Aran Sei

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

‘பேரரசுகளின் கல்லறை’

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

இதழின் உள்ளே...

தலையங்கம்

தும்பை விட்டு வாலை மட்டும் பிடிப்பது சரியா?

உலகின் மிகப் பழமையான ஜனநாயகம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா ஆப்கன் விவாகரத்தில் அப்பட்டமாக அம்பலப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு இவ்வாறு நேர்வது புதிதல்ல. ஏற்கனவே வியட்நாம் படுதோல்வி வரலாற்றில் யாரும் மறக்க முடியாத ஒரு களங்கத்தை அமெரிக்காவிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், அப்படியொரு களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதையோ, அதை சரி செய்துகொள்ள வேண்டும் என்பதையோ, அமெரிக்க ஆளும்வர்க்கம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே தற்போது ஆப்கான் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவம், தாலிபான் அரசை வீழ்த்துவதும், தீவிரவாத செயல்களுக்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படுவதை தடுப்பதும் தனது குறிக்கோள் என்று கூறியது. படையெடுப்பின் அடுத்த சில மாதங்களிலேயே ஏறக்குறைய ஆப்கானின் அனைத்து பகுதிகளும் அமெரிக்க கூட்டுப்படையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. தாலிபான்கள் அரசும் ஏற்கனவே வீழ்த்தப்பட்டிருந்தது. லட்சியம் நிறைவேறிய பிறகும், ஆப்கானில் ராணுவம் நீடிப்பது ஆக்கிமிப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்தபோது, ஆப்கானியர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதை உறுதி செய்ய வேண்டியது தனது கடமை என்று அமெரிக்காவும் அதன் நேட்டோ உறுப்பு நாடுகளும் தெரிவித்தன.

இவ்வாறாக 20 ஆண்டுகள் கழிந்த நிலையில், தாலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றியதும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நீடித்து வந்ததற்கு அந்நாடு கூறிய காரணம் ஒரு அப்பட்டமான பொய்யாக இருக்க வேண்டும் என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆப்கான் பாதுகாப்பு படையை பயிற்றுவிக்கவும், உட்கட்டமைப்பை உயர்த்தவும், ஜனநாயத்தை பயிற்றுவிக்கவும் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் அதில் ஒன்று கூட முழுமையடைவில்லை என்பதையே தாலிபான்களின் மீள் எழுச்சி நமக்கு உணர்த்துகிறது.

இந்நிலையில், தாலிபான்களின் கொடும் சட்டங்களையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், மனித உரிமைக்கு எதிரான செயல்களையும் விமர்சிக்க வேண்டியது நமது கடமை. ஆனால், அதற்கு இணையாக கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்தது என்ன என்பதையும் சேர்த்து கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், அப்படி ஒரு குரல் பலமாக ஒலிக்காமல் இருப்பது, மற்றொரு தருணத்தில், மற்றொரு நாட்டிற்குள் நுழைந்து, ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறேன் என்று அமெரிக்கா கூறுவதற்கு இன்றே நாம் அளிக்கும் கடவுச் சீட்டமாக அமைந்துடும்.

ஆகவே, தாலிபான்களை விமர்சிக்கும் அதே அளவிற்கு, அமெரிக்காவையும் விமர்சிப்பதே ஜனநாயத்தை பாதுகாக்கும் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

 • ஆசிரியர்

 

ஆசிரியர் குழு

ஆசிரியர்              –              மு. அசீப்

இணை ஆசிரியர்    –              மகிழ்நன்

மூத்த ஆசிரியர்       –              ஆர். மதன்ராஜ்

துணை ஆசிரியர்கள்

அரவிந்ராஜ் ரமேஷ்

தேவா பாஸ்கர்

நந்தகுமார்

பிரதீப்

சந்துரு மாயவன்

இதழ் வடிவமைப்பு

சுபாஷ் அரவிந்த்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

கம்யூனிசம் முதல் ஏகாதிபத்தியம் வரை : ஆப்கான் அரசியலின் காலக்கோடு

1979 டிசம்பர் : ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகான எழுச்சியை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த சோவியத் யூனியன், சோவியத் ஆதரவு அரசை உருவாக்கியது.

1980 : ஆப்கானிஸ்தானின் சோவியத் ஆதரவு ஆட்சியாளராக பக்ராக் கர்மால் நியமிக்கப்பட்டார். சோவியத் படைகளுக்கு எதிராக முஜாஹிதீன் அல்லது புனிதப் போர் வீரர்கள் என்று அழைக்கப்பட்ட கொரில்லா படையினர் நடத்திய தாக்குதலில், சுமார் 10 லட்சம் ஆப்கான் மக்களும், 15 ஆயிரம் சோவியத் படையினரும் கொல்லப்பட்டனர்.

அகதிகளாக தப்பிச் சென்ற லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தனர்.

1983 : ஆப்கானிஸ்தான் கொரில்லா படையினரை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் வரவேற்றார்.

1986 : ஸ்டிங்கர் வகை விமானம் தாக்கி ஏவுகனைகளை முஜாஹிதீன்களுக்கு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ வழங்கியது.

1987 : முஜாஹிதீன் தலைவர் யூனுஸ் காலிஸ், ஓவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். சோவியத்தால் நியமிக்கப்பட்ட முகம்மது நஜிபுல்லா, கார்மலுக்கு பதிலாக அதிபராக பொறுப்பேற்கிறார்.

1988 : ஜெனிவா ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை சோவியத் விலக்கிக் கொள்ளத் தொடங்கியது.

1989 பிப்ரவரி 15 : கடைசி சோவியத் சிப்பாய் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.

1992 : சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், நஜிபுல்லா தலைமையிலான கம்யூனிச அரசு கவிழ்க்கப்படுகிறது.

நஜிபுல்லா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, காபூலில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலக வளாகத்தில் தஞ்சம் அடைகிறார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அங்கு வசிக்கிறார்.

தலைநகர் காபூலிற்குள் நுழைந்த முஜாஹிதீன் தலைவர்கள், அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதனால், பெரும் எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானிற்கும் ஈரானிற்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர்.

சோவியத் படையெடுப்பின் போது காப்பாற்றப்பட்ட காபூல் நகரம், முஜாஹிதீன் தலைவர் குல்புதீன் ஹெக்மத்யாருக்கு விசுவாசமான சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. நகரின் பெரும்பகுதி இடிபாடுகளுக்குள் சிக்குகிறது. தேசிய அருங்காட்சியகம் ராக்கெட் ஏவுகனையால் தாக்கப்பட்டு சூறையாடப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.

1994 : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த முஜாஹிதீன் குழுக்களில் இருந்து வெளியேறிய தாலிபன்கள் (தீவிர பழமைவாத இஸ்லாமிய மாணவர்கள்) தெற்கு ஆப்கானிய நகரமான கந்தகாரை கைப்பற்றினர். ஒழுங்கை மீட்பதாகவும், அதிக பாதுகாப்பை அளிப்பதாகவும் உறுதியளித்த அவர்கள், விரைவில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இஸ்லாமிய பழமைவாதத்தை அமல்படுத்தினர்.

1996 மே : சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வந்தடைந்த சவுதியைச் சேர்ந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன், தாலிபன் தலைவர் முல்லா முகம்மது ஒமருடன் தன்னை இணைத்து கொண்டார்.

’ஆப்கானிய அரேபியர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவராக இருந்த ஒசாமா பின்லேடன், சோவியத் படைகளுடனான போரின் போது முஜாஹிதீன் படைகளுக்கு உதவினார்.

செப்டம்பர் 26 : காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், அங்கு ஐநா வளாகத்திற்குள் தஞ்சமடைந்திருந்த முன்னாள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்து, அவரது உடலை ஒரு விளக்கு கம்பியில் கட்டித் தொங்க விடுகின்றனர்.

1997 : நாட்டின் பெரும்பான்மை பகுதியை கைப்பற்றிய தாலிபன்கள், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தடை செய்கின்றனர். சவுக்கடிகள், உறுப்பு துண்டிப்பு மற்றும் பொது மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை நிறைவேற்றுகின்றனர். பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தாலிபன் அரசுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்தன.

1998 ஆகஸ்ட் : கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது அல் கொய்தா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் பகுதி மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்துகிறது.

1999 அக்டோபர் 15 : தாலிபன் மற்றும் அல்-கொய்தா மீது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தடைகளை விதிக்கிறது.

டிசம்பர் : நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்ட இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜெட் விமானம், கந்தகாருக்கு கடத்தப்படுகிறது. கடத்தல்காரர்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் மத்தியஸ்தர்களாக தாலிபன்கள் செயல்பட்டனர். கடத்தல்காரர்கள், விமான பயணிகளின் உயிரை பணயமாக வைத்து இந்திய சிறைகளில் இருந்த மூன்று கைதிகளை விடுவிக்கின்றனர்.

2001 மார்ச் : சர்வதேச நாடுகளின் வேண்டுகோளை மீறி பாமியான் மலைப்பகுதியில் இருந்த இரண்டு பழமையான புத்தர் சிலைகளை தாலிபான்கள் தகர்க்கின்றனர். சிலைகள் இஸ்லாமில் தடை செய்யப்பட்டவை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 2001 : கிறிஸ்துவத்தைப் பரப்பிய குற்றச்சாட்டில் மேற்கத்திய தொழிலாளர் உதவிக் குழுவை தாலிபன்கள் விசாரணைக்கு உட்படுத்துகின்றனர். அந்தக் குழுவில் இரண்டு பெண்களும் இடம்பெற்றிருந்தனர்.

செப்டம்பர் 9 : பத்திரிக்கையாளர்கள் போல வேடமிட்டு, தாலிபன் எதிர்ப்பு வடக்கு கூட்டணியின் தலைவர் அகமது ஷா மசூத்தை அல்கொய்தாவினர் கொலை செய்கின்றனர்.

செப்டம்பர் 11 : உலக வர்த்தக மையத்தின் மீது அல்கொய்தா தாக்குதல் நடத்தியது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

தாக்குதலுக்கு காரணம் ஒசாமா பின்லேடன் என அமெரிக்கா கூறியது. ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந்திருந்த பின்லேடனை ஒப்படைக்க தாலிபன்கள் மறுத்துவிட்டனர்.

அக்டோபர் 7 : ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.

நவம்பர் 13 : ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் வடக்கு கூட்டணி காபூலுக்குள் நுழைகிறது. தாலிபன் ஆட்சி கலைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். 1,300 அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் வந்திறங்கினர்.

டிசம்பர் : ஆப்கானிய குழுக்களிடையே இடைக்கால அரசாங்கம் தொடர்பான பான் ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து ஹமீத் கர்சாய் இடைக்கால அதிபராக நியமிக்கப்படுகிறார்.

ஐநா உத்தரவின் பெயரில் நேட்டோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப்படை நிறுவப்பட்டது.

2003 : அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆப்கானிஸ்தானிற்கு ’முக்கிய போர் நடவடிக்கைகளுக்கு’ முற்றுபுள்ளி வைக்க சமிக்ஞை செய்தார்.

”நாங்கள் தெளிவாக முக்கிய போர் நடவடிக்கைகளில் இருந்து ஸ்திரத்தன்மை, ஸ்திரப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கை காலத்திற்கு நகர்ந்துள்ளோம்” என ரம்ஸ்பீல்ட் கூறினார்.

2004 : ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் ஹமீத் கர்சாய் வெற்றி பெறுகிறார்.

2005 : தேர்தலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது.

2006 :  தெற்கு ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பை தாலிபன்கள் கைப்பற்றுகின்றனர். அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ சர்வதேச பாதுகாப்பு உதவிப்படை ஏற்றுக்கொள்கிறது. ”நேட்டோ இதுவரை ஏற்றிராத சவாலான பணிகளில் ஒன்று” என நேட்டோ பொதுச் செயலாளர் தெரிவிக்கின்றார்.

2009 : ஆப்கானிஸ்தானின் அதிபராக மீண்டும் ஹமீத் கர்சாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆப்கானிஸ்தானின் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை அறிவித்தார். அதன்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டிற்குள் படைகள் வெளியேறும் என ஓபாமா தெரிவித்தார்.

2011 மே : பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை சோதனையில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

ஜூன் : ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் திட்டத்தை ஒபாமா அறிவித்தார்.

2012 : 2014 ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெறப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டுப்பாடு ஆப்கானிய படைகளுக்கு மாற்றப்படும் என நேட்டோ தெரிவித்தது.

2013 : பாதுகாப்பு நடவடிக்கைகளை நேட்டோ படைகளிடம் இருந்து ஆப்கான் படைகள் ஏற்றுக்கொள்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, தாலிபன்களுடனான முறையான சமாதான பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை தொடங்குகிறார்.

அப்போதை தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் உள்ளிட்ட மூன்று முக்கிய தலைவர்கள் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

2014 : சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற தேர்தலில் அஷ்ரப் கனி அதிபராக தேர்ந்தேடுக்கப்படுகிறார். அந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் அவர்களது போர் நடவடிக்கைகளை முறையாக முடிக்கின்றன.

2015 : ஆப்கானிய படைகளுக்கு உதவ நேட்டோ படைகள் ஆதரவை அளிக்கின்றன. பொதுமக்கள், ஆப்கானிய மற்றும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்திய தாலிபன்கள் பல பகுதிகளைக் கைப்பற்றும் போது வன்முறை அதிகரிக்கிறது. ஆப்கானிய ஐ.எஸ்.ஐ.எஸ் கிளையும் உருவாகிறது. அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 9,800 ஆக குறைந்தது.

தாலிபன்களும் ஆப்கானிய அதிகாரிகளும் கத்தாரில் அதிகாரப்பூர்மற்ற அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக்கொள்கின்றனர். தாலிபன்களின் தலைவராக இருந்த முல்லா ஓமர் பல ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்ததை பகிரங்கமாக அறிவித்த தாலிபன்கள், புதிய தலைவராக முல்லா அக்தர் மன்சூரை தேர்ந்தெடுத்தனர்.

2016 : உள்நாட்டு போர் நடைபெற்ற காலங்களில்  ‘காபூலின் கசாப்புக் கடைக்காரர்’ என்று அறியப்பட்ட முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் தலைவர் குல்புதீன் ஹக்மத்யாருக்கு ஆப்கான் அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியது.

2017 : ஆப்கான் படைகளுக்கும் தாலிபன்களுக்கும் இடையிலான சண்டை தொடர்கிறது.

அப்போதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை 14 ஆயிரமாக அதிகரித்தார்.

2018 : தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த ஆப்கானிய அமெரிக்க தூதர் சல்மே கலில்சாத்தை டிரம்ப் நியமித்தார்.

2019 : மற்றொரு சர்ச்சைக்குரிய தேர்தலில் மீண்டும் அதிபராக அஷ்ரப் கனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்டம்பர் 9 : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபன்கள் நடத்திய குண்டுவெடிப்பில் ஒரு அமெரிக்க வீரர் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து பேச்சு வார்த்தையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.

2020 பிப்ரவரி 29 : அமெரிக்கா மற்றும் தாலிபன்கள் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தில். நாடுகடந்த பயங்கரவாத குழுக்கள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என தாலிபன்கள் உறுதியளித்ததை அடுத்து, மே1, 2021 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

2021 ஏப்ரல் 14 : ஆப்கானிஸ்தான் அதிபருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மே 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரையிலான காலத்திற்குள் அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மே 1 : தாலிபன்கள் ஆப்கானை கைப்பற்றும் நடவடிக்கையை தொடங்கினர். கிராமப்புற மாவட்டங்களை முதலில் கைப்பற்றிய பின்பு, நகரங்களை முற்றுகையிடுவது என்ற திட்டத்தில் அவர்கள் தாக்குதலை நடத்தினர்.

ஜூலை : அமெரிக்கப் போரின் முக்கிய மையமான பக்ரம் விமான தளத்தை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறுகின்றன.

ஆக்ஸ்ட் 15 : ஆப்கானிஸ்தானில் பெரிய நகரங்களை கைப்பற்றிய தாலிபன்களை காபூலை சுற்றி வளைத்தனர்.

அதிபர் மாளிகையில் விட்டு வெளியேறிய அஷ்ரப் கனி, நாட்டை விட்டு தப்பி ஓடினார். நள்ளிரவில் நாடும் அதிபர் மாளிகையும் தாலிபன்கள் வசம் வந்தது.

ஆகஸ்ட் 17 : காபூலில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய தாலிபன்கள், ஷரியா சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

Source: NPR.org

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ஆப்கானிஸ்தான் பேரரசுகளின் கல்லறையான கதை

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முழுமையாக வெளியேறியுள்ளது. ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாக ஆப்கான் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவின் இராணுவத் தளவாட செலவு, வீரர்களின் உயிரிழப்பு என பலதரபட்ட காரணங்களினால் அந்நாடு இந்த படையெடுப்பில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இது தாலிபான்களுக்கு கிடைத்த வெற்றியென்றும், இனி ஆப்கான் இறையாண்மை கொண்ட நாடாக விளங்கும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இவ்வேளையில், ஆப்கான் ஏன் பேரரசுகளின் கல்லறையாக இருக்கின்றது என்பதை வரலாற்றுப் பின்புலத்தோடு நாம் அணுகவேண்டிய தேவையையும் எழுகிறது.

ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு நாட்டை ஆக்கிரமித்து நிர்வகிப்பது என்பது  ஒரு கடினமான பணியாகும். எனினும், இதில் சில பேரரசுகள் வெற்றியும் பெற்றுள்ளன. தாலிபான்கள் இன்று பலம் பொருந்தியவர்களாக அங்கு நிலைபெற்றுள்ளனர், அதே சமயம், ஐஎஸ்ஐஎஸ் போன்ற போராளிக் குழுக்களும் அங்கு இயங்கி கொண்டுதான் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஆட்சி செய்வதற்கு மிகவும் கடினமான நாடாகும். பேரரசிற்குப் பிறகு பேரரசு, தேசத்திற்குப் பின்னர் தேசம் என பல்வேறு அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு, இன்றைய நவீன ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பு வரை அந்த அமைதியற்ற நிலை தொடர்கிறது. இத்தகைய காரணங்களினாலேயே  ஆப்கானிஸ்தான் “பேரரசுகளின் கல்லறை” என்ற பெயரிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் முடிவை அறிவித்திருப்பது, 1839-1842 போரில் இங்கிலாந்திற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டது போன்றதொரு முடிவாகும்.  வெளிநாட்டு சக்திகளால் ஆதரிக்கப்படும் ஒரு தலைவரை ஆதரிப்பதை விட, மக்கள் ஆதரவுடன் உள்ளூர் ஆட்சியாளருடன் வணிகம் செய்வது எளிது; ஏனென்றால், அத்தகைய தலைவரை ஆதரிப்பதற்கான செலவுகளும் இறுதியில் சேர்கின்றன. முகலாயர்களைப் போலவே, பல பேரரசுகள் ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்துவதற்கு மிக இலேசான அணுகுமுறையைக் கடைப்பிடித்தன. அவர்கள் பல்வேறு பழங்குடியினருக்கு பணம் கொடுத்ததன் வழியாகவும், அவர்களுக்கு சுயாட்சி வழங்குவதன் வழியாகவும் அந்த பகுதியை ஓரளவுக் கட்டுப்படுத்த முடிந்தது. பூர்வீக ஆப்கானிய அரசாங்கங்களின் மையப்படுத்தப்பட்ட அளவில் கட்டுப்படுத்துவதற்கு நிகரான எந்தவொரு முயற்சியும் கூட பெரும்பாலும் அங்கு தோல்வியடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதற்கு முதன்மையாக மூன்று மிகமுக்கியக் காரணங்களைக் கூறலாம்.

 1. முதலாவதாக, ஈரான், மத்திய ஆசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குக்கிடையிலான முக்கிய நிலவழியில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது. எனவே, பல முறை பல்வேறுபட்ட பழங்குடியினர் இந்தப்பகுதியில் குடியேறியுள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவரும், வெளியாட்களுக்கும் விரோதமாக உள்ளனர்.
 2. இரண்டாவதாக படையெடுப்பின் தாக்கம் மற்றும் இப்பகுதியில் பழங்குடியினரின் பரவல் காரணமாவும், அந்தப்பகுதியின் சட்டமின்மையின் காரணமாகவும், கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமம் அல்லது ஒவ்வொரு வீடும் ஒரு கோட்டையைப் போல கட்டப்பட்ட சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது
 3. மூன்றாவதாக, ஆப்கானிஸ்தானின் புவியியல் நிலவமைவு என்பது அங்கு வெற்றிப்பெறுவது மற்றும் ஆட்சி செலுத்துவதை மிகவும் கடினமாக்குகிறது. ஆப்கானிஸ்தான் மிக உயரமான மற்றும் மிகவும் துண்டிக்கப்பட்ட நிலையிலான மலைகளை பெரும்பாலும் கொண்டது. இவற்றில் ஹிந்து குஷ் மலைத்தொடர் நாட்டின் மத்தியிலிருந்து தெற்கு வரையும், கிழக்கில் உள்ள பாமிர் மலை வரையும் நீண்டுள்ளது. பாமிர் மலைத்தொடர் இந்து குஷ், பாமிர், தியான் ஷான், குன்லுன் மற்றும் இமயமலை ஆகியவை சந்திக்கும் புள்ளியாக உள்ளது. இது வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாக்ஷானில் அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் வரலாறு கடந்த கால வரலாறு, அந்நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்வது எவ்வளவு கடினம் என்பதை நிரூபித்துள்ளது. கி.மு 500 ஆம் ஆண்டுகளில், அகேமனிஸ் பாரசீகப் பேரரசின் உருவாக்கத்தின் போது ஆப்கான் அதன் கிழக்குப் பகுதியாக இருந்தது. அதற்குமுன்னர், ஆப்கானிஸ்தானின் பகுதிகள்  பண்டைய இந்திய அரசான காந்தாராவின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போதைய, வடமேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான் அந்தப் பகுதிக்குள் அடங்கும். அதேவேளையில், தெற்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானின் பகுதிகளில் ஏற்கனவே, தற்போதைய பஷ்டூன் மக்களின் முன்னோர்கள் வசித்து வந்தனர் (வரலாற்று ரீதியாக ஆப்கானியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்).

அவர்களின் பாஷ்டோ மொழியானது ஒரு பண்டைய கிழக்கு ஈரானிய மொழி ஆகும், இது ஜோராஸ்ட்ரிய வேதங்களின் அசல் மொழியான கிழக்கு ஈரானிய மொழியை விட பழமையான அவெஸ்தான் மொழியுடன் நெருக்கமான தொடர்புடையது. இந்த காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள்தொகை கொண்டதாக இருந்தது.  எனவே, அலெக்சாண்டர் சுலபமாக அந்தப் பகுதியை வென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் மௌரியப்பேரரசு ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. இந்தக் காலக்கட்டத்தில் தான் பௌத்தமும் இந்து மதமும் இங்கு பரவியது.

அதேவேளையில், வடக்கு ஆப்கானிஸ்தானில் பால்க் (பாக்ரியா) பகுதியில் ஒரு கிரேக்க வாரிசு அரசு எழுந்தது. மௌரிய சாம்ராஜ்யத்தின் சரிவு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து பல படையெடுப்புகளுக்குப் பிறகுதான் ஆப்கானிஸ்தான் “நிரம்ப” ஆரம்பித்தது. மேலும் பல தனிப்பட்ட போர்க்குணமிக்க மக்கள், தங்கள் சொந்த நிலப்பரப்புகளைப் பாதுகாக்கும் இடமாக அது மாறியது.

ஆப்கான் சிறு மாகாணங்களாக பிரிவதற்கு முன்பு வரை அந்தப்பகுதியில் பல்வேறு பழங்குடியினர்கள் அரசுகளை ஏற்படுத்தினர். இவர்களில் கிரேகோ-பாக்டிரியன்கள், இந்தோ-பார்த்தியன்ஸ், சாகா (சித்தியர்கள்), குஷான்கள், கிதாரிட்டுகள் மற்றும் ஹெப்தலைட்டுகள் (வெள்ளை ஹன்ஸ்) ஆகியோர்கள் அடங்குவர். 8 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரேபியர்கள் இப்பகுதிக்கு வந்தபோது, ​​அது சிறிய, ஆனால் வலிமையான அரசர்களின் இணைப்பாக இருந்தது. கந்தஹாரின் ஜன்பில்ஸை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. பெரும் வெற்றிகளைச் சந்தித்த அரேபியர்களுக்கு அது முதல் பெரிய பின்னடைவாக அமைந்தது. ஜன்பில்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட 20,000 துருப்புகள், எஞ்சிய 5,000 பேருடன் திரும்பியது.

ஆப்கானிஸ்தான் மேற்கிலிருந்து கிழக்கு வரை  இஸ்லாமியமயமாக கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆனது. ஈரானுடனான ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சராஞ்சில் பிறந்த பாரசீக கொல்லன் யாகூப் இப்னு அல்-லய்த் அல்-சஃபர் காபூலைக் கைப்பற்றியபோதுதான் இது நிறைவடைந்தது. அப்போதும் கூட, ஹிந்து ஷாஹி வம்சம் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வந்த நிலையில்,  இன்றைய ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியை கஜினி மஹ்மூத் கைப்பற்றும் வரை நிலைப்பெற்றிருந்தது.

1221 ஆம் ஆண்டு, மங்கோலியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தபோது, ​​அவர்கள் பாமியன் பள்ளத்தாக்கில் மிகவும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தனர். அதில் செங்கிஸ் கானின் பேரன் கொல்லப்பட்டார். ஆத்திரமடைந்த மங்கோலியர்கள் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பூர்வகுடி மக்களைக் கொன்று குவித்தனர். மங்கோலியர் சாம்ராஜ்யம் வலுவிழந்த பிறகு ஆப்கானில் அதன் பிடியும் தளர்ந்தது.

பாபர் இந்தியாவுக்குள் படையெடுப்பதற்கு முன்பே காபுல் பகுதியில் முகலாய பேரரசை நிறுவி இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். பெரும்பாலான இந்துகுஷ் பகுதிகளில் 1738 ஆம் ஆண்டுவரை முகலாய பேரரசின்  நிலையற்ற ஆட்சியின் கீழ் இருந்தன. பின், நாடெர் ஷா எனும் மன்னன் கைப்பற்றிய பிறகு முழுமையாக பத்து ஆண்டுகள் முகலாய பேரரசுக்குள் வந்தது. நாடெர் ஷா இறப்புக்கு பின், அகமது ஷா துரானி ஆட்சியில் நவீன ஆப்கானிஸ்தான் உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் முகலாயர் ஆட்சி ஒரு சில நகர்ப்புற மையங்களின் மீதான கட்டுப்பாட்டின் கலவையாகும். பின், இந்த நடைமுறை ஆங்கிலேயர்களாலும் பின்பற்றப்பட்டது. இருப்பினும், முகலாயர்களின் ஆட்சி எப்போதும் ஆபத்தாகவே கருதப்பட்டது. ஏனெனில் அவர்கள் தொடர்ந்து பழங்குடி கிளர்ச்சிகளை எதிர்கொண்டனர். கவிஞர் குஷால் கான் கட்டக் தலைமையில் (1672-1677) நடைபெற்ற கிளர்ச்சி, முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் முகலாய அதிகாரம் மீண்டும் அங்கு சில பகுதிகளுக்கு அப்பால் நீட்டிக்கவில்லை.

முகலாயப் பேரரசு மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி மற்றும் பாமியன் வரை பரவியது; பல தசாப்தங்களாக காந்தஹார் பாரசீக சஃபாவிட்களுடன் சண்டையிட்ட பிறகு, ஷாஜகானின் ஆட்சியில் அவர்கள் அதை நிரந்தரமாக இழந்தனர். சஃபாவிட்கள் கட்டுக்கடங்காத ஆப்கான் பழங்குடியினரையும் சமாளிக்க வேண்டியிருந்தது. பஷ்தூன் பழங்குடியினரை கட்டுப்படுத்தி ஷியா இஸ்லாமிற்கு மாற்ற பாரசீக முயற்சிகள் காரணமாக 1709 ஆம் ஆண்டில் காந்தஹாரில் சஃபாவிட்களுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது. ஆப்கான் கிளர்ச்சி சஃபாவிட் பேரரசை வீழ்த்தியது; போர்வீரர் நாடர் ஷா மற்றும் அவரது பேரரசின் எழுச்சியால் ஓரளவு சரிபார்க்கப்பட்டாலும், இறுதியில் நவீன ஆப்கானிஸ்தான் 1747 இல் அஹ்மத் ஷா துரானியால் நிறுவப்பட்டது.

அப்போதிருந்து, பிரிட்டிஷ் மற்றும் ரஷ்யர்கள் ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பை தற்காலிகமாக கைப்பற்றவும், வெளிப்படையான போரில் ஆப்கானிஸ்தானை இராணுவ ரீதியாக தோற்கடிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தாலும்,   இப்பகுதியில் உள்ள கொரில்லாக்கள்,  பழங்குடியினர்கள் அந்நிய நாட்டுச் படையெடுப்பை தொடர்ந்து எதிர்க்கக்கூடியக்  கோட்டைகளாக விளங்கும் போது அவர்களை எதிர்த்து நீண்ட  காலம் தாக்குப்பிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதைக் கற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் மக்கள் அவர்களின் மொத்த வாழ்க்கைக்காகவும்  போராட வேண்டியுள்ளது. ஆகவே, ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலிருந்து அமெரிக்கா பாடம் கற்றிருக்க வேண்டும். போரை தீவிரமாக்குவது எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதை அமெரிக்கா தெள்ளத்தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். தேவையற்ற உயிர் பலி, கோடிக்கணக்கான பொருட்செலவு ஆகியவற்றை முன்னிறுத்தி போரை நடத்துவதென்பது ஆப்கானிஸ்தானில் எவ்வகையிலும் பயன்தராது.

தற்போது அமெரிக்க அரசு தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது. உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அமெரிக்கா தாலிபான்களை ஏற்றுக்கொள்வது தான், வெல்ல முடியாத, முடிவற்ற போருக்கு ஒரே மாற்று.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ஆப்கான் மீது சோவியத் படையெடுப்பும் அவமானகரமான தோல்வியும்

 

1979 ஆம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில், சோவியத் யூனியனின் ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது. ஆப்கானிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இஸ்லாமிய கெரில்லாக்களுக்கும் இடையிலான சண்டையில், ஆப்கானிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு ஆதரவாக சோவியத் யூனியன் களமிறங்கியது.

முன்னதாக, 1978 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் அரசுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, அவசர காலங்களில் ஆப்கானிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால், சோவியத் யூனியன் தனது படைகளை அனுப்ப வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்கான் அரசு உதவியை கோரவே, சோவியத் படைகள் மணல் குன்றுகளின் நாடான ஆப்கானிஸ்தானுக்கு வந்திறங்கின. 1989 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாத நடுப்பகுதி வரையில் சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்தது.

1978 ஏப்ரல் மாதத்தில், ஆப்கானிஸ்தானின் மையவாத அரசான முகமது தாவுத் கான் தலைமையிலான அரசு, நூர் முகமது தாரகி தலைமையிலான இடதுசாரி இராணுவ அதிகாரிகளால் அரியனையில் இருந்து தூக்கி எறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரம் இரண்டு மார்க்சிஸ்ட்- லெனினிச அரசியல் கட்சிகளால் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. மக்கள் (கால்க்) கட்சி, பேனர் (பர்சாம்) கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும், முன்பு மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற ஒரே கட்சியிலிருந்து தோன்றியவை. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இந்த ஆட்சிமாற்றத்திற்கு சற்று முன்னர், இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்படத் தொடங்கின.

சிறிதளவு மக்கள் ஆதரவு பெற்றிருந்த புதிய அரசாங்கம், சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை கடைப்பிடித்து வந்தது. உள்நாட்டில் நிலவிய அனைத்து எதிர்ப்புகளையும் இரக்கமற்ற முறையில் அடக்கியது. மேலும், பெரிய அளவிலான நிலம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தியதன் வழியாக, இஸ்லாமிய பழமைவாதிகளாலும் கம்யூனிச எதிர்ப்பாளர்களாலும் புதிய அரசாங்கம் கடுமையாக வெறுப்புக்குள்ளானது.

அதன் தொடர்ச்சியாக, பழங்குடி மற்றும் நகர்ப்புற குழுக்களிடையே புதிய அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி உருவானது.  இந்தக் கிளர்ச்சி குழுக்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக முஜாஹிதீன்கள் என்று அறியப்பட்டனர்.

இந்த எழுச்சிகள், மக்கள் கட்சி மற்றும் பேனர் கட்சிகளுக்கிடையேயான அரசியல் பூசல் மற்றும் உள்நாட்டு சண்டை ஆகியவற்றின் காரணமாக, ஆப்கானிஸ்தான் அரசின் கோரிக்கையின் பெயரில், 1979 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி இரவில், சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. 1,00,000-க்கும் மேற்பட்ட சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானின் சிறிய நகரங்கள் தொடங்கி தலைநகர் காபுல் போன்ற பெரிய நகரங்கள் வரை, தரைவழி மற்றும் வான்வழியின் தாக்குதல் மூலம் கைப்பற்றி, கட்டுக்குள் வைப்பதற்கான வேலையை தொடங்கின.

சோவியத் படைகள் உட்புகுந்த சில நாட்களிலேயே, மக்கள் கட்சி தலைவர் ஹபீஸுல்லா அமீனின் குறுகிய கால ஆட்சியை வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து, படிப்படியாக தரைவழிப்படைகள், வான்வழிப்படைகள் என சோவியத் படைகள் ஆப்கானை முழுவதுமாக நிறைக்கத் தொடங்கின. நாட்டின் எல்லைகளிலும் சோவியத் படைகள் குவிக்கப்பட்டிருந்தன. போர் விமானங்களும் பீரங்கிகளும் இன்னபிற போர் இயந்திரங்களும் வாகனங்களும் சோவியத்தில் இருந்து வந்த வண்ணம் இருந்தன. ஆப்கான் நாட்டு குன்றுகள் சோவியத் பீரங்கிகளின் வண்ணங்களுக்கு மாறிவந்தன.

அப்போது சோவியத்தின் குறிக்கோளானது, அரசியல்ரீதியாக பலவீனமாகவும் மக்களின் ஆதரவு இல்லாமலும் தள்ளாட்டத்தில் இருக்கும், பேனர் கட்சி தலைவர் பாப்ராக் கர்மால் தலைமையிலான புதிய அரசாங்கத்தை காப்பாற்றுவதுதான்.

மறுபுறம், அமெரிக்கா, சவுதி அரேபியா, சீனா போன்ற உலக நாடுகளின் உதவியுடன், முஜாஹிதீன்களின் கிளர்ச்சியானது நாளுக்கு நாள் வளர்ந்து, ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. அவர்களுக்கு தேவையான ஏவுகனைகள், பீரங்கிகள் அந்நாடுகளால் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் இக்கிளர்ச்சியை ஒடுக்கும் பணியை ஆப்கானிய இராணுவத்திடம் சோவியத் ஒப்படைத்திருந்தது. ஆனால், சிறிது காலத்திலேயே ஆப்கனிஸ்தானின் அரசு படைகளில் இருந்து பலர் வெளியேறினர். இப்போர் முடியுறும் வரை ஆப்கானிஸ்தானின் அரசு படை பெரிதும் பயன் தராததாகவே இருந்தது.

சோவியத் படைகள் பல்வேறு போர் தந்திரங்களைப் பயன்படுத்தி, கிளர்ச்சியை நசுக்க முயன்றன. பல்வேறு பிராந்தியங்களில் உருவான மிகச்சிறிய கிளர்ச்சி குழுக்கள், சோவியத் படைகளால் எளிதில் தகர்த்தெறியப்பட்டன. கிராமப்புறங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்துவதன் வழியாகவும், கிராமப்புர மக்களை வெளியேற்றுவதன் வழியாகவும், முஜாஹிதீனின்களுக்கு வரும் மக்கள் ஆதரவை தடுக்க சோவியத் முயற்சித்தது.

