநிலங்களின் அதிகாரம். ஆனால், சிபிஐ, தற்போதுள்ள என்ஐஏ (NIA), டெல்லி காவல்துறை போன்ற சிறப்பு விசாரணை அமைப்புகளின் கீழ் ஒரு வழக்கு நடைபெற்றிருந்தால், அப்போது ஒன்றிய அரசுடன் அலோசித்துக்கொள்ளலாம் என்று பிரிவு 435 சொல்கிறது.

அரசியல்சாசன பிரிவு 161-ல், ஒரு மாநில அரசாங்கம் தங்களுக்கு இருக்கிற இறையாண்மையை பயன்படுத்தி ஒருவருக்கு, அவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் விடுதலை அளிக்க முடியும். அம்மாநில அமைச்சரவையின் முடிவு மட்டும்தான் அதில் பிரதானம் என்று கூறப்பட்டுள்ளது. எந்த விசாரணை முகமை வழக்கை விசாரித்தது என்பது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை

 

இந்த ஏழு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிட்டால், அத்தோடு ராஜிவ் காந்தி கொலை வழக்கு முற்றுப்பெறுகிறதா? இல்லை இது அதன் ஒரு பகுதிதானா?

ஒரு கொலை நடக்கிறதென்றால், ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? கொலையாளிக்கும் கொல்லப்பட்டவருக்கும் உள்ள முன்பகை என்ன? கொலையாளிக்கு அக்கொலையை செய்வதற்கான தார்மீக ஆதரவை யார் கொடுத்தார்? யார் உதவினார்? கொலையாளியை யார் வழிநடத்தினார்? கொலை செய்யப்பட்டவரின் எதிரி யாராவது கொலையாளியை தங்கள் பகைக்காக பயன்படுத்தினார்களா? இப்படிதான் ஒரு கொலை வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். அப்படித்தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கும் விசாரிக்கப்பட்டதாக கூறி, 1999-ல் உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்குகிறது.

அதைத் தொடர்ந்து, ஜெயின் கமிஷன் என்ன சொல்கிறது என்றால், ‘அந்த இறுதித்தீர்ப்பு ஒரு கண்துடைப்பு மட்டும்தான். இவர்களைவிட முக்கியமான குற்றவாளிகள் இன்னும் பிடிக்கப்படவில்லை. இதுபெரிய கூட்டுச்சதி திட்டம். அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதாவது ‘அகண்ட உலகலாவிய கூட்டுச்சதி திட்டம்’ என்று குறிப்பிடுகிறது.

ஆனால், இங்கே என்ன நடக்கிறது என்றால், 1999-ல் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. மறுபுறம், அப்போதிருந்து 2021 வரை, எம்டிஎம்ஏ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இவ்வழக்கிற்கான விசாரணை அறிக்கை தாக்கல் செய்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாண்டு ஜனவரியில், இவ்வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்றாவது சொல்லுங்கள் என்று கேட்டோம். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ், ‘சிபிஐ மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையில் இல்லை. அதனால், சிபிஐ-யிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை. உங்களுக்கு இதில் வேறு என்ன தீர்வு வேண்டும்?’ என்று கேட்கி்றார். ‘நான் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறையில் உள்ளேன். விடுதலை செய்தால் நான் எதற்கு இவற்றை கேட்கப்போகிறேன்’ என்று பேரறிவாளன் சார்பில் வாதம் வைத்தோம்.

உடனே நீதிபதி தமிழ்நாடு அரசு சார்பிலான வழக்கறிஞரை வரச் சொன்னார். அவர்களிடம் இவரின் விடுதலை தொடர்பான தீர்மானம் எங்கே என்று கேட்டார். நாங்கள் விடுதலையை பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம். ஆளுநர்தான் காலம் தாழ்த்துகிறார். நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.  ‘நாங்கள் அனுப்பிவிட்டோம். அவர்தான் காலம் தாழ்த்துகிறார் என்று சொல்லாதீர்கள். நீங்கள்தான் அதற்கு பொறுப்பு. நீங்கள்தான் ஆளுநரிடம் ஏன் நிறுத்தி வைத்துருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்.’ என்று நீதிபதி கூறினார். அதற்கு நாங்கள் கேட்டுச் சொல்கிறோம் என்று தமிழ்நாடு அரசு பதில் சொன்னது.

அடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது, பேரறிவாளன் சார்பாக ஒரு மனுவை தாக்கல் செய்கிறோம். அதில், ‘நான் சிறையில் ஒழுக்கமாக இருக்கிறேன். சிறையில் என்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. அதனால், என்னை விடுதலை செய்ய வேண்டும்.’ என்று கேட்கிறோம். அம்மனுமீதான விசாரணையில், ஒன்றிய அரசு, இவரின் விடுதலையை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று சொன்னது. ‘சட்டப்பிரிவு 161-ன் படி இவரின் விடுதலைக்கு மாநில அரசுக்கு உரிமையுள்ளது. உங்களுக்கு சட்டம் தெரியாதா?’ என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்கிறது.

அடுத்த நாள், ஜனவரி 21ம் தேதி, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஒன்றிய அரசின் சார்பாக வாதாடுகிறார். ‘ஆளுநர் இவ்வழக்கில் என்னை ஆஜராக சொல்லியிருக்கிறார். ஓரிரு நாட்களில், ஆளுநரிடமிருந்து பதில் வரும்’ என்று சொன்னார். அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை இரண்டு வாரம் தள்ளிப்போடப்பட்டது.

இதற்கிடையில், 25.01.2021-ல், ‘இவ்விடுதலை தொடர்பாக முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குதான் உரிய அதிகாரம் உள்ளது என்று நினைக்கிறேன். அதனால், தொடர்பானவற்றை எல்லாம் நான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டேன்’ என்று ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்படுகிறது.

 

இந்த விவகரத்தில் ஒரு மாநில ஆளுநரின் அதிகாரம் அல்லது பணிதான் என்ன? அவரின் எல்லை என்ன?

ஒரு மாநில அரசு நினைப்பதை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட நிர்வாக பதவிதான் ஆளுநர் பதவி. அம்மாநில அமைச்சரவையின், ஆலோசனைகளை பின்பற்றுவதுதான் அவரின் பணி. இவ்வாறு இருக்கையில், எந்த அதிகாரமும் இன்றி, அமைச்சரவை எடுத்த முடிவிற்கு அதிகாரம் இல்லை என்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார். இதை, இந்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, ஒன்றிய உள்விவகாரத்துறை அமைச்சகம் ஒரு பிரமாணப்பத்திரமாக சமர்பித்தார்கள்.

 

புதிதாக பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஏழு பேரின் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருககு ஒரு கடிதம் எழுதியுள்ளதே. அக்கடிதம், இவர்களின் விடுதலையில் என்ன பாத்திரத்தை ஏற்கும்?

பூட்டின் சாவி உங்களிடம் இருக்கிறது. இன்னொருவர் என்னிடம் அச்சாவியைக் கொடு என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நீங்களே அவரிடம் போய், ‘நான் சாவியை உன்னிடம் தருகிறேன். நீங்கள் பூட்டை திறந்து அவர்களை விடுவியுங்கள்’ என்று ஏன் கேட்க வேண்டும்? ஒன்றிய அரசிற்கு இதில் அதிகாரமில்லை என்பதுதான் இவ்விடுதலை வழக்கின் சாரமே. அதுதான் உச்ச நீதிமன்றத்தில் இப்போது வரை வழக்கின் முக்கிய வாதமாக போய் கொண்டிருக்கிறது.

புதிய அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்றால், ‘ஆளுநர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. ஒன்றிய அரசின் கட்டளைக்கு ஏற்றாற்போல் செயல்படுகிறார். ஒரு மாநில அரசின் அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கும் போது, ஆளுநர் எப்படி இதைப்போல செய்யலாம்?’ என்று கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர் வேறு வழியில்லை என்று கைவிரிக்க கூடாது. ஆளுநரை சம்மதிக்க வைக்க வேண்டும். ஒன்றிய அரசு ஆளுநர்களை வைத்து, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். நாம்தான் போராட வேண்டும். மாறாக, நாம் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைப்பதன் வழியாக, நம் அதிகாரத்தை குறைக்கக்கூடாது.

 

ஆளுநர், காரணம் சொல்லாது தாமதப்படுத்தினால், அரசியலமைப்பில் 21 ஆவது பிரிவின் படி அது சட்டத்திற்கு எதிரானதா? அதாவது காரணமின்றி செய்யப்படும் தாமதம் அரசியலமைப்பிற்கே எதிரானதா?

கண்டிப்பாக. மேலும், ஒரு எளிய உதாரணம் சொன்னால், ஒருவருக்கு 35 வயதாகிறது. அவர் 80 கிலோ எடையுள்ளவர் என்று அமைச்சரவை முடிவெடுத்து சொன்னால், இல்லை அவருக்கு 25 வயதுதான் இருக்கும். 60 கிலோவுக்கு கீழேதான் எடை இருக்கும் என்று Factual Error-ஐ சுட்டிக்காட்டி, மாற்றலாம். அதற்கேற்றாற் போல ஆளுநர் முடிவெடுக்கலாம். ஆனால், மாநில அரசுக்கு ஒருவரின் வயது, எடையை பரிசோதிக்கவே உரிமையில்லை என்று சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மாநில அதிகாரத்தையே அவர் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை மாநில அரசு அனுமதிக்கக்கூடாது.

நேர்காணல் – அரவிந்ராஜ் ரமேஷ்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

170 நாள் விடுமுறை; 14 மாதம் இலவசம் – சஞ்சய் தத்திற்கு சாய்ந்த தராசு

இடிக்கப்பட்ட சூதி

1992 ஆம் ஆண்டு… டிசம்பர் 6 ஆம் தேதி…

பாரதிய ஜனதா கட்சியும், சங்பரிவார் அமைப்புகளும், அயோத்தியில் பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற ஆபத்தான பரப்புரையை மேற்கொண்ட வந்த நிலையில், விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலிருந்தும் சுமார் ஒன்றரை லட்சம் கரசேவகர்கள் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் குவிந்தனர். விஷ்வ இந்து பரிஷித் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், அங்கு கூடியிருந்த கரசேகர்கள் மத்தியில் வெறுப்பை ஊட்டும் வகையில் தொடர்ந்து பேசினர்.

தலைவர்களின் வெறுப்புப் பேச்சால் உந்தப்பட்ட கரசேவகர்கள், ஒரு கட்டத்தில் அருகில் இருந்த பாபர் மசூதியை நோக்கி பாதுகாப்பை உடைத்துக் கொண்டு பாய்ந்தனர். மசூதியின் மீது ஏறிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அடுத்து சில மணித்துளிகளில் மசூதியை இருந்த இடம் தெரியாமல் இடித்து தரைமட்டமாக்கினர்.

மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. மும்பை நகர வீதிகளில் குவிந்த, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மசூதி இடிக்கப்பட்டதை அறிந்த இஸ்லாமியர்களும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த தெருக்களில் கூடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இது கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் தாக்கத் தொடங்கினர். நகரம் முழுவதும் கலவரம் பரவத் தொடங்கியது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 50 நாட்களுக்கு மேல் நீடித்த கலவரத்தில் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பழிவாங்குவதற்கான சதித் திட்டம்

கலவரம் உச்சத்தில் இருந்து சமயம், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம், ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்களும், தானியங்கி துப்பாக்கிகளும் மகராஷ்ட்ர மாநிலம் திகி கடற்கரையில் வந்திறங்கின. மிகப்பெரிய சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட அந்த ஆயுதங்களை பாதுகாக்க, அவை பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அந்த ஆயுதங்களை பாதுகாத்தவர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

ஒரு நடிகரின் வளர்ச்சி

பாலிவுட் திரையுலக பிரபலாங்களான, சுனில் தத், நர்கீஸ் தம்பதியினருக்கு பிறந்த சஞ்சய் தத் இளமைப் பருவத்தில் போதைப் பொருட்களை பயன்படுத்த தொடங்கினார். போதையில் மூழ்கியிருந்த மகனை மீட்கும் நடவடிக்கையாக அவரின் தந்தை சுனில் தத், 1981ஆம் ஆண்டு, சஞ்சய் தத்தை வைத்து ராக்கி என்ற திரைப்படத்தை இயக்கினார். “ராக்கி” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி அவரை முழு நேர நடிகராக மாற்றியது.

1986ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடித்த “நாம்” திரைப்படம் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் தனக்கான தனி முத்திரையை பதிக்கத் தொடங்கினார் சஞ்சய் தத்.

நிழல் உலகத் தொடர்பு

1991ஆம் ஆண்டு, படப்பிடிப்பிற்காக சஞ்சய் தத் துபாய்க்கு சென்றபோது, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை நேரில் சந்தித்தாக கூறப்படுகிறது. தாவூத்திற்கு நெருக்கமான தொழில் அதிபர்களான ஹனீஃப் மற்றும் சமீர் ஆகியோரின் அறிமுகமும் அவருக்கு கிடைத்துள்ளது. ஹனீஃப் மற்றும் சமீர் நடத்தி வந்த மேக்னம் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக, “சனம்” என்ற திரைப்படத்தில் நடிக்க சஞ்சய் தத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சஞ்சய் தத்திற்கும் ஹனீஃப்பிற்கும் இடையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

வேட்டையாடுவது சஞ்சய் தத்திற்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு. இதற்கான உரிமம் பெற்ற துப்பாக்கிகளை சஞ்சய் தத் வைத்திருந்தார். அரசியலில் ஈடுபட்டிருந்த தந்தையின் பாதுகாப்பிற்காகவும் அந்த துப்பாக்கிகளை வைத்திருப்பதாக ஹனீஃப்பிடம் அவர் கூறியுள்ளார். துப்பாக்கிகளின் மீது சஞ்சய் தத்திற்கு இருந்த ஈடுபட்டை அறிந்த ஹனீஃப், அவருக்கு தானியங்கி துப்பாக்கிகளை தருவதாக கூறினார். சஞ்சய் தத் அதைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தார்.

