Aran Sei

இந்து மதத்தில் இருந்து வெளியேறிய உ.பி-யின் வால்மீகி மக்கள்

நேற்று முன்தினம் (அக்டோபர் 14), உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள கர்ஹெரா கிராமத்தைச் சேர்ந்த 236 வால்மீகி சமுதாய மக்கள், இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தைத் தழுவினர்.

இந்த நிகழ்வு மாவட்ட நீதிபதி அஜய் சங்கர் பாண்டேவிடம் முறையான அனுமதி பெற்று, கர்ஹெரா கிராமத்திற்கு அருகில் உள்ள பல்மிகி மொஹல்லா என்ற இடத்தில் நடைபெற்றது. 236 குடும்பங்களில் இருந்து, குடும்பத்திற்கு ஒருவர் பங்கேற்றதாக ’கலர் போர்ட்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில், தீண்டாமைக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி, ஹத்ராஸ் மாவட்டத்தில் வால்மீகி வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

நன்றி : The Hindu

கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் உடலைப் பார்க்கக் குடும்பத்தினரை அனுமதிக்க விடாமல் நள்ளிரவில் எரியூட்டித் தகனம் செய்தது மட்டுமன்றி  முதல் தகவல் அறிக்கையில் `அடையாளம் தெரியாத நபர்கள்’ என வழக்குப்பதிவு செய்தது உத்தரப்பிரதேசக் காவல்துறை.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தின. இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியான தாக்கூர் வகுப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு அலிகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அம்பேத்கரின் கொள்ளுப் பேரனும் அம்பேத்கர் தோற்றுவித்த ‘பாரதிய புத்த மசாசபை’-யின் தலைவருமான டாக்டர்.ராஜ்ரத்ன அம்பேத்கர், ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் கூறினார். பின் புத்தர் படத்தை அவர்களுக்கு வழங்கினார்.

நன்றி : thecolourboard.com

உத்தரப்பிரதேசத்தில் உள்ள வால்மீகி இன மக்கள், தாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதம் தழுவ உதவ வேண்டும் என்று, டாக்டர் ராஜ்ரத்ன அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்டதாக `கலர் போர்ட்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்டர் ராஜ்ரத்ன அம்பேத்கரிடம் `கலர் போர்ட்’ தளம் பேசிய போது, `ஒடுக்குதலுக்கு ஆளாகியுள்ள பட்டியலின மக்கள், தங்களைக் கீழ்நிலையில் வைத்திருக்கும் இந்து மதத்திலிருந்து வெளியேறி, பலத்துடனும், அங்கீகரிக்கப்பட்ட அடையாளத்துடனும் இருக்கும் புத்த மதத்தில் இணைய வேண்டும்.” என்கிறார்.

மேலும், “இந்தியப் பிரதமர் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் தான் ஒரு புத்த நாட்டில் இருந்து வந்திருப்பதாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். புத்த அடையாளம் கண்ணியத்தையும் வலிமையையும் தரும்.” என்றார்.

இட ஒதுக்கீட்டை இழக்க நேரிடும் என்ற பயத்தின் காரணமாக தங்களுடைய பட்டியல் சாதி நிலையை விட்டு வெளியேற தயங்குகிற மக்களைப் பற்றிக் கேட்கையில், “சரியாகச் செயல்படுத்தப்படாத இட ஒதுக்கீட்டால், அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. அது வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு, பட்டியல் இன மக்களுக்கு அளித்த உரிமைகளை மீண்டும் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களுக்குச் சரியான முறையில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தர வேண்டும். “ என்று கூறினார்.

1956-ம் ஆண்டு இதே நாள் (அக்டோபர் 14) நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அம்பேத்கர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தைத் தழுவினர்.

இந்த மதத் தழுவல் நிகழ்வில், ஹத்ராஸில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை என்றும், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலக் காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார்கள் என்றும் ‘கலர் போர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்