ஆனால், சூழல் மாறத்தொடங்கியது. ஆப்கானிஸ்தானின் பள்ளத்தாக்குகள் மற்றும் மணல் குன்றுகளைக்கொண்ட நிலவியல் அமைப்பானது, அந்நாட்டின் கிளர்ச்சிப்படைகளுக்கு ஏதுவாக அமைந்தது. அந்நிய மண்ணில் இருந்து வந்த சோவியத் படைகளால், அவ்வமைப்பை முழுதாக உள்வாங்கிக்கொண்டு செயலாற்ற முடியவில்லை. இது சோவியத்திற்கு பின்னடைவையும், இதர உள்ளாட்டு கிளர்ச்சிப்படைகளுக்கு சாதகமாகவும் இருந்தது. மிக நீண்ட நேர தாக்குதல்களுக்கு பின்பும், அக்குழுக்கள் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்தன. அதனால், சோவியத் படை தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டியதாயிற்று.

இத்தாக்குதல்கள் காரணமாக, 1982 ஆம் ஆண்டில் தோராயமாக 28 லட்சம் ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானிலும் 15 லட்சம் பேர் ஈரானிலும் தஞ்சம் புகுந்தனர்.

பனிப்போரில் சோவியத்தின் எதிரி நாடான அமெரிக்காவால் வழங்கப்பட்ட தோள்பட்டை ஏவுகணைகள் (Stinger Missile) உள்ளிட்ட நவீன போர் ஆயுதங்களை பயன்படுத்தி, ஓரளவிற்கு சோவியத்தின் தாக்குதல்களை  முஜாஹிதீன்கள் சமாளித்தார்கள்.

1985 ஆம் ஆண்டில், முஜாஹிதீன்கள் என்று ஒரு பொதுப்பெயரில் அழைக்கப்படும் அரசியல் ரீதியாகவும் பிராந்தியரீதியாகவும் பிளவுண்டிருந்த பல்வேறு கிளர்ச்சி குழுக்கள், தங்களின் இராணுவ பலத்தை அதிகரிக்கவும், சோவியத் படைகளை சமாளிக்கவும் ஒன்றிணைந்தனர். அதனால், அவர்கள் பலமும் பெற்றனர்.

இவை ஒருபுறம் நடக்கையில், தொடக்கத்தில் ஆப்கான் மக்களின் ஆதரவை சிறிது பெற்றிருந்த சோவியத் படைகள், அவற்றை இழந்து, எதிர்ப்பை பெறத்தொடங்கின. ஆப்கான் மக்கள் பலர் முஜாஹிதீன்களின் படைகளில் இணைவதும், ஆப்கானிஸ்தான் அரசு படைவீரர்களில் சில குழுக்கள் சோவியத்திற்கு எதிராக திரும்புவதும் நடந்தன. காரணம், சோவியத்தின் இந்தப் படையெடுப்பு ஆப்கானிஸ்தானை முற்றாக நிர்மூலமாக்கியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். தப்பியவர்கள் மூச்சை தக்க வைத்துக்கொண்டு, ஊனமாக்கப்பட்டு, நடை பிணங்களாக்கப்பட்டனர். படுக்கையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக மட்கத்தொடங்கினர்.  ஒரு துளி மனித ரத்ததின் மகத்துவம் அறியாத குண்டுகள், இளையோர்களையும் மழலைகளையும் கூட பலி கேட்டது.

வெறும் பள்ளத்தாக்குகளையும் மணல் குன்றுகளையும் நம்பியே வாழ்ந்து வந்த அம்மக்கள், ஒரு போரானது தங்களது நிலவியல் அமைப்பையே சிதைத்துக்காட்டும் என்று எண்ணி இருக்கவில்லை. நீர் ஆதாரங்களும், விவசாயமும், அதைச் சார்ந்த அவர்களின் பொருளாதாரமும் பெரும் ஆட்டம் கண்டது. இப்போருக்கு எதிராக அவர்களின் ஆன்மாவும் சத்தம் போட்டு அழத்தொடங்கியது. இருந்து பெரும் துயர்கொள்ளும் அளவிலான மக்கள் ஆப்கானிஸ்தானில் அகதிகளாக்கப்பட்டு அண்டை நாடுகளுக்கு துரத்தப்பட்டனர்.

மறுபுறம், சோவியத் ஒன்றியத்திற்கும் நெருக்கடிகள் ஏற்படத்தொடங்கின. இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளும், ஐநா சபையில் சோவியத்திற்கு எதிரான தீர்மானமும், உலக நாடுகளின் மாஸ்கோ ஒலிம்பிக் புறக்கணிப்பும், உள்நாட்டில் இருந்து எழத் தொடங்கிய எதிர்ப்புகளும், சோவியத் ஒன்றியத்தை முஜாஹிதீன்களுடன் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு தள்ளியது.

சிறிது சிறிதாக சோவியத் ஒன்றியத்தின் படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வெளியேறத் தொடங்கி, 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், முற்றிலுமாக வெளியேறியது.

Source: Britannica, BBC, Wshington Post.     

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

புனிதப்போரின் அவசியம் என்ன? – ஆப்கான் குழந்தைகளுக்கு ஜிகாத் குறித்து பாடம் எடுத்த அமெரிக்கா

வாஷிங்டன் போஸட் பத்திரிகையில், 2002 ஆம் ஆண்டு வெளியான செய்தியின்படி, 1980களில் இருந்து ஆப்கானிய பள்ளிக் குழந்தைகளுக்கு சோவியத் எதிர்ப்பு பாடப்புத்தங்களை தயாரிக்கவும் பரப்பவும் அமெரிக்கா கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது.

பெரும்பாலும் இவை ஒரு தீவிரவாத கண்ணோட்டத்தை ஊக்குவித்தன. பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் பிரச்சாரத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

”ஜிகாத் பற்றிய பேச்சுக்களால் நிரப்பப்பட்ட மற்றும் தோட்டாக்கள், துப்பாக்கிகள், சிப்பாய்கள் மற்றும் சுரங்கங்களின் வரைபடங்கள் இடம்பெற்ற புத்தகங்கள், அப்போதிருந்து ஆப்கானிய பள்ளிகளின் முக்கிய பாடத்திட்டமாக இருந்து வந்துள்ளன”  என்றும் அமெரிக்கா தயாரித்த, அடிப்படைவாதத்தை போதிக்கும் அந்த  புத்தகங்களை தாலிபன்களும் பயன்படுத்தினர் என்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

ஆப்கானிஸ்தானின் இரண்டு முக்கிய மொழியான பஷ்டோ மற்றும் டாரியில் அச்சிடப்பட்ட, ‘ஜிகாத் எழுத்தறிவிற்கான அகரவரிசை’ போன்ற புத்தங்கள் ஒமாஹா நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையின் ஆதரவினால் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்-யினால் ஏற்படுத்தப்ப்டட தொடர்புகள் மூலம் ஆப்கானிஸ்தானிற்குள் கடத்தப்பட்டன.

2001 ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானின் கல்விமுறையை நவீனப்படுத்துவதில் அமெரிக்க அதிகாரிகள் பெருமளவில் முதலீடு செய்தனர். கல்வி கற்க பெண்களையும் அனுமதித்தனர். தாலிபன்கள் ஆட்சியில் இருந்த பின்தங்கிய பாடத்திட்டத்தை சீரமைத்தனர். இதனால் சிறிய ஆதாயங்கள் இருந்தாலும், நடைமுறைப்படுத்துதலில் பல சவால்கள் இருந்தன.

ஆனால், அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கூற்றின்படி, சோவியத் எதிர்ப்பு பாடங்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன.

நியூயார்க் பல்கலைக்கழகக்கத்தின் சர்வதேச கல்விக்கான உதவி பேராசிரியரான டானா பார்டே ”தாலிபன் பழைய ஜிஹாத் ஆதரவு புத்தகங்களை மீண்டும் அச்சிட்டு, அவர்கள் அதிக்கம் செலுத்தும் பகுதியில் இருக்கும் குழந்தைளுக்கு விநியோகிக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகங்களின் 2011 ஆம் ஆண்டின் பதிப்பு உள்ளிட்ட சில நூல்களின் மறுபதிப்புகளின் நகல்களை பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பார்த்ததாக, பார்டே குறிப்பிட்டுள்ளார்.

”இந்த புத்தகங்கள் இன்று எந்த அளவிற்கு பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது என்பது பற்றிய தகவல் இல்லை” எனக் கூறியுள்ள பார்டே, “இவை இன்று பெருமளவில் புழக்கத்தில் இல்லை என்று உறுதியாக கூறமுடியாது. அவை பெருமளவில் பயனுள்ளதாக இல்லை. அவற்றை எந்த அளவிற்கு தாலிபன்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையில் எனக்கு தெரியவில்லை. இருந்தபோதும், அவற்றை திரும்ப பெற அவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா ஊடகத்தின் செய்தியின்படி, பஷ்டோ பதிப்பில் ’டி(T)’ என்பது டோபாக் அல்லது துப்பாக்கி என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கு “என் மாமா ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறார். அவர் துப்பாக்கியுடன் ஜிஹாத்தில் ஈடுபடுகிறார்” என்பது போன்ற விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காபூலில் இஸ்லாமியர்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்றும், ரஷ்யர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் அனைவரும் நம்பிக்கையற்றவர்கள் என்ற கருத்தும் அந்த பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வெளிநாட்டு உதவிக் கொள்கையின் திட்டமிடப்படாத விளைவுகள் குறித்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கும் பார்டே, இந்த (ஜிஹாத்திய கருத்து) புத்தகங்கள் குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறார்.

அமெரிக்காவின் நேஷனல் பப்ளிக் ரேடியோவிற்கு (என்பிஆர்) அவர் அளித்திருக்கும் பேட்டியில், பனிப்போர் காலத்தில் இந்த நூல்களை ஆதரித்த அமெரிக்க வல்லுநர்கள் செய்த கணக்கீடுகளை அவர் விளக்கியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் செய்தியின் படி, குறைந்தபட்சம் 50 லட்சம் ’இராணுவமயமாக்கப்பட்ட’ புத்தகங்களை யுனிசெப் அமைப்பு அழித்துள்ளது. இருப்பினும் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வரும் அமெரிக்க கொள்கையின் விளைவுகள் இன்னும் பெரிய மற்றும் சிறிய அளவில் ஆப்கானிஸ்தானில் நீடிக்கின்றன.

Washingtonpost.com-ல் வெளிவந்த கட்டுரையின் மொழிப்பெயர்ப்பு.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

யார் இந்த ஒசாமா பின்லாடன்? – சவுதியில் தொடங்கி ஆப்கானில் முடிந்த கதை

ஸ்லாமியிர்கள், தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று விட வேண்டும் என விரும்பும் இடம் மெக்கா. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்களை ஈர்க்கும் இந்தப் புனித தலம் 1960களில் விரிவுபடுத்தப்பட்டது. சவுதி அரச குடும்பத்தின் நம்பிக்கையை பெற்ற தொழில்அதிபர் முகம்மது அவாட் பின் லேடன் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது.

சாதாரண சுமை தூக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய அவாட் பின் லேடன் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக சவுதியின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்திருந்தார். சவுதி மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்தபோது, அரசு ஊழியர்களுக்கு  சம்பளம் வழங்கும் அளவிற்கு பணம் சேர்த்திருந்த அவாட் பின் லேடன் அதைப்போலவே மனைவிகளையும் சேர்த்திருந்தார்.

10 மனைவிகள் மூலம் 50 குழந்தைகளுக்கு தந்தையான அவாட் பின்லேடனுக்கு 1957ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் உலக நாடுகள் அனைத்தின் மீதும் தன் ஆதிக்கத்தை செலுத்தும் அமெரிக்காவிற்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஒசாமா பின்லேடன்.

பின் லேடன் பிறந்து சில ஆண்டுகளிலேயே அவருடைய பெற்றோர் விவாகரத்து பெற்றதால் தந்தையின் அரவணைப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அவருடைய தாய் அலியா கனேம் மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள, வளர்ப்பு தந்தை மற்றும் அவருக்கு பிறந்த குழந்தைகளுடன் ஒசாமா வளர்ந்தார்.

சவுதி அரேபியாவில் புகழ்பெற்ற அல் தாஹிர் பள்ளியில் தனது படிப்பை தொடங்கிய ஒசாமா, பயந்த சுபாவம் கொண்ட நன்கு படிக்கக் கூடிய மாணவன் என்று அவருடைய ஆசியர்கள் நினைவுகூர்கின்றனர். ஆனால், அவர் சுமாராக படிக்கும் மாணவர் என்று அவருடைய தாய் ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்துள்ளார். இவ்வாறாக ஒசாமாவின் இளைமைக்காலம் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் ஒசாமாவின் ரத்த வழி தந்தை மரணமடைய, அவருடைய பல மில்லியன் டாலர் சொத்துக்களில் மிகப் பெரிய பங்கு ஒசாமாவை வந்தடைந்தது. 10 வயதில் மிகப் பெரிய பணக்காரரான ஒசாமா பின்லேடன், படிக்கும் காலத்திலேயே இஸ்லாமியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டதாக சிலர் கூறுகின்றனர்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆர்னையும், இஸ்லாமியர்களின் வாழ்வியல் பற்றி கூறும் சுன்னாவையும் மட்டுமே இஸ்லாமியர்களின் பின்பற்றுதலாக மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பு 1928ஆம் ஆண்டு எகிப்தில் உருவாக்கப்பட்டது. எகிப்து அதிபர் நாசரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டி அந்த அமைப்பிற்கு 1950களின் தொடக்கத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு தொடக்கம் முதலே ஆதரவளித்து வந்த சவுதி அரேபியா, எகிப்திலிருந்து தப்பி வந்த அந்த அமைப்பைச் சேர்ந்த பலருக்கு தனது நாட்டில் அடைக்கலம் கொடுத்தது. அவ்வாறு அடைக்கலம் பெற்ற பலர், சவுதியின் பல்வேறு கல்வி நிலையங்களில் ஆசிரியர்களாக பொறுப்பேற்றனர்.

அல் தாஹிர் பள்ளியில் படிக்கும், சவுதியின் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு, அடைக்கலம் பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகளை நடத்தியதாகவும், ஒசாமா அதில் படித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகுப்பில் இஸ்லாமியத்தின் அடிப்படை தத்துவத்தை பயின்ற ஒசாமா பின் லேடன், புனித நூலான குர் ஆனை மனப்பாடமாக ஒப்பிக்க கற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையோ, பொய்யோ ஆனால், பிற்காலத்தில் உருவான அல்கொய்தா அமைப்பிற்கு முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பே தொடக்கமாக அமைந்ததை யாரும் மறுப்பதில்லை.

தனது வாழ்நாளில் 5 முறை திருமணம் செய்து கொண்ட பின்லேடன் தனது 18வது வயதில், முதல் முறையாக தனது தாயின் சகோதரர் மகள் நஜ்வா கானேம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்லேடனின் ஐந்து மனைவிகளில் 3 பேர், சவுதியின் மதிப்பு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள்.

சவுதியின் மிகப்பெரிய பள்ளியில் கல்வியை முடித்த ஒசாமா, அந்நாட்டின் மதிப்பு மிக்க கிங் அப்துல் அசீஸ் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியை தொடங்கினார். அவர், பொருளாதாரம் மற்றும் தொழில் மேலாண்மை பயின்றதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், தனது குடும்ப தொழிலை பின்பற்றும் வகையில் ஒசாமா, பொறியிலும் பயின்றதாக கூறப்படுகிறது.

கல்லூரி காலத்தில் ஒசாமா கேளிக்கைகள் மீது ஆர்வம் இல்லாமல், இஸ்லாமியத்தின் மீது மிகுந்த பற்றோடு இருந்ததாக சிலர் கூறகின்றனர். அதற்கு ஏற்றாற்போல் மேற்கத்திய உடைகளையும், நாரீகங்களையும் தவிர்த்து, இஸ்லாமிய அடையாளங்களையே அவர் விரும்பியதாகவும் கூறுப்படுகிறது. பெண்களுடன் கை குலுக்குவதைக் கூட தவறு என்று அவர் கருதியதாகவும், செய்திகளைத்தவிர வேறு எதையும் அவர் தொலைக்காட்சியில் பார்ப்பதை தவிர்த்ததாகவும் கூறுப்படுகிறது. ஆனால், இதற்கு நேர் எதிரான தகவல்களை சில மேற்கத்திய ஊடகங்களும், ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

மத கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாடுகளின் மத்தியில் அமைந்துள்ள லெபனான், அரபுலகத்தின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தனது இளமைக் காலத்தில் லெபனானின் தலை நகர் பெய்ருட்டிற்கு, ஒசாமா தனது நண்பர்களுடன் அடிக்கடி சென்றதாகவும், அங்கு செயல்படும் இரவு விடுதிகளில் அவர் நேரத்தை செலவிட்டதாகவும் மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒசாமாவின் இளமைக்காலம் குறித்து இருவேறுபட்ட கருத்துகளில் எது உண்மை, எது பொய் என்ற சர்ச்சை இருந்தாலும், இந்தக் காலத்தில்தான் அவர் இஸ்லாம் மீது மிகுந்த பற்று கொண்டவராக மாறினார்.

முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பை நிறுவிய சயித் குத்துப் எழுதிய புத்தகம் அந்தக் காலத்தின் அரபு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மைல்கல் (Milestone) என்ற அந்தப் புத்தகம் உண்மையில் ஒசாமாவின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகவே அமைந்தது.

தேச துரோக வழக்கில் எகிப்து அரசால் தூக்கிலிடப்பட்ட சயித் குத்துப் ஒசாமாவின் கதாநாயகராக மாறினார். சயித் குத்துப்பின் சகோதரர் முகம்மது குத்துப், பல்கலைக்கழகத்தில் நடத்திய சொற்பொழிவு கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்ட ஒசாமா பின் லேடனுக்குள் இஸ்லாமிற்கு எதிரான சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் வளரத் தொடங்கியது. இவ்வாறாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பால் ஒசாமா ஈர்க்கப்பட்டார்.