1993ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி அபு சலீமும், மேக்னம் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர்களான ஹனீஃப் மற்றும் சமீர் சஞ்சய் தத்தின் இல்லத்திற்கு சென்றனர். அவர்கள் சென்ற காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தானியங்கி துப்பாக்கிகளையும், சில கையெறி குண்டுகளையும் அவர்கள் சஞ்சய் தத்திடம் கொடுத்து அதை பாதுகாப்பாக வைக்கும்படி கூறினர். சஞ்சை தத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அதற்கு மறுநாள், சஞ்சய் தத் வீட்டிற்கு சென்ற அபு சலீம், அதற்கு முன் தினம் கொடுக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகளில் இரண்டையும், கையெறி குண்டுகளையும் திரும்ப பெற்றுக்கொண்டார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு

மார்ச் 12ஆம் தேதி…

மும்பை பங்கு சந்ததையில் பரபரப்பாக வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மதியம் சுமார் 1:30 மணியளவில் பங்கு சந்தை அமைந்துள்ள கட்டிடத்தின் கீழ் தளத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் வெடித்ததில், அந்த 28 மாடி கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதில் 50 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்னோர் படுகாயம்டைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு குறித்த தகவல் பரவுவதற்குள்ளே, அடுத்து அரை மணி நேரத்தில் மாண்ட்வி பகுதியில் அமைந்துள்ள கார்ப்பரேஷன் வங்கியின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார், வெடித்து சிதறியது. அடுத்துடுத்து ஏற்பட்ட இந்த இரண்டு குண்டு வெடிப்புகளும் அடுத்து நிகழவிருந்த தொடர் பயரங்கரத்தின் முன்னோட்டம் மட்டுமே.

முதல் குண்டு வெடித்த இரண்டு மணி நேரத்தில் ஓடும் பேருந்து, நட்சத்திர விடுதி, கடைத் தெரு, வங்கி, வர்த்தக மையம் என மும்பையின் 11 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்திய வரலாற்றில் அதுவரை நடைபெறாத இந்த பயங்கரத்தில் 257 பேர் உயிரிழந்தனர்.

ஆதாரத்தை அழிக்க முயற்சி

குண்டு வெடிப்பு குறித்து விசாரணையை முடுக்கி விட்ட மும்பை காவல்துறை, 17 மாநிலங்களில் உள்ள 79 நகரங்களுக்கு காவல்துறையின் சிறப்பு பிரிவினரை அனுப்பி வைத்தது. அவர்களால் கைது செய்யப்பட்ட சிலர், நடந்த பயங்கரம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் ஹனீஃப்பும், சமீரும் கைதுசெய்யப்பட, அடுத்த கைது சஞ்சய் தத் என்பது உறுதியானது. அவரை கைது செய்ய காவல்துறையினர் முடிவெடுத்தபோது மொரீசியஸ் நாட்டில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருந்தார்.

இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளை அறிந்த சஞ்சய் தத், தான் வசமாக சிக்கிக்கொண்டதை புரிந்துகொண்டார். உடனே தனது நண்பரை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டிலிருந்த ஏகே 57 துப்பாக்கியை அழித்து விடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், காலம் கடந்த அந்த வேண்டுகோள் எந்த பலனையும் தரவில்லை. அதற்குள் குண்டு வெடிப்பில் சஞ்சய் தத்திற்கு இருந்த தொடர்பு வெட்ட வெளிச்சமானது.

கைதும் விடுதலையும்

ஏப்ரல் 19ஆம் தேதி மொரீயசிலிருந்து மும்பை திரும்பிய சஞ்சயை தத்தை, விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். சட்டத்திற்குப் புறம்பாக ஏகே 57 துப்பாக்கியை வைத்திருந்தது மற்றும் அதை அழித்தது ஆகிய குற்றங்களுக்காக, தடா மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உடனடியாக சஞ்சய் தத் சார்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாக, தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும், கறுப்பு சட்டம் என்று அழைக்கப்பட்ட தடா (TADA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் குறைந்தது ஓராண்டாவது சிறையில் அடைபட்டு இருக்க வேண்டும். ஆனால், இவை அனைத்திற்கும் விதி விலக்காக, பதினைந்தே நாட்களில் சஞ்சய் தத்திற்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதி மன்றம்.

மீண்டும் சிறை

குண்டு வெடிப்பு நடந்து 8 மாதம் கழித்து, சஞ்சய் தத் உட்பட 189 பேர் மீது காவல்துறையினர் முதல் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், சஞ்சய் தத்திற்கு எதிராக, சட்ட விரோதமாக ஆயுதத்தை பதுக்கி வைத்தது மற்றும் தடயத்தை அழித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. வழக்கை விசாரித்த சிறப்பு தடா நீதிமன்றம், 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம், சஞ்சய் தத்திற்கு வழங்கிய ஜமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சஞ்சய் தத் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். மகனை காப்பாற்ற முயன்ற சுனில் தத்திற்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தான் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரத்தை சஞ்சய் தத் முதலலில் நிரூபிக்க வேண்டும் என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் சஞ்சய் தத் சிறையிலிருந்து வெளி வருவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டன.

(கா)ட்சி மாற்றம்

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற மஹாரஷ்ட்ர சட்டமன்ற தேர்தலில், சிவசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஏற்கனவே சஞ்சய் தத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது அதை பால்தாக்ரே கடுமையாக எதிர்த்தார். மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கும், சஞ்சய் தத்திற்கும் தொடர்பு இருப்பதாக அவர் தொடர்ந்து பேசிவந்தார். ஆகவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத், சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் உதவியை நாடினார்.

அடுத்த சில நாட்களிலேயே, மஹராஷ்ட்ரா அரசால் அமைக்கப்பட்ட சீராய்வு கமிட்டி, சஞ்சய் தத்திற்கு பிணை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கிடையில் குண்டு வெடிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிபிஐ, சஞ்சய் தத் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, மறு பரிசீலினைக்கு உட்படுத்தக் கூடிய பிரிவில் சேர்த்தது. தற்போது மாறியிருந்த சூழலை கருத்தில் கொண்டு, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடினார் சஞ்சய் தத்.

சஞ்சய் தத்தின் கணிப்பு பொய்யாகவில்லை. அவரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைவரையும், ஆச்சர்யத்திலாற்றும் வகையில் சஞ்சய் தத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஓராண்டிற்கு முன், சஞ்சய் தத் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த போது, குற்றம் செய்யவில்லை என்பதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று கூறிய உச்சநீ திமன்றம், தற்போது மாநில அரசின் சீராய்வு கமிட்டியின் பரிந்துரையை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கியது.

சிறையிலிருந்து வெளியே வந்த சஞ்சய் தத், வீட்டுக்கு கூட செல்லாமல், தனது தந்தை சுனில் தத்துடன், பால்தாக்ரேவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தார். சுமார் 18 மாதம் சிறையிலிருந்த சஞ்சய் தத் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் மீதான வழக்க தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தண்டனையும் மேல்முறையீடும்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு தடா நீதிமன்றம், 2007 ஆம் ஆண்டு தீர்ப்பை வழங்கியது. அதில் தடா சட்டத்தின் கீழ் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டதை ரத்து செய்த நீதிமன்றம், ஆயுத சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 2ஆம் தேதி சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அத்துடன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார். மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 18 நாட்கள் மட்மே சிறையிலிருந்து சஞ்சய் தத் மீண்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மேல் முறையீட்டு மனுவை சுமார் 6 ஆண்டுகளாக விசாரித்த உச்சநீதிமன்றம் இறுதியாக 2013ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி தீர்ப்பை வழங்கியது. அதில், சஞ்சய் தத்திற்கு, தடா நீதிமன்றம் வழங்கிய 6 ஆண்டு தண்டனை, 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. சஞ்சய் தத் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்ததால், மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. இந்த தண்டனையை அனுபவிக்க, நான்கு வாரங்களில் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சரணடைய மறுத்த சஞ்சய் தத்

உச்சநீதிமன்றம் வழங்கிய நான்கு வார அவகாசம் கடந்த பிறகும் சஞ்சய் தத் சரணடையவில்லை. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து, நேரடியாக சிறையில் சரணடைய உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற்தில், சஞ்சய் தத் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தில் அவர் சரணடைய மேலும் நான்கு வாரம் அவகாசம் வழங்கியது. இதைத்தொடர்ந்து உச்ச நீமன்ற உத்தரவிற்கு எதிராக சஞ்சய் தத் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு, மே 16ஆம் தேதி அவர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து எரவாடா சிறையில் சஞ்சய் தத் அடைக்கப்பட்டார்.

விருப்பம்போல் கொடுக்கப்பட்ட விடுப்பு

சிறையில் நான்கரை வாரம் இருந்த சஞ்சய் தத், 14 நாட்கள் சாதாரண விடுமுறையில் வெளியே செல்ல சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். காவல்துறை சார்பில் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்படாததால், அவருக்கு சிறை நிர்வாகம் விடுமுறை அளித்தது.

2013 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி, விடுமுறையில் சிறையிலிருந்து வெளியே வந்த சஞ்சய் தத்திற்கு, ஏற்கனவே கொடுக்கப்பட்ட விடுமுறை முடிந்த பின்னர் மேலும் இரண்டு வாரம் விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டது. சுமார் ஒரு மாதம் விடுமுறையை அனுபவித்த சஞ்சய் தத் அக்டோபர் 30 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

அடுத்த ஒரே மாதத்தில் அவருக்கு 30 நாள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இவ்வாறாக சிறையில் அடைக்கப்பட்ட ஒரே ஆண்டில் சஞ்சய் தத்திற்கு 118 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் 14 நாள் விடுமுறை பெற்ற சஞ்சய் தத், அது முடிந்ததும், விடுறையை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், சிறை நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளாததால், அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

இரண்டு ஆண்டுகளில் சிறையிலிருந்து 146 நாட்கள் விடுமுறை பெற்றிருந்த சஞ்சய் தத்திற்கு, அவருடைய மகளின் மருத்துவ சிகிச்சைக்காக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் 30 நாள் பரோல் வழங்கப்பட்டது.

முன்கூட்டியே விடுதலை

உச்சநீதிமன்ற பிறப்பித்த தண்டனையின் படி 2016 ஆம் ஆண்டு நவம்பவர் மாதம் வரை சஞ்சய் தத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், சிறையில் அவருடைய நன்னடத்தையை காரணம் காட்டி, முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை நிர்வாகம் முடிவெடுத்தது.

தனது உடல் நிலை, மனைவியின் உடல் நிலை, மகளின் உடல் நிலை என பல்வேறு காரணங்களுக்காக ஏற்கனவே சுமார் 170 நாட்களுக்கு மேல் சிறையிலிருந்து விடுமுறைபெற்ற சஞ்சய் தத், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி, சிறையிலிருந்து வெளியேறினார். மொத்தத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையில், 14 மாதங்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டம் அனைவருக்கும் மம் ல்லையா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், சஞ்சய் தத்திற்கு தண்டனை காலம் குறைக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்து கேட்கப்பட்டதா என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விளக்கம் கேட்டார். இதற்கு பதிலளித்துள்ள எரவாடா சிறை நிர்வாகம், மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று பதில் அளித்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆண்டுக்கணக்கில் முடிவெடுக்காத ஆளுநர், இறுதியில் தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் அனுமதி பெறாமல் சஞ்சய் தத்திற்கு மட்டும் எவ்வாறு தண்டனைக காலம் குறைக்கப்பட்டது என்பது பேரறிவாளன் எழுப்பும் கேள்வி.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ஒன்றிய சட்டமும் இரண்டு வழக்குகளும் : சஞ்சய் தத் – பேரறிவாளன் ஓர் ஒப்பீடு

விபரம் சஞ்சய் தத் பேரறிவாளன்
குற்றவாளியின் வரிசை A-117 (119 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்) A-18 (26 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்)
குற்றம்

 

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு (12 இடங்கள்). ராஜீவ் காந்தி கொலை வழக்கு.
உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர்

 

257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்

2000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் காயமடைந்தனர்.

 

ராஜீவ் காந்தி, காவல்துறையை சேர்ந்த 9 பேர் மற்றும் 6 அப்பாவி காங்கிரஸ் கட்சியினர் உட்பட 15 பேர் இறந்தனர்.

 

தோராயமாக, காவல்துறையை சேர்ந்த 40 பேர் மற்றும் அப்பாவி காங்கிரஸ் கட்சியினர் காயமடைந்தனர்.

விசாரணை செய்த அமைப்பு சிபிஐ / சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்). சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி).

 

தீர்ப்பளித்த நீதிமன்றம் சிறப்பு தடா நீதிமன்றம்

 

சிறப்பு தடா நீதிமன்றம்

 

உச்ச நீதிமன்றம் தடா சட்டத்தில் குற்றச்சாட்டை உறுதி செய்து, இது ஒரு பயங்கரவாத செயல் என அறிவித்தது.