இந்தக் காலத்தில், அரபு உலகத்தில் நடைபெற்ற இரு பெரும் நிகழ்வுகள் ஒசாமாவை அவர் ஏற்றுக்கொண்ட கொள்கையை நோக்கி மேலும் நெருங்கச் செய்தது என்றே கூறலாம்.

1979 ஆம் ஆண்டு, அயோட்டா கொமேனி தலைமையில் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சி மேற்கு உலக நாடுகளின் அடி வருடியாக செயல்பட்ட ஈரான் அரசை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, ஈரான் இஸ்லாமிய குடியரசை கொமோனி நிறுவினார். ஈரானில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய மாற்றம் பின்லேடனுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது.

அதே ஆண்டு நவம்பர் மாதம், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய படையினர், அதற்குள் அமைந்துள்ள மசூதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இஸ்லாத்தை மீட்க வந்தவர்கள் என்று கூறிக்கொண்ட அவர்களை, பிரான்ஸ் ராணுவத்தின் உதவியுடன், இரண்டு வாரம் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு சவுதி அரசு வெளியேற்றியது. சவுதி அரச குடும்பத்தின் ஊழல் நடவடிக்கையால் அவர்கள் மீது ஏற்கனவே கோபம் கொண்டிருந்த பின்லேடனை இந்த நிகழ்வு மேலும் அவர்கள் மீது கோபமடையச் செய்தது.

உண்மையான இஸ்லாமிய வாழ்முறையை மீட்டெடுக்க வேண்டும் என்ற தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட பின்லேடனை, அதை நடைமுறை சாத்தியமாக்க முடியும் என்ற படிப்பினையை பெற்ற பின்லேடனனை, அதற்காக களம் காணச் செய்த மிக முக்கியமான மற்றொரு நிகழ்வும் அதே ஆண்டில் நடந்தது.

1978ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய கம்யூனிஸ்ட் அரசு, இஸ்லாமிய பழமைவாதம் ஆட்கொண்ட அந்நாட்டில், பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை வழங்கும் சட்டம் உட்பட பல புரட்சிகர சட்டங்களை இயற்றியது. இதனால், கோபம் கொண்ட, இஸ்லாமிய பழமைவாதிகள் அரசுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். பிரிசேனேவ் (Brezhnev) கோட்பாட்டின் அடிப்படையில், ஆப்கான் கம்யூனிஸ்ட் அரசை பாதுகாப்பதற்காக 1979ஆம் ஆண்டு, சோவியத் யூனியன், தனது 40வது படைப்பிரிவை ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பியது. சோவியத் அரசுக்கு எதிராக களம் இறங்கிய முஜாகிதீன்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாத்தை பாதுகாக்கும் படையினருக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சோவியத் ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு எதிராக மிகப்பெரிய உள்நாட்டுப்போர் வெடித்தது.

இஸ்லாமிய வாழ்முறையை மீட்டெடுக்கும் தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட ஒசாமா பின்லேடனை சோவியத் யூனியனின் நடவடிக்கை கோபமடையச் செய்தது. அதைத்தொடர்ந்து தன்னுடைய கொள்கைக்காக முதல் முறையாக களம் காண முடிவெடுத்தார் ஒசாமா பின்லேடன்.

சோவியத்தின் ஆதரவு அரசை வீழ்த்துவதற்கு ஆப்ரேஷன் சைக்ளோன் (Operation Cyclone) என்ற நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியது. முஜகாகிதீன்கள் ஆயுதம் வாங்குவதற்கும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபிய அரசுகள் பல மில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு அளித்தன. சோவியத் ராணுவத்திற்கு எதிராக சண்டையிட, இஸ்லாமிய நாடுகளிலிருந்து தன்னார்வ இளைஞர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் பயிற்சியளித்து ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பி வைத்தனர்.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின் லேடன், முஜாகிதீன்களுடன் இணைந்து போரிட, பலஸ்தீனத்தை சேர்ந்த பேராசிரியர் அப்துல்லா அசாமை பின்பற்றி பாகிஸ்தான் சென்றார். பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரான ஹமித் கவுல் உடன் உறவை வளர்த்துக்கொண்ட பின்டேலன், முஜாகிதீன்களுக்கு ஆயுதம் வாங்குவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் தந்தையின் வழியில் கிடைத்த தனது சொந்த பணத்தை செலவிட்டார்.

1984ஆம் ஆண்டு அப்துல் அசாம் மற்றும் அய்மன் அல் ஜவாஹிரியுடன் இணைந்து, மக்டாப் அல் கிதாமத் என்ற அமைப்பை பின்லேடன் உருவாக்கினார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் தனது சொந்த பணம் மட்டுமில்லாமல், சோவியத்துக்கு எதிராக போரிட இஸ்லாமிய நாடுகளிலும் ஒசாமா நிதி திரட்டினார்.

சோவியத் யூனியனை வீழ்த்துவதற்கு கங்கனம் கட்டிக்கொண்டு அலைந்த அமெரிக்கா, ஒசாமா பின்லேடனுக்கும் அவருடைய முஜாகிதீன் படைகளுக்கும், பெருமளவிற்கு பணமும், ஆயுதமும் அளித்ததுடன், நவீன ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சியையும் அளித்தது. அமெரிக்கா அளித்த அந்த ஆயுதங்கள் பிற்காலத்தில் அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்பதை யாரும் கணித்திருக்க வாய்ப்பில்லை.

பணம் அளித்து, பயிற்சி அளித்ததோடு மட்டும் நில்லாமல், நேரடியாக போர்க்களத்தில் பங்கேற்ற ஒசாமா, முஜாகிதீன்கள் மத்தியில் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் ராணுவ தலைவராகவும் வளர்ந்தார்.

1988ஆம் ஆண்டு, அப்துல் அசாமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மக்டாப் அல் கிதாமத் அமைப்பிலிருந்து வெளியேறிய ஒசாமா, அல் கொய்தா அமைப்பை உருவாக்கினார். 1989ஆம் ஆண்டு ஆப்கானிலிருந்து சோவியத் ராணுவம் வெளியேறியபின்னர் ஒசாமா சவுதி அரேபியாவிற்கு திரும்பினார். பலம்வாய்ந்த சோவியத் ராணுவத்தை வீழ்த்தியதற்காக இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பின்லேடனின் புகழ் உயர்ந்ததுடன், அல் கொய்தா இயக்கமும் வளர்ச்சியடையத் தொடங்கியது.

1990ஆம் ஆண்டு, ஈராக் அதிபர் சதாம் உசேன், குவைத்தை ஆக்கிரமித்ததுடன், சவுதி எல்லையில் தனது ராணுவத்தை நிறுத்தினார். உடனே சவுதி அரச குடும்பம் அமெரிக்காவின் உதவியை நாடியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்லேடன், இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவை அந்நியர்களை கொண்டு பாதுகாப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறியதுடன், அரபு நாடுகளின் உதவியை மட்டுமே நாடவேண்டும் என அரசு குடும்பத்திற்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த அரசு குடும்பம் அமெரிக்க ராணுவத்தை சவுதியில் களம் இறக்கியது. இந்தத் தருணம் தொடங்கி, அல் கொய்தாவிற்கும், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் பகைமை வளரத் தொடங்கியது.

சவுதி அரச குடும்பத்தை வெளிப்படையாக விமர்சித்ததால், நாட்டை விட்டு விரட்டப்பட்ட ஒசாமா சூடானில் தஞ்சம் புகுந்தார். அங்கு ஏற்கனவே தஞ்சமடைந்திருந்த எகிப்தை சேர்ந்த ஜிகாத் அமைப்பை அல்கொய்தாவுடன் இணைத்துக் கொண்ட ஒசாமா, சவுதி, அமெரிக்கா மட்டுமல்லாமல் எகிப்து அரசையும் தனது எதிரிகளாக அடையாளம் கண்டார்.

சிஐஏ உதவியுடன், சவுதி மற்றும் எகிப்து அரசுகள், சூடானில் தங்கியிருந்த ஒசாமாவை கொல்ல இரண்டு முறை முயற்சி செய்து தோற்றுப் போயின. இனி சூடானில் இருப்பது பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த ஒசாமா, தன்னை களப்போராளியாக மாற்றிய ஆப்கானிஸ்தானுக்கே மீண்டும் திரும்பினார். இந்த சமயம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.

சோவியத்திற்கு எதிரான போரில் வெற்றி கண்ட ஒசாமாவை, தாலிபான்கள் இன்முகத்துடன் வரவேற்றேனர். தாலிபான் தலைவர் முல்லா உமரின் உபசரிப்பில் ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந் ஒசாமா பின் லேடன், அமெரிக்காவிற்கு எதிராக பத்வா (Fatwah) அதாவது தடையை அறிவித்தார்.

ஈராக்கின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன், சவுதியிலிருந்து வெளியேறிவிடுவோம் என்று வாக்குறுதி அளித்த அமெரிக்கா, அதன் பிறகும் தனது படையை அங்கிருந்து திரும்பப் பெறவில்லை. இதைத் சுட்டிக்காட்டிய ஒசாமா, வெளிநாட்டு படையினரிடமிருந்து புனித நகரங்களான மக்கா மற்றும் மதினாவை மீட்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சோவியத்துக்கு எதிரான போரில் நடைபெற்றதை போலவே அமெரிக்காவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பிய இஸ்லாமிய இளைஞர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வரவழைக்கப்பட்டனர். ஏரியான ஆப்கான் ஏர்லைன்ஸ் (Ariana Afghan Airlines) என்ற விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின்லேடன், அந்த நிறுவனத்தின் விமானங்கள் மூலம் ஆட்களையும் ஆயுதங்களையும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவந்தார். ஆப்கானிஸ்தானுக்கு வரவழைக்கப்பட்ட போராளிகளுக்கு அங்கு அமைக்கப்பட்ட பல்வேறு முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் மிக முக்கியமானது, தற்கொலைப்படைத் தாக்குதல்.

1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி, கென்யா மற்றும் தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அல்கொய்தா இயக்கத்தினர் ஒரே சமயத்தில் நடத்திய ட்ரக் வெடிகுண்டு தாக்குதலில் 224 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலே முதல் முறையாக அல் கொய்தா அமைப்பை அமெரிக்க பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன், அமெரிக்க அரசின் கொலை பட்டியலில் ஒசாமாவை முதல் 10 இடங்களுக்குள் கொண்ட வந்து சேர்த்தது. இதன்பின்னர் 3 ஆண்டுகள் கழித்து அல் கொய்தா நடத்திய மிகப்பெரிய தாக்குதல் அந்த அமைப்பையும், ஒசாமா பின் லேடனையும் உலக அளவில் அறியச் செய்தது.

2011 செப்டம்பர் 11. உலக வராற்றில் மறக்க முடியாத நாள்.

அமெரிக்காவின் லோகன் விமான நிலையத்திலிருந்து காலை 8 மணியளவில் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தை அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கடத்தினர். லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த அந்த விமானம் நியூயார்க் நோக்கி திருப்பப்பட்டது. அடுத்த 45 நிமிடத்தில் நியூயார்க்கை அடைந்த விமானம், அங்கிருந்த வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதியது.

அமெரிக்காவின் பெருமை என்று கருதப்பட்டதில் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரமும் ஒன்று, தாக்குதலைத் தாக்குப் பிடிக்காமல் நிலை குலைந்துகொண்டிருந்ததை தொலைகாட்சியில் உலகமே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்திருந்தது.

முதல் விமானம் மோதி 15 நிமிடம் கழித்து, மற்றொரு விமானம் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தில் மோதுவதை உலகத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து செய்தி தொலைகாட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பின. இதேபோல், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது ஒரு விமானம் மோதி நொறுங்கியது.

உடனடியாக விழித்துக்கொண்ட அமெரிக்கா, இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பே காரணம் என்று கூறியதுடன், பின் லேடன் தலைக்கு 25 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்து. அத்துடன், தனது தலைமையிலான நேட்டோ படைகளை திரட்டிக்கொண்டு, ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது.

நோட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் முல்லா உமர் தலைமையிலான தாலிபான் அரசு சில வாரங்களிலேயே வீழ்ந்தது. ஆனால், அமெரிக்கா தலைமையிலான படைகளுக்கு எதிராக தாலிபான் மற்றும் அல்கொய்தாவின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிறகு அவ்வப்போது தனது ஆதரவாளர்களுக்கு வீடியோ மூலம் காட்சியளித்ததுடன் ஆடியோ மூலம் கட்டளையிட்டுவந்த ஒசாமாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க படைகளால் நெருங்கக் கூட முடியவில்லை.

2007ஆம் ஆண்டு ஒசாமாவின் தலைக்கு விதிக்கப்பட்ட விலையை அமெரிக்கா இரண்டு மடங்காக உயர்த்தியதுடன், அவரை கண்டுபிடிக்கும் முயற்சியையும் தீவிரப்படுத்தியது. அடுத்த 4 ஆண்டுகளில் அது நிகழ்ந்தது.

பல்வேறு கால கட்டங்களில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா உறுப்பினர்களிடம், நடத்திய விசாரணையில், அல் குவைத்தி என்பவர் ஒசாமாவிற்கு தபால்காரராக செயல்படுவதை சிஐஏ உறுதி செய்தது. அல் குவைத்தியை பின் தொடர்ந்த சிஐஏ, பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரத்தில், ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் மிகப்பெரிய வீட்டை கண்டுபிடித்தது.

அந்த வீட்டையும், அல் குவைத்தியின் நடவடிக்கையையும் மாதக் கணக்கில் கண்காணித்த சிஐஏ உளவாளிகள், அதில் பதுங்கியிருப்பது ஒசாமா பின்லேடன்தான் என்பதை உறுதி செய்தனர்.

10 ஆண்டுகள் நடத்திய தேடுதல் வேட்டை முடிவுக்கு வரும் தருவாயில் இதை வெற்றிகரமாக முடிப்பதில் பல்வேறு சிக்கல்களும் இருந்தன. பாகிஸ்தான் அரசுக்கு தெரியப்படுத்தாமல், பாகிஸ்தானுக்குள் நுழைந்து பின்லேடனை பிடிப்பது மிகப் பெரிய சவால். நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ராணுவம் தலையிடக்கூடாது. இதில் பாகிஸ்தானியர்கள் யாரும் கொல்லப்படக் கூடாது. இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆப்ரேஷன் நெப்ட்யூன் ஸ்பியர் (Operation Neptune spear) என்ற நடவடிக்கை வடிவமைக்கப்பட்டது.

இது போன்ற நுட்பமான நடவடிக்கைகளுக்கு சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட நேவி சீல்கள் என்ற அமெரிக்க சிறப்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.

2011ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பாகிஸ்தான் நேரப்படி இரவு 11 மணி.

ஆப்கானிஸ்தானின் ஜலாலா பாத்திலிருந்து நேவி சீலின் சிறப்பு அதிரடிப்படையினரை ஏற்றிக்கொண்டு இரண்டு பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன. பாகிஸ்தான் ராணுவ ரேடார்களின் கண்களில் மண்ணைத்தூவி அபோட்டாபாத் ரகசிய இடத்தை சென்றடைந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று தரையில் வீழ்ந்தாலும், அந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிவுற்றது.

அடுத்த நாள் காலை செய்தியாளர்களை சந்தித்த அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தார்.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

இரட்டை கோபுர தாக்குதலும், எண்ணெய் குழாயும் – அமெரிக்காவின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள்

தேதி: 11-9-2001

நாள்: செவ்வாய்கிழமை.

இந்த நாள் உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக அனுசரிக்கப்பட உள்ளது என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை, அமெரிக்கர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் மூழ்கியிருந்தனர். தேர்தல் முடிவுகளில் முறைகேடு செய்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருந்த ஜார்ஜ் டபுள்யு. புஷ், ஃப்லோரிடா மாநிலத்தில் இருக்கும் சிறுவர்கள் பள்ளியில், சிறார்களுக்கு ”மை பெட் கோட்” (My Pet Goat) எனும் பாடலை சொல்லி கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது, அமெரிக்க வானில் பறந்துகொண்டிருந்த நான்கு விமானங்கள், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்படுகிறது. நான்கு விமானங்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கடத்தல்காரர்கள், அந்த விமானங்களையே ஏவுகணையாக (Missile) பயன்படுத்தி அமெரிக்காவை தாக்க முற்படுகின்றனர்.

முதல் இரண்டு விமானங்கள், நியூயார்க் நகரில் இருந்த 110 மாடி கட்டிடமான உலக வர்த்தக மையத்தை (இரட்டை கோபுரங்கள்) தகர்க்கின்றன. இந்த தாக்குதல் நடந்த அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள், புகை மண்டலமான அக்கட்டிடம், முற்றிலும் சிதைந்து தரை மட்டமாகிறது.

மூன்றாவது விமானம், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனை தாக்குகிறது. நான்காவது விமானம் பெனிசில்வேனியா மாநிலத்தில் விபத்துக்குள்ளாகிறது. அவ்விமானம் வெள்ளை மாளிகையை குறிவைத்து செலுத்தப்பட்டது என்றும் அவ்விமானத்தில் இருந்த பயணிகள் கடத்தல்காரர்களுடன் சண்டையிட்டதால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த நான்கு விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்தனர் (246). இரட்டை கோபுர தாக்குதலில் மட்டும் 2606 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் நடைபெற்ற தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 11 தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 3000 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற இரவே, அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) இயக்குநர், ஜார்ஜ் டெனட், அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷிடமும் மற்ற முக்கிய அதிகாரிகளிடமும், சிஐஏவின் தீவிரவாத தடுப்பு பிரிவிடமும் ”இந்த தாக்குதலுக்கு காரணம் ஒசாமா பின் லேடன் மற்றும் அல்காய்தா தான்” என்று தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ், “இந்த தாக்குதல் அமெரிக்க மண்ணில் நடைபெற்று இருக்கலாம், ஆனால் இது நாகரிகமான மனிதகுலத்தின் மனதுக்கும் ஆன்மாவுக்கும் எதிராக நடைபெற்றுள்ள தாக்குதல். இதனால், முற்றிலும் மாறுபட்ட போரை தொடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளது. இந்த யுத்தம், தீவிரவாதத்தை பரப்ப நினைக்கும் நபர்களுக்கும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கங்களுக்கும் எதிரான யுத்தம். இந்த 21 ஆம் நூற்றாண்டில், இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையடுத்து, செப் 20 2000 ஆம் ஆண்டு, “தீவிரவாதத்திற்கு எதிரான போரை” புஷ் பிரகடனப்படுத்தினார். “நமது தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்கொய்தாவிடமிருந்து தொடங்குகிறது, ஆனால் அது அல்கொய்தாவுடன் முடிவடையப் போவதில்லை. சர்வதேச அளவில் செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகளும் கண்டறியப்பட்டு களையெடுக்கப்படும் வரை இந்த போர் தொடரும்” என்று அறிவித்தார்.

இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒசாமா பின் லேடன், 1996 ஆம் ஆண்டு தொடங்கி, தாலிபான்கள் ஆட்சி செய்த ஆஃப்கானில் வசித்து வந்தார். இவரை ஒப்படைக்குமாறு தாலிபான்களிடம் அமெரிக்க கோரிக்கை வைத்தது, இதற்கு தாலிபான்கள் மறுப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஆஃப்கான் மீது போர் தொடுத்தது. இந்த போரில் தாலிபான்கள் தோல்வி அடைந்தனர். அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு ஆஃப்கானில் உருவானது. 2011 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் அபோடாபாத் பகுதியில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

செப் 11 தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடன், கொலை செய்யப்படாலும், இந்த சம்பவத்தில் பல்வேறு விடைதெரியாத கேள்விகள் பல இன்றுவரை தொடர்கிறது.

உளவுத்துறையின் எச்சரிக்கை:

ஆகஸ்ட் 7, 1998 – கென்யாவில் மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதல்களில் 12 அமெரிக்கர்கள் உட்பட 224 பேர் படுகொலை செய்யப்பட்டனர், 4500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆகஸ்ட் 20, 1998 – இந்த தாக்குதலுக்கு காரணம் ஒசாமா பின்லேடன் என அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் குற்றம் சாட்டினார். ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் பின்லேடனின் முகாம்கள் அமெரிக்காவால் தாக்கப்படுகிறது.

டிசம்பர் 1998 – அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) கீழ் இயங்கும் தீவிரவாத தடுப்பு பிரிவு, தீவிரவாத இயக்கமான அல் கொய்தா விமானங்களை கடத்தி, அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் தெரிவிக்கிறது.

மார்ச் 2001 – விமானங்களை பயன்படுத்தி அமெரிக்காவில் அல்கொய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இத்தாலியின் உளவுத்துறை, அமெரிக்காவை எச்சரிக்கிறது.

ஏப்ரல் 2001 – இரட்டை கோபுர தாக்குதல் நடைபெறுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர், பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய ஆஃப்கானைச் சேர்ந்த அகமது ஷா மசூத், தன்னுடைய உளவுப்பிரிவு கொடுத்த தகவலின்படி, அமெரிக்க மண்ணில் மிகப் பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் நடக்க இருக்கிறது என எச்சரிக்கின்றார்.

மே 1, 2001 – அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ), அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஒரு அமைப்பு, தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு கொண்டிருக்கிறது என வெள்ளை மாளிகையிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கிறது.

ஜுன் 2001 – இங்கிலாந்து மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் நடத்திய மாநாட்டில், ”அமெரிக்காவில், ஒரு மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளது” என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

ஜுன் 29, 2001 – ஒவ்வொரு காலையும் அமெரிக்க அதிபருக்கு பிரத்யேகமாக வழங்கப்படும் (சிஐஏ அறிக்கை) ரகசிய தகவல்களில் (Presidents Daily Briefing), ஒசாமா பின்லேடனால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜுலை 2, 2001 – அமெரிக்காவின் அரசு தரப்பு வழக்கறிஞராக, புஷ்ஷால் நியமிக்கப்பட்ட ஜானி ஏஷ்க்ராஃப்ட், ”தீவிரவாதிகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது” என அமெரிக்க புலனாய்வுத்துறை (FBI) இயக்குநர் டாம் பிக்கர்ட் கொடுத்த தகவலுக்கு எரிச்சலுடன் ”நான் இதைப்பற்றி எதுவும் கேட்க விரும்பவில்லை” என தெரிவிதக்கிறார். பின்நாட்களில், தான் இது போன்று கூறவில்லை என ஆஷ்க்ராஃப்ட் கூறினாலும், 9/11 விசாரணை ஆணையத்திடம் சாட்சியம் அளித்த புனாய்வுத்துறை இயக்குநர் டாம் பிக்கர்ட், ”இந்த சம்பவம் நடந்தது உண்மை” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜுலை 2001 – அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த 20 பேர் விமான பயிற்சி எடுத்துவருவதாக எகிப்தின் உளவுத்துறை சிஐஏவிடம் தெரியப்படுத்துகிறது.

ஜுலை 10, 2001 – அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான கண்டோலீசா ரைசை சந்தித்த சிஐஏவின் இயக்குநர் ஜார்ஜ் டெனட், அல் கொய்தா மிக விரைவில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கிறார்.

ஜுலை 2001 – ஒசாமா பின்லேடனின் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் மேற்கத்திய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இங்கிலாந்து உளவுத்துறை எச்சரிக்கிறது.

ஆகஸ்ட் 2001 – இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட், 19 தீவிரவாதிகளின் பெயர் பட்டியலை வழங்கி, இவர்கள் வெகு விரைவில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவை எச்சரிக்கிறது.

ஆகஸ்ட் 6, 2001 – பின் லேடன் அமெரிக்காவை தாக்க திட்டமிட்டிருக்கிறார் எனும் தலைப்பில், அமெரிக்க அதிபருக்கு வழங்கப்படும் பிரத்யேக தகவல்களில் தெரிவிக்கப்படுகிறது.

செப் 2001 – அல் கொய்தா, அமெரிக்க மண்ணில் மிக விரைவில் தாக்குதல் நடத்தலாம் என எகிப்து நாட்டின் உளவுத்துறை எச்சரிக்கிறது.

செப் 9, 2001 – அல்கொய்தா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்க மண்ணில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முன்கூட்டியே எச்சரித்த அகமது ஷா மசூத் படுகொலை செய்யப்படுகிறார்.

செப் 11, 2001 – அமெரிக்காவின் நான்கு இடங்களில் அல் கொய்தா நடத்திய தாக்குதலில் 3000 மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளின் உளவுப்பிரிவுகள், அமெரிக்காவின் உளவு நிறுவனம் என அனைவரும் எச்சரித்தும், அமெரிக்க அதிபர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அரசு தரப்பு வழக்கறிஞர் என அனைவர் மட்டத்திலும், ”வெகு விரைவில் விமானங்களை பயன்படுத்தி ஒரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம்” என தகவல்கள் சென்றடைந்தும், அமெரிக்க அரசு குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தாது எதனால்? உளவுப்பிரிவுகளின் அறிக்கைகளை பெரிதுபடுத்தாது எதனால்? எனும் கேள்விகள் எழுகின்றன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகான நாட்களில், அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு, விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. முன்னாள் அமெரிக்க அதிபரும், ஜார்ஜ் புஷ்ஷின் தந்தையுமான ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்ஷின் பயணமும், புகழ்பெற்ற பாடகருமான ரிக்கி மார்ட்டின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவில் உள்ள முக்கிய புள்ளிகளின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், வெள்ளை மாளிகையின் சிறப்பு அனுமதியைப் பெற்ற, 6 தனி விமானங்கள் மற்றும் 24 விமானங்கள் முக்கிய நபர்களை அமெரிக்காவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கூட்டிச் சென்றது. இந்த விமானத்தில், பின் லேடன் குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் உட்பட 142 நபர்கள் சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர்

இது தொடர்பாக அமெரிக்காவுக்காவில் உள்ள சவுதி அரேபிய தூதுவர் பிரின்ஸ் பேண்டார் பேசுகையில், சவுதி மன்னரின் கோரிக்கைக்கு இணங்க அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் இணைந்து, அமெரிக்காவில் வசித்து வந்த பின் லேடன் குடும்பத்தினைச் சேர்ந்த 24 நபர்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 11 தாக்குதலின் மூளையாக செயல்பட்டது அல் கொய்தா மற்றும் ஒசாமா பின் லேடன் என்று குற்றம் சாட்டிய அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவிகளை விசாரித்த போதும், பின் லேடன் குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு அளித்து, பாதுகாப்பாக அமெரிக்காவில் இருந்து சவுதி அரேபியா அழைத்துச் சென்றது எதனால் எனும் கேள்வியெழுகிறது.

ஒரு வேளை புஷ் குடும்பத்திற்கும் பின் லேடன் குடும்பத்திற்கும் உறவின் அடிப்படையிலா?

புஷ் மற்றும் பின்லேடன்:

1978 ஆம் ஆண்டு, புஷ் மற்றும் ஒசாமா பின் லேடனின் சகோதரரான சலிம் பின் லேடன், டெக்சாஸ் மாநிலத்தில், அர்பஸ்டோ எனர்ஜி எனும் எண்ணெய் நிறுவனத்தை தொடங்கினர். புஷ் அதிபராக பொறுப்பேற்கும் முன் செய்த பல்வேறு தொழில்களில், பின் லேடன் குழுமம் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. புஷ்ஷின் பல்வேறு தொழில்கள் நஷ்டமடையும் போதெல்லாம் சவுதி அரேபியாதான் அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளது.

இது மட்டுமின்றி, 1997 ஆம் ஆண்டு, டெக்சாஸ் மாநிலத்தில் செயல்பட்டு வந்த யுனோகால் எனும் நிறுவனம், காஸ்பியன் கடலில் இருந்து இயற்கை வாயுவை ஆஃப்கானிஸ்தான் வழியாக மத்திய ஆசியா கொண்டுவருவதற்கான எரிவாயுக் குழாயை (Natural Gas pipeline) அமைக்க, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. அப்போது பல தாலிபான் தலைவர்கள் டெக்சஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த புஷ்ஷை, ஹியூஸ்டன் நகருக்கு வந்து சந்தித்துச் சென்றனர். இதன் பின்னர் தான், 9/11 தாக்குதலும் அதற்கு பதிலடி என கூறப்பட்ட ஆஃப்கானிஸ்தான் போரும் தொடங்குகிறது. இந்த போரில் அமெரிக்கா வெற்றி பெற்று, ஆஃப்கானிஸ்தான் அதிபராக ஹாமித் கர்சாய் பொறுப்பேற்றார். ஆனால், இதே ஹமித் கார்சாய் தான் யுனோகால் நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகர் எனும் தகவல் அதிர்ச்சியடையவைக்கிறது.

மேலும், பின் லேடன் குழுமம், பல லட்சம் கோடிகளில் முதலீடு செய்திருந்த கார்லைல் குழுமத்தில் ஜார்ஜ் ஹெச்.டபுள்யு புஷ் மற்றும் ஜார்ஜ் டபிள்யு புஷ் என இருவரும் (தந்தையும் மகனும்) இடம்பெற்றிருந்தனர். செப்டம்பர் 11 அன்று, கார்லைல் குழுமத்தின் வருடாந்திர சந்திப்பு வாஷிங்டனில் உள்ள ரிட்ஸ் கார்ல்டனில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது (அமெரிக்காவின் முன்னாள் அதிபர்) ஜார்ஜ் ஹெச்.டபுள்யு.புஷ், (அமெரிக்காவின் முன்னாள் அரசு செயலாளர்) ஜிம் பேக்கர்,  பின் லேடனின் சகோதரரான ஷாஃபின் பின் லேடன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9/11 தாக்குதலின் பின்னணியில் தான் போர்க்கருவிகள், ஆயுதங்கள், போர் வாகனங்கள் போன்றவற்றின் உற்பத்தி பல மடங்கு பெருகின. கார்லைல் குழுமம் தொலைதொடர்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் செயல்படும் நிறுவனம். குறிப்பாக அமெரிக்காவில் ராணுவ ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 11-வது இடத்தை வகித்தது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் கார்லைல் குழுமம், ஒரு நாளைக்கு 1700 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியது. இதனால் இந்நிறுவனத்தில் பங்கு வகித்த அனைவரும் கணக்கில் அடங்காத பணத்தை ஈட்டினர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகும் கார்லைல் குழுமத்தின் ஆசியாவின் ஆலோசகராக சீனியர் புஷ் (அடுத்த இரண்டு ஆண்டுகள்) செயல்பட்டார்.

விசாரணை ஆணையம்:

உலகத்தையே உலுக்கிய 9/11 தாக்குதலை விசாரிக்க ஆணையம் அமைப்பதிலும் புஷ் முனைப்புடன் செயல்படவில்லை என கூறப்படுகிறது. பெர்ல் ஹார்பர் (Pearl Harbour) சம்பவத்தின் போதும், முன்னாள் அதிபர் கென்னடி படுகொலையின் போதும் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் காங்கிரஸ் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) தன்னிச்சையாக நடத்திய விசாரணையிலும், 28 பக்கங்களை புஷ் அரசாங்கம் மறைத்துள்ளது. 9/11 தாக்குதல் சம்பவம் சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை என புஷ் நிர்வாகத்துக்கு எதிராக 500 பேர் வழக்கு தொடுத்தனர்.

செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு உலகம் மாறிவிட்டது, நாம் பாதுகாப்பாக இல்லை, தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்கிறது என தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமெரிக்கா, ஒரு வகையான அச்சத்தையுன் பீதியையும் அமெரிக்கா முழுவதும் பரப்பியிருந்தது. இதன் பின்னணியில், தீவிரவாத தாக்குதல்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்பட்டன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின் லேடனை கைது செய்வதில் காட்டிய முனைப்பை விட, ஆஃப்கானிஸ்தனில் தனக்கு ஆதரவான அரசாங்கத்தை உருவாக்கி, ஆஃப்கானிஸ்தான் வழியாக எண்ணெய் குழாயை உருவாக்குவதிலேயே அமெரிக்கா முனைப்பாக இருந்தது. எண்ணெய் வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளில் ஊடுருவி அராஜகம் செய்ய அமெரிக்காவுக்கு 9/11 தாக்குதல் வழிவகை செய்தது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என பிரகடனப்படுத்தி, மத்திய கிழக்கு நாடுகளுக்குள் நுழைந்த அமெரிக்கா, யாரை தீவிரவாதிகள் என்று கூறியதோ இன்று அவர்களிடமே ஆஃப்கானிஸ்தானை ஒப்படைத்துவிட்டு திரும்புவது, அமெரிக்காவின் உண்மையான நோக்கத்தை என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது.

Source: BBC, Washingtonpost, Newyorktimes, Denverpost, NBC News, CNN.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ஆப்கான் போரும் அமெரிக்காவின் ஆடம்பர பொய்களும்

ஆப்கானிஸ்தான் போர் பற்றிய விவரங்களை தங்களுடைய 18 ஆண்டுகால பிரச்சாரத்தில் மூத்த அதிகாரிகள் குறிப்பிடவில்லை, மாறாக வெல்லவே முடியாத போர் என்று அறுதியிட்டுச் சொல்லும் தரவுகளுக்கும் அப்பால் ,  ஆடம்பரமான சொற்களில் மறைத்தனர் என்று வாஷிங்டன் போஸ்ட்டால் பெறப்பட்ட அரசாங்க ரகசிய ஆவணங்களின் தொகுப்புகள் வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட நெடிய ஆயுதம் தாங்கிய மோதலின் தோல்விகளை ஆராய்வதற்கு ஒரு கூட்டு ஆவணம் தயார் செய்யப்பட்டது.  அந்த 2000 பக்கங்களுக்கும் மேலான ஆவணம் போரில் நேரடியாக பங்கேற்ற ஜெனரல்கள் முதல் பணியாளர்களுக்கும், ஆப்கானிய அதிகாரிகளுக்கும் உதவிசெய்த அதிகாரிகள் வரையிலான வெளியிடப்படாத நேர்காணல்களை உள்ளடக்கி இருந்தது.

நேர்காணல்கள் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களின் அடையாளங்களை மறைக்க அமெரிக்க அரசாங்கம் முயற்சி செய்தது, அதுமட்டுமல்லாமல் அவர்களது கருத்துகளையும் மூடிமறைக்க முயற்சித்தது. மூன்றாண்டு கால சட்டப் போராட்டத்தின் வழியாக, தகவல் சுதந்திர சட்டத்தின் மூலம் வாஷிங்டன் போஸ்ட் ஆவணங்களை வெளியிடச் செய்தது.

அந்த நேர்காணல்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் எவ்வித தயக்கமில்லாமல் நடந்த தவறுகளை விமர்சனம் செய்திருந்தனர். அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில்  இரண்டு தசாப்த போரில் அமெரிக்கா புதைசேற்றில் சிக்கி கொண்டதையும் விவரித்தனர்.

அரிதாக பொதுவில் பேசப்படும் கருத்துக்கள் அடங்கிய நேர்காணல்கள் முழு வீச்சில் புகார்கள், ஏமாற்றங்கள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்கள் மட்டுமில்லாமல், யூகம் மற்றும் புரளி ஆகியவையும் அதில் சேர்ந்து காணப்பட்டன.

புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் வெள்ளை மாளிகையின் சார்பாக ஆப்கானிஸ்தானில் போர் தலைவராக இருந்த டக்லஸ் லூட் என்கிற மூன்று நட்சத்திர அந்தஸ்து உடைய அதிகாரி, 2015 ஆம் ஆண்டு “ஆப்கானிஸ்தான் பற்றிய அடிப்படை அறிவு நம்மிடம் இல்லை. நாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாது இருந்தோம். நாம் இங்கு என்ன செய்ய முயற்சிக்கிறோம். நாம் எதை மேற்கொள்கிறோம் என்கிற திட்டவட்டமாக சிந்தனையும் எங்களிடம் இல்லை.” என்று கூறியுள்ளார்.