 

அனைத்து தடா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, இக்கொலையானது பிரபாகரனுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையிலான விரோதத்தால் நடந்தது என அறிவித்தது.
குற்றத்தில் இவர்களது பங்கு

 

குண்டு வெடிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியென குற்றஞ்சாட்டப்பட்ட நிழலுலக தாதா அபு சலீமுடன் உள்ள தொடர்பு.

 

குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து ஏகே 47 துப்பாக்கிகளை வாங்கியது.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் improvised explosive device (IED)-க்கு, இரண்டு 9 வோல்ட் பேட்டரியை முதன்மை குற்றவாளியென குற்றம் சாட்டப்பட்ட சிவராசனுக்கு வழங்கியது.
இறுதியாக நீதிமன்றத்தில் வாசிக்கபட்ட தீர்ப்பும் தண்டனையும்

 

ஆயுதச் சட்டம், 1959-ன் கீழ் 25 (1-அ), (1-ஆ)(அ) சட்டப்பிரிவுகளில் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

 

சட்டப்பிரிவுகள் 120 (ஆ), 109 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 302 ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை.

சட்டப்பிரிவு 109 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 326-ன் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

சட்டப்பிரிவு 109 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 324-ன் கீழ் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை.

கம்பியில்லா தந்தி சட்டத்தின் பிரிவு 6 (1-அ)-ன் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

பாஸ்போர்ட் சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் 3 மாதம் கடுங்காவல்.

தண்டனை குறைப்பு செய்ய அதிகாரமுள்ள அரசு

 

ஒன்றிய அரசுக்கு அரசியலமைப்பின் பிரிவு 73 (1) (அ) மற்றும் குற்றவியல் நடைமுறைகள் சட்டத்தின் பிரிவு 432 (7) (அ) கீழ் உள்ளது.

ஏனென்றால் வழங்கப்படாத தண்டனைகள் ஒன்றிய சட்டத்தின் கீழுள்ள ஆயுதச் சட்டத்தில் உள்ளது.

மாநில அரசுக்கு அரசியலமைப்பின் பிரிவு 162 மற்றும் குற்றவியல் நடைமுறைகள் சட்டத்தின் பிரிவு 432 (7) (ஆ) கீழ் உள்ளது.

 

ஒன்றிய சட்டங்கள் (கம்பியில்லா தந்தி சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம்) ஆகியவற்றின் கீழ் உள்ள தண்டனைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன.

ஆலோசனை / ஒத்துழைப்பு

(ஒன்றியம்/மாநிலம் குற்றவியல் நடைமுறைகள் சட்டம் 435)

 

இவ்வழக்கு குற்றவியல் நடைமுறைகள் சட்டம் 435 (2) -ன் கீழ் வருவதால், மாநில அரசால் தண்டனையை குறைக்க முடியாது.

 

இருப்பினும், ஸ்ரீஹரன் என்கிற முருகன் வழக்கில் அரசியலமைப்பு அமர்வு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஒன்றிய அரசுடன் சம்மதத்துக்கு பின்னரே செய்ய முடியும்.

இவ்வழக்கு குற்றவியல் நடைமுறைகள் சட்டம் 435 (1) பிரிவின் கீழ் வருவதால், மாநில அரசு தண்டனையை குறைக்கலாம்.

எவ்வாறாயினும், ஸ்ரீஹரன் என்கிற முருகன் வழக்கில் அரசியலமைப்பு அமர்வு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஒன்றிய அரசுடன் கலந்தாலோசித்த பின்னர் செய்ய முடியும்.

பரோல் / விடுப்பு

 

குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்றிய சட்டமான ஆயுதச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளதால், அவருக்கு மாநில அரசு பரோல் அல்லது விடுப்பு வழங்க முடியாது. ஒன்றிய சட்டங்களின் (கம்பியில்ல தந்தி சட்டம், பாஸ்போர்ட் சட்டம்) கீழ் உள்ள அனைத்து தண்டனைகளும் வழங்கப்பட்டுவிட்டதால், தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு சட்டம், 1982-ன்  கீழ் மாநில அரசு விடுப்பு வழங்கலாம் .
சிபிஐ விசாரணை

 

2007-ல் குற்றவியல் மேல்முறையீடு எண்.1060.

சஞ்சய் தத் (A-117) Vs. மகாராஷ்டிரா மாநிலம், சிபிஐ (எஸ்.டி.எஃப்), பம்பாய் வழியாக.

1998-ன் மரண தண்டனை வழக்கு எண் 1.

காவல்துறை கண்காணிப்பாளர், சிபிஐ / எஸ்ஐடி –ன் வழியாக தமிழ்நாடு அரசு Vs. நளினி மற்றும் மற்ற 25 பேர்

வழங்கப்பட்ட சிறை விடுப்பு

 

சிறையில் அவரது நன்னடத்தையின் காரணமாக 8 மாதங்கள் விடுப்பு வழங்கப்பட்டது.

 

அவரது 5 ஆண்டு சிறைவாசத்தின் போது 6 மாத பரோல் மற்றும் விடுப்பு வழங்கப்பட்டது.

 

மொத்தத்தில் அவரின் முழு தண்டனை காலத்துக்கு  14 மாதங்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டார்.

 

சிறையில் நன்னடத்தையுடன் 28 ஆண்டுகள் ஒரு ஒடுக்கமான சிறிய சிறை அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் அனுபவித்த மொத்த சிறைவாசத்தில், 2017 மற்றும் 2019-ல் என இரண்டு முறை, நோய்வாய்ப்பட்ட வயதான தனது தந்தையை காண, தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு சட்டம், 1982-ன் கீழ் அவருக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கப்பட்டு,

மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

பரோல் காலத்தில் அவரின் நன்னடத்தையின் காரணமாக அவரது சொந்த ஊரின் காவல் ஆய்வாளர் நன்னடத்தை சான்றிதழ் வழங்கினார்

ஒன்றிய அரசின் தலையீடு

 

அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் 30.12.2015 அன்று நிராகரித்தார்.

 

ஆனாலும், மகாராஷ்ட்ர மாநில அரசால் அவர் 25.02.2016 அன்று முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.

 

அவரை விடுவிக்க அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையால் பரிந்துரைக்கப்பட்டு, ​​29 மாத கால தாமதத்துக்கு பின், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, ஆளுநர் அந்த பரிந்துரையை, ‘குடியரசுத் தலைவருக்குதான் பொருத்தமான உயர் அதிகாரம் உள்ளது’ என கூறி ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

என் மகன் மீண்டும் சிறைக்குத் திரும்பாமல் அவர் பார்த்துக்கொள்வார்’ –அற்புதம்மாள் நேர்காணல்

1991 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி இரவு,  ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நாளை காலை அனுப்பி வைக்கிறோம் என்றும் கூறிய சிபிஐ அதிகாரிகளை நம்பி, அவர்களுடன் மகனை அனுப்பி வைத்ததாக கூறுகிறார் அற்புதம்மாள். அந்த இரவு அற்புதம்மாளுக்கு 31 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. மகனின் விடுதலைக்காக ஒரு நெடிய போராட்டங்களை நடத்தி வரும் அற்புதம்மாளின் இப்பயணம் குறித்து அரண்செய்-க்கு அளித்த நேர்காணல்.

சிறுவயது அற்புதம்மாள் பற்றி?

எனது தந்தை திருவேங்கடம் வேலூர் பகுதியில் மிகப் பிரபலமானவர். திமுகவின் மாவட்ட பொருளாளராக பொறுப்பு வகித்தவர். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த எங்களை நன்கு வளர்த்தவர். இந்தி எதிர்பு போராட்டத்திலும், விலைவாசி உயர்வு போராட்டத்திலும் கலந்துகொண்டதற்காக எனது தந்தை அறிஞர் அண்ணாவோடு சிறையில் இருந்தவர். சிறையில் இருந்த அப்பாவுக்கு நான் எடுத்துச் சென்ற உணவை அண்ணாவும் சாப்பிட்டுள்ளார். கொள்கை பற்றாளரான அப்பா, எங்களை மகிழ்ச்சியாகவே வைத்திருந்தார்.

வாழ்ந்திருக்க வேண்டிய அற்புதம்மாளை இப்போது இழந்துவிட்டோமே என்று கவலைக்கொண்டிருக்கிறீர்களா?

நிச்சயமாக எனக்கும் கனவுகள் இருந்திருக்கும் அல்லவா. மகனுக்கு ஒரு திருமணம். அவனுடைய குழந்தைகள், அவர்களுடைய படிப்பு. மகனின் சமூகம் சார்ந்த சிந்தனையோடு அவர்கள் வளரும் சூழல் என, ஒரு தாயாக ஒரு பாட்டியாக நான் வாழ்ந்திருக்க வேண்டிய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து நிற்கிறேன்.

விசாரிப்பதாக பேரறிவாளனை கூட்டிச் சென்ற நாளில் என்ன நடந்தது? அந்த நாளை நினைத்தால் உங்கள் எண்ணத்தில் தோன்றுவது?

விசாரிக்கப் போகிறோம் என்று என் மகனை அழைத்தபோது நாங்களே தான் அவனை அனுப்பி வைத்தோம். ஏனென்றால் இந்த குற்றத்திற்கும் எனது மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது எங்களுக்கு நான்றாக தெரியும். ஆகவேதான், தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தோம். ஆனால், அதன் பின்பு நடந்தவற்றை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

ஒருவேளை அந்த சம்பவம் நடந்திருக்காவிட்டால், இன்று நீங்களும் பேரறிவாளனும் எவ்வாறு இருந்திருப்பீர்கள்?

நான் முந்தைய கேள்விக்கு சொன்னதைப் போல் அவன் ஒரு நல்ல நிலையில் இருந்திருப்பான். காரணம், படிக்கும்போதே அனைவருக்கும் உதவுவதோடு சமூக பொறுப்போடும் இருந்தவன் பேரறிவாளன். நன்றாகப் பாடுவான். நிச்சயமாக ஒரு உயர்ந்த வேலைக்குச் சென்றிருப்பான். குழந்தைகளோடும் அவனுடைய குடும்பத்தோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பான். எங்களுடைய வாழ்க்கையும் அவர்களோடு இனியதாக அமைந்திருக்கும்.

இந்த நெடிய போராட்டத்தில், என்றாவது வாழ்வதையே முற்றிலும் வெறுத்ததுண்டா?

நிச்சயம் கிடையாது. நீதிக்கான எனது போராட்டத்தை, தொடர்ந்து வழி நடத்துவதும் எனது மகனை, குற்றம் செய்யாதவன் என்பதை நிரூபித்து, விடுதலை செய்வதிலேயே என்னுடைய கவனம் முழுவதும் இருந்தது. இன்றும் இருக்கிறது.

இதற்கு முன்னாள் இருந்த பேரறிவாளனுக்கும் இன்று உங்கள் அருகில் இருக்கும் பேரறிவாளனுக்கும் ஏதேனும் மாற்றத்தை உணர்கிறீர்களா?

பிறந்ததிலிருந்து 19 வயது வரைதான் நான் அவனை வளர்த்தேன். ஒரு தாயாக ஒரு குடும்பத் தலைவியாக அவனுக்கு தேவையானவற்றை செய்ததோடு, ஒரு ஆசிரியர் குடும்பமாக நாங்கள் அன்போடு வாழ்ந்து வந்தது இங்கே அனைவருக்கும் தெரியும். ஆனால் புரட்டிப்போடப்பட்ட எங்களது வாழ்க்கையில் இடைப்பட்ட இந்த முப்பது ஆண்டுகால வாழ்க்கை என்பது நிச்சயம் நாங்கள் அனைவருமே இழந்த ஒரு வாழ்க்கையாகும். இன்றைக்கு ஐம்பது வயதைத் தொட்டுவிட்ட என்னுடைய மகனாக வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலம் நிச்சயமாக யாராலும் திருப்பிக் கொடுக்கவும் ஈடு செய்யவே முடியாத பெரும் துயரம் ஆகும்.

சிறையில் பேரறிவாளனின் நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார் என்று கேள்விபட்டோம்?

உண்மைதான். சிறைவாசிகளை படிக்க வைப்பதிலேயே பேராறிவாளன் முழு கவனம் செலுத்துகிறான். பேரறிவாளன் மூலம், சிறையிலேயே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என நிறைய படித்து முடித்தவர்களும் உண்டு. சிறைதண்டனை முடிந்து வெளியே வந்து சிறையில் படித்த படிப்பை வைத்து வாழ்பவர்கள் நிறைய பேர். அவர்களில் பலர், இன்றும் என்னை தொடர்பு கொண்டு நன்றி சொல்வார்கள். சிறையில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட படிப்புக்கான பல உபகரணங்கள் வர முக்கிய காரணமாக இருந்திருக்கிறான். இப்போதும் கூட, சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதும்போது அவர்களுக்கான பாடம் நடத்தும் ஆசிரியராகவும் பேரறிவாளன் பணியாற்றுகிறான்.

பேரறிவாளன் என்ற மகனிடம் அற்புதம்மாள் என்ற தாய் பயின்ற பாடம் என்ன?

இந்த உலகத்தை நான் அவன் வாயிலாகத்தான் பார்க்கிறேன். முன்பு ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள் தற்கொலை எண்ணம் வந்ததுண்டா என்று. நிச்சயம் இல்லை என்று பதில் சொல்லி இருந்தேன். ஆம். தன்னம்பிக்கையோடு தொடர்ந்து போராடுவது என்பது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்.

அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது பற்றி?

அவரை சந்தித்த போது சிறிது நேரம் என்னால் பேச முடியவில்லை. அனைத்தும் உணர்ந்தவர் அவர். உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு தான் எனக்கும் இருக்கிறது என்று அன்போடு அரவணைத்து ஆறுதல் கூறினார். என்னுடைய மகன் பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு திரும்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பணிவோடு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு அவர் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து உதவுவதாக மனநிறைவோடு சொன்னார். இந்த சந்திப்பு எனக்கு மிகப்பெரிய மனநிறைவை தந்தது. என் மகன் சிறை திரும்பாமல் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை அவர் பேச்சு எனக்கு தந்துள்ளது.

நேர்காணல் : அரவிந்ராஜ் ரமேஷ்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

 

‘புலிகளைத் தவிர வேறு யாரைப்பற்றியும் பேசக்கூடாது என்று சிபிஐ என்னை மிரட்டியது’ – ரங்கநாத் நேர்காணல்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 40 வயதான ஜெயராம் ரங்கநாத், 26 வது குற்றவாளி.  அவர் பெங்களூரைச் சேர்ந்த கன்னட தமிழர். மிருதுளா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் ஒரு பட்டறை வைத்திருந்தார். ராஜீவ் கொலையாளிகளில், முக்கியமான கன்னியான ஒற்றைக்கண் சிவராசான் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் கொலை கூட்டத்தின் ஐந்து பேரில் ஒருவரான சுபா ஆகியோர்  1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி, ஜெயராம் ரங்கநாத் வீட்டின் பின்வாசல் வழியாக தட்டி, கட்டாயமாக உள்ளே நுழைந்தனர் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை  இயங்கி கொண்டிருந்த புலி செயற்பாட்டாளர்கள், சிபிஐ வீட்டினுள்  நுழைந்து சோதனையிட்ட போது இறந்து பிணமாக கிடந்தார்கள். காவல்துறையினர் இந்த சாவுகளை தற்கொலை என்று சொன்னாலும், அவர்களின் இந்த விளக்கம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது

சீனிவாசன் மற்றும் சுபாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்கிற காரணத்திற்காக ரங்கநாத் ஆகஸ்ட் 18,1991-ல் கைது செய்யப்பட்டார்.  இதில் முரண் என்னவென்றால், தப்பியோடி வந்தவர்களை குறித்து காவல்துறைக்கு துப்பு கொடுத்ததே ரங்கநாத்தான். மேலும், அவர்தான் சிபிஐ-ன் அதிரடி நடவடிக்கையின் ஒரே சாட்சி. அவரும், அவரை விட்டு பிரிந்த மனைவியும்தான் சுபாவும், சிவராசனும் குற்றத்தை பற்றி பேசியதை நேரடியாக கேட்ட சாட்சிகள்.

ஜெயின் ஆணையத்தில் சமீபத்தில்  தாக்கல் செய்யப்பட்ட ரங்கநாத்தின் சமீபத்திய பிரமாணப் பத்திரத்தில், சிபிஐ வேண்டுமென்றே முக்கிய உண்மைகளை மறைத்து பல குற்றவாளிகளைக் காப்பாற்றுவதாக குற்றம் சாட்டுகிறார். சிவராசானும் அவரது குழுவினரும் சந்திரசாமியால் மேற்கத்திய நாடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல வாக்குறுதியளிக்கப்பட்டதாகவும், அந்த சாமியார் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பான விவரங்களை சிபிஐ பதிவு செய்யவில்லை என்பதும் அவரது முக்கிய வாதம் உள்ளது. அவரை பொறுத்தமட்டில், ராஜீவ் கொலை சதியில் புலிகளுக்கு அப்பால் சிபிஐ நீட்டிக்க விரும்பவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், “அரசியல் உள்நோக்கமில்லாத உயிரோடு இருக்கும் ஒரே சாட்சி என்கிற முறையில், என்னுடைய சொற்களை அலட்சியம் செய்யக் கூடாது.” என்று ரங்கநாத் கேட்டுக் கொண்டார்

முக்கியமான சாட்சி என்கிற வகையில், அவரிடம் இருக்கும் விபரங்கள் மிகவும் முக்கியமானவை. ரங்கனாத்தின் வழக்கறிஞர்களின் ஊடாக ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஒரு நேர்காணல் எடுத்திருக்கிறார். சென்னையில் சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்போடு இயங்கி வந்த பூந்தமல்லி சப்-ஜெயிலுக்கு கேள்விகள் அனுப்பப்பட்டன. ரங்கநாத்தின் பதில்கள் உரிய காவல்துறை கூடுதல் சூப்பிரண்டெண்டால் அட்டெஸ்ட் செய்யப்பட்டன.

சிவராசனும், சுபாவும் சந்திராசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடனான தொடர்புகளை பற்றி உங்களிடம் கூறினார்களா?

சந்திராசாமியுடனான தொடர்புகளை மட்டுமில்லாமல், கர்நாடகத்தை சார்ந்த காங்கிரஸ் தலைவருடனான (ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் இருந்தவர்) தொடர்பை பற்றியும் பேசினார்கள். அந்த தலைவர் வழியாகத்தான் ராஜீவ்காந்தியின் பிரப்புரை பயண திட்டம் கிடைத்தது என்றும் கூறுவார்கள். அந்த காங்கிரஸ் தலைவர்தான் தங்களுக்கு நெருக்கமானவர் என்று அவர்கள் சொல்லியபடி இருந்தார்கள். என்னோடு தங்கியிருந்த நாட்களில் சந்திராசாமிதான் என்னுடைய ஆசான் என்று சீவராசன் சொன்னார்.

(நவம்பர் 4 ஆம் தேதி ஜெயின் ஆணையத்தின் முன் அவர் சமர்பித்த பிரமாண பத்திரத்தில், அஸ்வத் நாராயண என்ற உள்ளூர் காங்கிரஸ் தலைவரை தங்களுடைய நண்பர்களில் ஒருவர் என்று சிவராசனும், சுபாவும் குறிப்பிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சிவராசன், சுபா இருவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தில்லி மேலிடத்தோடு நெருக்கமாக இருந்து, ராஜீவ் காந்தியின் பயண திட்டத்தை பெற்று தந்தவர் என்று குறிப்பிட்டனர்)

சிவராசனை பாதுகாப்பாக வெளியேற்ற சந்திராசாமி வாக்குறுதியளித்த வழி என்ன?

பெங்களூருவிலிருந்து நேரடியாக வெளிநாட்டிற்கு செல்ல சிவராசன் விரும்பினார். அதன் காரணமாகவே அவர் பெங்களூர் வந்தார். யாழ்ப்பாணத்திற்கு சென்றால் கொல்லப்பட வாய்ப்பிருப்பதால், வெளிநாட்டிற்கு பாதுகாப்பாக தப்பி செல்ல சந்திராசாமி ஏற்பாடு செய்வார் என்று கூறினார்.

(ரங்கநாத் தன்னுடைய பிரமாண பத்திரத்தில், தில்லிக்கு அழைத்து வந்து பின்னர் வெளிநாட்டுக்கு தப்புவிப்பது என்று திட்டமிட்டருந்ததாக குறிப்பிடுகிறார்.)

நீங்கள் உண்மையை சொல்வதை சிபிஐ தடுத்ததா?

சிபிஐ என்னை அச்சுறுத்தியது. புலிகளை தவிர பிறரை இந்த குற்றநடவடிக்கையோடு இணைத்து சொல்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் புலிகள்தான் ஒரே குற்றவாளி என்று நிலை கொண்டுவிட்டதால், அதை நிரூபிக்கவே ஆதாரம் தேடினார்கள். உண்மையாக குற்றத்தை செய்தவர்களுக்கு எதிராக ஆதாரம் சேகரிக்க முயலவில்லை.

சிபிஐ பதிவு செய்யவோ, வினையாற்றவோ தவறிய உண்மைகள் என்னென்ன?

சிபிஐ-ன் தலைவர் கார்த்திகேயன் காங்கிரஸ் உறுப்பினர்களை பற்றியோ, சந்திராசாமியை குறித்தோ வாய் திறக்க கூடாது என்று என்னை எச்சரித்தார். ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னிருந்த சக்திகளை குறித்து கார்த்திகேயனுக்கு தெரிந்திருக்கும் போலிருந்தது. மாஜிஸ்திரேட்டுக்கோ பிறருக்கோ தகவல் கொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். அவர் என்னிடம் கூறியவற்றை வைத்து பார்க்கும் போது முக்கியமான காங்கிரஸ்காரர்களையும், சந்திராசாமியையும் அவர் பாதுகாக்க நினைத்தார் என்றே தோன்றுகிறது. என்னுடைய கோரிக்கைகளுக்கு பின்னரும் சிபிஐ-ன் சிறப்பு புலனாய்வு குழு என்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்து கொள்ள தவறிவிட்டது.

நான் கர்நாடக காவல்துறையின் டிசிபி கேம்பியாவிடம் சிவராசன் மற்றும் சுபா ஆகியோர்  பதுங்கியிருக்கும் இடத்தை பற்றிய தகவலை தெரிவித்தேன். ஆனால், சிறப்பு நீதிமன்றத்தில் அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

சிவராசனையும், சுபாவையும் கைது செய்ய சிபிஐ தயங்கியது என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?

ஜூலை 30,1991 அன்று கோயம்புத்தூரில் விக்கி என்ற நபர் கைது செய்யப்பட்டார். சிவராசன் பெங்களூரில் பதுங்கியிருந்த இடத்தை பற்றிய தகவலை தெரிவித்தார். (ரங்கநாத் வீட்டிற்குள் அத்துமீறி ஆகஸ்ட் 6 ஆம் தேதி நுழையும் முன்னர் நடந்த சம்பவம்). ஆனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு சிபிஐ அந்த பதுங்குமிடத்தை சோதனையிடவேயில்லை.

ஆகஸ்ட் 2,1991 அன்று புலிகளுக்கு 4 பாதுகாப்பான பதுங்குமிடங்களை ஏற்பாடு செய்த ஜகனாதனிடம் விசாரணை நடத்தினார்கள். அவர் அந்த இடங்களை பற்றியும், காயம்பட்ட புலிகள் சிகிச்சை எடுத்துக் கொண்ட மருத்துவமனையை பற்றியும் தகவல் கொடுத்தார். ஆனாலும், சிபிஐ சிவராசனை கைது செய்ய முயற்சிக்கவில்லை. ஏனென்றால், அவர் உயிரோடு பிடிபட்டால், ராஜீவ் கொலைச்சதியில் ஈடுபட்டோர் மற்றும் தன்னுடன் தொடர்பிலிருக்கிற காங்கிரஸ் தலைவர்களை ப்ற்றிய விபரங்களையும் வெளியிட்டுவிடக் கூடும். இதே காரணத்திற்காகத்தான், ஆகஸ்ட் 18,1991 லும் கூட உள்ளூர் காவல்துறையினர் சிவராசனை கைது செய்ய அனுமதிக்கவில்லை.

ஜெயின் கமிசன் முன் இது குறித்து விளக்கமளிக்க வாய்ப்பு கிடைத்தால், ராஜீவ் கொலையில் வேறு நபர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிரூபிப்பேன். (கொலைக்கு பின்னர்) சிவராசன் மற்றும் சுபாவோடு தங்கியிருந்தவர்களில் உயிரோடு இருந்து, அவர்கள் கொலையை பற்றி சொன்னவற்றை கேட்ட ஒரே சாட்சி நான்தான்.

நன்றி: www.magazine.outlookindia.com

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

நான் நடந்ததைச் சொல்லிவிட்டேன! தீர்ப்பை நீங்கள் எழுதுங்கள் – திருச்சி வேலுசாமி

எப்போதும் நான்  இரவு 10 மணியில்  இருந்து 11 மணிக்குள்  சுப்ரமணியன் சுவாமியுடன் தொலைபேசியில் பேசுவது வழக்கம். அன்றும் நான் அவருடன் பேசுவதற்கு இரவு சரியாக 10.25 மணிக்கு   தொடர்பு  கொண்டேன்.  தொலைபேசியை  எடுத்து  நான்  ”ஹலோ”  என்று  சொன்ன  உடனேயே, ”என்ன  ராஜீவ்  காந்தி  செத்து  போயிட்டார்.  அதான  சொல்ல வரேள்“ என்று சொன்னார்.  நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.

இரவு 10.15 மணிக்கு குண்டு வெடித்திருக்கிறது, முதன்முதலாக இறந்துபோனவர்  ராஜீவ் காந்திதான் என்பதை 10.45 மணிக்குதான் அடையாளம்  கண்டிருக்கிறார்கள் . ஆனால் 10.25 மணிக்கு, அதுவும்  டெல்லியில் இருக்கும் சுப்பிரமணியன் சாமி “ராஜீவ்காந்தி செத்துட்டார் அதான சொல்ல வரேள்” என்று எப்படி கேட்டார்  என்பது தான் முதலில் என்னுடைய சந்தேகம்

1991, மே 18 அன்று, (படுகொலைக்கு 3 நாட்களுக்கு முன்னர்) காலை    10 மணியளவில், என் வீட்டு தொலைபேசி சிணுங்கியது. அதை  எடுத்தவுடன் மறுமுனையில்  டெல்லியில் இருந்து,  அன்றைக்கு,  மத்திய  சட்ட  அமைச்சராக இருந்த சுப்ரமணியன்  சுவாமி என்னிடம் பேசினார், “நாளை  காலை,  நான்  சென்னைக்கு  விமானத்தில்  வருகிறேன். விமான  நிலையத்திற்கு வந்து  விடு”  என்று சொன்னார்,  ”நான் சரி”  என்று வைத்து விட்டேன் .