“2400 உயிர்களை இழந்த நிலையில், இந்த அளவுக்கான மோசமான நடைமுறை இருந்தது என்று அமெரிக்க மக்கள் அறிந்திருந்தால்…..,” என்று கூறிய டக்லஸ் லூட் மேலும் குறிப்பிடுகையில் காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) பென்டகன் (அமெரிக்க ராணுவத் தலைமையகம்) மற்றும் அரசு துறைகளுக்கு இடையே அதிகார போட்டியில் நிகழ்ந்தவைதான் ராணுவ வீரர்களின் மரணங்கள் என்று குற்றஞ்சுமத்தும் அவர், “இவையெல்லாம் வீண் என்று யார் சொல்லுவார்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

2001 ஆம் ஆண்டு முதல் 7 லட்சத்து 75 ஆயிரம் துருப்புகள், கணிசமானோர் மீண்டும் மீண்டும், ஆப்கானிஸ்தானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் 2,300 பேர் உயிரிழந்தனர் மேலும் 20,589 பேர் காயமுற்றனர் என்கிறது பாதுகாப்புத்துறை தரவுகள்.

இன்று வரையிலும் தொடர்கிற இந்த போரின் தோல்விகளை (அமெரிக்க ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் முன் எழுதியது) துல்லியமான குரலில் நேர்காணல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆப்கானிஸ்தானத்தில் தாங்கள் நிறைவேற்றுவதாக கூறிய வாக்குறுதிகளை ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா டோனல்டு டிரம்ப் ஆகிய  3 அதிபர்களும் தங்களுடைய ராணுவ தலைமையோடு இணைந்து எவ்வாறு தோற்றுப் போயின என்பதை அம்பலப்படுத்துகிறது.

தங்களுடைய நேர்காணல்கள் வெளியே வராது என்கிற அனுமானத்தின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுடைய போர் உத்திகள் எவ்வளவு பிழையானதாக இருந்தது என்பதை ஒத்துக் கொண்டனர். ஆப்கானிஸ்தானை நவீன நாடாக மாற்றுகிறோம் என்கிற பெயரில் பெரிய அளவிலான பணம் வீணடிக்கப்பட்டது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கட்டுக்கடங்காத ஊழலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளையும், திறன்வாய்ந்த ஆப்கானிய ராணுவம் மற்றும் போலீஸ் அமைப்பை உருவாக்குவதோடு, ஆப்கானிஸ்தானில் செழித்த அபின் வர்த்தகத்தை தடுக்க அமெரிக்க அரசாங்கம் முயற்சி செய்ததையும் நேர்காணல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆப்கானிஸ்தான் போரில் எவ்வளவு பணத்தை அமெரிக்க அரசாங்கம் செலவழித்தது என்பது பற்றிய குறிப்பான வரவுசெலவு கணக்கை வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், செலவுகளை பார்க்கும் பொழுது அது மலைப்பாக இருக்கிறது.

2001 முதல் பாதுகாப்புத்துறை, அரசுத்துறை மற்றும் சர்வதேச முன்னேற்றத்திற்கான அமெரிக்க முகமை ஆகியவை, 934 – 978 பில்லியன் டாலர் வரை செலவழித்து இருக்கக்கூடும் என்று பிரவுன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் போர் செலவுகள் என்ற திட்டத்தின் இணை தலைவராகவும் இருக்கிற நேத்தா க்ரோஃபர்ட் கணிக்கிறார்.

இந்தக் கணக்கு சிஐஏ மற்றும் காயமடைந்த வீரர்களுக்கு பொறுப்பான படைவீரர் சுகாதாரத்துறை போன்ற பிற நிறுவனங்களால் செலவழிக்கப்பட்ட தொகையை உள்ளடக்கிய புள்ளிவிவரங்கள் இல்லை.

புஷ் மற்றும் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஊழியராக இருந்தவரும் கப்பற்படை சிறப்பு அணியின் (Navy Seal) முன்னாள் ஊழியருமான ஜெப்ரி எக்கர்ஸ், “இந்த ஒரு ட்ரில்லியனில் இருந்து நாம் பெற்றது என்ன? அதன் மதிப்பு ஒரு ட்ரில்லியன்தானா? ஒசாமா கொல்லப்பட்ட பின்னர், ஒசாமா தன்னுடைய கல்லறையில் நம்முடைய செய்கையை நினைத்து சிரித்துக் கொண்டிருப்பார் என்று நான் சொன்னேன்” என்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் இந்தப் போர் முக்கியமானது என்று அதிபர்களும், அதிகாரிகளும் பொதுவில் கூறிவந்த செய்திகள் ஆவணங்களை பார்க்கும்போது முரண்பாடு உடையவையாக இருக்கின்றன.

நேர்காணல் செய்யப்பட்ட பலரும் அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டு மக்களை தவறாக வழி நடத்தியதை தெளிவாக விளக்கினர். காபூல் ராணுவ தலைமை இடமாக இருந்தாலும் சரி, வெள்ளை மாளிகையாக இருந்தாலும் சரி, தரவுகளை திரித்து அமெரிக்கா போரில் வென்று வருகிறது என்ற சித்திரத்தை உருவாக்கினார்கள்.

“தரவுகளின் ஒவ்வொரு புள்ளியும் பிரிக்கப்பட்டன. ஆய்வுகள் நம்பத் தகுந்தவையாக இல்லை என்றாலும் நம்முடைய செயல்கள் அனைத்தும் சரியானது என்ற எண்ணத்தை உருவாக்கி நம்மை தன்னைத் தானே சுவைத்துக் கொள்ளும் ஐஸ்கிரீம் ஆக மாற்றப்பட்டோம்.” என்று 2013 மற்றும் 2014 எதிர்ப்பு கிளர்ச்சிகளுக்கெதிரான இராணுவ தளபதிகளுக்கு மூத்த ஆலோசகராக செயல்பட்ட பாப் க்ரோலி தன்னுடைய நேர்காணலில் கூறியிருக்கிறார்.

நேர்காணல்களை நிகழ்த்திய பெடரல் அமைப்பின் தலைவர் ஜான் ஹாப்கோ, “அமெரிக்க மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.” என்ற வாஷிங்கடன் போஸ்டின் ஆவணத்தை உறுதி செய்தார்

ஆப்கானிஸ்தான் மீளுருவாக்கத்திற்கான சோப்கோ அமைப்பின் திட்டத்தின் பக்கவிளைவாக வந்தவைதான் நேர்காணல்கள். 2008ம் ஆண்டு காங்கிரஸால் (நாடாளுமன்றம்) உருவாக்கப்பட்ட சிகார் என்ற அமைப்பு, போர் சூழலில் வீணாகும் வளம் மற்றும் மோசடி குறித்து விசாரிக்கவே உருவாக்கப்பட்டது.

2014 சோப்கோவின் வழிகாட்டுதலின் படி, சிகார்(SIGAR) தன்னுடைய வழக்கமான பணிகளையும், ஆய்வுகளையும் மேற்கொண்டது. அடுத்த முறை வேறு ஏதேனும் நாட்டில் படையெடுத்தாலோ அல்லது சிதறிய நிலையில் உள்ள நாட்டை மீள் கட்டுமானம் செய்யும் முயற்சியை மேற்கொண்டாலோ செய்யக்கூடாத தவறுகளை பற்றி ஆராய, 11 மில்லியன் டாலர் மதிப்பில் “கற்ற பாடங்கள்” என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்

கற்ற பாடங்கள் திட்டத்தின் ஊழியர்கள் போரில் நேரடி அனுபவம்  பெற்ற 600 பேரிடம் நேர்காணல்களை நடத்தினர். பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்கள் என்றாலும் சிகார் ஆய்வாளர்கள் லண்டன், ப்ரிசல்ஸ் மற்றும் பெர்லின் ஆகிய இடங்களுக்கு பயணித்து நேட்டோ நேசப்படையினரையும் சந்தித்தனர். கூடுதலாக, 20 ஆப்கானிஸ்தான் அலுவலர்களிடம் மீள்கட்டமைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

நேர்காணல்களை பகுதியளவில் சார்ந்தும், அரசு தரவுகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையிலும், நாட்டை ஸ்திரப்படுத்த தேவையான பரிந்துரைகளோடு, முக்கியமான பிரச்சினைகளை சுட்டிக்காட்டி 2016லிருந்து கற்ற ஏழு பாடங்களை சிகார் பதிப்பித்தது.

ஆனால், அந்த அறிக்கையானது அதிகாரவர்க்க தொனியில் ஊன்றி நின்று அரசாங்க அகரவரிசைப்படி பேச முயற்சித்து, நேர்காணல்களில் இருந்த வெளிப்படையான கடுமையான  விமர்சனங்களை கோட்டை விட்டது.

”ஸ்திரத்தன்மைக்காக பயன்படுத்தப்பட்ட உத்திகள்  எவையும் ஆப்கனுக்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டவை அல்ல, ஆப்கன் மாவட்டங்களை ஸ்திரப்படுத்தும் முயற்சியின் தாக்கம், குடிமக்கள் மற்றும் துருப்புகள் அடங்கிய கூட்டணியின் இருப்பின் காலத்தைவிட அதிகமாக இருக்கவில்லை.” என்கிறது 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் முகவுரை.

நேர்காணல் செய்யப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினரை அறிக்கை கண்டுகொள்ளவேயில்லை. பேசிய சொற்ப அதிகாரிகளும் அடையாளத்தின் ரகசியம் காக்கப்படும் என்று உறுதிமொழியின் காரணமாகவே பேசினார்கள், இல்லையேல் அரசியல் சர்ச்சைகளை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டே பேசினர் என்பதை சிகார் நேர்காணல்களை நடத்தியது.

சுதந்திர தகவல் சட்டத்தின் கீழ் வாஷிங்டன் போஸ்ட் “கற்ற பாடங்கள்” நேர்காணல் பதிவுகளை காண உரிமை கோரியது. ஆனால், அதன் சிறப்புத்தன்மை காரணமாக அதை குடிமக்கள் காண உரிமை கோர முடியாது என்று சிகார் மறுத்துவிட்டது. பின்னர், இரண்டு முறை சட்டரீதியான போராட்டத்திற்கு பிறகு அந்த அமைப்பு பதிப்பிக்கப்படாத 2000 பக்க குறிப்புகளையும், 428 நேர்காணல்களின் எழுத்து வடிவத்தையும், சில ஒலிப்பதிவுகளையும் வெளியிட்டது. அந்த ஆவணங்கள் 62 பேரை அடையாளம் காட்டினாலும், சிகார் 366 பேரின் அடையாளத்தை மறைத்துவிட்டது. சட்டரீதியான விளக்கத்தில், அவர்கள் அமைப்புகளை அம்பலப்படுத்துபவர்கள்(whistleblowers) மற்றும் ரகசிய தகவல் சேகரிப்பாளர்கள் (Informers) என்கிற காரணத்தினால் அடையாளத்தை வெளிப்படுத்துவது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம் வாஷிங்கடன் போஸ்ட் பல்வேறு தூதுவர்கள், ஜெனரல்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் உட்பட 33 பேரை அடையாளங் கண்டது.

எந்தெந்த அதிகாரிகள் போரை விமர்சித்து, அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்தியது என்று விமர்சித்தார்கள் என்று தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு ஆகவே பெயர்களை வெளியிட சிகார் வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதியிடம் வாசிங்டன் போஸ்ட் வாதிட்டது. மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக நேர்காணல் செய்யப்படாத அதிகாரிகளை, அரசை அம்பலப்படுத்துபவர்களாகவோ (Whistleblowers) அல்லது தகவல் தெரிவிப்பவர்களாகவோ (informants) ஆக கருத முடியாது என்று கூறியது.

நீதிபதி எமி பெர்மன் ஜேக்சனின் தீர்ப்பு வாஷிங்கடன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது. தாலிபான்களோடு சமரச பேச்சுவார்த்தையில் டிரம்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருவதோடு 13000 துருப்புகளை வெளியேற்றுவதா என்பதை பற்றி ஆலோசித்து வருகிற நிலையில், மக்களுக்கு தகவல்கள் தெரிய வேண்டும் என்பதற்காக இறுதி தீர்ப்புக்காக காத்திராமல் வாஷிங்டன் போஸ்ட் ஆவணங்களை வெளியிடுறது.

சிகாருக்கு நேர்காணல்கள் அளித்த அனைவரையும் வாசிங்க்டன் போஸ்ட் அடையாளம் கண்டு, தொடர்பெடுத்து அவர்களது கருத்தை கேட்டறிய முயற்சி செய்தது.  அவர்களது கருத்துகள் மற்றொரு கட்டுரையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் சோப்கோ கூறும் ”கற்ற பாடங்கள்”-ன் நேர்காணல்களில் அதிகாரிகள் போரை பற்றி எழுப்பிய சந்தேகங்களையோ அல்லது விமர்சனங்களையோ என்று தெரிவித்தார். தன்னிடம் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் இருந்ததாலும், அரசாங்க ரகசியங்கள் ஏதும் கசிந்து விடாதபடி அரசு தரப்பில் ஆய்வு செய்ய வேண்டி இருந்ததாலும்,   இந்த ஆவணங்களை வெளியிட மூன்று ஆண்டுகள் ஆயின என்று குறிப்பிட்டார்.

“நாங்கள் அதை அடைகாத்து வைக்கவில்லை, வெளிப்படைத்தன்மையை நாங்கள் ஆழமாக நம்புகிறோம், ஆனால், சட்டத்தை மீற முடியாதல்லவா?….இதுவரையிலான இன்ஸ்பெக்டர் ஜெனரல்களிலேயே நான் தான் இந்த விசயத்தில் அதிக தன்முனைப்போடு நடந்து வந்திருக்கிறேன்.” என்றும் அவர் கூறினார்

நேர்காணல் தொகுப்புகள் குறிப்பான கண்ணோட்டம் திருத்தம் செய்யப்படாமல் அப்படியே இருக்கின்றன. ஆனால், அவை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்களின் கண்ணோட்டத்தை ஆழமாக அடியொற்றி இருக்கிறது.

”ஏழை நாடுகளை பணக்கார நாடாக்குவதற்காக நாம் படையெடுப்பதில்லை” என்று அரசாங்க நேர்காணல்களில் கூறும்  ஆப்கானிஸ்தானுக்காக சிறப்பு அமெரிக்காவின் தூதுவராக செயல்பட்ட ஜேம்ஸ் டோப்பின்ஸ், “சர்வாதிகார நாடுகளை ஜனநாயகப்படுத்துவதற்காக அல்ல மாறாக வன்முறை களமாக இருக்கின்ற நாடுகளை அமைதிப்படுத்துவதற்கே படையெடுக்கிறோம். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் உறுதியாக தோற்றிருக்கிறோம்.” என்கிறார்

பாதுகாப்பு துறை செயலாளர் டோனல்ட் ஹெச்.ரம்ஸ்ஃபெட் 2001 லிருந்து 2006 வரையில் இட்ட கட்டளைகளின் குறிப்புகளை பெற்று, நேர்காணல்களின் பட்டியலை அதிகரிக்க வாஷிங்டன் போஸ்ட் முயன்றது.

ரம்ஸ்ஃபெட் மற்றும் அவரது ஊழியர்கள் ‘Snowflakes’ என்று பெயரிட்ட குறிப்புகள் விரிவான கட்டளைகள் அல்லது பெண்டகனின் தலைமை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருபவர்கள், ஒவ்வொரு நாளும் பல தடவை அனுப்பிய கட்டளைகள் ஆகும்.  தன்னுடைய அந்த குறிப்புகளில் பலவற்றை 2011ல் பொதுவாக்க, ‘அறிந்ததும், அறியாதமும்’  என்று பெயரிட்டு தன்னுடைய நினைவுக்குறிப்புகளோடு சேர்த்து ஆன்லைனில் வெளியிட்டார். ஆனால், 59000 பக்கம் கொண்ட அவரது தொகுப்பில் பெரும்பாலானவை ரகசியமாகவே நீடிக்கின்றன.

2017ம் ஆண்டு, ஜார்ஜ் வாசிங்க்டன் பல்கலைக்கழகத்தை தளமாக கொண்டு இயங்கு லாப நோக்கமில்லாத ஆய்வு அமைப்பான தேசிய பாதுகாப்பு காப்பகம் என்ற அமைப்பு FOIAன் வழக்குக்கு எதிர்வினையாக, ரம்ஸ்ஃப்லெட்டின் குறிப்புகளை பாதுகாப்பு துறை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு படிப்படியாக வெளியிட்டது. அந்த தொகுப்பை வாசிங்டன் போஸ்டுடனும் பகிர்ந்து கொண்டார்கள்.

சிகாரின் நேர்காணல்களும், ரம்ஸ்ஃப்லெட்டின் ஆப்கானிஸ்தான் தொடர்பான  குறிப்புகளும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய ரகசியங்களை கொண்டிருப்பதோடு, 18 ஆண்டுகால மோதலை பற்றிய  முழுமையான திறனாய்வையும் அது கொண்டிருக்கிறது.

ரம்ஸ்ஃப்லெட்டின் அராஜமான மொழிநடையில், அவருடைய பெரும்பாலான குறிப்புகள் அமெரிக்க இராணுவத்தை ஒரு தசாப்தத்திற்கு அப்பால் பின்தொடர்ந்து தொந்தரவு செய்கிற பிரச்சினைகளை முன்னறிவிக்கிறது.