நான்  உடனே சரி  என்று தொலைபேசியை வைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு.  தேர்தலுக்கு இன்னும்  ஒரு வாரமே  இருக்கக்கூடிய நேரத்தில் கட்சியின்  சார்பாக பலர்  வேட்பாளர்களாக போட்டியிட்டார்கள். அவர்களுக்கு எந்த ஒரு  பொருளாதார  உதவியும்  செய்யப்படவில்லை. பல வேட்பாளர்கள் என்  மூலமாகத்தான் தேர்வு செய்யப்பட்டிருந்ததால், எல்லோரும் என்னிடம்  தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்  அதற்காகத்  தான்  என்னை  வரச்  சொல்கிறார்  என்று  நான்  நினைத்துக் கொண்டேன்.  அடுத்த  நாள்  காலை (மே 19)  திருச்சியிலிருந்து ஒரு  காரில்  சென்னை விமான நிலையத்துக்கு சென்ற நான், அங்கேயே குளித்துவிட்டு, அவரை வரவேற்பதற்கு தயாராக நின்றேன்.

அவர் சென்னை விமான  நிலையத்தில்  வந்திறங்கினார். (மே 19) அங்கேயே  சிறிது  நேரம்  பேசிக் கொண்டிருந்தோம்.  பிறகு  ”சரி போகலாமா” என்றார், ” சரிங்க  நான்  இப்படியே  புறப்படுகிறேன்”  என்றேன் ,  ”என்ன?”  என்று  கேட்டார். ”இல்ல வரச் சொன்னீங்க வந்தேன், திரும்பி ஊருக்கு போகனும் இல்ல” என்றேன், ”இல்லை கூட்டங்கள் இருக்கிறது. அதுக்கு தான் உன்னை வரச் சொன்னேன்” என்று கூறினார். அப்போது வரை, அவர் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கலந்துகொள்கிறார் என்பதே எனக்குத் தெரியாது.

ஏற்கனவே அவருடன்  பேசி  ஒழுங்குபடுத்தி, மே 22  ஆம்  தேதி  மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கும்,  மே 23 ஆம்  தேதி  திருச்சியில்  பொதுக்கூட்டத்திற்கும் நான் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன்.

”சரி போகலாம்”  என்று சொன்னேன். அரசு  காரிலேயே  ஏறி   அவரும் நானும் அன்றைக்கு உளவுத்துறை அதிகாரியாக  இருந்த ஒருவரும்  (அவர்   இன்னும்  உயிரோடு இருக்கிறார். சென்னையில் வசித்து  வருகிறார்)  போய்க் கொண்டிருந்தோம் .

ராஜீவ்  காந்தி  படுகொலை  செய்யப்பட்ட  இடத்தில் (ஸ்ரீபெரும்புதூர்), அந்த  வளைவில்  திரும்பும்  போது  அந்த அதிகாரி என்னை  பார்த்து , “வேலுசாமி , இந்த  இடத்தில் தான்  நாளை  மறுநாள் பொதுக்கூட்டம்  நடக்கப்போகிறது.  ராஜீவ்காந்தி  பேசப் போகிறார்” என்று சொன்னார். உடனே  நான், ”என்ன   இந்த  இடத்திலா?  ஒரே புதரா  இருக்கு, இந்த இடத்தில் எப்படி  கூட்டம் நடக்கும்?”  என்று   கேட்டேன். ”இல்ல இல்ல  இங்கதான் எனக்கு நல்லா  தெரியும்” என்று அவர்  சொன்னார்.

எனக்கு சுப்ரமணியன் சுவாமியின் குணாதிசயங்கள் நன்றாக புரியும். இப்படிப்பட்ட பேச்சு வரும்போது தெரிந்தோ தெரியாமலோ எதுவாக இருந்தாலும் உடனடியாக குறுக்கீட்டு பேசுவது அவருடைய இயல்பான குணம்.  ஆனால் நாங்கள் இதை மாறி மாறி பேசுகிற போதும் ஒன்றுமே பேசாமல் அதைக் கேட்டுக்கொண்டு  சிரித்துக்  கொண்டே  வந்தார்.  எனக்கு அது வித்தியாசமாகப்பட்டது.

”என்ன அவர் இந்த இடத்துல கூட்டம்னு சொல்றாரு, நீங்களும் ஒன்னும் பேச மாட்டிக்கிறீங்களே” என்று கேட்டேன். உடனே அவர்,  ”உளவுத்துறை அதிகாரி சொல்றது  கரெக்டு தான். இந்த இடத்துலதான் கூட்டம் நடக்க போகுது” என்று கூறினார். ”அப்படியா” என்று கேட்டுக்கொண்டு விட்டுவிட்டேன்.

நாங்கள் சென்ற கார் காஞ்சிபுரத்தை அடைந்தது. அங்கே ஒரு வழக்கறிஞருடைய வீட்டில் எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  உணவு  முடிந்தவுடன்,  மாலை  மூன்று  மணியளவில் பக்கத்தில்  உள்ள  வாலாஜாப்பேட்டையின்  வேட்பாளருக்காக  சாலை ஓரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில்  பேசினோம்.

அது முடிந்து  மாலை 5 மணிக்கு காஞ்சிபுரத்தில்  பொதுக்கூட்டத்திற்கு,  பெரிய  அளவில்  ஏற்பாடு செய்திருந்தார்கள். அதை  முடித்து  திருத்தணிக்கு  பக்கத்தில்  ஒரு  கூட்டம், அது முடிந்தவுடன்  இரவு  கடைசியாக  வேலூரில்  பேச வேண்டும் என்று சொன்னார். “ யார்  இப்படி  திட்டம் போட்டார்கள்?  தவறாக இருக்கிறது”  என்று  நான்  சொன்னேன்.  ”இல்லை  ஏற்கனவே திட்டமிட்டது”  என்று  சொன்னார்கள். மிகவும்  சிரமப்பட்டு அங்கிருந்து வேலூர் சென்றபோது  இரவு பதினொரு மணியை தாண்டி விட்டது. அங்கே  கூட்டம்  முடிந்த போது இரவு 1 மணியை   நெருங்கிவிட்டது.  சரி, ஓய்வெடுத்து விட்டு காலையில் போகலாம் என்றார்.

சேலத்தில் அடுத்த  நாள்  கூட்டம்  இருந்த நிலையில்,  சேலத்தில்  என்ன நிகழ்ச்சிகள் என்று அப்போது தான் கேட்டேன்.  காலை  9  மணிக்கு  சில  இடங்களில்   திறந்த  ஜீப்பிலே பேச வேண்டும்.  இரவு பொதுக்கூட்டம் என்று சொன்னார்கள்.

காலையில் 9 மணி என்றால், இங்கே  தங்கிவிட்டு அங்கு  போக முடியாது  என்பதால் அந்த  இரவு  நேரத்தில்,  வேறு  வழியே  இல்லாமல் வேலூர் புறப்பட்டோம். நீங்கள் காரில் பின்னால்  படுத்துக்கொள்ளுங்கள்  என்றுச்  சொல்லி,  அந்த  இரவு  நேரத்திலும் வேலூரைச் சேர்ந்த வரதராஜன் இரண்டு தலையணையை வாங்கி வந்தார்.

அதை சுப்பிரமணியன் சாமியிடம் கொடுத்து பின்னால் அவரை படுக்கச் சொல்லிவிட்டு நான் முன்னால் டிரைவருடன் அமர்ந்துக் கொண்டேன். அங்கிருந்து சேலத்துக்கு வந்தோம், வருகிறபோதே அங்கிருந்த காட்சிக்காரர்களிடம் தகவல் சொல்லிவிட்டு தான் வந்தோம். மே 20 ஆம் தேதி காலை ஐந்தரை மணியளவில் தான் அங்கு போய் சேர முடிந்தது. அந்நேரத்திலேயே பதினைந்து இருபது பேர் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த முக்கியமானவர்களின் பெயர்கள் எனக்கு  இன்றும்  நினைவிருக்கிறது.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவர்  ஜி.ஜி.குருமூர்த்தி, திருப்பதியைச் சேர்ந்த கோபால்,  நாமக்கலைச் சேர்ந்த  நரசிம்மன், மேட்டூரைச்  சேர்ந்த  இரத்தினவேலன், தற்போதும் சேலத்தில் வசிக்கும்  வழக்கறிஞர்  தியாகராஜன், பரமத்திவேலூரைச் சேர்ந்த பரமசிவம் இவர்களுடன் முக்கிய பிரமுகர்கள் சிலரும் இருந்தனர்.

சுப்ரமணியன் சுவாமியுடன் கட்சிக்காரர்கள்  பேசிக் கொண்டிருந்தார்கள். நான் வெளியில் வந்து மரத்தடியில் நின்று பல் துலக்கிக் கொண்டிருந்தேன்.

முதலில் திருப்பதி கோபால் என்னருகே வந்தார்,  ”என்னப்பா சாமி இப்படி சொல்ராறு” என்றார். என்னவென்று கேட்டேன். ”என்ன, எல்லாரும் வேட்பாளரா நிக்கிறாங்க ஏதாவது உதவி பண்ணுங்க. தேர்தலுக்கு நாலு நாள் தான் இருக்குனு கேட்டா?, தேர்தலுக்கு நாலு நாள் இருக்குல, தேர்தல் நடந்தா பாக்கலாம் என்று சொல்கிறார்” என கூறினார்.  “யோவ், உனக்கென்ன பைத்தியம் புடிச்சுப்போச்சா. அவர் எப்படி அவ்வாறு சொல்வார்” என்று நான் அவரிடத்தில் கேட்டேன்.

நான் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரியவர் ஜி.ஜி.குருமூர்த்தி வந்தார், (அவர் என்னை விட வயதில் மூத்தவர்) ”டேய் என்னடா இது  உங்க அய்யர் இப்படி சொல்றாரு? நாலு நாள்ல எலக்‌ஷன் இருக்குனு சொன்னா, எலக்‌ஷன் நடந்தா பாக்கலாம்னு சொல்ராரு,” என்று கூறினார்.

நான் அதிர்ச்சியடைந்தேன்! அவர்களையும் அழைத்துக் கொண்டு, உள்ளேபோனேன், அவரைப் பார்த்து ”இவர்களிடம் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டேன்.  அவருக்கு அவ்வாறு சொன்னதே நினைவில் வரவில்லை ”என்ன? என்ன?” என்று கேட்டார்.

”அவர்கள் உதவி கேட்டார்களாம், நீங்கள் தேர்தல் நடந்தால் பார்க்கலாம் என்று சொன்னீர்களாமே?” என்று சொல்லுகிற போது தான் அவருக்கு அதிர்ச்சியில் முகம் மாறியது. என்  கையை  பிடித்துக்  கொண்டு  ஓரமாக  போனார்.  “ நான் பணம் கொண்டு வரவில்லை, அவர்களிடம் சமாளிப்பதற்கு அவ்வாறு சொன்னேன்”  என்றார்.

”பணம் கொண்டு வரவில்லை என்று சொல்லி விட்டால் பரவாயில்லை. அதை  விட்டு ,  தேர்தல் நடந்தால்  பார்க்கலாம்  என்று  சொன்னால்  அதற்கு  என்னப்  பொருள்? வேறு பொருள் அல்லவா” என்று சொன்ன உடனே அவர் முகம் சட்டென்று மாறியது.  அதுவரை  சரளமாக  பேசிக்  கொண்டிருந்தவரின்  பேச்சில் தடுமாற்றம் தெரிய ஆரம்பித்தது.

அப்போது எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏன் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை.

இரவிலே பொதுக்கூட்டம். நான்  லக்‌ஷ்மி  பெருமாள் கோவில் முன்னாலே  பேசிவிட்டு,  அடுத்து சுப்பிரமணியன் சாமி  பேசுகிற போது அவருடைய பேச்சை  மொழிப்பெயர்த்தேன் . அது முடித்தவுடன் ஆத்தூரிலே  கூட்டம்  இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு செல்லும் வழியிலே இடையில் அயோத்தியாப்பட்டினம் எனும் ஊரில் ஒரு பத்து நிமிடம் பேசச் சொன்னார்கள்.

ஆத்தூருக்குப் போனோம் நான் அப்போதும், ”22 ஆம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் இருக்கிறது. இன்றைக்கு 20 ஆம் தேதி, இடையில் ஒரு நாளைக்காக டெல்லிக்கு போகிறேன் என்று சொல்கிறீர்களே இங்கயே தங்கிவிட்டு கூட்டம் முடித்துவிட்டு போகலாமே” என்று கேட்டேன்.

“இல்லை, இல்லை மிக முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொன்னார். வேறு வழியில்லாமல் ஆத்தூரில் கூட்டம் முடிந்தவுடன் (நள்ளிரவு1 மணிக்கு கூட்டம் முடிகிறது) அங்கிருந்து அவர் சென்னை சென்றார். நான் திருச்சிக்கு புறப்பட்டேன். அப்போது, ”போய் விமானத்தை பிடித்து விடுவீர்களா?” என்று கேட்டேன். “அதெல்லாம் பிடித்து விடுவேன்” என்று அவர் சொன்னார். அவர் புறப்பட்டதும் நானும் திருச்சி வந்துவிட்டேன்.