”நான் பொறுமை இல்லாதவனாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய நிதானக்குறைவை பற்றி நான் அறிந்து வைத்திருக்கிறேன்.” என்று ஜெனரல்களுக்கு தன்னுடைய மூத்த அதிகாரிகளுக்கு எழுதும் ரம்ஸ்ஃப்லெட், “ஸ்திரத்தன்மையை வழங்க்கூடிய வகையில் நடந்து கொண்டிருக்கிற சிலவற்றின் மீது கவனம் குவித்தால் நாம் வெளியேறுவதை தேவையாக மாற்றும் இல்லையேல், ஆப்கானிஸ்தானில் நம் இராணுவத்தை வெளியேற்றுவது சாத்தியமில்லாதது”என்று எழுதிய அவர் பயன்படுத்திய சொல், “ உதவுங்கள்” என்பதுதான்.

மேற்கண்ட குறிப்பு, போர் தொடங்கி ஆறு மாத இடைவெளியில், ஏப்ரல் 17, 2002 நாளில் வெளியிடப்பட்டது.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

ஆப்கானிஸ்தானில் கொட்டப்பட்ட அமெரிக்க மக்களின் வரிப்பணம் – 20 ஆண்டுகளில் சாதித்தது என்ன?

மீபத்திய மாதங்களில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் நிலைகுலைவு, 830 கோடி அமெரிக்க டாலர்களை செலவழித்து அதனை உருவாக்கி, நிதி உதவி செய்தததன் மூலம் அடைந்தது ஒன்றுமில்லை என்பதை உணர்த்தியுள்ளது. அதேபோல், ஆப்கானிஸ்தான் மறு கட்டமைப்பிற்கு பொறுப்பான ‘சிறப்பு ஆய்வாளர் தலைவரின்’ (Inspector General) (SIGAR) புதிய அறிக்கையும், ஒட்டு மொத்த 20 ஆண்டு காலத்தில், ஆப்கன் சிவில் சமூகத்தை 1,450 கோடி டாலர்கள் செலவிட்டு மறுகட்டமைப்பு செய்ய (சிலவற்றில் கட்டமைப்பு செய்ய) எடுத்த முயற்சிகளின் தோல்விகளை வெளிப்படுத்தி உள்ளது.

2012 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வரும் ஜான் சோப்கோ என்ற அந்த சிறப்பு ஆய்வாளர் தலைவர், அரசின் தவறான கணக்கீடுகளை நீண்ட பட்டியலிட்டுள்ளார். அவர் தனது அண்மைக்கால மதிப்பீட்டின்படி, “தான் விரும்புவதை அடைவதற்காக  ஒரு சரியான செயல்தந்திரத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த அமெரிக்கா தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது,” என்ற முடிவிற்கு வருகிறார். அமெரிக்காவின் முயற்சி தான்தோன்றித்தனமாகவும், அறியாமையாகவும் இருந்தது என்று கூறும் அவரது அறிக்கை, ஒரு வல்லரசின் வெறித்தனமான சிந்தனையில் இருப்பதால், பணத்தை வாரி இறைப்பதன் மூலம்  மறு சீரமைப்பு செய்துவிட இயலாது என்பதை புரிந்துகொள்ளாமல் உள்ளது என்றும் கூறுகிறது.

அந்த புதிய அறிக்கை ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இருபதாண்டு கால இருப்பு குறித்து ஒரு முழுமையானப் பார்வையைத் தருகிறது. இந்த இருபது ஆண்டு 2,443 அமெரிக்க ராணுவ வீரர்களையும் 1,14,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களையும் உயிரிழக்கச் செய்துள்ளது.

‘ப்ரோபப்ளிகா’ என்ற புலனாய்வு ஊடகமும் இதே பிரச்சனைகளில் சிலவற்றை பரிசீலனைக்கு உட்படுத்தி உள்ளது. 2015 ஆம் ஆண்டு, நாங்கள் வீணடிக்கப்பட்டவற்றை கணக்கிட்டு, இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை விரிவாக பகுப்பாய்வு செய்தோம். இதில் குறைந்தது 170 கோடி டாலர் அளவிற்கு மக்களின் வரிப்பணம் அந்த நேரத்தில் வீணாக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டுபிடித்தோம். சிகார் (SIGAR) செலவிட்ட மொத்தத் தொகையில் மிகக் குறைந்த விழுக்காடே அப்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது) அந்த வீணான நிதியை வெளிக்கொண்டு வர உதவுவதற்கு, அந்தப் பணத்தால் உள்நாட்டில் என்னவெல்லாம் வாங்கியிருக்க முடியும் என்று பார்க்க வாசகர்கள் விளையாடக் கூடிய ஒரு விளையாட்டை உருவாக்கினோம். சிதைவிலிருந்து ஒரு புதிய அரசாங்கத்தையும், இராணுவத்தையும் உருவாக்குவது அதீத ஆசை என்பதை ப்ரோபப்ளிகா 2015 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது. அவர்கள் ஆப்கன் மக்களின் தேவைகளையும், திறமைகளையும் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார்கள். கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதைப் புறக்கணித்து விட்டனர். (எடுத்துக்காட்டாக ஆப்கனில் சோயா பீன்ஸை அறிமுகமாக்கும் திட்டத்தில் ஏற்பட்டத் தோல்வியைக் கூறலாம்) வன்முறையால் இன்றுவரை  பாதிக்கப்பட்டுள்ள, உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக உள்ள ஒரு நாட்டில் அவர்களது லட்சியம் பகல்கனவாகவே இருந்தது. ஆப்கானிஸ்தானில் நடந்தது, சில ஆண்டுகளுக்கு முன் ஈராக்கில் ஏற்பட்டத் தோல்விகளை ஒத்திருந்தது.

சிகார் தனது பங்கிற்கு பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட ஆப்கனில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலவித தேக்கங்களை ஆராய்ந்து பார்த்தது. அதன் முடிவில், யாரும் விரும்பாத அல்லது எவரும் எப்போதும் பயன்படுத்த முடியாத 250 லட்சம் டாலர் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்த தகவலை வெளிக்கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல், படைவீரர்களாக உருவாக்கப் போகிறவர்களுக்கு படிக்கக் கூட பயனளிக்காத 20 கோடி டாலர் கல்வி அறிவு திட்டம், ஆப்கானியர்களால் இயக்கவே முடியாத 33.50 கோடி மின் திட்டம் மற்றும் பறக்காமலே தேவையற்ற உலோகக் குப்பையாக போய்விட்ட 48.60 கோடி டாலர் விமான தயாரிப்புத் திட்டம் ஆகியவைப் பற்றியும் அது விளக்கியது.  அந்தத்  திட்டங்களுக்கு பின்னால் உள்ள அனுமானங்கள் தவறானவை என்று அந்த அறிக்கைகள் உணர்த்துகின்றன.

சிகார் ஒவ்வொரு அறிக்கையிலும் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்திருந்தாலே ஆப்கனில் அமெரிக்காவின் இருப்பை ஒட்டு மொத்தமாக மறுபரிசீலனை செய்திருக்கலாம். அது ஒரு போதும் நடைபெறவே இல்லை.

“இது வெறும் புறக்கணிப்பு மட்டுமல்ல பிரச்சினையின் பிடிக்குள் வர விரும்பாததும், பிரச்சனைகளை தீர்க்காமல் இருப்பதற்கு வெளிப்படையாகக் கிடைத்த வாய்ப்பும்தான்,” என்கிறார் செயல் தந்திரம் மற்றும் பன்னாட்டு ஆய்வுகள் மையத்தின் கொள்கை  வல்லுநர் அந்தோனி கோர்ட்ஸ்மேன். “அது நம்பிக்கை மீதான  அனுபவத்தின் வெற்றி என்பதாகக் கூட இல்லை. அது பொருள் பொதிந்த கொள்கை உருவாக்கத்தின் மீதான அரசியல் தேவையின் வெற்றி,” என்று கூறும் கோர்ட்ஸ்மேனைப் பொறுத்தவரை, “கண்முன் தெரியும் அமெரிக்கத் தோல்விக்குத் தலைமை தாங்க யாரும் விரும்பவில்லை. அத்தகையத் தோல்வி சந்தேகமில்லாமல் ஆப்கானிஸ்தானின் சீர்குலைவையும், திறன்மிக்க தேசிய பாதுகாப்பு பேரழிவையுமே விட்டுச் செல்லும். அங்கே வெற்றி கைக்கருகில் இருப்பதாக தொடர்ந்து வாதிட்ட, உண்மையில் நம்பியவர்களின் வலிமையான பிரிவும் இருந்தனர். அவர்கள் மறுதலிக்கும் நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.”

2019 ஆம் ஆண்டு தி வாஷிங்டன் போஸ்ட்டின் ஆப்கன் பக்கங்களில், வெற்றிக்கு அருகில் இருப்பதாகக் கதைப் பின்னுவதில் அதிக ஆர்வமுடைய இராணுவத் தளபதிகளும், பிற உயர் அதிகாரிகளும் இருந்தனர்.

எதிர்கிளர்ச்சி அதன் குதிகாலில் நிற்பதாக கூறிய அதிகாரிகள் அதனுடன், குறைந்து வரும் குழந்தை இறப்பு விகிதம், வாழ்நாள் உயர்வு, பெண்களுக்கான விரிவான கல்வி வாய்ப்புகள் ஆகியன பற்றி எல்லாம் கதைகளை கட்டவிழ்த்து விட்டனர். சிகார் இத்தகைய “பளிச்சிடும் புள்ளி விவரங்களை” இந்த வார அறிக்கையில் அங்கீகரித்து உள்ளது. ஆனால் அவை செலவிடப்பட்ட கணிசமான நிதிக்கு ஈடான சாதனைகளாக இவை இல்லை என்றும் அதைவிட முக்கியமாக, அமெரிக்கா தொடர்ந்து அங்கு இல்லாவிட்டால் அவை நீடித்திருக்க முடியாது என்றும் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதெனில் இவையாவும் தற்காலிகமானவையே என்கிறது.

அமெரிக்க அதிகாரிகள் உண்மையாக இருக்க வேண்டும் என விரும்பியதற்கும், யதார்த்தத்தில் நடப்பதற்கும் தொடர்ச்சியான, குழப்பமான இணைப்பின்மை இருப்பதை சிகார் கண்டுபிடித்தது. “கணக்கீடு செய்யும் வேகத்தை விட பணத்தை செலவிடும் வேகம் அதிகமாக இருப்பதனால், அமெரிக்க அரசு அது நினைத்ததற்கு  நேர்எதிரானவற்றையே அடைந்துள்ளது: அது ஊழல் தீயை எண்ணெய் ஊற்றி வளர்த்தது, ஆப்கன் அரசை சட்டவிரோதமானதாக்கியதுடன் பாதுகாப்பின்மையை அதிகரிக்கச் செய்தது,” என்கிறது சிகார் அறிக்கை.

நல்ல வளம் மிக்க ஆனால் நிபுணத்துவம் இல்லாத, தேசத்தை கட்டமைப்பதற்கான பணிக்கு, மிகவும் திறமையான அரசு முகமைகள் அமெரிக்க ராணு தலைமையகத்தால் ஒதுக்கப்பட்டன. அரசு துறையும், பன்னாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையும் “அந்தப் பங்கினை பொருளுள்ள வகையில் செயல்படுத்த போதுமான அலுவலர்களைப் பெற்றிருக்கவில்லை” என சிகார் அறிக்கைக் கூறுகிறது.

” அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலனுக்கு சிறிய அளவிலேயே அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒரு நாட்டை மறு கட்டமைப்புச் செய்து, தனக்குப் பின்னால் அந்நாடு சுயமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நிலையில் அதனை விட்டுவிட்டு வருவதும்தான் நோக்கம் எனில், அதன்  ஒட்டுமொத்தாமாக தோல்யிடைந்துள்ளது” என்கிறது அறிக்கை.

Propublica என்ற லாப நோக்கமற்ற புலானாய்வு ஊடகத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

20 ஆண்டு போருக்குப் பிறகு, தாலிபான்களுடன் அமெரிக்கா செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம்

ப்கானிஸ்தானில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில், அமெரிக்காவால் ஒரு அரசாக அங்கீகரிக்கப்படாமல், தாலிபான் என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தம்.

பிப்ரவரி 29, 2020

இந்த விரிவான அமைதி ஒப்பந்தமானது நான்கு பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது:

 1. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு எதிராக, ஒரு குழுவோ அல்லது தனிநபரோ செயல்படுவதற்காக, ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவாதங்கள் மற்றும் அமலாக்க வழிமுறைகள்.
 2. ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து அனைத்து வெளிநாட்டு போர் படைகளையும் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு, அதற்கான உத்தரவாதம், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள்.
 3. மேற்சொன்ன இரண்டும், சர்வதேச நாடுகளின் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட பிறகு, அமெரிக்காவுடனான ஆப்கான் உள்நாட்டு பேச்சுவார்த்தையை, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மார்ச் 10, 2020 அன்று தொடங்கும்.
 4. ஆப்கான் உள்நாட்டு பேச்சுவார்த்தையில் நிரந்தரமான போர்நிறுத்தம்தான் முக்கிய கூறாக இருக்கும். இப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பவர்கள் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான தேதியையும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிப்பார்கள். இதில், அவற்றுக்கான கூட்டு செயல்படுகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

மேலே உள்ள நான்கு பகுதிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அறிவிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் அதை நடைமுறைப்படுத்துவற்கான வழிமுறைகளுக்கு ஏற்ப, அவை நிறைவுறும். முதல் இரண்டு பகுதிகளுக்கான ஒப்பந்தத்தை உறுதி செய்வதன் வழியாகவே, கடைசி இரண்டு பகுதிகளும் நிறைவுறும்.

மேற்கூறியவற்றின் ஒன்று மற்றும் இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இரு தரப்பும் (அமெரிக்கா மற்றும் தாலிபான்) ஒப்புக்கொள்கின்றன.

பகுதி ஒன்று:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற அமெரிக்கா உறுதியளிக்கிறது. அதாவது, அதன் கூட்டணி நாடுகளின் படைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பாதுகாப்பு படைகள், ஒப்ந்ததாரர்கள், ஆயுத பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் போன்ற அனைவரையும் பதினான்கு மாதங்களுக்குள் முழுமையாக திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவிக்கிறது. இவை பின்வரும் நடவடிக்கைகள் வழியாக சாத்தியப்படுத்தப்படும்.

அ. பின்வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா 115 நாட்களில் எடுக்கும்.

1) அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 8,600-ஆக குறைக்கும் மற்றும் அதன் கூட்டணி படைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்படும்.

2) அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணியின் படைகள், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இராணுவ தளங்களில் இருந்து, முதற்கட்டமாக, ஐந்து இராணுவ தளங்களில் இருந்து முற்றிலுமாக திரும்பப் பெறப்படும்.

ஆ. மீதமுள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் அனைத்தையும் ஒன்பதரை மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்படும். மீதமுள்ள தளங்களில் இருக்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

இ. நம்பிக்கையான சூழலை அனைத்து தரப்பு மத்தியிலும் உருவாக்கும் விதமாக, போர் மற்றும் அரசியல் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படுவர். 2020 ஆம் ஆண்டு, மார்ச் 10 ஆம் தேதி அன்று, ஆப்கானிஸ்தானை சேர்ந்த 5,000 கைதிகளும் அமெரிக்காவை சேர்ந்த 1,000 கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள். மீதமுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இரு தரப்பினருக்கும் உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், இதை நிறைவேற்ற அமெரிக்கா உறுதியளிக்கிறது. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகமும் கைதிகள் விடுவிப்பில் உறுதியாக இருப்பார்கள்.

ஈ. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக உறுப்பினர்கள் மீதான தடைகள் மற்றும் வெகுமதி (பிடித்து தருபவர்களுக்கான வெகுமதி) பட்டியலை, அமெரிக்கா மீளாய்வு செய்யும். 2020 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 27 ஆம் தேதிக்குள், அவற்றை மொத்தமாக ரத்து செய்யும். அதைத்தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை மற்றும் ஆப்கானிஸ்தான் அரசின் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக உறுப்பினர்கள் மீதான தடைகள் மற்றும் வெகுமதி பட்டியலை ரத்து செய்ய அமெரிக்கா கோரும். 2020 ஆம் ஆண்டு, மே 29 ஆம் தேதிக்குள், அத்தடைகளை மொத்தமாக ரத்து செய்யும்.

உ. ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் அல்லது அதன் உள்நாட்டில் தலையீடு போன்ற விவகாரங்களில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அச்சுறுத்தலை தரவோ அல்லது எதிராக செயல்படவோ செய்யாது.

பாகம் இரண்டு:

இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்புடன் இணைந்து, ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகமானது, பின்வரும் நடவடிக்கைகளின் வழியாக, அல்-கொய்தா உட்பட எந்தவொரு குழு அல்லது தனிநபரோ ஆப்கானிஸ்தானின் மண்ணை பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதை தவிர்க்கும்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு, ஆப்கானிஸ்தானில் இடமில்லை என்று ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் தெளிவாக அறிவிக்கும். அவ்வாறான குழுக்களுக்கு எவ்வித ஆதரவையும் நல்க வேண்டாம் என்று ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் தடுக்கும். அவ்வாறானவர்கள் ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் நிதி திரட்டுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தடுக்கும்.

ஆப்கானிஸ்தானுக்கு தஞ்சம் தேடியோ அல்லது குடியேற நாடுபவர்களையோ கையாள, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் உறுதியளிக்கிறது. சர்வதேச இடப்பெயர்வு சட்டம் மற்றும் இந்த அமைதி ஒப்பந்தத்தின்படி ஏற்றுக்கொள்ளும். ஆனால், அத்தகைய நபர்கள் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கா வண்ணம் கண்காணிக்கப்படும்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கோடு, ஆப்கானிஸ்தானுக்குள் நுழைபவர்களுக்கு விசா, பாஸ்போர்ட், பயண அனுமதி அல்லது பிற சட்டரீதியிலான ஆவணங்கள் வழங்கப்படாது.