வீட்டை அடைந்ததும் உறங்கிவிட்டேன். காலை (மே 21) 9 மணி போல எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. திருப்பதி கோபால் பேசினார், ”நாங்க போன கார் மேல்மருவத்தூர் கிட்ட விபத்துக்குள்ளாகிறுச்சு, எம்.எல்.ஏ ஜி.ஜி.குருமூர்த்திக்கு கால்ல காயம், எனக்கு நெத்தில ஒரு சின்ன காயம், காஞ்சிப்புரத்துல நம்ம கூட வந்த ஏகாம்பரத்துக்கு கால் ஃப்ராக்சர் ஆகிருச்சு. ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிருக்கோம். இன்னிக்கு ஆப்ரேஷன் பண்ணனும்” என்று அவர் சொன்னார். ”அய்யய்யோ!! அப்படியா!! எனக்கு தெரியலயே, சாமிக்கு தெரியுமா? ” என்று கேட்டேன், ”சொல்லிட்டோம்” என்று அவர் கூறினார். ”அவர் வந்து பார்த்தாரா?” என்று கேட்டேன், ”என்னனு தெரியல, அவர் வரல” என்று அவர் சொன்னார். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கு காலை 6.40 மணிக்கு ஒரு விமானம் இருந்தது. அவர் காலை 7 அல்லது 7.15 மணிக்கு புறப்பட்டிருந்தால் 9 மணிக்கு டெல்லிக்குப் போய் சேர்ந்து விடலாம். 10 அல்லது 10.15 மணிக்குள் அவர் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்பதால், 10.30 மணியளவில் நான் அவருடைய வீட்டிற்கு தொலைபேசி செய்தேன்.

அவருடைய மனைவி ரக்‌ஷனா அம்மையார் தான் தொலைபேசியை எடுத்தார்,  ”என்ன வேலுசாமி?” என்று கேட்டார், ”நான் அவரிடம் பேச வேண்டும்”  என்று கூறினேன்.  அவர் உடனே ஆங்கிலத்திலே “What Velusamy? You are unnecessarily calling me. Swamy is in madras only” என்று கூறினார். உடனே, நான் ”Sorry madam” என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டேன்.

ஒரு வேலை, அவர் டெல்லிக்குப் போகவில்லையோ என்பதற்காக, அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பரான, மோதிலால் என்பவருக்கு (ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வசிப்பவர்) போன் செய்து, ”என்ன சார் எங்க இருக்கிறார் சாமி?” என்று கேட்டேன். உடனே அவர், ”என்ன வேலுசாமி சும்மா விளையாடுறீங்களா, உங்களுக்கு தெரியாமலா, அவர் என் கூட இருப்பாரு? அவர் தான் டெல்லிக்கு போயிட்டாரே” என்று சொன்னார்.

நான் குழம்பி போனேன்! ஏதோ ஒரு மிக முக்கியமான அரசியல் காரணத்திற்காக இவருக்கும் தெரியாமல் தங்க வேண்டி வந்துவிட்டதோ என்று நினைத்தேன். ஒருவேளை அவர் அப்படி தங்கி இருந்தால், சோவுக்கு தெரிந்து இருக்கலாம் என நினைத்து, அவரை தொலைபேசியில் அழைத்தேன். அவரும் சிரித்துக் கொண்டே, ”உனக்கு தெரியாத விஷயம் சாமிய பத்தி என்ன இருக்கு. உனக்கு தெரியாதது உலகத்துல எவனுக்கும் தெரியாதே என்கிட்ட வந்து கேக்குறீங்களே” என்று நகைச்சுவையாக சொல்லி வைத்து விட்டார். எனக்கு ஒரே குழப்பம். பகல் நேரம் முழுவதும் முடிந்தது.

நான் அடுத்த நாள் மதுரைக்கு போக வேண்டிய காரணத்தினால், திருச்சி கூட்டத்திற்கு போஸ்டர்கள் ஒட்டுவதற்கு, போஸ்டர்களை வைத்துக் கொண்டு ஒரு ஏழெட்டு பேரை வரச்சொல்லி, போஸ்டர் பசையை காய்ச்சி அவர்களிடத்தில் கொடுத்தேன். இரவு 10 மணியளவில் அவர்கள் போஸ்டர்களை ஒட்டுவதற்கு வெளியே சென்றனர்.

வழக்கமாக நான் இரவு 10 மணியிலிருந்து 11 மணிக்குள் சுப்ரமணியன் சுவாமியுடன் தொலைபேசியில் பேசுவேன். அன்று காலை அழைத்தபோது அவர் டெல்லியில் இல்லை. ஆகவே, இரவு வழக்கமாக அழைக்கும் நேரத்தில் அழைத்துப் பார்க்கலாம் என்று, சரியாக 10.25 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.  தொலைபேசியை எடுத்து நான் ”ஹலோ” என்று சொன்ன உடனேயே, என்ன  ராஜீவ்  காந்தி செத்து  போயிட்டார்.  அதான  சொல்ல  வரேள் என்று சொன்னார்.

நான் அதிர்ச்சியடைந்து போனேன், ”என்ன சொல்கிறீர்கள்?” என்றேன். ”அதைச் சொல்ல தான போன் பண்ணீங்க” என்று கேட்டார், ”இல்லைங்க, நாளைக்கு பொதுக்கூட்டம் இருக்கே அதுக்காகத்தான் கேட்டேன் நீங்க சென்னை வந்துடுரேன்னு சொன்னீங்க. என்னை திருச்சி ஏர்போர்ட் வரச் சொன்னீங்க இரண்டு பேரும் சேர்ந்து போயிடலாம்னு சொன்னீங்க அதுக்காக கேட்டேன்” என்றேன் ”இல்லை, இப்பதான் தகவல் வந்துச்சு. நான் அது சம்மந்தமா பாக்கப்போறன். பிரதம மந்திரி இப்போ ஊர்ல இல்லை” என்று சொல்லி வைத்து விட்டார்.

எனக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியவில்லை, இந்தச் செய்தி எவ்வளவு தூரம் வெளியில் தெரிந்திருக்கிறது என்பதை அறிய தினத்தந்தி அலுவலகத்திற்கு போன் செய்து, திருச்சியின் தினத்தந்தி நாளிதழின் ஆசிரியரிடம், ”ராஜீவ் காந்தி புரோகிராம் என்ன?” என்று கேட்டேன். அவர் ராஜீவின் புரோகிராமை மட்டும் தான் கூறினார். வேறு எதையும் சொல்லவில்லை.

பிறகு காவல்துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த அதிகாரியிடம் பேசினேன். அவரிடமும் அதே கேள்வியை கேட்டேன். அவரும் ராஜீவின் பயண திட்டம் பற்றித்தான் கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

இருந்தாலும், இந்தச் செய்தி வெளியே வந்தால், முதலில் பாதிக்கப்பட கூடியவர்கள் திமுகவினராகத் தான் இருக்க முடியும் என்று நினைத்தேன்.

நான் திருச்சியில் இருக்கும் பொய்யாமொழியை அழைத்தேன், ”அண்ணே சொல்லுங்கணே” என்று மூச்சு வாங்கிக் கொண்டு பேசினார். ”தம்பி என்ன இப்படி மூச்சு வாங்குது?”  என்று கேட்டேன்.  ”வெளியில போறதுக்கு புறப்பட்டு கார்ல வந்து உக்காந்துட்டன், கார் புறப்பட்ட நேரத்துல நீங்க அழைச்சிருக்கதா ஒடி வந்து சொன்னாங்க, அதான் திரும்ப வந்தேன்” என்று கூறினார். ”இல்லை எங்கேயும் போக வேண்டாம் (அவர் இளைஞர் என்பதால் அவரிடம் வெளிப்படையாக) ஏதோ குண்டு வெடித்ததாக செய்தி ஒன்று வந்திருக்கிறது. ஆகவே நீங்கள் போக வேண்டாம். உடனிருப்பவர்களையே வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினேன். ”ரொம்ப நன்றியண்ணே” என்று அதிர்ச்சி கலந்த குரலில் பேசி போனை வைத்தார்.

அடுத்து திமுகவைச் சேர்ந்த மலர்மன்னனை தொலைபேசியில் அழைத்தேன். அவர் இதயநோயாளி என்பதால், ”மெட்ராஸ்ல ஏதோ கலாட்டவாம், அந்த கலாட்ட இங்கயும் வருமாட்ருக்கு, தயவு செய்து வெளியே எங்கயும் போக வேண்டாம்”  என்று மிகவும் நாசுக்காக அவரிடம் கூறிவிட்டு போனை வைத்து விட்டேன்.

இதெல்லாம் முடிந்ததற்கு பின்னால் தான் போஸ்டர் ஒட்ட போனவர்கள் அரை மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார்கள். வந்தவர்கள், “என்னங்க ஏதோ பிரச்சனனு சொல்றாங்க, இங்கிலிஷ் நியூஸ்ல எல்லாம் ஏதோ செய்தி வந்திருக்காமே?” என்று கேட்டார்கள். ”ஆமாம் உங்களுக்கு நான் தகவல் சொல்ல முடியவில்லை. நீங்களே வந்துவிட்டீர்கள் நல்லது” என்று சொன்னேன்.

பின்பு அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் தூங்கிவிட்டோம். காலை பத்திரிகையை எடுத்துப் பார்த்தால் அந்த செய்தி முழுமையாக வந்திருந்தது, அதில் கடைசியாக வால் செய்தியாக ”ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தான் கொன்றார்கள்” என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியன சுவாமி சொல்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் கலவரமாக உள்ள நேரம், உணர்ச்சவப்பட்டு மக்கள் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாலையில் வர வேண்டிய  மாலை முரசு செய்தித்தாள், காலை 11 மணிக்கு ஸ்பெஷல் எடிஷன் (special edition) ஆக வருகிறது. அதையும் பார்த்தோம். மாலை வழக்கம் போல் வந்த மாலை முரசு நாளிதழில் ஒரு செய்தி வந்தது. அதில், ராஜீவ் காந்தியினுடைய உடலை முதன் முதலில் அடையாளம் காட்டிய ஜெயந்தி நடராஜனுடைய பேட்டி என்று போட்டிருந்தார்கள்.

அந்த பேட்டியில், “ ஒரு 10.15 மணியவில் டமார்  என்று ஒரு சத்தம்  கேட்டது.  ஐயோ!  அம்மா! என்று  ஒரே  அலறல்  சத்தம். அந்த இடமே புகைக்காடாக மாறியிருந்தது, நான் பயந்துப் போய் ஒரு ஒரத்தில் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், தொலைவில் ஒரு கால் மட்டும் தனியாகக் கிடந்தது. அந்த காலில் ஒரு கேன்வாஸ் ஷு இருந்தது.” என்று அவர் கூறியிருந்தார்.

”அதை பார்த்தவுடன் எனக்கு திக்கென்றது. ஏனென்றால் இதே போல ஒரு ஷு தானே  விமான நிலையத்தில்  பார்க்கிற போது  தலைவர் ராஜீவ் காந்தி  போட்டிருந்தார்  என்று நான் நினைத்தேன். என்னசெய்வதென்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது தொலைவில் மூப்பனார் நின்று கொண்டிருந்தார். நான் உரத்த குரலில் சத்தம்  போட்டு  அவரை  அழைத்தேன்,  அவர்  பக்கத்தில் வந்தவுடன்  காதோடு காதாக  என்னுடைய சந்தேகத்தைச் சொன்னேன்”. என்று ஜெயந்தி நடராஜன் கூறியதாக அந்த செய்திதாளில் எழுதப்பட்டிருந்தது.

“அவரும்  நானும் என்னுடன்  பக்கத்தில் இருந்த  சில பேரும் முன்னே சென்று தேடினோம் இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி  சிறிது தொலைவில் ஒரு உடல் கிடந்தது. அதில் ஒரு  கால்  இல்லை. அடுத்து இருந்த காலில் இதை  போலவே  ஒரு  ஷு  இருந்தது.  அதை  பார்த்த உடன்  அதிர்ச்சியில்  ஓடிப்போனோம்”. என்று அவர் கூறியிருந்தார்.

“ உடலில் எந்த  ஆடையும்  இல்லை,  முகத்தைப்  பார்த்தால் முகம் சிதைந்து  போயிருந்தது.  உடலை  புரட்டிப் பார்த்தோம்   குடல்  வெளியே  வந்ததால்  அடையாளம்  தெரியவில்லை. என்ன செய்வது  என்று  தெரியாமல்  தவித்தபோது,  நான்  மெதுவாக  தலைவர் மூப்பனாரிடம்,  ஐயா  உச்சந் தலையில்  இருக்கும் இந்த வழுக்கை தலைவரைப்  போலத்தான்  இருக்கிறது  என்று  சொல்லி அழத் தொடங்கிவிட்டேன்” என்று ஜெயந்தி நடராஜன் கூறியிருந்தார்.

”அவர் கொஞ்சம் இரும்மா இரும்மா என்று சொல்லிவிட்டு அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்  கழுத்தின் பின்புறத்தில்  வித்தியாசமான  ஒன்றை  பார்த்துவிட்டு,  அம்மா  நீ  சொன்னது உண்மைதான்  தலைவர்  தான்,  அவர் கழுத்து  இந்த  மாதிரி  இருக்கும்  என்று அவர் சொன்னார், நான் ஒ வென்று கத்தினேன். இதெல்லாம் அந்த வெடிகுண்டு  வெடித்து  நான்  முதன்  முதலாக  பார்த்து அடையாளம்  கண்டு பிடிப்பதற்கு  ஒரு அரை மணி நேரம் ஆகி  இருக்கும்”  என்று ஜெயந்தி நடராஜன் அந்த பேட்டியில் சொல்லியிருந்தார்.

நான் அப்போது தான் அதிர்ச்சி அடைந்தேன். 10.15 மணிக்கு  குண்டு வெடித்திருக்கிறது. 10.45க்கு  தான் ராஜீவ் காந்தியை அடையாளம்  கண்டிருக்கிறார்கள் . ஆனால் 10.25 மணிக்கு, டெல்லியில் இருக்கும் சுப்பிரமணிய சாமி எப்படி  “ராஜீவ்காந்தி செத்துட்டார் அதான சொல்ல வரேள்” என்று கேட்டார்  என்பது தான் முதலில் என்னுடைய சந்தேகம்

என்ன  செய்வது  என்று  புரியாமல் தவித்து போய், அது  என்னவென்று  தெரிந்துகொள்ள முயற்சித்தேன்.  இதுகுறித்து விசாரித்தபோது, சுப்பிரமணியன் சாமி ஆத்தூரில் இருந்து விமான நிலையத்திற்கு  போகின்ற போது, கார் ஒட்டுநரிடம் மெதுவாக  ”நான்  (விமான நிலையத்தில்) இறங்கியவுடன், எனக்கு வேலை இருக்கிறது என்று போய் விடு. மற்றவர்கள் வீட்டுக்குப் போகட்டும். மீண்டும் 20 நிமிடம் கழித்து  வா”  என்று  அவர் சொல்லி இருக்கிறார் .

இருபது நிமிடம் கழித்து  கார்  ஓட்டுநர் அந்த போர்டிக்கோவிற்கு  போயிருக்கிறார். அவர் உள்ளே இருந்து வெளியே வந்திருக்கிறார் . அங்கிருந்து அப்போல்லோ மருத்துவமனைக்குச் சொந்தமான சிந்தூரி விடுதியில் தங்குவதற்காக இறங்கியிருக்கிறார். இறங்கியவுடன், ”என்னை அழைத்து வந்து இங்கு விட்டதை  நீ யாரிடமும் சொல்ல கூடாது”  என்று  சொல்லிவிட்டு, “ வெளியே  சொன்னால்,  நீ  தான்   சங்கடப்படுவாய்”  என்று  மிரட்டி  இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பின்னால், அந்த விடுதிக்கு நான் போனேன். அந்த விடுதியில் பணியாற்றும் பலரையும் எனக்கு தெரியும். ஏனேன்றால் அங்கு தொடர்ந்து அவர் தங்குகிற போது அவருடன் நான் இருந்ததால் அவர்களுக்கு என்னை நன்றாக தெரியும். அவர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர் அங்கு வந்ததைப் பற்றி சாதாரணமாக பேசுகையில் “ ஆமா அன்னைக்கி வரும் போது சந்திராசாமி இங்க தான் தங்கியிருந்தாரு. வந்து அவர சந்திச்சிட்டு இரண்டு பேரும் இங்க இருந்து சேர்ந்து போயிட்டாங்க” என்று கூறினார்கள்.

எனக்கு வந்த குழப்பம் என்பது இவர் ஏன் அதை மறைக்க வேண்டும்? 21 ஆம் தேதி காலையே நான் டெல்லி போய்விட்டேன் என்பதை இவர் ஏன் நிறுவ முயல வேண்டும்? ஒரு பத்திரிகையில் வந்த சிங்கில் காலம் (Single Column) செய்தியைக் காட்டி டெல்லியில் இருந்தது போல நிறுவ முயற்சித்தார். அந்தச் செய்திக்கு கீழேப் பார்த்தால் பிடிஐ என்று இருந்தது. நான் ஜெயின் கமிஷனிடம் சொன்னேன், பிடிஐ, என்பது ஒரு செய்தி ஸ்தாபனத்தில் இருந்து வந்திருக்கிறதே ஒழிய, இவர் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் என்று இந்தச் செய்தி சொல்லவில்லை என்றேன்.

அந்த விசாரணையில் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. மே 21 ஆம் தேதி, டெல்லியில் பிரஸ் மீட் நடந்தது என்றால் எங்கு நடந்தது அதில் கலந்து கொண்டவர்கள் யார்? அவர்களில் யாராவது வந்து? சாட்சி சொல்வார்களா? என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை.

இந்தச் சின்ன விஷயத்தில் தான் அவர் பிடிபட்டார்.

சுப்பிமணியன் சாமி, கொலைக்கு முதல் நாள் சேலத்தில் என்னோடு இருக்கும்போதே அப்போது பர்கூரில் இருந்த ஜெயலலிதாவிடம் பேசினார். ஜெயலலிதா, அடுத்த நாள் நடக்கும் ராஜீவ் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.  நான் பக்கத்தில் இருக்கும்போதே சுப்ரமணியன் சாமி “எதுக்கு அங்கல்லாம் வந்து நேரத்தை வீணடிக்கிறீங்க. நீங்க ஜெயிக்கிறது ரொம்ப முக்கியம். உங்களை எப்படியாவது தோக்கடிக்கணும்னு திமுக நினைச்சிட்டுருக்காங்க. அதனால நீங்க அங்க வேல பாருங்க. ஒரு கூட்டம் பேசிட்டு அவர் போக போறாரு. நீங்க இதுக்காக வந்தா ஒரு நாள் வீணாகும்” என்று ஜெயலலிதாவை வர வேண்டாம் என்று கூறினார்.

ஆனால், அதற்குப் பின்னால், ஜெயலலிதாவிற்கு இந்த கொலை நடப்பது முன் கூட்டியே தெரிந்ததால் தான், ராஜீவ் காந்தி கலந்துகொண்ட கூட்டத்திற்கு அவர் வரவில்லை என்கின்ற செய்தியை சுப்பிரமணயின் சாமி பரப்பினார்.

எவ்வளவு பெரிய சதி திட்டத்திலும் சந்தேகத்திற்கு இடமான ஒரு சின்ன தவறு நிகழலாம். அது இயற்கை என்றும் கூறலாம் விதி என்றும் கூறலாம் தற்செயல் என்றும் கூறலாம். எங்கள் கட்சிகாரர்களுக்கு மேல்மருவத்தூரில் விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால், நான் மே 21 ஆம் தேதி பகல் முழுவதும் சுப்ரமணியன் சுவாமியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கவே மாட்டேன். நான் அப்படி முயற்சி செய்யாமல் இருந்திருந்தால், அவர் அன்று முழுவதும் எங்கிருந்தார் என்பது எனக்கு தெரிந்திருக்காது. அவர் சொல்வது அனைத்தையும் அப்படியே நம்பியிருப்பேன்.

நான் நடந்தச் செய்திகளை சொல்லிவிட்டேன். என்னுடைய சந்தேகங்களைச் சொல்லிவிட்டேன். இதைப் படிக்கிற உங்களுக்கு, இதில் இருந்து அவர் மீது சந்தேகம் வருகிறதா இல்லையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். நான் நடந்ததைச் சொல்லிவிட்டேன் தீர்ப்பை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

– திருச்சி வேலுசாமி

(ராஜீவ் காந்தி படுகொலை நடந்த சமயத்தில் திருச்சி வேலுசாமி அவர்கள் சுப்பிரமணியன் சாமி தலைமையிலான ஜனதா கட்சியில் நிர்வாகியாக இருந்தார். இந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள சந்தேகங்கள் குறித்து ஜெயின் கமிஷன் முன்பு அவர் எழுப்பி கேள்விகளும், வாக்குமூலமும் மிகவும் முக்கியமானவை. தற்போது, ஏழு தமிழர் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியிலிருந்த ஒலிக்கும் சில குரல்களில் திருச்சி வேலுசாமி அவர்களின் குரல் மிகவும் முக்கியமானது.)

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ராஜீவ் காந்தியின் பாதுகாப்பை தளர்த்தியது யார்? – முன்னாள் உள்துறை அமைச்சர் எழுப்பும் சந்தேகம்

 (நரசிம்மராவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவான், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான சில தகவல்களை காங்கிரஸ் அரசே மறைத்தது குறித்து, அவுட்லுக் இதழுக்கு அளித்த பேட்டி 1997 நவம்பர் 24 அன்று அந்த இதழில் வெளியானது. அந்த பேட்டியின் மொழியாக்கம்)

இந்திய உளவுத்துறை, (ராஜீவ் காந்தி) கொலைக்கு முன்னரும் பின்னரும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் உள்ள விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களை இடையீடு செய்திருந்தது. இதில், உங்கள் கருத்து

அது படுகொலைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இடைமறிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல். அதையும், உளவுத்துறை அறிக்கையையும் கூட நான் கமிஷனில் (ஜெயின் கமிஷன்) தெரிவித்துவிட்டேன். சில தகவல்கள் ப.சிதம்பரம் அல்லது பிரதமருக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஆரம்பத்தில், தெளிவற்றதை அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ள முயல்கிறார்கள் என்பதாக எனக்கு புலப்படச் செய்தார்கள். ஆனால், பிரதமரோ அல்லது ப.சிதம்பரமோ யாருடைய அறிவுறுத்தலின் காரணமாக என்று தெரியாது, எனக்கு ஒருபோதும் தகவல் கிடைக்கவில்லை. அல்லது உளவுத்துறை தங்களுக்கு மட்டுமே நன்கு தெரிந்த காரணங்களுக்காக கூட அதை செய்திருக்கலாம்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் என்கிற முறையில்  உங்களுக்கு அது காட்டுப்பட்டிருக்க வேண்டும?

அது எனக்கு காட்டப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் உளவுத்துறை என்னுடைய அதிகாரத்தின் கீழ் இருந்தது. பின்னர், சில தகவல்கள் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்பட்டன என்று பின்னாட்களில் எனக்கு தெரியவந்தது.

ராவ் அரசாங்கத்தின் ஒத்துழையாமை காரணமாக நீதிபதி ஜெயின் வருத்தமடைந்தார் என்பதாக தெரிகிறதே?

ப.சிதம்பரம் இந்த விவாகரத்தில் நுழைந்ததால்,  எனக்கு அதைப் பற்றி தெரியவில்லை. பிரதமர் நரசிம்மராவும்,  அவரும் (ப.சிதம்பரம்) என்ன செய்தார்கள் என்பதை பற்றி எனக்கு விபரம் தெரியாது

உங்களுடைய அமைச்சரவையிலிருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு தொடர்பான நீதிபதி வர்மா கமிஷனின் ஆவணங்கள் காணாமல் போனதே?

பிரதமருக்கு அனுப்பப்பட்ட கோப்பு காணாமல் போய் விட்டது என்ற தகவல் எனக்கு சொல்லப்பட்டது. தன்னுடைய அறிவுறுத்தலின் பெயரில் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளரிடம் அந்தக் கோப்புகள் வைக்கப்பட்டிருந்ததாக ப.சிதம்பரம் சொன்னதாக‌ கேள்விப்பட்டேன். அந்த கோப்பை உள்துறை அமைச்சரிடம் கூட காண்பிக்க கூடாது என்று அவருக்கு வழிகாட்டுதல் இருந்ததாகவும் அறிந்தேன்.

ஆனால் அந்தக் ஆவணங்கள் உங்கள் துறையை சார்ந்த தாயிற்றே?

ஆமாம் உள்துறை அமைச்சகத்தை சார்ந்ததுதான். மேலும் பிரதமர்,”நீங்கள் இந்த விவகாரத்தை கையாள்வதால் நீங்களே முடிவுகளை எடுக்கலாம்” என்று ப.சிதம்பரத்திடம் கூறிவிட்டார். இப்படி அறிவுறுத்தப்பட்டதாக எனக்கு சொல்லப்பட்டது. இதைப்பற்றி எனக்கு தெரியாது.

இருந்தபோதும் அந்த ஆவணம் வெளிப்பட்டு விட்டதாக தெரிகிறது. வி.பி.சிங் ஆட்சியில், அமைச்சரவை செயலாளராக இருந்த வினோத் பாண்டே, தன்னுடைய குறிப்புகள் அந்த ஆவணத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த ஆவணத்தை முறை படுத்தியது உங்கள் அமைச்சகம் தான் என்றும் கூறப்படுகிறதே?

என்னால் சொல்ல முடியாது. இந்தக் கேள்வியை ப.சிதம்பரத்திடம் முன்வையுங்கள். அவர்தான் இதற்கு பதில் அளிக்க முடியும்…

(காணாமல் போன) ஆவணம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டபோது, நரசிம்மராவ் மற்றும் சந்திராசாமி தொடர்பான தகவல்கள் விடுபட்டதாக கூறப்படுகிறதே?

என்னிடமிருந்து எல்லா பொருளையும் எடுத்துக் கொண்ட பின், நான் அதை பின் தொடரவில்லை, எனக்கு அதில் ஆர்வம் குறைந்துவிட்டது.

சில முக்கியமான விசயங்களை (ஜெயின்) கமிஷனிடமிருந்து மறைப்பதற்காகவே இவை எல்லாம் செய்யப்பட்டது என்று சொல்லலாமா?

எனக்கு இது பற்றி தெரியாது. ப.சிதம்பரம் தான் இதை கையாண்டார். அவர்தான் இது குறித்து பேசுவதற்கு சரியான நபர்.