பாகம் மூன்று:

 1. இந்த அமைதி ஒப்பந்தத்திற்கான அங்கீகாரத்தையும் ஒப்புதலையும் வழங்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா பரிந்துரைக்கும்.
 2. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் அமெரிக்காவுடன் நல்ல உறவையே எதிர்பார்க்கிறது. அமெரிக்காவுக்கும் புதிதாக அமையவுள்ள ஆப்கான் இஸ்லாமிய அரசுக்கும் இடையிலும் நல்லுறவை பேனவே ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் விரும்புகிறது.
 3. ஆப்கானிஸ்தான் உள்நாட்டு பேச்சு வார்த்தைகளின்படி, புதிதாக அமையவுள்ள ஆப்கான் இஸ்லாமிய அரசுடன், பொருளாதார புனரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு தரும். அதேநேரம், உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது.

Source: Washington Post.

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களும், பொம்மை ஜனநாயகங்களும்

அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ், “தீவிரவாதத்திற்கு எதிரான போரை” பிரகடனம் செய்தார். “நமது தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்கொய்தாவிடமிருந்து தொடங்குகிறது, ஆனால் அது அல்கொய்தாவுடன் முடிவடைய போவதில்லை. சர்வதேச அளவில் செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகளும் கண்டறியப்பட்டு களையெடுக்கப்படும் வரை இந்த போர் தொடரும்” என்று புஷ் அறிவித்தார்.

இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், தாலிபான்களின் ஆதரவுடன் ஆஃப்கானிஸ்தானின் தோரா போரா மலைபகுதியில் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா கூறியது.

ஆஃப்கானிஸ்தான் ஒசாமா பின்லேடனை கைது செய்து ஒப்படைக்க மறுத்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளின் மூலம், தாலிபான்களின் ஆட்சியை அகற்றி, ஜனநாயகத்தை உருவாக்கவும், தீவிரவாதிகளை ஒடுக்கவும் ஆஃப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போரை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) படைகள் தாலிபான் அரசை சில வாரங்களிலேயே வீத்தியது. தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 2004 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் ஆஃப்கானின் அதிபராக, அமெரிக்க ஆதரவு பெற்ற ஹாமித் கர்சாய் பொறுப்பேற்றார்.

செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று இருபது ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”2021 ஆக 31 ஆம் தேதிக்குள், ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் திரும்பி பெற்றுக்கொள்ளப்படும்” என அறிவித்தார். ஆஃப்கானின் பல நகரங்களை தாலிபான்கள் கைப்பற்ற தொடங்கி வந்த சூழலில், அமெரிக்க படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் என்று பைடன் வெளியிட்ட அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியது.

“ஆஃப்கானிஸ்தானில் ஒரு தேசத்தை கட்டமைக்க வேண்டும் எனும் எண்ணத்தில் நாங்கள் அங்கே செல்லவில்லை. தங்களுடைய தேசம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதையும் தங்களுடைய எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், முடிவெடுக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும் ஆஃப்கான் மக்களுக்கு தான் உள்ளது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது, ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுப்பதற்காக முன்னாள் அதிபர் புஷ் கூறியிருந்த காரணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது

மேலும், “இந்த யுத்தத்தை கால வரையின்றி தொடர்ந்து கொண்டே இருப்பது அமெரிக்காவின் தேச நலனுக்கு நல்லதல்ல. இந்தப் போருக்காக 60 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது, 2,448 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர், 20,722 பேர் படுகாயமடைந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் போரின் பாதிப்பு காரணமாக பல்வேறு மனநல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்தப் போரால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை, இதில் மற்றொரு தலைமுறை அமெரிக்கர்களை நான் இழக்க விரும்பவில்லை” என்று பைடன் தெரிவித்துள்ளார்.

பைடனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ”தாலிபான்களை நீங்கள் நம்புகிறீர்களா?“ என வெள்ளை மாளிகையில், பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்புகையில், “தாலிபான்களை நம்பவில்லை, ஆனால் அமெரிக்காவால் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆஃப்கான் ராணுவத்தை நம்புகிறேன்” என்று பைடன் தெரிவித்தார்.

தீவிரவாத்திற்கு எதிரான போரை தொடுப்பதாகவும், தாலிபான்களை அகற்றுவதாகவும், ஜனநாயகத்தை உருவாக்குவதாகவும் கூறி ஆஃப்கானிதானுக்குள் நுழைந்த அமெரிக்கா, அந்நாட்டை மீண்டும் தாலிபான்களிடமே ஒப்படைத்து விட்டு திரும்புவது உலக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

போர் யாருடைய நலனுக்காக நடக்கிறது? மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எதனால்? என்ற கேள்விகள் தவிர்க்க இயலாதவை. இந்தச் சூழலில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அமெரிக்கா எதை நிறுவ முயற்சி செய்துள்ளது என்பதை காண்போம்.

கொரியா (1940 – 53)

இரண்டாம் உலகப் போரின் முடிவு உலக நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தினாலும், சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. சோவியத் ஒன்றியம் பொதுவுடைமையை (கம்யூனிசம்) உலகம் முழுவதும் பரப்பிவிடுமோ எனும் அச்சத்தின் பின்னணியிலேயே அமெரிக்கா சோவியத்தை பார்த்து பயந்தது. ”உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பொதுவுடைமை கருத்துக்கள் பரவலை கட்டுப்படுத்த வேண்டும்” என்பதை அமெரிக்கா தன்னுடைய வெளியுறவு கொள்கையாகவே கொண்டுள்ளது.

இந்நிலையில், 1910 ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் காலானியாக இருந்த கொரியாவில், இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற தருவாயில், அங்கு சோவியத் ஒன்றியம் கால் பதித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவும் உடனடியாக தன்னுடைய படைகளை கொரியாவுக்கு அனுப்பியது. ஜப்பானின் ராணுவம் வடக்கில் சோவியத்திடமும், தெற்கில் அமெரிக்காவிடமும் தோல்விடைந்தது.

இதையடுத்து வட கொரியாவில், இரண்டாம் கிம் ஜுங், மக்கள் ஜனநாயக குடியரசு எனும் கம்யூனிச அரசாங்கத்தை உருவாக்கினார், தென் கொரியாவில் சிங்மன் ரீ, தென் கொரிய குடியரசு எனும் முதலாளித்துவ அரசை உருவாக்கினார்.

இந்தச் சூழலில், 1950 ஜுன் 25, வட கொரியா, தென் கொரியாவின் எல்லைகளில் தாக்குதலைத் தொடங்கி, தென் கொரியாவின் தலைநகரமான சியோலை கைப்பற்ற முயன்றது. வட கொரியாவுக்கு சீனாவும் சோவியத் யூனியனும் ஆதரவு தெரிவித்தன. தென் கொரியாவுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ட்ரூமனின் உத்தரவின்பேரில் போர் தொடங்கிய இரண்டு நாட்களில் (ஜுன் 27) அமெரிக்க படைகள் கொரியா வந்தடைந்தன.

மூன்று ஆண்டுகள் நீடித்த இப்போரில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இறுதியில் இந்தப்போர் எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவு பெற்றது. கொரியாவில் நடந்த அந்தப் போர், சோவியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்று வந்த பனிப்போரின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படுகிறது.

இந்த போரில், 40,000 அமெரிக்கர்கள் உட்பட ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் மரணமடைந்தனர், 1,00,000 அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

வியட்நாம்: (1964 – 1973)

பிரெஞ்சு நாட்டின் காலனியாக இருந்த வியட்நாம் ஹோ சி மின் தலைமையில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தில் சுதந்திரம் பெற்று சோசியலிச குடியரசாக மாறியது. இதையடுத்து ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையில், வியட்நாமை வடக்கு மற்றும் தெற்காக பிரிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

ஹோ சி மின் தலைமையில், வடக்கு வியட்நாம், கம்யூனிச அரசாக செயல்படும் எனவும் கோ டின் டியம் தலைமையிலான தெற்கு வியட்நாம் முதலாளித்துவ அரசாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கொரியாவில் நடந்ததுபோலவே, சீனா மற்றும் சோவியத் ஒன்றியம் வடக்கு வியட்நாமுக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா, பிபிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்யூனிசத்துக்கு எதிரான நாடுகள் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்தச் சூழலில் 1958 ஆம் ஆண்டு, தெற்கு வியட்நாமில், தேசிய விடுதலை முன்னணியைச், சேர்ந்த வியட் காங் எனும் அமைப்பு அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியது. அது உள்நாட்டுப் போராக மாறியது. இந்நிலையில், வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் இணைப்பிற்கு ஹோ சி மின் முயற்சி செய்தார். தெற்கு வியட்நாம் அரசுக்கு ஆதரவாகவும், வியட்நாமை சுற்றியுள்ள நாடுகளுக்கு கம்யூனிசம் பரவி விடக்கூடாது எனும் நோக்கத்தில், அமெரிக்கா இப்போரில் 1965 ஆம் ஆண்டு களமிறங்கியது.

இது தொடர்பாக, அப்போதையாக அமெரிக்க அதிபர் லிண்டன் பி ஜான்சன், ”வெளிநாடுகளில் இருந்து வழிகாட்டப்படும் கம்யூனிஸ்டுகளின் சதியை முறியடித்து தெற்கு வியட்நாமின் அரசுக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக இப்போரில் இறங்குகிறோம்” என்று கூறினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்க படை வியட்நாமில் குவிக்கப்பட்டது. இதற்கிடையில் ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் போருக்காக பல லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்தும் அமெரிக்காவால் வியட்நாமை வீழ்த்த முடியவில்லை. போர் விமானங்கள், டேங்கர்கள் போன்ற அதி நவீன ஆயுதங்கள் எதுவும் இல்லாமலே வியட்நாம் அமைப்பு அமெரிக்காவை எதிர்த்தது. விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களிடம், வியட்நாம் பெற்ற ஏகோபித்த ஆதரவு, கொரில்லா போர் முறை, சீனா மற்றும் சோவியத்தின் உதவி போன்றவை இப்போரில் வியட்நாமுக்கு பக்கபலமாக இருந்தது. 1975 ஆம் ஆண்டு, கம்யூனிச படைகள் தலைநகர் சாய்கானை கைபற்றிய போது, போரில் அமெரிக்கா தோல்வி அடைந்து உறுதியானது.

1976 ஆம் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் இணைந்து சோஷசலிச குடியரசாக உருவாகியது. உலக வரலாற்றில் அமெரிக்க சந்தித்த மிகப் பெரிய படுதோல்வியாக வியட்நாம் போர் பார்க்கப்படுகிறது. இந்தப் போர் பொதுவுடைமை சித்தாந்தற்கும் தனிவுடைமைக்கும் இடையில் நடைபெற்ற போராக பார்க்கப்படுகிறது. வியட்நாம் போரில் 13,53,000 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க படைகள் எதையும் சாதிக்காமல் மிகப்பெரிய உயிரிழப்பை சந்தித்து நாடு திரும்பின.

குவைத்: 1991

1990 ஆம் ஆண்டு, குவைத் மீது ஈராக் அதிபர் சதாம் உசேன் போர் தொடுத்து அந்நாட்டை கைப்பற்றினார். ஈரானுடன் நடத்திய போரால் ஈராக் நாட்டுக்கு ஏற்படுத்திய கடும் நிதி நெருக்கடியை குவைத்தின் எண்ணெய் வளம் மூலம் ஈடு செய்து கொள்ளலாம் என சதாம் உசைன் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் இந்தப் போர் தொடங்கியது. ஈரான், ஈராக் யுத்தத்தின் போது அமெரிக்கா ஈராக்கிற்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈராக் குவைத்தின் பெரும்பான்மையான எண்ணெய் வளங்களை கைப்பற்றிவிடும் என்ற நிலையில், அமெரிக்கா 34 நாடுகளுடன் இணைந்து ஈராக்கிற்கு எதிரான போரைத் தொடங்கியது. இது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் (ஜார்ஜ் புஷ்-ன் தந்தை) ”சதாம் உசைனின் கட்டுப்பாட்டில் குவைத்தின் எண்ணெய் வளங்கள் சென்றால் நமது வேலை, நமது வாழ்க்கைமுறை, நமது சுதந்திரம், உலகெங்கும் உள்ள மற்ற நாடுகளின் சுதந்திரம் அனைத்தும் பாதிக்கப்படும்” என கூறினார்.

இதையடுத்து ஆபரேஷன் டெசர்ட் ஷீல்டு (ஆகஸ்ட் 1990 – ஜனவரி 17, 1991) மற்றும் ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம் (ஜனவரி 17 – பிப்ரவரி 28, 1991) ஆகிய இரண்டு போர் நடவடிக்கைகளின் மூலமாக போர் முடிவடைந்து குவைத் விடுவிக்கப்பட்டது. குவைத்தில் இருந்து படைகளை திரும்பி பெற்றுக் கொண்ட சதாம் உசைன், ஈராக்கின் அதிபராக தொடர்ந்தார். இது வளைகுடா போர் என அழைக்கப்படுகிறது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஏறக்குறைய 1,50,000 அதிமானோர் உயிரிழந்தனர்.

ஈராக்: (2003 – 2011)

ஈராக்கில் உள்ளதாக கூறப்படும் அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பயங்கர ஆயுதங்களை அந்நாடு ஒப்படைக்கும் என்ற அடிப்படையில்தான் வளைகுடா போர் முடிவுக்கு வந்தது. ஆனால் போர் முடிவுற்று 12 ஆண்டுகள் அமைதி காத்தும் ஈராக் அப்படிப்பட்ட எந்த ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சதாம் உசைன், 48 மணி நேரங்களில் சரணடைய வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுக்கும். இந்தப் போர் சட்டத்தை மதிக்காத நபர்களுக்கு எதிரான போர், இதில் பொதுமக்கள் யாரும் பாதிப்படைய மாட்டார்கள். சுதந்திரமான ஈராக்கை உருவாக்குவது தான் எங்கள் லட்சியம்” என்று கூறிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக் மீது போரை அறிவித்தார்.

சதாம் உசேன் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அதிபர் ஈராக்கின் அரசிற்குப் பொறுப்பேற்றார். அமெரிக்க படைகளால் தேடப்பட்டு வந்த சதாம் உசைன் அவருடைய சொந்த ஊரான திக்ரித் பகுதியில் உள்ள பதுங்கு குழியிலிருந்து கைது செய்யப்பட்டார். பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, சதாம் உசைனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈராக்கிற்குள் அமெரிக்க நுழைவதற்கான அடிப்படை காரணமாக கூறப்பட்ட பேரழிவு தரக்கூடிய பயங்கர ஆயுதங்கள் எதுவும் இறுதிவரை அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. ஈராக்கிற்கு எதிரான போரை 2011 டிசம்பர் 15  அன்று அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்தது.

சிறையில் உள்ள கைதிகளை அச்சுறுத்துவதற்கு மிகவும் பலவீனமான கைதியை காவல்துறையினர் தாக்குவது போல, இரட்டை கோபுர தாக்குதலால் உலக அரங்கில் தனது செல்வாக்கை இழந்த அமெரிக்கா, தன்னுடைய வல்லாதிக்கத்தை நிலை நாட்டவே ஈராக் மீது போர் தொடுத்ததாக அரசியல் வரலற்றாசிரியர்கள் தெரிவிக்கன்றனர். இந்தப் போரில் பொதுமக்கள் உட்பட 4,60,000 பேர் கொல்லப்பட்டனர்.

லிபியா 2011 :

1969 ஆம் ஆண்டு, லிபிய மன்னர் இட்ரிசின் ஆட்சியை கவிழ்த்து, புதிய மன்னராக ராணுவ தளபதி முவாமர் கடாஃபி பொறுப்பேற்றார். அரபு நாடுகளுடன் ஒற்றுமையை ஏற்படுத்த கடாஃபி விரும்பினார். மேலும், லிபிய தேசத்தின் சுயாட்சியை விரும்பிய அவர், லிபியாவின் எண்ணெய் வளங்களை தேசிய உடைமையாக்கினார்.

2011 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிராக எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தம் என்று அழைக்கப்படும் மக்கள் போராட்டம் லிபியாவுக்கும் பரவியது. லிபியாவின் பெங்காசி நகரில் துவங்கிய போராட்டம் நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும் பரவியது, இதனால் பாதுகாப்பு படையினருக்கும், அதிபர் கடாஃபிக்கு எதிரானவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதில் கடாஃபிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) முயற்சியில், லிபிய வான் எல்லையில் விமானங்கள் பறப்பதற்கு ஐநா பாதுகாப்பு அவை தடை வித்தது. இதைத் தொடர்ந்து லிபியா மீது நடத்தப்பட்ட தாக்குலில் கடாஃபி அரசு வீழ்ந்தது.

அதைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஆதரவான அரசு லிபியாவில் நிறுவப்பட்டது. இந்தப் போரில் வீழ்த்தப்பட்டு தலைமறைவான கடாஃபி, அவருடைய எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தேடி கண்டுபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இன்று வரை லிபியாவில் நிரந்தரமான அரசு உருவாக்கப்படவில்லை தொடர்ச்சியான உள்நாட்டு  பிரச்சனைகளை மட்டுமே லிபியா சந்தித்து வருகிறது.

இந்தப் போரில் பொதுமக்கள் உட்பட 3,980 அதிகமானோர் படுகாயமடைந்தனர், 1500 அதிகாமானோரை காணவில்லை, 500 மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

இதேபோல், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான ஆப்கானிஸ்தானில் போரை தொடங்கிய அமெரிக்கா, தற்போது தாலிபான்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ”தங்களின் சொந்த நாட்டு பிரச்சனையை அந்நாட்டு மக்களே பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறுவது வேடிக்கையும் வியப்புமாக உள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய கருத்து சரியெனில், கடந்த இருபது ஆண்டுகளாக நிலையான மற்றும் ஜனநாயகமான அரசாங்கத்தை உருவாக்குகிறேன் என பல்வேறு நாடுகளின் பிரச்சனைகளில் தலையிட்டதன் உண்மையான காரணத்தை அமெரிக்கா உலக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதை அமெரிக்கா செய்யுமா?

Source: BBC, AL JAZEERA, BRITTANICA, WASHINGTON POST, KHAN ACADEMY

இது விலையில்லா இதழ். இவ்வாறே தொடர்வதற்கு எங்களுக்கு உதவவும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்