விசாரணையை நீங்களே தொடங்கி வைத்திருந்தாலும், நீதிபதி வர்மா கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையை நிர்பந்தத்தின் காரணமாகவே நீங்கள் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது ஏன்?

இல்லை அங்கே சில முரண்பாடுகள் இருந்தன. முதலில் நடவடிக்கை அறிக்கையை (Action Taken Report) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்பினோம். ஆனால் (நாடாளுமன்ற கூட்டத் தொடரில்) அன்றுதான் கடைசி நாள். அதை நாங்கள் தாக்கல் செய்யாமல் விட்டால், மக்கள் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தி இருப்பார்கள்.  அதனால் அதிகாரிகள் அளித்த பரிந்துரையின்படி நடவடிக்கை அறிக்கை (ATR)  குறித்து அதிகம் ஆராயாமல், அனுமதித்து விட்டோம். பின்னர் சிலர்,”நீங்கள் உங்கள் அறிவை பயன்படுத்தவில்லை, இது தவறு” என்று கூறினார்கள். அதன்பிறகு நான் அதை ஆழ்ந்து படித்துப் பார்த்தேன். ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் பாதுகாக்கப்படு வேண்டும் என்கிற முனைப்பு அதில் எனக்கு வெளிப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக எவ்வித நடவடிக்கையும் இல்லையா?

மாநில அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக இருந்தன. பாண்டே, எம்.கே.நாராயணன் (அப்போதைய உளவுத்துறை தலைவர்) அல்லது வர்மா கமிஷன் சுட்டிக்காட்டிய எவர் மீதும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை தாமதப்படுத்துவது அல்லது மொத்தமாக அவற்றை குழிதோண்டி புதைப்பது போன்ற முயற்சிகள் நடைபெற்றன என்று கூறலாமா?

ராஜீவ் காந்தியின் பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீவிரம், அவர்களிடம் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்

‘அவர்கள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

பாண்டே கண்டிப்பாக இருப்பார் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. சில உளவுத்துறை அதிகாரிகள் மற்றும்  தமிழ் நாட்டை சார்ந்த சில அதிகாரிகளும் இருந்தார்கள்.

இதில் நரசிம்மராவின் பாத்திரம் குறித்து ஏராளமான கேள்விகள் இருந்தன. அவரே அழுத்தத்தில் இருந்தார். மேற்கொண்டு இதில் அழுத்தம் கொடுப்பதை அவர் விரும்பவில்லை?

இந்த குறிப்பிட்ட தருணத்தில் எதையும் சொல்வது எனக்கு மிகவும் கடினமானது. நான் எதையும் சொல்ல விரும்பவில்லை…

நன்றி: www.magazine.outlookindia.com

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

தண்டனை என்பது தண்டிக்கப்பட வேண்டியவனுக்கா ? குடும்பத்துக்கா ? – மதிசுதா

பல நெடுங்காலமாக இந்த உலகத்தில் இடம்பெறும் குற்றங்களுக்கு ஒரு குற்றவாளியை கண்டறிந்து அக்குற்றத்திற்கான தண்டனை என அவனுக்கு ஒரு தண்டனையை அளிக்கப்படுவதுடன் அதிகார வர்க்கம் தன்னை புழகாங்கிதம் அடைய வைத்துக் கொள்ளும்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது அக்குற்றத்துக்கான தண்டனையின் அளவு என்பதை விட அதன் அளவு தீர்மானிக்கப்படுவது அத்தீர்ப்பால் எத்தனை பேரை சந்தோசமடைய வைக்க முடியும் என்பது மட்டுமே.

இது எதற்கு ஒப்பானது என்றால் வெற்று எலும்பைக் சுவைக்கும் நாய் அவ்வெழும்பு குத்தி வரும் குருதியையும் ரசித்துச் சுவைப்பதற்கு ஒப்பானதாகும்.

எழுவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் அந்த வழக்கு நடத்தப்பட்ட விதமும் இதற்கு மிகப்பெரும் உதாரணமாகும். விசாரணை செய்த புலனாய்வு அதிகாரிகளே தாம் இப்படி ஒரு அறிக்கைக்காக நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்று கூறிய பின்பு கூட சட்டம் தன்னை காக்க முனையவே இல்லை என்பது மிகக் கொடுமையானதாகும்.

நீதிமாதாவின் கண்களைக் கருந்துணி கொண்டு கட்டியவன் முடிச்சிடும் போது, காதுக்கு மேலாலும் துணியை வைத்துக் கட்டிவிட்டான் என்பது தான் இந்த விடயத்தில் கருத வேண்டியுள்ளது.

ஏழு பேரும் குற்றவாளிகளா இல்லையா என்ற வாதத்தைக் கடந்து வருவோம். ஆனால் ஒரு குற்றத்திற்கான தண்டனையின் அளவு என்ன என்பதை கூடவா வரையறுக்க முடிவதில்லை ???

இங்கு தண்டனை அனுபவித்து வருவது அந்த ஏழு பேர் மட்டுமல்ல அவர்களது குடும்பமும் தான். 30 ஆண்டுகளாக அவர்களது தாய்களுக்கு கொடுக்கப்பட்ட காத்திருப்பின் தண்டனை பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருக்கலாம்.

இங்கு குற்றம் சாட்டப்பட்டவரை மட்டுமல்ல அவர்கள் குடும்பங்களையும் சட்டம் தூக்கிலிட்ட தடவைகளையும் நாட்களையும் ஒரு தடவை பட்டியலிடுவோம்.

  • 28 தை 1998 – இவ்வழக்குக்காக கைது செய்யப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை என நீதி மன்றம் தீர்ப்பளிக்கின்றது.
  • 11 வைகாசி 1999 – நளினி , முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கை உறுதிப்படுத்திய நீதிமன்றம், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக்கியதுடன் ஏனைய 19 பேரையும் விடுதலை செய்கின்றது.
  • 08 ஐப்பசி 1999 – நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது தண்டனையை ஆயுள் தண்டனையாக்கச் சொல்லி கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பை உறுதிப்படுத்துவதன் வழியாக மீண்டும் தூக்குக்கயிற்றுடன் அவர்களை காத்திருக்க வைக்கின்றது.
  • 29 ஐப்பசி 1999 – நான்கு பேரது கருணை மனுவையும் ஆளுநர் பாத்திமா பீபி நிராகரித்ததனம் வழியாக மீண்டும் தூக்குக் கயிற்றுடனேயே தூங்க வைக்கப்படுகின்றார்கள்.
  • 19 சித்திரை 2000 – முதல்வர் கருணாநிதியால் நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாக்கப் பரிந்துரைக்கப்பட்ட போதும் தமக்கு தூக்கு உறுதி என்ற எண்ணத்துடன் முருகன், சாந்தன், பேரறிவாளனும் அவர்கள் குடும்பமும் மீண்டும் ஒரு தடவை தூக்கு மேடை ஏற்றப்பட்டார்கள்.
  • 24 சித்திரை 2000 – நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட போது தமக்கு தூக்குத் தண்டனை தான் என 3 பேருக்கும் நினைவூட்டப்பட்டது.
  • 12 ஆவணி 2011 – குடியரசுத் தலைவர் இவர்களது கருணை மனுவை நிராகரித்ததுடன் புரட்டாதி மாதம் தூக்கிடப்படலாம் என்பது உறுதியாகின்றது.

அதற்குரிய நபர், கயிறு என்பன கூடப் பரிசீலிக்கப்படுகின்றது.

  • 18 மாசி 2014 இல் நீதிபதி சதாசிவம் அடங்கிய குழு இவர்களது தூக்கை ரத்துச் செய்கின்றது.

சரியாகப் 16 வருடங்களின் பின்னர் தூக்குக் கயிற்று நினைவின்றி அன்று தான் அந்த மூன்று பேரும் தூக்கத்துக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது குடும்பமும் தான்.

மேற்குறிப்பிட்ட பட்டியல் எண்ணிக்கையே ஒரு மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்குமான தண்டனையின் அளவை விபரிக்கப் போதுமானதாகவே கருதப்படுகின்றது.

1997-ல் இவர்களைத் தூக்கில் இட்டிருந்தால் அவர்களுக்கான தண்டனை முடிவடைந்திருக்கும். அவர்கள் குடும்பம் இந்த நீண்ட நெடிய தண்டனைக்குள்ளிருந்து நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு மீண்டு வந்திருப்பார்கள்.

இத்தனை காலப்பகுதிக்குள்ளும் இவர்களில் ஈழத்தை வாழ்விடமாக கொண்டவரின் குடும்பங்களின் வாழ்க்கைப் போராட்டம் என்பது மிகக் கொடுமையான நாட்களாகும். போரின் கொடிய நாட்களில் வீட்டின் எப்புறத்தில் இராணுவமோ, புலனாய்வாளர்களோ, தகவலளிப்பாளர்களோ இருப்பார்கள் எனத் தெரியாத நிலை.

சத்தமாக அழுதால் நிச்சயமாக இவர்கள் வீட்டில் ஏதோ போர் சார்ந்த விடயம் நடந்திருக்கும் என அடையாளம் காணப்படும். அதற்காக அங்கு தன் சோகத்தைக் கத்தி அழுத தாய் கைது செய்யப்படப் போவதில்லை அந்தத் தாயின் இன்னொரு பிள்ளை தான் கைது செய்யப்படும்.

இதற்கு ஈழத்தில் நல்லதொரு பதம் பயன்படுத்துவார்கள். ”வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்தல்” என்பதாகும்.

இந்த இடத்தில் ஒரு தாயின் வலியை எந்த ஒரு மனிதனாலும் முழுமையாகவே உணர்ந்து கொள்ள முடியும். காரணம் தாய் என்ற ஒன்று இருந்ததால் தான் அவன் பிறப்பு இருந்திருக்கும்.

வீட்டு பரிசோதனைக்கு வரும் இராணுவம் முதலில் அக்குடும்பத்திற்குரிய குடும்ப அட்டையை வாங்கி அதில் உள்ள குடும்ப அங்கத்தவரைத் தான் பரிசோதிக்கும். ஒவ்வொரு தடவையும் குடும்ப அட்டையை வாங்கும் இராணுவம் அதிலிருக்கும் மகவை எங்கே எனக் கேட்கையில் ”வெளிநாட்டுக்கு போன இடத்தில் செத்திட்டார்” என ஒரு தாய் தன் வாயாலேயே சொல்லும் கொடுமை என்பது அத்தாயின் கருப்பையில் எத்தனை குண்டூசிகளைக் குத்துவதற்கு சமமானதாகும்.

மறைந்து வாழ்தல் என்ற பதத்துக்கும் மறைத்து வாழ்தல் என்ற பதத்திற்கும் உள்ள வேறுபாட்டை இந்த இடத்தில்தான் நாம் வடிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

அந்த மனிதர்கள் எவ்வளவு காலம் தண்டனை அனுபவித்தார்களோ அதே அளவு காலத்தை அவர்கள் குடும்பங்களும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அதில் சிலதை பொது வெளிகளில் சொல்ல முடியும். ஆனால் பலதை பொது வெளிகளுக்கு சொல்ல முடியாமலும் இருக்கலாம்.

அண்மைய நாட்களில் தமிழகத்தின் முதல்வர் அவர்கள் எடுத்திருக்கும் முடிவானது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் சற்று அறுதல் அளிப்பதாகவே இருக்கின்றது. மரணத்தின் வாசலில் வாழ்ந்தவர்களுக்கு இது ஒரு பெரிய சந்தோசமான செய்தி தான்.

ஒரு ஜனநாயக நாடு, உலகுக்கு ஜீவகாருண்யம் போதித்த நாட்டில் இருந்து கொண்டு அவர்களை கொல்லாமல் சாகும் வரைக்கும் சிறையில் வைத்திருந்து அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் அணுவணுவாகக் சித்திரைவதை செய்ய வேண்டும் என்ற காட்டுமிராண்டித்தனம் கொண்ட மனிதர்களும் வாழும் ஒரு இடத்தில் இவர்கள் உயிர்களை காத்து வைத்திருந்ததும் ஜீவகாருண்யம் மிக்க மனிதர்கள் தான்.

அந்த வகையில் அதற்கு ஒரு உதாரண புருசராக இவர்களுக்கான சிறைவிடுப்புக்கு முடிவெடுத்திருக்கும் முதல்வர் மிகவும் போற்றுதலுக்குரியவராகவே அவர்கள்சார் குடும்பத்தால் பார்க்கப்படுகின்றார்.

இன்று இந்நிலைக்கு அவர்களுக்காக போராடிய ஒவ்வொருவருமே காரணம் மிக முக்கியமாக இந்த 7 பேருக்கும் சாதகமாக பேசப்படும் இடங்களில் எல்லாம் நினைவு கூறப்பட வேண்டிய மனித மாணிக்கம் ஒன்று அதே மண்ணில் தான் வாழ்ந்திருந்தது. அவரை நினைவு கூறாமல் இவர்களின் விடுப்பு அல்லது விடுதலை பற்றி நாம் பேசவே முடியாது.

7 உயிர்களுக்காக தன் விலைமதிப்பற்ற ஒற்றை உயிரை ஈந்த சகோதரி ”செங்கொடி” அவர்களுக்கும் நன்றியுடன் கூடிய வீர வணக்கங்கள்.

(ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தனின் இளைய சகோதரரான மதிசுதா, தற்போது இலங்கையில் வசித்து வருகிறார்.)

 

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்